திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முக்கிய தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 13, 2020

திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முக்கிய தீர்மானம்

நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது


 


*தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடரவேண்டும்


 


*ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும்


 


*பொது சுகாதாரத் துறையை ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு போகக்கூடாது


சென்னையில் சமூகநீதி பாதுகாப்புக்கான பொதுக்கூட்டம் - மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்


டில்லியில் கருத்தரங்கம் - ஆர்ப்பாட்டம்


சென்னை, பிப்.13 சமூகநீதிக்கு ஏற்பட்டு இருக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டத் தையும், ஆர்ப்பாட்டத்தையும் விரைவில் நடத்துவது என்றும், அதுபோல, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது டில்லியில் சமூகநீதிப் பாதுகாப்புக் கருத்தரங்கத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் நடத்து வது என்றும்,  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தலைமையில் இன்று (13.2.2020) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளின் கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


தீர்மானம் வருமாறு:


பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட் சிக்கு வந்ததற்குப் பிறகு, மக்கள் விரோத மற்றும் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித் துள்ளன.


இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 7-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 16(4), 16(4-ஏ), 15(4) ஆகியவை செயல்படுத்தும் பிரிவுகள் (Enabling provisions); இப்பிரிவுகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இவை அடிப்படை உரிமைகள் அல்ல என கூறப்பட்டுள்ளது. (வழக்கு முகேஸ்குமார் எதிர் உத்தரகாண்ட் அரசு).


நீதிபதிகள் எல்.நாகேஷ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த, இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு, பட்டியிலின மக்களுக்கு மட்டுமன்றி இதர பிற்படுத்தப்பட்டோரது உரிமையையும் பறிக்கும் ஒரு தீர்ப்பாகத்தான் முடியும்,


மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த 2014 ஆம் ஆண்டு முதல் சமூக நீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸின் ஹிந் துத்துவா கொள்கையின் அடிப்படையில் சட்டங் களை முன்னிறுத்தும் ஆட்சியாகவே நடைபெற்று வருகிறது.


ஆர்.எஸ்.எஸின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை தற்போது பாஜக அரசு, ஆட்சியில் நடைமுறைப்படுத்திட பல வழிகளிலும் முயல்கிறது. இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதில் இருந்து தற்காலிகமாக பின்வாங்கினார். அண்மை யில், மீண்டும் இட ஒதுக்கீடு வேண்டும் என்போரும், வேண்டாம் என்போரும் சுமுகமான முறையில் பேசி முடிவு செய்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போதைய பாஜக ஆட்சியில் தான், அவசர அவசரமாக அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத பொருளாதார அளவுகோலை முன்வைத்து, சட்டம் திருத்தப்பட்டு, பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதி யினர்க்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பார்ப்பன உயர்ஜாதியினர் தங்களது விழுக்காட்டிற்கும் மேலாக அனைத்துப் பதவிகளிலும் ஆக்கிரமித்துள்ள நிலையில், இதற்கு எதிரான எந்த கருத்தையும் உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்கவில்லை.


மாறாக, பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டில், போதுமான அளவு அரசின் துறைகளில் அவர்களின் பங்களிப்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய  பின்னரே, இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.


நேரடி நியமனங்களில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என அரசின் ஆணை இருக்கும் நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு, மத்திய அரசில் இணை செயலாளர்கள் பதவிக்கு (Joint  Secretary posts) இட ஒதுக்கீடு தேவையில்லை என்று ஆணை பிறப்பித்து, அதன் அடிப்படையில் தனியார் நிறு வனங்களில் இருந்து நியமனமும் செய்துள்ளது.


மருத்துவப் படிப்பில் அகில இந்திய கோட்டாவில் மாநில அரசின் மருத்துவக் கல்லூரியில் இருந்து பெறப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தினருக்கு இட ஒதுக்கீட்டை, தொடர்ந்து மத்திய அரசு மறுத்து வருகிறது.


தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்டு, மாநில மருத்துவத் துறையை முற்றிலுமாக நீக்கி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான செயல்பாட்டை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.


‘நீட்’ மற்றும் ‘நெக்ஸ்ட்’ (NEXT) தேர்வின் மூலம் கிராமப்புற, ஏழை குடும்பத்தினரின் பிள்ளைகள், ஒடுக்கப்பட்டோர் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது, மத்திய அரசு.


தேசிய கல்விக் கொள்கை வரைவு- 2019-இன் மூலமாக, கல்வியை ஒத்திசைவுப் பட்டியலில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லவும், மீண்டும் ‘குலக்கல்வியை’ கொண்டுவரும்  குருகுலக்கல்வி என்னும் மோசடித் திட்டத்தை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.


மாநிலத்தில் உள்ள மத்திய அரசு / பொதுத்துறை நிறுவனங்களில் குரூப் ‘பி' மற்றும் ‘சி’ பதவிகளுக்கு அந்தந்த மாநில மக்களுக்கான உரிமையைத் தகர்த்து, வெளி மாநிலத்தவர்க்கு வாய்ப்பு வழங்கும் மோசடியை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது.


அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் அழித்துவிட்டு, சமஸ் கிருதமயமாக்கும் முயற்சியில் மத்திய பல்கலைக் கழகம் உருவாக்கி, நூறு கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பாஜக அரசு.


இத்தகைய சமூக நீதிக்கு எதிரான போக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டுள்ள சூழலில், உச்சநீதிமன்றத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.


அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவான அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழ் நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் 1928 முதல் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி உரிமை, 1950 இல் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-அய் சுட்டிக்காட்டி இதே உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.


தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராடிய நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் 15(4) நாடாளுமன்றத்தில் ஜூன் 1951 இல் நிறை வேற்றப்பட்டது.


முதல் அரசமைப்புச் சட்டத்திற்கான மசோதாவை முன்மொழிந்த போது, அன்றைய பிரதமர் நேரு அவர்களும், சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் மசோதாவிற்கான நோக்கத்தினை கூறுகையில்:


“It is laid down in article 46 as a directive principle of State policy that the State should promote with special care the educational and economic interests of the weaker sections of the people and protect them from social injustice. In order that any special provision that the State may make for the educational, economic or social advancement of any backward class of citizens may not be challenged on the ground of being discriminatory, it is proposed that article 15(3) should be suitably amplified.”


அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 46 இல் வழிகாட்டும் நெறிமுறைகளில் சமூக நீதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.


Promotion of educational and economic interest of weaker sections Article 46 of the Indian Constitution:  The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.


அரசமைப்புச் சட்டப்பிரிவு 15 (4), 16(4), 16 (4-ஏ), 46 என அனைத்துப் பிரிவுகளுமே, ‘shall’ எனும் வார்த்தையைத்தான் அண்ணல் அம்பேத்கர் பயன் படுத்தியுள்ளார்.‘will’ எனும் வார்த்தை பயன் படுத்தப்படவில்லை.


“Shall” எனும் வார்த்தை கட்டாயம் எனும் நிர்ப்பந்தத்தை சொல்லும் வார்த்தையாகும்.


 


இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக தெளிவான அறிவுறுத்தல் இருக்கும் நிலையில், இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற, அரசை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகவே இருக்கிறது.


சமூகநீதி என்பது உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை. அதனை நிறைவேற்றுவது அரசின் கடமையாகும் என்பதை உணர்ந்து மத்தியில் ஆளும் பாஜக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தனது நிலையை தெளிவுபடுத்தி, இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்திடக் கோர வேண்டும்.


இது சாத்தியம் இல்லையெனில், 1951 இல் முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது போல், இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைச்சாசனமாக மாற்றும் வகையில் சட்டத்தை நிறைவேற்றி, தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பாதுகாப்புச் சட்டம் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்த்தது போல், இட ஒதுக்கீடு தொடர் பான அனைத்து சட்டங்களையும் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திட வேண்டும்.


எஸ்.சி., எஸ்.டி, ஓபிசி ஆகியோருக்கான இட ஒதுக்கீடு இதுவரை சட்டமாக இல்லை. அரசு ஆணையாகத்தான் மத்திய அரசில் உள்ளது. இந்த ஆணைகள் அனைத்தையும் சட்டமாக்கிட 2004 இல் மத்தியில் ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான அரசு, திரு சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நாடாளுமன்றக் குழு அமைத்து, அக்குழுவும் ஜூலை 2005 இல் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.


ஆனால், அந்த அறிக்கை மீதான எந்த நட வடிக்கையும் பிறகு எடுக்கப்படவில்லை.


தற்போது இட ஒதுக்கீடு தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், இட ஒதுக்கீடு குறித்த சட்டம் நிறை வேற்றப்பட்டு, ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்.


சமூகநீதிக்குத் தாயகமாக விளங்கும் தமிழ் நாட்டில் இருந்துதான் இது குறித்த புரிதலோடு செயலாற்ற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணந்து தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் இதனை வலியுறுத்த வேண்டும்.


போராடிப்பெற்ற சமூக நீதி உரிமையை ஒன்று பட்டு காக்க வேண்டியது சமூக நீதியாளர்களின் முக்கிய கடமையாகும் என்பதை இந்த அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளின் கூட்டம் திட்டவட்ட மாக தெரிவித்துக் கொள்கிறது.


ஆர்ப்பாட்டம் - கருத்தரங்கம்


நீண்ட காலம் போராடி, சமூகநீதி அடிப்படையில் பெற்ற தற்போது  உள்ள இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் என்றும்,


மாநில அரசிடம் உள்ள பொது சுகாதாரத் துறையை (பப்ளிக் ஹெல்த்) மத்திய அதிகார வரம்பிற்குள்   கொண்டு செல்வதற்கான முதல் கட்டமாக, அதனை ஒத்திசைவுப்  பட்டியலுக்கு மாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்வது தடுக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும்,


இத்தீர்மானத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ள பல் வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும்,


மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்று சேர்ந்து மாபெரும் பொதுக் கூட்டத்தையும், மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தையும் விரைவில் நடத்துவது என்றும்,


அதேபோல, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது டில்லியிலும், சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்புக்  கருத்தரங்கத்தையும், ஆர்ப்பாட்டத் தையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment