வ.வே.சு அய்யர் மறைவு: குடிஅரசு தலையங்கமும் - குறு மதியாளர்களின் குதர்க்கமும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

வ.வே.சு அய்யர் மறைவு: குடிஅரசு தலையங்கமும் - குறு மதியாளர்களின் குதர்க்கமும்!

-கி.தளபதிராஜ்



1925 ஆம் ஆண்டு, மே மாதம் முதல் வாரத்தில், தந்தை பெரியார் அவர்களையும், தங்க பெருமாள் பிள்ளை அவர்களையும் ஆசிரியர்களாகக் கொண்டு வார இதழாகத் தொடங்கப்பட்டது குடிஅரசு. இதழ் தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே அதிலிருந்து தங்கபெருமாள் தன்னை விடுவித்துக் கொள்கிறார். தங்கபெருமாள் இணை ஆசிரியராக பணியேற்றிருந்த காலத்தில் வெளியான குடிஅரசு இதழ்களில், மறைந்த தலைவர்களுக்காக சில இரங்கற் செய்திகளும் தலையங்கங்களாக வெளிவந்தது.


"ஸ்ரீமான் தியாகராய செட்டியார் ஆன்மா சாந்தி யடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக!"


"தேசபந்து சித்தரஞ்சன் தாஸரின் ஆன்மா சாந்தியடையுமாறு எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகிறோம்!" என்றெல்லாம் அந்த இரங்கற் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையில் முன்னுக்குப்பின் முரணாக இருந்துள்ளார் என்று சிலர் சித்தரிக்க முயன்றனர். மேற்படி இரங்கற் செய்திகள் பெரியாரால் எழுதப்பட்டது அல்ல என்று பல்வேறு ஆய்வாளர்களும், உடன் பழகியவர்களும் உறுதியாக மறுத்துவிட்ட போதிலும், இந்தக் குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் அவர்களுக்குப் பயன்படுவது, வ.வே.சு. மறைந்த போது குடிஅரசு ஏட்டில் வெளியான இரங்கற் செய்தியும் ஒன்று.


சேரன்மாதேவி குருகுல புகழ் வ.வே.சு, 1925ம் ஆண்டு, மே மாதம், நான்காம் தேதி, பாபநாசம் அருவிக்கு குடும்பத்தோடு குளிக்கச்செல்கிறார். அங்கே அவரது மகள் கால் இடறி நீர் வீழ்ச்சியில் விழ, அவரைக் காப்பாற்ற முயன்ற அவரும் அதில் பலியானார். அதையொட்டி, மே ஏழாம் தேதி குடிஅரசு ஏட்டில், "ஐயர் பிரிந்தார்!' என்று இரங்கற் செய்தி வெளிவந்தது.


"எல்லாம் ஆண்டவன் செயல்! நமது ஐயரின், அருந்தவப் புதல்வியின் ஆன்மா சாந்தியடையுமாறு எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகிறோம்" என்று முடிக்கப்பட்டிருந்தது.


மேற்படி இதழும் தங்கபெருமாள் பிள்ளை, குடிஅரசில் இருந்தபோது வெளியான அய்ந்தாறு இதழ்களில் ஒன்று தான். வ.வே.சு.அய்யர் அவர்களின் மறைவிற்கான இரங்கற் செய்தியை முழுமையாக படிப்பவர்களுக்கு, அது பெரியாரால் எழுதப்பட்டது அல்ல என்பது தெளிவாகவே புரியும்.


மறைந்த வ.வே.சு அய்யர், கவிச்சக்கரவர்த்தி சுப்ரமணிய பாரதியாரோடு வாழ்ந்து வந்தவர் என்றும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அருமைத் தொண்டர் என்றும், கம்பனின் கவித்திறத்தையும், சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை தமிழ் மக்கள் கண்டு அனுபவிக்குமாறு கம்பராமாயணத்தை புதிய முறையில் அச்சிட்டவர் என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.


1922ல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே இராமாயணத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர் பெரியார். கம்பராமாயணம் இயற்றப்படாமல் இருந்திருந்தால், இந்த நாட்டில் கலையும், ஒழுக்கமும் கெட்டுப்போயிருக்காது என்றவர் பெரியார். பாரதியாரைப்பற்றி பெரியாரின் உளப்பாடு என்னவாக இருந்தது என்பதையும் நாம் அறிவோம். மனிதாபிமான அடிப்படையில் வ.வே.சு அவர்களுக்கு இரங்கற்செய்தி பெரியாரால் இயற்றப் பட்டதாகவே எடுத்துக் கொண்டாலும் கம்பனையும், பாரதியையும் கவிச்சக்கரவர்த்திகள் என்று பெரியார் எப்படி எழுதுவார்? அதிலும் கம்பராமாயணத்தை புகழ்ந்துரைத்து அதை புதிய வடிவில் அச்சிட்டதற்காக வ.வே.சு. அவர்களை பெரியார் புகழ்ந்து எழுதினார் என்று சொன்னால் அது ஏற்கக் கூடியதாக இருக்கிறதா?


"ஜாதி மதம் கடந்தவர் வ.வே.சு அய்யர் என்றும், இதுகாறும் நடந்து வரும் குருகுலப் போர் இவரது சமூகக் கொள்கைகளின் மீது மக்களுக்குள் ஒரு வித அய்யத்தை உண்டாக்கி விட்டதெனினும், அவ்வய்யப்பாட்டிற்கு ஒரு சிறிதும் ஆதாரம் இல்லை" என்றும் மேற்படி தலையங்கத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.


1923ம் ஆண்டு கல்லிடைக்குறிச்சியில் வ.வே.சு. ஆல் தொடங்கப்பட்ட தமிழ் குருகுல வித்தியாலயா சேரன்மாதேவிக்கு மாற்றப்பட்டபோது, "குருகுலம் ஒரு தேசிய நிறுவனம். எனவே அதன் வளர்ச்சிக்கு காங்கிரஸ் செயற்குழுவிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்" என்ற வ.வே.சு வேண்டுகோளின்படி காங்கிரஸ் கமிட்டி அதற்கு ஒப்புதல் அளித்தது. அப்போது காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்த பெரியார் முதல் தவணையாக 5000 ரூபாய் அளித்திருந்தார். இந்த நிலையில் குருகுலத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதாருக்கு இடையில் தண்ணீர், உணவு, மற்றும் தங்குமிடங்களில் வேறுபாடு காட்டப்படுவதை அறிந்த பெரியார் வெகுண்டெழுந்தார். வ.வேசு.க்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். குருகுலத்திற்கு காங்கிரஸ் தர ஒப்புகொண்டிருந்த மீதம் 5000 ரூபாயை தர மறுத்தார். இராஜாஜி போன்றோர் வ.வே.சு. க்கு சாதகமாகச் செயல்பட்டனர். பெரியார் சேரன்மாதேவி குருகுலத்திற்கு எதிராக கடுமையாக போராடினார். பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறியதற்கான காரணங்களில் இந்த குருகுல நிகழ்வும் ஒன்றாகும். பெரியார் வரலாற்றை அறிந்தவர்கள் சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தை மறந்திருக்க முடியாது.


வ.வே.சு.வின் ஜாதீய உணர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடிய பெரியார், "ஜாதி மதம் கடந்தவர் வ.வே.சு அய்யர் என்றும், இதுகாறும் நடந்து வரும் குருகுலப் போர் இவரது சமூகக் கொள்கைகளின் மீது மக்களுக்குள் ஒரு வித அய்யத்தை உண்டாக்கி விட்டதெனினும், அவ்வய்யப்பாட்டிற்கு ஒரு சிறிதும் ஆதாரம் இல்லை" என்று அவருக்கு இரங்கற் செய்தி எழுதினார் என்று எவராவது சொன்னால், பெரியார் மொழியில், ‘கள் குடித்த பைத்தியக்காரன்’ கூட நம்ப மாட்டான்.


'சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் வரலாற்றுச் சுவடுகள்' நூலில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல், "இந்தத் தலையங்கத்தை எழுதியவர் குடிஅரசின் இணையாசிரியராக சில காலம் இருந்த திரு.தங்கப்பெருமாள் அவர்களாகவோ அல்லது வேறு துணை ஆசிரியராகவோ தான் இருக்க வேண்டும். கட்டுரையின் நடையும், கருத்துகளும் தந்தை பெரியாருடையதாக இருக்க வாய்ப்பில்லை!" என்பது தெள்ளத் தெளிவாகிறது.


No comments:

Post a Comment