‘தனித்தமிழ்நாடு’: தமிழர்களுக்குத் துரோகம் செய்தாரா பெரியார்

‘தனித்தமிழ்நாடு’: தமிழர்களுக்குத் துரோகம் செய்தாரா பெரியார்?


-கி.தளபதிராஜ்1942 ல் இந்தியாவிற்கு வந்த சர்.ஸ்டார் ஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான பிரிட்டிஷ் மந்திரி சபை தூதுக்குழு வினரிடம் பெரியார், ‘தனித் தமிழ்நாடு’ கோரிக்கையை எழுப்பாமல் ‘திராவிடநாடு’ கோரிக்கையை முன் வைத்த தால் அக்குழுவினர் போதிய ஆதரவு அதற்கு இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டதாகவும், தமிழர்களுக்கு  கிடைக்கவேண்டிய ‘தனித் தமிழ்நாடு’ கிடைக்கப் பெறாமல் செய்தது, தமிழ்மொழி பேசுகிற மக்களுக்குப் பெரியார் செய்த பச்சைத் துரோகம் என்றும் சிலர் திரும்பத் திரும்பக் கதைத்து வருகின்றனர்.


பெரியார் கேட்ட ‘திராவிடநாடு’ அல்லது ‘தனித்தமிழ் நாடு’ என்பதன் நோக்கம் என்ன என்பதை முதலில் இந்த அரைவேக்காடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.


திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கும், பார்ப்பன ஆதிக் கத்திலிருந்து விடுபட்டு அவற்றைப் பாதுகாப்பதற்கும், திராவிடர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதியான சென்னை மாகாணத்தைத் தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்றவர் தந்தை பெரியார். பெரியார் கேட்டதன் போராடியதன் நோக்கம் குறிப்பிட்ட இடத்தைப் பிடிப் பதோ, அந்த இடத்தை ஆட்கொண்டு ஆட்சியைப் பிடிப்பதோ அல்ல என்பதை உணர வேண்டும். பார்ப்பனப் பிடியில் இருந்தான சமூக விடுதலையே அவரது குறிகோள்.


ஜப்பானியப் படையெடுப்பு இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த நேரம். அமெரிக்காவின் நிர்ப்பந்தம் ஒரு புறம். இந்தச் சூழலில்தான் 1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசாங்க பாதுகாப்பு அமைச்ச கத்தின் உறுப்பினரான சர்.ஸ்டார்ஃப் போர்டு கிரிப்ஸை இந்தியாவிற்கு ஒரு திட்டத்துடன் அனுப்புவதென  பிரிட் டிஷ்  அரசு முடிவு செய்தது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி இந்தியா வந்த அவர் இந்தியாவின் அரசியல் சீர்திருத்தம் செய்வ தற்கான திட்ட நகல் அறிக்கை  ஒன்றைப் பத்திரிக்கையாளர்களிடையே வெளியிட்டார்.


டொமினியன் தகுதியோடு கூடியதும், பிரிட்டானியப் பேரரசிற்குக் கீழ்ப்படிதல் இல்லாததுமான சமநிலைத் தகு தி  பெற்ற இந்திய ஒன்றியத்திற்கு அடிப்படை அரசமைப்பை உருவாக்குவதுதான் ஆங்கிலப் பேரரசின் நோக்கமாகும் என்று அது கூறியது.


அப்படி உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பை எந்தவொரு மாகாணம் ஏற்றுக்கொள்ளவில்லையோ அதனுடைய தனி ஆட்சி உரிமை, அப்படியே நிலை நிறுத்தப்பட்டு விடும். பின்னர் ஒருக்கால் அம் மாகாணம் இந்திய ஒன்றியத்தோடு இணைந்துகொள்ள முடிவெடுத் தால் அப்படி விரும்பும்போது அது இந்தியக் கூட்டாட் சியுடன் இணைந்து கொள்ளலாம்.


இந்திய ஒன்றியத்தோடு அப்படி இணைய விரும்பாத மாநிலங்கள்,  இந்திய அரசுக்குச் சம தகுதியோடு கூடிய தனித்தனி அமைப்புகளைத் தாமே உருவாக்கிக் கொள்ள லாம். பிரிட்டானிய அரசு அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது என்றும் கூறியது. காங்கிரஸ் அத்திட்டத்தை ஏற்றுகொண்டிருந்தால் மாநிலங்கள் யாவும் தன்னாட்சி பெற்ற உறுப்பு நாடுகளாகி அனைத்திந்தியக் கூட்டாட்சி ஒன்றியமாக உருவெடுத்திருக்கக் கூடும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதினார்கள். காந்தி ஆரம்பத்திலிருந்தே இத்திட்டத்தை எதிர்த்து வந்தாலும், ராஜாஜி இதை ஆதரித்தார்.


பெரியாரோ, “குடியேற்ற நாடுகளைப்போல ஒரே இன மக்களைக் கொண்டதல்ல இந்தியா. கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா முதலியவைகளுக்கு குடியேற்ற நாடு அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறதென்றால் அங்கே ஆங்கிலேயர்கள் மட்டுமே குடியிருந்தார்கள். அவர்கள் யாவரும் ஓரின மக்கள். இந்தியா அது போன்ற குடியேற்ற நாடு அல்ல. பல இனங்களைக் கொண்ட நாடு. பல சுயேச் சைகளைக் கொண்ட உப கண்டம். அந்தந்த நாடுகளுக்கும் பிரிந்து போகும் உரிமை வழங்கப்படாதவரை பிரிட்டிஷாரு டைய திட்டம் நல்லெண்ணத்தோடு கூடியதென்று எவரும் கருத முடியாது”  என்று குறிப்பிட்டார்.


குடியேற்ற நாடு அந்தஸ்து பற்றி பேச்சு எழுந்தபோது, “குடியேற்ற நாடு அந்தஸ்து என்பது அதிகார மாற்றம் ஏற்படுமே தவிர அது நாடு ஒப்படைப்பு அல்ல. வெள்ளைய ருக்கும் காங்கிரசுக்கும் ஏற்படப் போகும் ஒப்பந்த ஆட் சியால் வர்ணாசிரமதர்ம கொடுமை ஒழியப்போவதில்லை. வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்ததைவிட மோசமான நிலை உண்டாகும்“ என்றவர் பெரியார். சென்னை மாகா ணம் பார்ப்பன காங்கிரஸ் அதிகாரத்தின் கீழ் இருப்பதை விட  தனி நாடாக வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருப்பதே மேல் என நினைத்தார்   பிரிட்டீஷாரால் அனுப்பப்பட்ட கிரிப்ஸ் தூதுக்குழுவின் அறிக்கையை பெரியார் முழு மையாக ஏற்றுக் கொள்ள வில்லை என்றாலும், 1935ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தில் ஓரளவு சுயாட்சி பெற்றிருந்த சென்னை மாகாணத்திற்கு முதலில் டொமினியன் அந்தஸ்தைப் பெற்றுவிட்டால், பிறகு தனி யொரு சுதந்திர நாடாக பிரித்துவிட இலகுவாக அமையும் என நினைத்து கிரிப்ஸ் குழுவினரைச் சந்திக்க முற்பட்டார். நீதிக்கட்சி பிரமுகர்களான சர்.ஏ.முத்தையா செட்டியார், டபிள்யூ.பி.ஏ.சவுந்தர பாண்டியனார், என்.ஆர்.சாமியப்பா முதலியார் ஆகியோருடன் சென்று கிரிப்ஸ் குழுவினரை சந்தித்த பெரியார், “இந்திய ஒன்றியத்திலிருந்து சென்னை மாநிலம் தனியாகப் பிரிந்து சென்று தனியொரு ஒன்றியமாக அமைந்தால்தான் அம் மாநிலத்தில் மிகப் பெரும்பான்மை யினராக உள்ள பார்ப்பனரல்லாதார், அவர்களை விடச் செல்வமும் அதிகாரமும் மிக்க பார்ப்பனர்களின் ஆதிக்கத் திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், அரசியல் அதிகாரத்தைப் பெறவும் முடியும். மாநிலச் சட்ட மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையைப் பெற்றோ  அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமோ அதைச் செய் வது சாத்தியமில்லை. ஏனெனில், அதிகாரச் சக்திகளின் சூழ்ச்சியால் அந்த முயற்சிகள் வெற்றி பெறாது. எனவே பார்ப்பனரல்லாதாருக்குள்ள அனுகூலமற்ற நிலையைப் போக்குவதற்கு அவர்களுக்கு மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கும் வகையில், தனி வாக்காளர்கள் தொகுதிகள் தரப்பட வேண்டும்“ என்று கோரிக்கை வைத்தார்.


தந்தை பெரியாரின் இந்த கோரிக்கையை “ஜனநாயக மரபுக்கு எதிரானது” என்று சொல்லி கிரிப்ஸ் ஏற்க மறுத்துவிட்டார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத அந்தக் கால கட்டத்தில், மாகாண உரிமைகளைப்பற்றி பேச வந்த குழுவிடம் அப்பொழுதிருந்த சென்னை மாகாணத் தின் (திராவிட நாடு) உரிமைகளைப்பற்றி பெரியார் பேசியது தவறு என்றும், தமிழர்கள் வாழும் பகுதியை பிரித்து ‘தனித்தமிழ்நாடு’ கோர அவர் தவறிவிட்டார் என்றும், அப்படி ஒரு கோரிக்கையை பெரியார் வைத்திருந்தால் தமிழ்நாட்டைத் தனியாகப் பிரித்து பெரியார் கையிலேயே கொடுத்திருப்பார்கள் என்றும், தமிழ்மொழி பேசுகிற மக்களுக்கு இது பெரியார் செய்த பச்சைத் துரோகம் என்றும்  இப்போது சிலர் குதர்க்கம் செய்கிறார்கள். பெரியார் கேட்டிருந்தால் தனித்தமிழ்நாடு பெற்றிருக்கலாம் என்று சொல்லுகிறவரைப் பார்த்து நாம் கேட்கிறோம். அப்படியானால் பிரிட்டீஷாரிடம் பேசி தனித் தமிழ்நாடு பெறுகிற அளவிற்கு எண்ணமோ திராணியோ தமிழ் நாட்டில் பெரியாருக்கு இணையாக இங்கே யாருக்கும் இல்லை என்பதைத்தானே இவர்க ளுடைய கூற்றும் வெளிப்படுத்துகிறது.


இந்தியாவிலிருந்து எந்த மாநிலத்தையும் பிரித்து தனி சுதந்திரநாடாக அறிவிக்கும் திட்டமோ கொள்கையோ அதிகாரமோ கிரிப்ஸ் குழுவினரிடத்தில் இருந்ததா? பாகிஸ் தான் பிரிவினைக்குக் கூட இந்தக் குழு எந்த ஒரு நேரடி ஒப்புதலோ, ஆலோசனையோ தரவில்லையே. இஸ்லாமி யர்கள் வாழும் மாகாணங்களுக்கான உரிமைகளைப் பெறும் வகையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு இது முதல்படி என்றளவில்தான் ஜின்னா போன்றவர்கள் இந்தக் குழுவை ஆதரித்தனர். இந்தியாவிற்கே முழு சுதந்திரநாடு அந் தஸ்தை வழங்கும் திட்டம் கூட அப்போது பிரிட்டீஷாரிடம் இல்லையே!


‘தமிழ் பேசுகிற மக்கள் பெரும்பகுதியாக வாழும் பகுதி களை மட்டும் வரையறுத்து தனித் தமிழ்நாடு கேட்டால் அது குறித்து பரிசீலிக்கலாம்‘ என்று சொல்லி கிரிப்ஸ் குழுவினர், பெரியாரின் கோரிக்கையினைத் திருப்பி அனுப்பியதாகக் கூறுவது கடைந்தெடுத்த பித்தலாட்ட மல்லவா? அப்படியொரு ஆதாரத்தை இவர்களால் எங்கேனும் காட்ட இயலுமா?


வெறும் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கிறப் பார்வையாலும், 15 சதவிகித  பிறமொழிக்காரர் களுக்கா கவும் தனித்தமிழ்நாடு கோரிக்கையைச் சாகடித்தவர் பெரியார் என்கிறார்கள்!


பெரியார் கேட்ட தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பதே பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாதார் விடு தலை பெற வேண்டும் என்பதற்காகத்தானே!  விஸ்தீக ரணத்திற்காகப் போராடியவரா பெரியார்? இந்த அடிப் படைப் புரிதல் கூட இல்லாமல்,  வெறும் பார்ப்பனர் பார்ப் பனரல்லாதார் என்கிற   பார்வையால் தனித்தமிழ் நாடு கோரிக்கையைச் சாகடித்தவர் பெரியார் என்பது பெரி யாரைப் பற்றிய புரிதல் இல்லாமையைத்தானே காட்டுகிறது. நீதிக்கட்சி தெலுங்கர்களுக்கானது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட கோயபல்ஸ் பிரச்சாரத்தை அப்படியே வாந்தியெடுத்து, பிறமொழிக்காரர்களுக்காக பெரியார், தனித்தமிழ்நாடு கோரிக்கையை வைக்காமல் திராவிடநாடு கோரிக்கையக்  கிரிப்ஸிடம்  வைத்தார்  என்று எழுது கிறார்கள்.


1942 ல் கிரிப்ஸ் குழு இந்தியா வந்தபோது பொப்பிலி அரசர் போன்ற தெலுங்கு மொழி பேசும் தலைவர்கள் நீதிக்கட்சியிலேயே இல்லையே. அந்த நேரத்தில் பெரியா ரோடு உடன் சென்ற நீதிக்கட்சி பிரமுகர்களான சர்.ஏ.முத் தையா செட்டியார், டபிள்யூ.பி.சவுந்தரபாண்டியனார், சாமியப்பா முதலியார் போன்றவர்கள் தமிழர்கள் தானே.


மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கும் இங்கே ஓங்கி குரல் கொடுத்தவர் பெரியார் தான் என்பதை மறுக்க முடியுமா? தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர்கூட இருக்கக்கூடாதென்று பார்ப்பானும் வட நாட்டானும் சூழ்ச்சி செய்து இப்போது அந்த பெயரையே மறைத்து ஒழித்து ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.


‘தமிழ்’ ‘தமிழ்நாடு’  என்கின்ற பெயர் கூட இந்த நாட் டிற்கு சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண் டும்? என்று கேட்டவர் அல்லவா பெரியார்?


ஆந்திரா பிரிக்கப்பட்டபோது சென் னையை அதோடு இணைக்கவேண்டும் என்ற குரல் எழுந்த நேரத்தில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி யவர் பெரியார். ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தை திராவிட நாடு என்று சொன்ன பெரியார் தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்ட பின்னால் தமிழ்நாடு, கேரளம், கர் நாடகா மூன்றையும் இணைத்து தட்சணப் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்று ராஜாஜி கூறியபோது,


தட்சணப் பிரதேசம் வந்தால் தமிழர் களாகிய நமக்குத்தான் ஆபத்து என்று சொல்லி, “தட்சணப் பிரதேசம் ஏற்படுவ தென்பது தமிழர்களுக்கு வாழ்வா? சாவா? என்பது போன்ற உயிர்ப் பிரச்சனையாகும். இது தற்கொலைக்கு சமம். தட்சணப் பிரதேசம் ஏற்படுமானால் தமிழ்நாட்டில் முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்கு தமிழ் மக்களை நெருக்குவதாகிவிடும்!” என்று முதலமைச்சராக இருந்த காமரா ஜருக்கு தந்தி அடித்து எதிர்ப்பலையை உருவாக்கியவர் பெரியார். பிறமொழிக் காரர்களுக்கு ஆதரவாக திராவிடநாடு கோரிக்கையை கையிலெடுத்தார் பெரியார் என்பது கயமை அல்லவா?


மொழிவாரி மாநிலங்கள் 1955இல் பிரிக்கப்பட்ட பிறகு திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்தாரா பெரியார்?


“என் பிறவி காரணமாக, என் இழிவுக் குக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப் பதும், என் இன மக்களாகிய தமிழர்களு டைய, என்னுடைய, தாய்நாடான தமிழ் நாட்டைப் பார்ப்பன பனியா அடிமைத் தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க வழி செய்வதுமான ‘தனித்தமிழ்நாடு’ பெறுவது என் உயிரினும் மேலான கொள்கை!” என்று பிரகடனப்படுத்தியவர் அல்லவா பெரியார்?


“தமிழ்நாடும், தமிழரும் தப்பிப் பிழைத்து விடுதலை பெற வேண்டுமானால், இந்தியக் கூட்டடாட்சி என்கிற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியிலிருந்து விலகி தமிழ்நாட்டைச் சுதந்திரத் தமிழ் நாடாக ஆக்கிக் கொண்டாலன்றி வேறு எக்காரணத்தாலும், எக்கிளர்ச்சியாலும் முடியவே முடியாது!” என்று எச்சரித்தவர் பெரியார்.  தேசியக்கொடி எரிப்பு, தமிழ்நாடு நீங்கலான தேசியப்பட எரிப்பு இப்படி எத்தனை போராட்டங்கள்? தமிழ்த்தேசி யர்கள் என்று தங்களைத் தாங்களே மார் தட்டிக் கொள்ளும் எவராவது இவற்றில் ஏதேனும் ஒன்றை எதிர்கொண்டதாக ஒற்றை விரலை நீட்ட முடியுமா?


தமிழ்தேசம் பேசுகிறோம் என்ற பெயரில் திராவிடத்தை விமர்சிப்பதையே முழுநேரப் பணியாக சிலர் இங்கே செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட குழு ஒன்றி லிருந்து அன்மையில் வெளியேறிய ஒருவர் தனது பேட்டியில் “திராவிடத்தை விமர்சிப்பவர்கள் மனநிலை பிறழ்ந்த வர்கள்!” என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி பெரியாரை விமர்சிப்பவர்களை நினைத் தால் அந்த வரிகள் தான் நமக்கு நினைவிற்கு வருகிறது.


“திராவிடத்தை விமர்சிப்பவர்கள் மன நிலை பிறழ்ந்தவர்கள்!” வேறு என்ன சொல்ல?


Comments