ஊன்றிப் படித்து, உண்மையை உணருங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

ஊன்றிப் படித்து, உண்மையை உணருங்கள்!

ஒழுக்கமும் - கொள்கை உறுதியுமே நம் உயிர்!



கழகத் தோழர்கள் - இயக்கப் பொறுப்பாளர்கள் - பெரியார் பற்றாளர்கள், பெரியாரியத்தில் ஈடுபாடு கொண்ட பெரியார் மாணாக்கர்கள், செயல் வீரர்கள் நம் அனைவருக்கும் தந்தை பெரியார் தந்த அறிவுரை - பாடம் ஒன்று, இதோ:


1935 ‘குடிஅரசு' தொகுதி 18, பக்கம் 206 இல், ‘பெண்கள் நிலையம்' என்ற ஒன்றினை நாம் ஏற்படுத்திட வேண்டும் என்று சாத்தான்குளம் அ.இராகவன் அவர்கள்  கேட்டிருக்கிறார். (இவர் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்திலிருந்து, தொண்டாற்றி, பிறகு சுயமரியாதை இயக்கம் தீவிர சமதர்ம இயக்கமாக இல்லை என்ற ஏதோ ஒரு குற்றச்சாற்றினைக் கூறி, தோழர் ப.ஜீவானந்தம், பெண் தோழர் நீலாவதி  இராமசுப்பிரமணியம் உள்பட மற்ற தோழர்கள் ஒருங்கிணைந்து தந்தை பெரியாருக்கு எதிராக இயக்கம் ஒன்றை நடத்தி, பிறகு மூடுவிழா செய்து முடங்கிவிட்ட பரிதாப நிலைக்கு ஆளானவர் - ஒரு முக்கியஸ்தர். இவ்வறிமுகம் இளைய தலைமுறை அறிவதற்காக - குற்றம் சுமத்தவோ, அவதூறு பரப்பவோ அல்ல).


அதுபோழ்து தந்தை பெரியார் வழங்கிய அனுபவம் கொப்பளித்த அறிவுரை எப்போதும் நமக்கு - இயக்கத் தோழர்களுக்கு வழிகாட்டும் மூதுரையாகும்!


பெண்கள் நிலையமானதாலும், தீவிரமான திட்டங்களுடன் நடத்தப்படவேண்டியதினாலும் மிகவும் ஜாக்கிரதையுடனும், பொறுப்புடனும் நடத்தப்படவேண்டிய காரியமாகும்.


ஆரம்பத்தில் எதிரிகளின் பிரச்சாரங்களுக்குக் கூடுமானவரை இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளவேண்டியதுமான அவசியமான காரியமாகும்.


சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் பலரின் மனோ நிலையை நாம் அறிந்திருக்கிறோம்.


ஆனதினாலேயே எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்கவேண்டுமென்பதை வலியுறுத்துகிறேன்.


பிறத்தியார் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்; என்ன சொல்வார்கள் என்று நினைப்பவர்களால் ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது ஒரு அறிவு வாக்கியம்தான். ஆனால்,  அந்த வாக்கியம் பிறத்தியாருடைய மனதில் சில அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் ஏற்கவேண்டிய சந்தர்ப்பத்திலும் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதல்ல என்பது என் அபிப்பிராயம்.


ஆதலால், மிகவும் பொறுப்புடனும், கவலையுடனும் இந்தக் காரியம் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு, அப்படிப்பட்ட ஒரு நிலையத்தை வெகு ஆர்வத்தோடு வரவேற்கின்றேன்.


- தந்தை பெரியார்  அவர்கள் 26.4.1935 இல், ‘குடிஅரசு' ஏட்டில் எழுதிய துணைத் தலையங்கம்.


சமத்துவம், சம உரிமை, வேறுபாடின்றி நண்பர்களாக ‘‘தோழர்களாக''ப் பழகுவது - தொண்டு செய்தல் இவற்றில் ஈடுபடுவோருக்கு இதைவிட சிறந்த கலங்கரை வெளிச்ச ஒளி வேறு இருக்க முடியுமா?


அந்த வகையில், ஒழுக்கத்திற்கு அய்யா தந்த விளக்கத்தை இத்துடன் இணைத்துக் கொண்டு, நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


‘‘மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, எதிர்பார்க்கிறீர்களோ, அப்படியே நீங்கள் மற்றவர்களிடமும் நடந்துகொள்வதுதான் ஒழுக்கம்'' என்று மிக அருமையாக, எளிமையாக விளக்கினார் நம் அறிவு ஆசான்.


அதோடு, சுயமரியாதைக்காரர்கள் -பகுத்தறிவாளர்கள் இயல்பாகவே ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டியவர்களே. எப்படியெனில், நம்பிக்கையாளர்கள் - மதவாதிகள் - பக்தர்கள் ஆகிய ஆத்திகர்களுக்கு எந்தத் தவறைச் செய்தாலும் அதிலிருந்து விடுபட்டு விடுதலையாகி, ‘மோட்சம்' செல்ல


‘‘பிராயச்சித்தம்''


‘‘பாவ மன்னிப்பு''


‘‘கழுவாய்''


‘‘வேண்டுதல் தண்டம்; பிரார்த்தனை''


ஆகிய  மார்க்கங்கள் ‘‘ரெடிமேட் ரூட்டு''களாக தீர்வுகளாக இருக்கின்றன.


ஆனால், சுயமரியாதைக்காரர்களுக்கு அப்படி எந்த வாசலும், வாய்ப்புகளும் ஒருபோதும் கிடையாது. ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை.


1972 இல் என்று நினைவு. தஞ்சையில் மருத்துவக் கல்லூரி சார்பில் தந்தை பெரியாருக்கு டாக்டர் பாலகிருஷ்ணன் (பிரபல தோல்  நோய் நிபுணர், இப்போது) தலைமையில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி மிகவும் சீரும் சிறப்புடன் நடைபெற்றது. அதற்குப் பக்கத்தில் 3000 பேர்களைக் கொண்ட திறந்தவெளிச் சிறைச்சாலை இருந்தது; ஆயுள் தண்டனைக் கைதிகளைப் பூட்டுவதில்லை. அதற்குள் சுதந்திரமாக பணி செய்துகொண்டு தங்கியிருப்பார்கள். அதனைக்  காண கைதிகள் விருப்பப்படி - தந்தை பெரியாரை அங்கு அழைத்துச் சென்றார் ஜெயிலர் திரு.நாகய்யா அவர்கள்.


அய்யாவும், அவர் வேண்டுகோளை ஏற்று பார்வையிட்டுத் திரும்பும் நேரத்தில், அங்கிருந்த அத்துணைக் கைதிகளும், ஒரே குரலில் அய்யா எங்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்லுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.


தந்தை பெரியார், ஜெயிலரிடம் பேசலாமா? என அனுமதி கேட்டு,  அவர் ‘தாரளமாக' என்று கூறியவுடன், அதிகம்கூட பேசவில்லை.


‘உங்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எவ்வளவு பேர் கைதூக்குங்கள்' என்றார்.


அத்துணை பேரும் கைகளை உயர்த்தினர்.


அடுத்து, தந்தை பெரியார், ‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கையைத் தூக்குங்கள்' என்றார்.


ஒருவரும் கையை உயர்த்தவில்லை.


சிறிது நேரம் அமைதி.


தந்தை பெரியார் அவர்களைப் பார்த்து, ‘‘உங்கள் கடவுள் நம்பிக்கை, உங்களைக் குற்றம் செய்யாமல் தடுத்ததா?'' என்றார்.


‘‘இல்லை, இல்லை''  என்று கோரஸ் பதில்.


இதிலிருந்து கடவுள் நம்பிக்கை உங்களைக் காப்பாற்ற - குற்றம் புரியாமலிருக்க உதவவில்லையே, புரிந்துகொள்ளுங்கள். வருகிறேன், நன்றி, வணக்கம்'' என்றார்.


எவ்வளவு அற்புதமான யதார்த்தமான அறிவு வகுப்பு - நேரிடையான கேள்விகள்மூலம்.


தவறு செய்யாது வாழ வேண்டுமே தவிர, வாழ முயற்சிக்கவேண்டுமே தவிர, தவறு செய்துவிட்டு அதற்குரிய தண்டனை - விளைவுகள் - தண்டனைகளிலிருந்து ஒருபோதும் தப்பித்துக்கொள்ள எண்ணவே கூடாது.


ஒருவன் நாத்திகனாக இருப்பதில் ஏற்படும் மிகப்பெரிய நன்மை -  அந்த தனி மனிதனுக்கு மட்டுமல்ல - அவனால், அவன் ஒழுக்கந் தவறாதவனாக இருப்பதனால் அவன் வாழும் சமுதாயத்திற்கும், நன்மையும், நிம்மதியும் உண்டு - இல்லையா?


மதங்கள் - மத நம்பிக்கைப்படி வாழுபவர்களுக்கு பிரார்த்தனை - வேண்டுதல்மூலம் கடவுளைச் சரி கட்டிவிடலாம்; ‘மோட்சக் கதவைத்' திறக்க வைத்துவிடலாம் என்றுதானே சொல்லுகின்றன.


தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் ஒரு முக்கிய கேள்வி கேட்டார்.


இவ்வளவு எளிதான  வழி - ‘பிராயச்சித்தம்' - யாக யோகங்கள், தான தர்மங்கள், உண்டியலில் போடும் பிரார்த்தனை பாவ மன்னிப்பு - 12 வருட பாவங்களைக்கூட கழுவிட கும்பமேளாக்கள், மகாமகங்கள் மற்ற மற்ற மதச் சடங்குகளும் ஆன வாய்ப்புகள் இருக்கிறபோது, ஏன் மனிதன் தவறு செய்ய, ஒழுக்கக் கேடாக நடந்துகொள்ளத் தயங்குவான்? எனவேதான் சமூகத்தில் ஒழுக்கக் குறைவு மலிவானதாகி உள்ளது.


ஆனால், பகுத்தறிவுவாதிகள் - நாத்திகர்கள் அடுத்தவருக்குத் தீமை செய்யாததோடு - குறுக்கு வழிகளில் ஈடுபடுவதோ இல்லை - தத்துவ ரீதியாகவும், நடைமுறைப்படியும் சரி.


சிறைச்சாலைகளில் கொலையும், கொள்ளையும், திருட்டும், புரட்டும் வன்புணர்ச்சி - வல்லுறவுக் குற்வாளிகளில் நாத்திகர்கள் சதவிகிதம் என்ன? ஆத்திகர்கள், நம்பிக்கையாளர்கள்தானே பெரும்பாலும்!


23 வயதில் தனது லட்சியத்திற்காக தூக்குமேடை ஏறி இன்னுயிரைத் தேசத்திற்காகத் தியாகம் செய்த பகத்சிங் - ‘‘நான் ஏன் நாத்திகன்'' என்று சிறையிலிருந்து எழுதிய அந்த சிறு நூல் எத்தகைய புரட்சி ஆவணம் - சற்றே எண்ணிப் பாருங்கள்.


தூக்குத் தண்டனைக் கைதி வேண்டாத தெய்வம் உண்டோ? மாறாக, 23 வயது இளைஞன் பகத்சிங்கின் மன உறுதி எப்படிப்பட்டது?


கடைசி நேரத்தில் அப்ரூவராக மாறு, உன்னை உன்னத இடத்தில் வைக்கிறோம் என்ற ஆசை வார்த்தையைக் கேட்டு அந்த நாத்திகன் ‘தூ' என்று காறித் துப்பிவிட்டு, கயிறு  எங்கே என்று கேட்ட ஈடு இணையற்ற நாத்திகன் அவர் - காட்டிக் கொடுத்து தன் வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் சுயநலப் பிண்டமாகாமல், இலட்சிய வீரனாக - என்றும் வாழுகிறான் சாகாத சரித்திரம் அல்லவா அது!


நாத்திகன் பெறுகின்ற மன நிறைவு - அவனுக்காக அல்ல - மற்றவர்களுக்கும் (விடுதலைக்கு) - இதைவிட உயர்ந்த பொதுநலம் - பொதுத் தொண்டறம் எங்குத் தேடினாலும் கிடைக்குமா?


நாத்திகம் என்பது ஒழுக்க நெறி, ‘தவறு செய்யாதே; செய்தால் தண்டனையிலிருந்து தப்பிக்க எண்ணாதே!' என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, உலகுக்குப் பாடமாகத் திகழும் தத்துவம்!


எனவே,  ஒழுக்கம் என்பதன் பொருள் எப்படிப்பட்டது புரிகிறதா?


வாழ்ந்து காட்டி நிரூபிப்போம், வாரீர், தோழர்களே!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


2.5.2020


No comments:

Post a Comment