ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலு விருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல் வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜு ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு விஷயத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டின் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்க்கிறார்களா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 20.8.1929
‘மணியோசை’
No comments:
Post a Comment