பூரி தேரோட்டம் - தவறான முன்னுதாரணமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

பூரி தேரோட்டம் - தவறான முன்னுதாரணமே!

கரோனா பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு பூரியில் ரத யாத்திரை நடத்துவது, சந்தேகமான ஒன்றாகவே இருந்து வந்தது. ஒடிசாவின் பாரம்பரியம் மற்றும் அய்தீகத்தின்படி இந்த ஆண்டு பூரி ஜெகந்நாதர் தேரில் பவனி வரவில்லை என்றால், அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு வர முடியா தாம்? ஏன்? (எல்லாம் கட்டுக்கதைதான்!) உச்சநீதிமன்றம் இந்த விழாவினை நடத்தக்கூடாது என கடந்த ஜூன் 18ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.


இதை எதிர்த்து ஒடிசா விகாச பரிஷத் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை முறையே தலைமை நீதிபதிகள் எஸ்.ஏ போப்டே, தினேஷ் மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ்.போபன்னா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட விடுமுறைக் கால அமர்வு விசாரித்தது. இதில் ஜூன் 18ஆம் தேதி வழங்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றது. அதற்குக் காரணமாக, ஒடிசா அரசு கூட்ட நெரிசல் இல்லாமல் தேர்த் திருவிழாவினை நடத்த ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. (தனக்கு அச்சுறுத்தல் இருந்ததாக தலைமை நீதிபதி ஏற்கெனவே கூறியது நினைவிருக்கட்டும்) அதனை, ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்தின் தலைவர் கஜபதி மகாராஜா முன்மொழிந்தார்.


இதையடுத்து சில கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, திருவிழா நேரத்தில் பூரிக்குள் விமானம், ரயில், பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத யாத்திரை நடைபெறும் எல்லா நாள்களிலும் பூரியில் ஊரடங்கு அறிவிக்கப்படும். மக்கள் யாரும் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வர அனுமதி இல்லை.


இந்த ஊரடங்கை ஒடிசா அரசு, விழா நாள்களில் எப்போது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம். அதோடு ஒவ்வொரு தேரையும் அய்ந்நூறு நபர்களைக்கொண்டே இழுக்க வேண் டும். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனையைக் கட்டாயம் செய்ய வேண்டும். அவர்களுக்கு தொற்று இல்லை எனும் பட்சத்திலேயே தேர் இழுக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.


அந்த 500 நபர்களில் அதிகாரிகளும், காவல்துறையினரும் அடங்குவர். இரண்டு தேர்களுக்கு இடையில் ஒரு மணி நேர இடைவேளை கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம். தேர்களை இழுக்கும் போதும் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ரத யாத்திரையை ஊடகங்கள் எப்போதும் போல் படம் பிடிக்கலாம்.


ஒடிசா அரசு ரத யாத்திரையில் பங்கு பெறுபவர்களின் விவரங்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இவர்களின் மருத்துவ நிலையையும் பதிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த நிபந்தனைகளைக் கடைப்பிடித்து விழாவினை நடத்த வேண்டிய பொறுப்பு, பூரி ஜெகந்நாதர் கோயிலின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


மக்கள் கூடக் கூடாது - கூடக் கூடாது என்று ஒரு பக்கத்தில் குரல் கொடுக்கும் அரசும், நீதிமன்றமும் - மதம் என்று வந்து விட்டால் அதை மறந்து விடுவது எத்தகைய விபரீதம்?


கடந்த 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில், நடத்தப்பட்ட பூரி ரத யாத்திரை மூலமாகத்தான், காலராவும், ப்ளேக்கும் வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியான சம்பவம் இப்போது நிகழ்ந்துவிடக் கூடாது என்றுதான் மனிதா பிமானம் உள்ளவர்கள் விரும்புகிறார்கள். அதே நேரத்தில் அனுபவங்கள் மூலம் பாடம் பெறுவதுதானே புத்திலிசாலித் தனம்.  இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் நிலைமை இன்னும் மோசமடைந்துவிடும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.


தொடங்கப்பட்ட ரத யாத்திரையில் சேவகர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனப் பூரி மாவட்டத்தின் ஆட்சியாளர் பல்வந்த் சிங் கூறியுள்ளார். பிறகு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதுவரை 1,143 சேவகர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லாத பட்சத்திலேயே விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவைப் பொறுத்தவரை தற்போது வரை கரோனா தொற்று 6,000-க்கும் அதிகமாகத்தான் உள்ளது. 15 பேர் உயிரிழந்துள்ளனர்.


உலகம் முழுவதும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவ தற்காக தனிமனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 1,000 நபர்களுக்கு மேற்பட்டோர் ஓர் இடத்தில் கூடும் விழாவினை நடத்துவது என்ன மாதிரியான விளைவு களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனிவரும் நாள்களில் ஒடிசாவில் கரோனா பாதிப்பு அதிகமானால் அதற்கு யார் பொறுப்பு? அரசா, நீதிமன்றமா, கோவில் நிர்வாகமா அல்லது பூரி ஜெகந்நாதரா?


நடந்த தேரோட்டத்தில் கூடிய மக்களின் நெரிசலை ஏடுகளில் பார்த்தால், விபரீதமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதோ என்று கவலைப்பட வேண்டியுள்ளது. மத விடயம் என்றால் கண்மூடித்தனமும், முரட்டுத்தனமும்தான் முரண்டு பிடிக்கிறது.


No comments:

Post a Comment