காணொலியில் கழகத் தலைவர்- பகவத் கீதை ஆய்வுச் சொற்பொழிவு (2) ‘‘வருண தர்மம் பிறப்பாலா - குணத்தாலா'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

காணொலியில் கழகத் தலைவர்- பகவத் கீதை ஆய்வுச் சொற்பொழிவு (2) ‘‘வருண தர்மம் பிறப்பாலா - குணத்தாலா''

காணொலியில் கழகத் தலைவர்- பகவத் கீதை ஆய்வுச் சொற்பொழிவு (2)


‘‘வருண தர்மம் பிறப்பாலா - குணத்தாலா?''


கலி.பூங்குன்றன்


பகவத் கீதை பற்றிய இரண்டாவது ஆய்வுச் சொற் பொழிவை நேற்று மாலை (7.7.2020) சரியாக 6 மணிக்குக் காணொலிமூலம் தொடங்கி குறித்தவாறு 40 நிமிடத்தில் தன் கருத்தினைப் பதிவு செய்தார் திராவிடர் கழகத் தலைவர்.



நேற்றைய உரையில் முக்கியமாக அவதாரம் என்பது என்ன? எதற்காக எடுக்கப்பட்டது? கிருஷ்ண அவ தாரத்தின் நோக்கம் என்ன? கிருஷ்ணன் கீதையில் கூறும் வருண தர்மம் என்பது எதன் அடிப்படையில்? சிலர் குணத்தின் அடிப்படையில்தான் வருணமே தவிர, பிறப்பின் அடிப்படையில் இல்லை என்று வக்காலத்து வாங்குகிறார்களே, அது சரியா?என்பதற்கான விளக்கங்களை ஆதாரத்தின் அடிப்படையில் எடுத்துரைத்தார்.


‘ஹிண்டு வேர்ல்டு' என்று ஆங்கிலத்தில் - இலண்டனில் வெளியிடப்பட்ட இரண்டு தொகுதிகளை அறிமுகப்படுத்தி மகாபாரதத்தில் ‘கீதை' நுழைந்ததன் நோக்கத்தைத் தெளிவு படுத்தினார்.


பார்ப்பன மேலாண்மையை நிலை நிறுத்தவும், வருண தர்மத்தை நிலைநாட்டவுமே கீதை இடைச்செருகல் செய்யப்பட்டது என்பதை நிறுவினார்.


பகவத் கீதையை அருளியதாகச் சொல்லப்படும் கிருஷ் ணன் யார்? மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமே!


பொதுவாகவே அவதாரம் என்பது மேலேயிருந்து கீழே இறங்குவது என்று பொருள்.


‘‘விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.'' (இ.பி.ஹரவெல் 1918 இல் எழுதிய


‘‘இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்'', பக்கம் 32) ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி என்றால் - அதன் பொருள் ஆரியர்களின் எதிரிகளாகிய திராவிடர்களை அழிப்பது என்று பொருள். திராவிடர்கள்தான் இதிகாசங்களிலும், வேதங் களிலும், புராணங்களிலும் அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், இராட்சதர்கள் என்றும், குரங்குகள் என்றும் அழைக்கப்பட்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். டாக்டர் ராதா குமுத முகர்ஜி ‘இந்து நாகரிகம்' எனும் நூலிலும், ‘‘சுவாமி விவேகானந்தர்  அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்'' எனும் நூலில் இராமாயணம் எனும் தலைப்பிலும், இராமாயணத்தில் குடிகாரர்களைச் சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும், ஹென்றி ஸ்மித் வில்லியம் என்ற வர லாற்றாளர் ‘‘சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்'' எனும் நூலிலும் குறிப்பிடுவதிலிருந்து - ஆரிய - திராவிடர் போராட்டத்தின் அடிப்படையில் திராவிடர்களைக் கொச் சைப்படுத்தும் வகையிலும், அழிக்கும் நோக்கத்திலும் எழுதப் பட்டவைதான் வேதம், இதிகாசம், பாகவதம், புராணங்கள் என்பவை என்று வெளிப்படுகிறதா இல்லையா! ‘‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா'' எனும் புகழ்பெற்ற நூலில், பண்டித ஜவகர்லால் நேரு இதனைச் சுட்டிக்காட்டியிருப்பதும், சுட்டிக்காட்டத்தகுந்ததாகும்.


இதுபற்றி தந்தை பெரியார் என்ன சொல்கிறார் என்பது முக்கியமாகும்.


‘‘பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருக்கும் அரசர்கள் ‘‘மகாவிஷ்ணுவின் அவதாரமாவார்கள்'', ‘‘சூத்திரர்களுக்கும்'', ‘‘பறையர்களுக்கும்'' அனுகூலமாயிருக்கும் அரசர்கள் ‘‘இராட்சதர்கள், நீச்சர்கள், கொடுங்கோன்மைக்காரர்கள்'' ஆவார்கள். இதுதான் பார்ப்பன தருமம்.'' (‘குடிஅரசு', 13.4.1930) என்று தந்தை பெரியார் அவர்களின் கணிப்புகளையும், வரலாற்றாசிரியர்களின் கூற்றையும் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.


அப்பொழுது மட்டுமல்ல, இப்பொழுது நடைபெறு வதும்கூட ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்து. (‘விடுதலை', 22.5.1967).


இந்தப் பின்னணியில்தான் மகாபாரதத்தையும், அதன் இடைச்செருகலான கீதையையும் பார்க்கவேண்டும் என்பது தமிழர் தலைவரின் உரையின் அடிநாதமாக அமைந்தது.


கடவுள்களின் பிறப்பாக இருந்தாலும் சரி, அவதாரங்களின் பிறப்பாக இருந்தாலும் சரி - அறிவுக்குப் பொருத்தமற்றவை என்பதைவிட அருவருப்பானதாகவும், ஆபாசமானதாகவும் இருப்பதைக் கழகத் தலைவர் சுட்டிக்காட்டினார்!


அசுரர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டதாகவும், விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்ததாகவும், வெள்ளை மயிர் பலராமனாகவும், கருப்பு மயிர் கிருஷ்ண னாகவும் பிறந்தனர் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது! (கிருஷ்ணன் தேவகி வயிற்றில் பிறந்தான் என்பது என்னாயிற்றாம்?)


இரண்யாட்சதனையும், நரகாசுரனையும் கொன்றது கிருஷ்ண அவதாரத்தில் நடந்தவை என்பது புராணக் கூற்று.


கிருஷ்ணன் பிறப்புப்பற்றி ஆதிசங்கரருக்கே அய்யப் பாடு உண்டு. அதனால்தான் கிருஷ்ணன் பிறந்தவரா, பிறக் காதவரா, மாயையா என்ற சந்தேகத்தை எழுப்பியதும் கவனிக்கத்தக்கது என்றார் கழகத் தலைவர்.


வேதங்களில்கூட விஷ்ணு என்ற சொல் மூன்றே மூன்று இடங்களிலும், ஹரி என்பது இரண்டே இடங்களிலும்தான் வருவதாயும் ஆசிரியர் தம் ஆய்வில் வெளிப்படுத்தினார்.


முக்கியமாக பகவான் கிருஷ்ணன் என்று சொல்லப் படுபவன் இயற்றிய பகவத் கீதையாகும். பகவத் கீதை என்பது  வருண தர்மத்தின் உற்பத்தியையும், அதைக் காப்பதையும் முக்கியமாகக் கொண்டது.


‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்'' நான்கு வருணங்களையும் நானே படைத்தேன். அதனைப் படைத்த நானே நினைத் தாலும் மாற்ற முடியாது என்று கிருஷ்ணன் சொல்லுவதாகக் கீதை சொல்லுவதன்மூலம், பிறப்பின் அடிப்படையில் பேதம் - உயர்வு - தாழ்வு என்ற நிலை, நிலைநிறுத்தப்படுவதே முக்கியம் என்பது பெறப்படுகிறது.


(‘‘பழங்கால இந்தியாவில் அரசியல், கொள்கைகள், நிலை யங்கள் - சில தோற்றங்கள்'' எனும் நூலில் (பக்கம் 90) புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ஆர்.எஸ்.சர்மா பின்வருமாறு குறிப் பிடுகிறார்).


‘‘ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக விஷ்ணு தன் மனத்திலிருந்து ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக் கினான் என்றும், ஆனால், அவன் பின்னோர்கள் உலகப் பற்று நீங்கினர் என்றும், அதனால் வேணனின் கொடுங் கோலாட்சி ஏற்பட்டதாயும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர் என்றும், அவனுடைய வலது தொடையிலிருந்து பிருதுவை உண்டாக்கினர் என்றும் கூறப்படுகிறது. பிருதுவின் எட்டாவது சந்ததி என்ற அடிப்படையில் பிருது வைன்ப என்பவன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்பதை முனிவர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள். (1) தண்டனை நீதிக் கொள்கையின்படி அரசாள்வேன் (2) பிராமணர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கமாட்டேன் (3) ஜாதிக் கலப்பு ஏற்படாதபடி உலகைக் காப்பாற்றுவேன் என்று மூன்று உறுதி மொழிகளைச் சத்தியம் செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை வேண்டினார்கள். மனிதர்களுக்குள் காளைகள் போன்று விளங்குவதால் பிராமணர்களைப் பெரிதும் மதித்து, அவர்களை வணங்கி வழிபடுவதாக, பிருது முனிவர்களிடம் கடவுள் சாட்சியாகச் சத்தியம் செய்தான். அரசாங்க இயல்புக்கு ஏற்பவும், நியாயமாகவும் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வதாக அவன் ஏற்கெனவே உறுதிமொழி கொடுத்தி ருந்தான்.''


(மகாபாரதம், சாந்த பருவம், 59 ஆம் அதிகாரம் 94-99)


மகாபாரதமாக இருந்தாலும் சரி, அதன் இடைச்செருகலான கீதையாக இருந்தாலும் சரி, வருண தருமம் காப்பதே அதன் விழுமிய முக்கிய அடிப்படைக் கருவாகவும், நோக்காகவும் இருந்தது என்பதற்கு வேறு என்ன சாட்சியம் தேவை?


இந்து மதம், அதன் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் எவையாக இருந்தாலும் - அவை பிறப்பில் பேதம் பேசும் தன்மை கொண்டவையே - அவற்றைக் காப்பாற்றுபவையே! வருணங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும், அதன் ஜாதிகள் ஒழிக்கப்பட்டே தீரவேண்டும் என்ற ஆவேசத்தை மக்கள் மத்தியில் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் மக்களிடத்தே ஊட்டிய நிலையில், அந்த எழுச்சியின் எரிமலைச் சூட்டைத் தாங்க முடியாத எதிரிகளான பார்ப்பனர்கள், தங்களுக்கே உரித்தான தந்திரப் புத்தியில் அதற்கு வியாக்கியானங்களைச் சொல்ல ஆரம்பித்தனர்.


‘‘சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம் குண - கர்ம - விபாகச'' (கீதை அத்தியாயம் 4 - சுலோகம் 13) என்ற கீதையின் வாசகத்தில் உள்ள குணா - கர்ம - விபாகச என்ற வார்த்தைகளைப் புதுப்பித்துக் கொண்டு வருணம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல; குணத்தில், வாழும் வகையின் அடிப்படையில் என்றுதான் பகவத் கீதை கூறுகிறது என்று சாமர்த்தியமாக வியாக்கியானம் செய்ய - சொல்ல ஆரம்பித்தனர்.


குறிப்பாக பார்ப்பனீயத்தைக் காப்பற்றவே படாத பாடு பட்ட ‘துக்ளக்' ஆசிரியர் சோ.இராமசாமியே அவ்வாறு எழுதியவரில் முக்கியமானவர் ஆவார். அவர் என்ன சொல்லுகிறார்?


‘‘இந்த நிலையிலே ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுவது நல்லது. இந்த நான்கு வருணங்கள் பிறப்பின் அடிப் படையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் இப்படி வகைப் படுத்தப்பட்டனர். இதுபற்றி ‘எங்கே பிராமணன்' தொடரில் விளக்கமாக எழுதி இருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் ஓரளவுக்கு இவ்விஷயத்தைப் பார்க்க நேரிடலாம். குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள் காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிரிவுகளாக உருவெடுத்துவிட்டன.''


- சோ.ராமசாமி


இது உண்மையா? இவர்களுக்கு நாம் பதில் சொல்லு வதைவிட, இவர்களின் ஜெகத்குரு ‘மகாபெரியவாள்' மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் கூறிச் சென்றது என்ன? அதுவும் அவாள் பேசினால், அது ‘‘தெய்வத்தின் குரலாயிற்றே!'' அந்த நூலிலிருந்து ஆதாரத்தை எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.


No comments:

Post a Comment