காட்மேன் டிரைலர் பார்த்துக் கதறுவது ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

காட்மேன் டிரைலர் பார்த்துக் கதறுவது ஏன்


ஜீ5 என்றொரு ஊடக நிறுவனம் (OTT), தான் வெளியிடப்போகும்  ‘காட்மேன்’ என்ற தமிழ் இணையத் தொடருக்கான முன்னோட்டத்தை (Trailer) இரு நாள்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அவ்வளவு தான்... பார்ப்பனர்கள் தங்கள் சிண்டைத் தாங்களே பிடித்துக் கொண்டு குய்யோ முறையோ என்று குதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


அந்த தொடரின் டிரைலர் “பிராமணர்களை அவமதிப்பதாகவும், அதனைக் கண்டித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்’ காவல்துறையிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்... யார் யார்...? பார்ப்பனர் சங்கத்தினரும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும்!


எதற்காகவாம்? “காட்மேன் தொடரின் டிரெய்லர், திட்டமிட்டு, மக்கள் மதிக்கும் நிலையில் உள்ள பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்த வேண்டும் என்றே தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த தொடரில், காவி உடை அணிந்து வரும் ஒருவர், 'நான் கண்ட பிராமணர்கள் எல்லாம் அயோக்கியர்கள்' என குறிப்பிடுகிறார்.


மக்களுக்கு நன்மைகளை போதித்து, சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் பிராமண சமுதாயத்துக்கு, இது, நேரடியாக இழைக்கப்பட்ட அவமானம்.நடவடிக்கை அதன் தயாரிப்பாளரும், இயக்குனரும் திட்டமிட்டு தங்களுக்கு கிடைக்கும் விளம்பரத்துக்காக, இப்படி டிரெய்லர் வெளியிட்டு உள்ளனர். பிராமணர்களை அவமானப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும்.”


எப்பூ...டி?


அட பாவப்பட்ட இந்திய இறையாண்மையே! இந்தியாவின் இறையாண்மையை எவ்வளவு எளிதாக அவமானப்படுத்த முடிகிறது பார்த்தீர்களா?


முதலில் இந்திய இறையாண்மையை எதிர்த்துப் பேசக் கூடாது என்றார்கள். எது இந்திய இறையாண்மை என்றால், இந்திய ராணுவத்தையோ, இந்திய தேசியத்தையோ எதிர்த்தாலே அது இந்திய இறையாண்மையை எதிர்ப்பது என்றார்கள். பிறகு மத்திய அரசை எதிர்த்தால் இந்திய இறையாண்மையை எதிர்ப்பது என்றார்கள். பிறகு பிரதமரை எதிர்த்தால் இந்திய இறையாண்மையை எதிர்ப்பது என்றார்கள். ஜனநாயகம் பேசினால், மதச்சார்பின்மை பேசினால், பகுத்தறிவு பேசினால் இந்திய இறையாண்மையை எதிர்க்கிறார்கள் என்று குதித்தார்கள். அது பாசிசம் என்றோம்.


இதோ... இன்று பார்ப்பனர்களை எதிர்ப்பதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். வெறும் பாசிசம் அல்ல... பச்சைப் பார்ப்பனப் பாசிசம் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.


உண்மை தான் அவர்கள் சொல்வது! அவர்கள் பார்வையில் இந்தியா என்பதே பார்ப்பனர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஏற்பாடு தானே! அதைத் தக்கவைக்கத் தானே அந்தப் பாடு படுகிறார்கள். சரி, அது போகட்டும்!


இவ்வளவு கோபப்பட்டு குதிக்கும் அளவுக்கு அந்த டிரைலரில் என்ன சொல்லப்படுகிறது?


அவர்கள் சொல்வதைப் போல ‘நான் கண்ட பிராமணர்கள் எல்லாம் அயோக்கியர்கள்' என்று கூட சொல்லப்படவில்லை. “என்னைச் சுத்தியிருக்கிற எல்லா பிராமணாளும் அயோக்கியன்களா இருக்காங்க.” என்று காட்மேன் டிரைலரில் ஒரு சாமியார் சொல்கிறார்.


இந்த டிரைலர் வெளிவந்த நாட்களில் தான் காரைக்குடி அருகிலுள்ள சாரதா நிகேதன் கல்லூரி நிலத்தையும், அறக்கட்டளையையும் அபகரிப்பதற்காக, பா.ஜ.க.வின் தேசியப் பதவியில் இருக்கும் பார்ப்பனர் ஒருவரின் உறவினரும், அவரது அடியாட்களுமாக என்னை அடித்துத் துரத்திவிட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். சார்புடையதென்று கருதப்படும் ஓர் அறக்கட்டளையின் நிர்வாகியே காவி உடையோடு, கண்ணீர் மல்க கதறிக் கதறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அது பரபரப்பாகி பரவிக் கொண்டிருந்த சூழலில் தான், “தன்னைச் சுற்றியிருக்கும் பிராமணாள்லாம் அயோக்கியன்ங்களா இருக்காங்க” என்ற வசனத்துடன் பொருத்தமாக இந்த டிரைலரும் வெளியானது. இதுக்கெல்லாமா அவர்கள் கோபப்படப் போகிறார்கள். தாங்கள் அயோக்கியர்கள் தான் என்பதை பெருமையோடல்லவா அவா ஒப்புக் கொள்வார்கள். அதற்கு வேத விளக்கங்களும், சாமபேத தான தண்டப் பிரசண்டங்களும், சாணக்கியத் தனம் போன்ற கதாபாத்திரத் தன்மைகளும் ரெடிமேடாக இருக்கத் தானே செய்யும். பிறகெதற்கு இப்படி குதிக்கிறார்கள்? அதற்குத் தான் அந்த முன்னோட்டக் காட்சியை முழுமையாகப் பார்க்க வேண்டும். அதில், காவி உடையணிந்த சாமியார் வேடம் தரித்தவர் (நடிகர் ஜெயப்பிரகாஷ்) என்ன சொல்கிறார்?


“பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்திரத்தில சொல்லியிருக்கு? என்னைச் சுத்தியிருக்கிற எல்லா பிராமணாளும் அயோக்கியன்களா இருக்காங்க. நீ வேதம் படிக்கணும் அய்யனார். இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கணும்னு காட்டப்போறேன்.”


இப்போது பிரச்சினை புரிந்திருக்க வேண்டுமே! “பார்ப்பனர் அல்லாதார் வேதம் படிக்கக் கூடாதா? என்ற கேள்வியும், வேதம் படித்தால் பிராமணராக முடியும் என்ற தொனியும் தொனிக்கிறதே அந்த வசனத்தில்! அது தானய்யா பிரச்சினை? யாரைக்கேட்டு இப்படிச் சொன்னார்கள்? யார் வேண்டுமானாலும் வேதம் படிக்கலாம் என்பதற்கு அதென்ன குமுதமா, கல்கியா? அதற்கென்று ஒரு தகுதி தராதரம் வேண்டாமா? அப்படியே படித்துவிட்டாலும் பிராமணன் ஆகிவிட முடியுமா? என்ன தெனாவட்டு?” இது தான் அவாளின் கூக்குரலுக்குக் காரணம். இதெல்லாம் அந்த புகாரில் இல்லையே என்கிறீர்களா? அப்படி வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் என்ன ஆவது?


பிறகெப்படி பார்ப்பனரல்லாதாரைக் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வது? அதனால் தான் அவையெல்லாம் வெளியில் வரவில்லை. வேதம் படிக்கச் சொல்லித் தானே அந்தச் சாமியார் சொல்கிறார். இந்து மதத்தைப் பரப்புவதற்காக, பாதுகாப்பதற்காகவே தொடங்கப்பட்ட அமைப்பான விஸ்வஹிந்து பரிஷத்திற்கு இதில் என்ன கோபம்? இந்து மதப் பாதுகாப்பு என்பதே பார்ப்பனப் பாதுகாப்பு தானே... அதற்குத் தானே அத்தனை வானர சேனைகளும்! நாம் அதைப் புரிந்துகொள்ளத் தான் இந்தத் தருணம்.


ஆனால், பாவம்... இதெல்லாம் அனுபவஸ்தர்களான பிராம்மணோத்தமர்களுக்குத் தெரியும். வளரும் பிராயத்தில் அவ்வளவு சூட்சுமம் இருக்குமோ? ஒரு பிள்ளாண்டான் உணர்ச்சிவசப்பட்டு நேற்று முன் தினமே ஒரு வீடியோ போட்டுட்டன். (இணைப்பு: https://www.facebook.com/sriram.sundar.733/videos/1676024295881723/). அதில் அவர் பொரிந்து தள்ளியதன் சுருக்கம் தான், கடந்த பத்தியில் நாம் மேற்குறிகளுக்குள் சொல்லியிருக்கும் புலம்பல். அப்படி இஷ்டத்துக்கு யாராவது வேதத்தைப் படிக்கலாம், பிராமணராகலாம், பிராமணர்களின் சிறப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று கருதினால், “பரித்ராணாய ஸாதூ நாம் விநாயாய ச துஷ்க்ர்தாம் தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் சொன்னதைப் போல, தாமே பூமியில் அவதரித்து, உங்கள் கண்களைத் தோண்டிவிடுவார் என்றெல்லாம் சாபம் விட்டிருந்தார் அந்த பிள்ளாண்டான். இப்படியெல்லாம் வெளிப்படையா பேசப்படாது; அதை வேறு மாதிரி டீல் செய்யலாம் என்று பெரியவா சொல்லிருப்பா போலும். இன்று அந்த காணொலியையும் காணோம், அந்தப் பிள்ளாண்டானின் பக்கத்தையும் முகநூலில் காணோம்!


‘ஸம்பவாமி யுகே யுகே‘ என்று கிளம்பி வந்து ‘சம்பவம்’ செய்துவிடுவேன் என்று பகவான் கிருஷ்ணர் (!) ஸ்ரீமத் பகவத் கீதையில் சொல்லும் ‘அத்தியாயம் 4 - சுலோகம் 8’  ஒரு பக்கம் இருக்கட்டும். தர்மத்தினைக் குலைத்தால் தான் அவதரித்து வந்து தர்மத்தைக் காப்பேன் என்று சொல்லும் அந்த சுலோகம், ஒரு சவடால் மிரட்டல்! அதை விடுங்கோ... ஆனால், அது எந்த தர்மம், அதைச் சொல்லும் சுலோகம் எது? வீடியோ போட்ட அந்தப் பிள்ளாண்டானின் கோபத்திலும், அவர் சொல்லத் துடித்து, சொல்லாமல் மறைத்த சுலோகம் எது தெரியுமோ? அடுத்த அய்ந்தாவது சுலோகம், அதாவது அத்தியாயம் 4 - சுலோகம் 13 தான்!



நிற்க, இந்த கொரோனா காலத்தில், யூ டியூப்பில் ‘ஓம் குருபியோ நமஹ’ புகழ் சர்மா சாஸ்திரிகள் கடந்த மே 3-ஆம் தேதி ஒரு காணொளி போட்டிருந்தார். அதில் “ஆன்லைன் வகுப்பு  யஜுர் சந்த்யாவந்தன மந்த்ரங்கள். மே 9&10 - நேரம்: மதியம் 12 மணி - தகுதி: உபநயன சம்ஸ்காரம்” என்று ஒரு விளம்பரம் செய்திருந்தார். சந்த்யா வந்தன மந்த்ரங்களை அவர் ஆன்லைனில் நடத்தினால் நமக்கென்ன, தாராளமாக நடத்திவிட்டுப் போகட்டும். ஆனால், அதில் தகுதி என்று போட்டு, உபநயன சம்ஸ்காரம் என்று போட்டிருந்தாரே, அதன் சூட்சுமம் என்ன? எல்லாம் ஒன்று தான். “ப்ராம்ணாள் மட்டும் வாங்கோ.. மத்தவாள்லாம் ப்டாது” என்பது தானே அது! அதற்கும் நாம் மேற்சொன்ன அதே சுலோகம் தானே அடிப்படை. “குணத்தின் அடிப்படையில் தான் நான்கு வர்ணங்களும் பிரிக்கப்படுகின்றன. நீங்கள் சொல்வது போலெல்லாம் இல்லை” என்று நம்மிடம் வியாக்கியானம் சொல்வார்களே... சாட்சாத் அதே  சுலோகம் தான். என்ன தான் சொல்றது அது... சித்த பார்த்துட்டு வருவோமா?


“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச


தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்”


“வேதியர், வேந்தர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணங்கள் கொண்ட சமூகம் குணங்களையும் கர்மங்களையும் ஒட்டிய பிரிவுகளாக என்னால் படைக்கப்பட்டது. இங்ஙனம் அந்தப் படைப்பு முதலிய செயல்களைச் செய்யும் கர்த்தாவாக நான் இருந்தபோதிலும், அழிவற்ற பரமேசுவரனாகிய என்னை, உண்மையில் கர்த்தா அல்லன் என்றே நீ அறிவாயாக.” (’ஸ்ரீமத் பகவத்கீதா - தத்வவிவேசனீ’, பக்கம் 272, ஆக்கியோர்: ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா, வெளியீடு: கீதா பிரஸ், கோரக்பூர்)


அதான் சொல்லிருக்கே சார், என்கிறீர்களா? பொறுங்கள்.. சம்சயமில்லாமல் புரிய வேண்டும் என்பதற்காகவே, அதே புத்தகத்தில், 273, 274 பக்கங்களில் கேள்வி பதில் வடிவில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள், அதையும் படியுங்கள்.


“கேள்வி: பிராமணர் முதலிய வர்ணப்பிரிவகளை, அவர்களுடைய பிறவியினால் கணிக்கவேண்டுமா? அல்லது அவர்களுடைய செயலைக் கொண்டு கணிக்கவேண்டுமா?


பதில்: பிறப்பு, செயல் இரண்டுமே வர்ணப்பிரிவிற்குத் துணை நிற்பவைதான். ஆகவே, ஒரு வர்ணத்தினர் என்று முழுமையாக நிர்ணயிக்கப் பிறப்பு, செயல்கள் இரண்டையும் சேர்த்துத்தான் கணிக்கவேண்டும். ஆயினும், பிறப்பை வைத்துத்தான் பிராமணர் முதலிய வர்ணப்பிரிவு நடந்து வருகிறது என்று அறியவேண்டும். ஏனெனில், இவை இரண்டில் பிறவிக்குத்தான் முதன்மை கொடுக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் ஒரே வர்ணத்தவராக இருந்து பிறவியில் கலப்பு ஏற்படாவிட்டால், இயற்கையாகவே கர்மங்களிலும் கலப்பு ஏற்படாது. ஆனாலும் சேர்க்கை, உணவு, கல்விப் பயிற்சி ஆகியவற்றின் தோஷத்தினால் கர்மங்களை ஆற்றுவதில் கொஞ்சம் குறைவு ஏற்படலாம். ஆயினும், பிறவியினால் வர்ணத்தை ஏற்றுக் கொண்டால், வர்ணத் தூய்மை காப்பாற்றப்படலாம். ஆயினும், செயலும் குற்றமற்றதாக இருக்க வேண்டும் என்ற நியதியில், தவறுவதற்குச் சலுகை கிடையாது. கர்மங்களை ஆற்றுவது என்பது முழுமையாக இல்லாமல் போய்விட்டால், பிறவியினால் ஏற்பட்ட வர்ணத் தூய்மையைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். ஆகவே, வயிற்றுப் பிழைப்பு, திருமணம் முதலிய உலகியல் நடைமுறைகளுக்காக வர்ண வகுப்பில் பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, ஆன்ம மேன்மைக்குரிய விஷயங்கள் கர்மங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில், பிராமண வகுப்பில் பிறந்தவனாயினும், அவனுடைய செயல் பிராமணனுக்குரியதாக இல்லாவிட்டால் அவனுக்கு ஆன்மிக மேன்மை கிடைக்காது. அதே போல் எல்லோருக்கும் பொதுவான புலனடக்கம், மனவடக்கம் முதலியவற்றைக் கடைப்பிடித்து, நல்லொழுக்கம் உள்ள நான்காம் வர்ணத்தவன், யாகம் செய்ய ஆரம்பித்துத் தன் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தால், அவனுக்குப் பாவம்தான் சம்பவிக்கும்.


கேள்வி: தற்காலம் இந்த வர்ண அமைப்பு என்ற ஏற்பாடு சிதறிவிட்டதே, இந்த நிலையில் பிறப்பினால் வர்ணத்தைக் கண்டு கொள்ளாமல், மனிதர்களுடைய நடத்தையை வைத்து, அவர்கள் இன்ன வர்ணத்தவர்கள் என்று ஏற்றுக் கொண்டால் என்ன தவறு?


பதில்: இப்படி ஏற்பது சரியன்று. முதலாவதாக, வர்ண ஏற்பாட்டில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், முழுமையாக அழிந்துவிட்டது என்று கூறமுடியாது., இரண்டாவதாக, ஜீவர்கள் முன்வினைப் பயனை அனுபவிக்கவேண்டும் என்று ஈசுவரன், அவர்களின் முன்வினைக்கேற்றவாறு அந்தந்த வர்ணங்களில் பிறப்பளிக்கிறார். பகவானின் இந்த ஏற்பாட்டை மாற்ற மனிதனுக்கு உரிமையில்லை. மூன்றாவதாக, நடத்தையை மட்டும் வைத்து இன்ன வர்ணத்தவர் என்று தீர்மானிப்பதும் முடியாத செயல், ஒரே பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் நடத்தையிலேயே மிகுந்த மாற்றத்தைக் காண்கிறோம். ஒரே மனிதன் ஒரு நாளில் ஒரு சமயம் பிராமணன் போலவும், வேறொரு சமயம் மற்ற வர்ணத்தவர் போலவும் நடந்து கொள்கிறான். இந்த நிலையில் எப்படி வர்ணத்தை நிர்ணயிப்பது? தாழ்வை எவர்தான் ஏற்றுக் கொள்வர். இதனால் உணவுப்பழக்கத்திலும், திருமணம் முதலியவற்றிலும் குழப்பம் ஏற்படும். கடைசியில், வர்ண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வர்ண ஏற்பாடு என்பதே குலைந்து போய்விடும். ஆகவே, செயலினால் மட்டும் வர்ண வகுப்பைத் தீர்மானிப்பது சரியன்று.”


ஏன் சார், “நான்காம் வர்ணத்தவன் யாகம் செய்ய ஆரம்பித்துத் தன் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தால், அவனுக்குப் பாவம்தான் சம்பவிக்கும்”, “வர்ண ஏற்பாடு என்பதே குலைந்து போய்விடும். ஆகவே, செயலினால் மட்டும் வர்ண வகுப்பைத் தீர்மானிப்பது சரியன்று” என்றெல்லாம் தெளிவா சொன்ன பிறகு, நீங்க வந்து அய்யனாரை பிராமணனா மாத்தப் போறேன்னு சொன்னா அவாளுக்குக் கோபம் வராதா? கொதிக்க மாட்டாளா?


இவ்வளவுக்கும், அந்தத் தொடர் ஜூலை 12 ஆம் தேதியன்று தான் வெளியாகவிருக்கிறது. அது எந்த கருத்தில் வரப்போகிறது என்று அவர்களுக்கும் தெரியாது; நமக்கும் தெரியாது.


பிறகேன் அவர்களுக்கு இப்படி அவசரம்?


அது முற்போக்குத் தொடராக இருக்கும் என்றெல்லாம் நாம் கற்பனை செய்யவில்லை. காரணம் அந்தத் தொடரின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் முற்போக்காளர் அல்லர். நெற்றியில் பல வண்ணங்களில் பெயிண்ட் அடித்திருப்பவர் தான். தான் இதற்கு முன்பு தயாரித்த படத்தின் விழாவை, இவ்வாண்டின் தொடக்கத்தில் பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணனனையும், வானதி சீனிவாசனையும், ராதாரவியையும் வைத்து நடத்தியவர் தான். ஈர்ப்புக்காக இப்படி வசனங்களை, தனது டிரைலரில் அவர் வெளியிட்டிருக்கலாம். இந்து மதத்திற்கு சப்பைக் கட்டு கட்ட முயற்சித்திருக்கலாம்... நமக்குத் தெரியாது. இது எதுவும் தெரியாமல், விஸ்வ ஹிந்துபரிஷத்தும், பார்ப்பனர் சங்கமும் குதித்த குதியில், ஜீ5 நிறுவனம் அந்த முன்னோட்டக் காணொலியைத் தனது பக்கத்தில் (https://www.zee5.com/zee5originals/details/godman/0-6-2832) இருந்து நீக்கியுள்ளது. இனி பல கட்ட கொடுக்கல்வாங்கல் பேச்சு வார்த்தைக்குப் பிறகு வேறு வடிவில், வேறு வசனங்களோடு வெளிவரலாம்.


இருக்கட்டும். அந்த வசனத்தில் கடைசியாக அந்த சாமியார்,  “இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கணும்னு காட்டப்போறேன்.” என்பதாகச் சொல்கிறார். தங்கள் அதிகாரம் போய்விடாமல் பாதுகாக்க, வர்ணதர்மத்தைக் காக்கும் பணியில், “தாங்கள் எப்படி இருக்கிறோம்” என்பதை இப்போது பார்ப்பனர்கள் காட்டியிருக்கிறார்கள். புரிந்து கொள்ளட்டும் - பார்ப்பன சடகோபத்திற்காக ஏங்கி நிற்கும் சூத்திரர்கள்!


-சமா.இளவரசன்


No comments:

Post a Comment