பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட பெண் டில்லியில் மரணம் சாமியார் ஆதித்யநாத் அரசுமீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட பெண் டில்லியில் மரணம் சாமியார் ஆதித்யநாத் அரசுமீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு


புதுடில்லி, செப்.30, உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ரஸ் மாவட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் டில்லி மருத்துவமனையில் பரிதாபமாக இறந்து போனார். இதனையடுத்து பெண்களுக்கு பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது ஆதித்ய நாத்தின் உத்தரப்பிரதேசம்தான் என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
செப்டம்பர் 14ஆம் தேதி உ.பி.யின் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தாழ்த்தப்பட்ட பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தப் பெண் டில்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனைக் கண்டித்த பிரியங்கா காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில்,  அரக்கத்தனமான கொடூர நடத்தையினால் தாழ்த் தப்பட்ட பெண் சப்தர்ஜங் மருத்துவ மனையில் இறந்து போய்விட்டார்.


2 வாரங்களாக இந்தப் பெண் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடி வந்தார்.


ஹத்ரஸ், ஷாஜஹான்பூர், கோரக்பூர் என்று மாறி மாறி பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வரு கின்றன. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு பெரிய அளவுக்கு சீரழிந்துள்ளது.


பெண்களுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தின் சுவடு கூட இந்த மாநிலத்தில் இல்லை. குற்றவாளிகள் வெளிப்படையாகவே குற்றங்களைச் செய்து வருகின்றனர்.


இந்தப் படுபாதகத்தைச் செய்த வர்கள் தண்டனை பெற்றாக வேண்டும். ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பெண்களின் பாது காப்புக்குப் பொறுப்பு" என்று ட்வீட் செய்துள்ளார்.


இந்தப் பெண்ணின் உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் அலிகாரிலிருந்து டில்லிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் டில்லி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.


No comments:

Post a Comment