மயிலாடுதுறை, ஜன.27 மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்பது அன்றைய நிலை; ‘நீட்'டில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்பது இன்றைய நிலை - இது ஒரு புதிய மனுதர்மம் என்று படம் பிடித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நேற்று (26.1.2020) மாலை நடைபெற்ற ‘நீட்'டை எதிர்க்கும் பெரும் பயணப் பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் ஓர் அருமையான நூலினை எழுதியுள்ளார்.
‘‘தமிழர் அடிமையானது ஏன், எப்படி?'' என்பது அந்நூலின் பெயர்.
நூறு ஆண்டுகளுக்குமுன் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழர்களில் படித்தவர்கள் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.
படிப்பு என்பது பார்ப்பனர்களுக்கே என்றுதான் இருந்தது. நமது அரசர்களும், பார்ப்பனர்களுக்குத்தான் கல்வி கற்க ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களுக்கு நான்கு வேதங்களும், உபநிடதங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.
தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி தந்தை பெரி யாராலும், நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் , பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் வளர்ந்து வந்தது.
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம்
ஒரு காலம் இருந்தது, மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் கற்றிருக்கவேண்டும் என்ற கட்டாயம். சமஸ்கிருதம் தெரியாவிட்டால் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போட முடியாது - அதனை எதிர்த்து தந்தை பெரியார் குரல் கொடுத்தார். அன்றைய நீதிக்கட்சி பிரதமர் ராமராய நிங்கர் என்னும் பனகல் அரசர்தான் அந்த நிபந்தனையை நீக்கினார்.
தமிழர்களும், மருத்துவக் கல்லூரியில் நுழைய முடிந்தது. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் அமைச்சர் முத்தையா முதலியார் முயற்சியால், முதல் வகுப்புவாரி உரிமை சட்டமும் வந்தது.
தமிழர்கள் படிக்க ஆரம்பித்தனர்; பொறுக்குமா பார்ப்பனர்களுக்கு? 1937 இல் சென்னை மாநில முதல மைச்சராக வந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) என்ன செய்தார்?
2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்; இந்தி யைப் படிக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார்.
ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில் தடைகள் - காமராஜர் ஆட்சிக் காலத்தில் புது அத்தியாயம் - தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சி.
‘நீட்' பார்ப்பன சூழ்ச்சியே!
இந்த வளர்ச்சிதான் நம் இன எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. இதனைத் தடை செய்வது எப்படி? மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது எப்படி? அந்த சூழ்ச்சியில் பிறந்ததுதான் இந்த நீட் தேர்வு.
உண்மையைச் சொல்லவேண்டுமானால், தமிழ் நாட்டில் ஏற்கெனவே நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்றுள்ள நிலையில், அதற்கு மாறாக தமிழ்நாட்டில் எப்படி ‘நீட்' நுழைய முடியும்? தமிழ்நாடு அரசின் நுழைவுத் தேர்வு செல்லாது என்று சொல்லப்படவில்லையே!
‘நீட்' செல்லாது; மருத்துவக் கவுன்சிலின் வேலை - தேர்வு நடத்துவது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதே - அல்தாமஸ் கபீர் தலைமையில், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ஏ.ஆர்.தவேயைத் தவிர்த்து மற்ற இரு நீதிபதிகளும் ‘நீட்' தேர்வு செல்லாது என்று தீர்ப்பு எழுதினார்களே!
நீதிமன்றத்தின் மரபு மீறிய செயல்
பி.ஜே.பி.. ஆட்சி வந்த நிலையில், அதன் மீது மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, எந்த நீதிபதி ‘நீட்' செல்லும் என்று தீர்ப்பு வழங்கினாரோ, அந்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையில் மற்றொரு அமர்வு அமைக் கப்பட்டு, ‘நீட்' செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது சரியானதுதானா? நீதிமன்ற மரபுக்கு உட்பட்டதா இது?
பிளஸ் டூ தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் வாங்கி னாலும் அது ஒரு பொருட்டல்ல. ‘நீட்'டில்வாங்கினால்தான் மார்க்கா?
அனிதா தற்கொலை ஏன்?
அனிதா என்ற மூட்டை தூக்கும் ஒரு தொழிலாளியின் மகள் பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லையே! அனிதாவின் கனவு நிறைவேறாத நிலையில், தற்கொலை செய்துகொண்டாரே!
பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவால் ‘நீட்' தேர்வில் பெற முடிந்த மதிப்பெண் வெறும் 86.
ஏன் இந்த நிலை?
அனிதா படித்த கல்வி முறை வேறு - ‘நீட்' தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. முறையில் தயாரிக்கப்பட்டது. இது நியாயம்தானா?
‘நீட்' தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை வீழ்ச்சி!
அதிலும் எத்தனை எத்தனை தில்லுமுல்லுகள்! ஒவ் வொரு மொழியிலும் வெவ்வேறு கேள்விகள். தமிழில் வந்த கேள்விகள் கடுமையானவை - குஜராத் கேள்வித் தாள்கள் எளிமையானவை; ஏன் இந்த பாரபட்சம்? இது திட்டமிட்ட சதிதானே!
இதைவிடக் கொடுமை - தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் வெளிமாநிலத்தில் தேர்வு எழுதவேண்டுமாம்.
இது நடக்கக்கூடிய காரியம்தானா?
இதன் காரணமாக இவ்வாண்டு ‘நீட்' தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 17 விழுக்காடு குறைந்ததற்கு இதுதான் காரணம்.
தேர்வு மய்யத்துக்குள் நுழையும்போது எத்தனை எத்தனை சோதனைகள்! பெண்களின் உள்ளாடையைக் கூட உருவுவதா?
இப்படியெல்லாம் செய்த வீராதி வீரர்களால் ஊழலை ஒழிக்க முடிந்ததா?
நூற்றுக்கணக்கானோர் ஆள் மாறாட்டம் செய்து எழுதியுள்ளனரே!
ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது என்பது கண்டு பிடிக்கப்பட்டும், அவர்கள்மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை என்ன? நீட்டில் தேர்வு பெற்றவர்கள் எவ்வளவு செல வழித்தார்கள்.
பார்ப்பனர், கார்ப்பரேட்காரர் கொள்ளை கொடுமை யானது.
பத்து லட்சம் ரூபாய், பதினைந்து லட்சம் ரூபாய் செலவு செய்து கோச்சிங் கிளாசுக்குச் சென்றவர்கள்தானே நீட்டில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தனர்; மறுக்க முடியுமா? ஏழை, எளிய மக்கள் டாக்டராவது இனி கனவில்தான்!
இந்தியாவிலேயே ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி இருப்பது தமிழ்நாட்டில்தானே.
‘நீட்' தேர்வுவந்ததால், தமிழக மருத்துவக் கல்லூரி களில் நிரம்பி வழிபவர்கள் வெளிமாநிலத்தவர்கள்தானே!
எங்கள் வரிப் பணத்தில் நடக்கும் மருத்துவக் கல்லூரி களில் எங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடையாதா?
மற்றொரு உரிமைப் பறிப்பு
இப்பொழுது இன்னொரு திட்டம், மருத்துவமனை களையும் பொது சுகாதாரத் துறையையும் ஒத்திசைவுப் பட்டியலுக்கு (கன்கரண்ட் லிஸ்ட்) கொண்டு போகப் போகிறார்கள்.
பழைய மனுதர்மம் மீண்டும் முடி சூடுகிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தோம். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை அழைத்து முத்தரப்பு மாநாடுகளை நடத்தினோம் - போராட்டங்கள் நடத்தினோம்.
ஆனாலும், இதனை நாங்கள் விட்டுவிட மாட்டோம். 21 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வை நாங்கள் ஒழிக்கவில்லையா? இந்த ‘நீட்'டையும் ஒழித்துக் கட்டியே தீருவோம் - அதில் ஒன்றும் சந்தேகம் வேண்டாம்.
வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும்
விரைவில் அனைத்துக் கட்சி மாநாட்டினைக் கூட்டு வோம் - அனைத்துக் கட்சியினரையும் அழைத்து பெரும் போராட்டத்தை நடத்துவோம் - வெற்றி பெறுவோம்.
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment