43,000 கி.மீட்டர் விவகாரம் என்பது என்ன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

43,000 கி.மீட்டர் விவகாரம் என்பது என்ன

43,000 கி.மீட்டர் விவகாரம் என்பது என்ன?


இந்திய அரசை, சீனப் பிரச்சினையில் விமர்சித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்துத் தெரிவித்திருந்தார். அதற்குப் புத்திசாலித்தனமாக பதிலளிப்ப தாக நினைத்துக்கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில் இந்தியாவின் 43,000 கிலோ மீட்டர் அளவிலான பரப்பு சீனாவிடம் இழக்கப்பட்டது என்று விமர்சித்துள்ளார் பாஜக தலைவர் நட்டா.


இந்த விவகாரம்தான் அக்கட்சியின் அறிவு லட்சணத்தை மற்றொருமுறை சந்தி சிரிக்க வைத்துள்ளது. 43,000 கிலோ மீட்டர் என்பது பூமியின் மொத்த சுற்றளவைவிட அதிகம். இந்தியாவின் மொத்த நீள, அகலமே - வடக்கு தெற்காக 3,214 கி.மீ. மற்றும் கிழக்கு மேற்காக 2,933 கி.மீ. அவ்வளவே..!


இது ஏதோ இப்போது மட்டுமல்ல, அக்கட்சிக்கு இது வழக்கமான ஒன்றுதான். வாயில் வந்ததை அடித்துவிடு வது, அறிவியலுக்குப் புறம்பாக பேசுவது, 'போட்டோஷாப்' செய்து ஏமாற்றுவது, வரலாறு என்ற பெயரில் எதையாவது  கூறுவது; கடந்த 6 ஆண்டுகளாக இப்படி "உலக சாதனையே" செய்துவருகிறார்கள் பாரதீய ஜனதா & சங்பரிவார் குழுக்கள்! அதுபோன்றதொரு கட்சிக்கு, தான் தேசிய தலைவர் என்ற தனது தகுதியை இப்போது நிரூபித்துள்ளார் ஜே.பி.நட்டா.


அவரின் இந்தக் கூற்றுக்குப் பதிலளித்துள்ள மன்மோகன்சிங், “பாரதீய ஜனதாவின் தேசிய தலைவராக இருக்கும் அந்த மனிதரின் புவியியல் அறிவு இது. 43,000 கி.மீ. என்பது ஏறக்குறைய ஒட்டுமொத்த பூமியின் சுற்றளவாகும். பாரதீய ஜனதாவின் உறுப்பினர்கள், எதற்காக இப்படி படிப்பறிவு இல்லாதவர்களாகவும், போலி செய்தி களைப் பரப்புவோராகவும் உள்ளனர் என்று பதில் கொடுத்துள்ளார்.


ஊடகத்தினர் இது குறித்து கேள்வி கேட்டால் விவாதத்தில் கலந்துகொள்ளவரும் பாஜக பிரமுகர்கள் அவர்களை பாகிஸ்தானி, அல்லது சைனீஸ் ஏஜெண்ட் இல்லையென்றால் தேசத்துரோகி என்று கூச்சலிடுவர்.


மற்றொன்று இவர்கள் கூறியது தவறு என்று சான்றுகளோடு கூறினாலும், அதற்கு விளக்கமளிக்கவோ, மன்னிப்போ கேட்கவே மாட்டார்கள்


மோடி தனது  தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருமுறை   காந்தியாரின் தந்தையை மோகன்லால் என்று கூறினார். அப்போது மேடையில் இருந்த பாஜக பிரமுகர் குறிப்பால் சுட்டிக்காட்டினார், இதை உணர்ந்துகொண்ட மோடி அவரை முறைத்துப்பார்த்தார். மோடி சைகையைப் புரிந்துகொண்ட அவரின் பாதுகாப்பாளர்கள் தவறை சுட்டிக்காட்டிய பாஜக பிரமுகரை மேடையிலிருந்து இறக்கிவிட்டனர்.


இதேபோல்தான் 2015ஆம் ஆண்டு பீகார் தேர்தலின் போது இவர்  பீகார் பாடலிபுத்திரத்தில் அலெக்சாண்டரை எதிர்த்து பீகாரியான புருஷோத்தமர் வீர தீரமாக போரிட்ட பாடலிபுத்திர மண் இது என்று தவறான தக வலை பொதுமேடையில் கூறினார்.  அலெக்சாண்டர் புருஷோத்தமர் இடையே போர் நடந்த இடம் இன்றைய ஆப்கானில் உள்ளது, அவர் இன்றைய பாகிஸ்தான் மண்ணில் கூடவரவில்லை என்பது சிறுபிள்ளை பருவத்தில் இருந்தே பாடத்தில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.


எதையாவது சொல்லி, அதன் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தவேண்டும், அந்த பரபரப்பை தேர்தல் வாக்கு களாக மாற்ற முடியுமா என்ற சிந்தனைதானே தவிர, இவர்களுக்கு மேடை நாகரீகமும்,சரியான தகவல் அறிவோ, புரிதலோ கிடையாது. இதற்குப் பாஜக புதிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 43,000 கிலோமிட்டர் என்ற புளுகுமூட்டையும் ஓர் எடுத்துக்காட்டு. புளுகுமூட்டை என்பதைவிட பொது அறிவு, புவியியல் அறிவு விடயத்தில் ஆளும் கட்சியின் தேசியத் தலைவர் என்ற நிலையில் உள்ளவர் எந்த அளவு சுழியமாக இருக்கிறார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று.


இதில் மிக முக்கியமாக இந்தியாவின் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பிரச்சினையும் உள்ளது. இவ்வளவு பரப்பளவை இந்தியாவிடமிருந்து சீனா கைப்பற்றியுள்ளது என்று சொல்லுவதன் மூலம், மக்களிடையே ஏற்படும் உணர்வும், அச்சமும் எத்தகையதாக இருக்கும் என்கிற பொறுப்புக்கூட ஆளும் கட்சியின் தேசியத் தலைவருக்கு இருக்க வேண்டாமா?


ஆனால் ஒரு விதத்தில் தமிழகத்தில் இவர்களது அளப்பு எடுபடாது.


No comments:

Post a Comment