மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் தந்தை பெரியாரின் 46ஆம்ஆண்டு நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 26, 2019

மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் தந்தை பெரியாரின் 46ஆம்ஆண்டு நினைவு நாள்


மலேசியாவில் தந்தைபெரியாரின் கொள்கை யினை ஏற்று இயங்கி வருகின்ற திராவிடர் அமைப்புகளான மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், மலேசிய தமிழர் தன்மான இயக்கம் மற்றும் பேராக் மாநில பெரியார் பாசறை ஆகியவற்றின் கூட்டமைப்பின்  ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சார விழாவாக கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது.


24.12.2019 அன்று மாலை 7 மணி அளவில் தொடங்கிய கூட்டம், கோலாலம்பூர் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள விஸ்வமாதன் சம்பந்தன் தான் சிறீடத்தோ கே.ஆர். சோமா அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


கூட்டத்திற்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த. அண்ணாமலை தலைமை வகித்தார். நினைவு நாள் கூட்டத்திற்கு வருகை தந்தோரை வரவேற்று மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத்தில் சுடர்மதி அம்மையார்  'பெரியார் தமிழரா' எனும் தலைப்பில் ஒரு ஆளுமையான கவிதையினைப் படைத்தார். கூட்டத்தில் மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவர் கெ. வாசு,   பேராக் மாநில பெரியார் பாசறையின் துணைத் தலைவர் த.சி. முனியரசன், மலேசிய மலாக்கா மாநில  திராவிடர் கழகத்தின்  ஆலோசகர் ரெ.சு. முத்தையா, மலேசிய தமிழ்  மொழிக் கழகத்தின் தேசிய தலைவர் திருமாவளவன் மற்றும் பகான் மாநில சபாய் சட்டமன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மின்னல் பண்பலை வானொலியின் அறிவிப்பாளர் புலவர் பொன் கோகிலம் கவிதை வாசித்தார். நிறைவாக தமிழக திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.


தமிழர் தலைவர் எடுத்த முயற்சி வெற்றி


மலேசிய திராவிடர் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் நவம்பர் 2019இல் கோலாலம்பூர் வருகை தந்த திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக அனைத்து மலேசிய திராவிடர் அமைப்புகளும் இணைந்து செயல்பட முன்வந்ததுபற்றி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இணைந்து செயல்படுவதன் அவசியத்தை உறுதி செய்து உரையாற்றினர். கூட்டமைப்பின் தலைவர்கள் தந்தை பெரியார் மலேசிய நாட்டிற்கு இருமுறை வந்து சென்றது பற்றியும், ஆதலால் தமிழர் தம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும்  நன்றி கலந்த வெளிப்பாட்டுடன் உரையாற்றினர்.


தமிழ் மொழிக் கழகத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன் முதன் முறையாக கருப்புச்சட்டை அணிந்து தனது வாழ்வில் ஓர் புதிய அத்தியாயத்தை கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம்  தொடங்கியுள்ளதைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.



மலேசிய பகான் மாநில சட்டமன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராசு அவர்கள் பெண் விடுதலைக்கு தந்தை பெரியார் ஆற்றிய அரும் பணிபற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினார். மேலும் பெரியார் இயக்கத்தின் 'கடவுள் மறுப்பு' கொள்கையினை மறுத்துப் பேசிய தானும் கடவுளைப் பார்த்திட முடிய வில்லை என்பதை ஏதார்த்தமாக தனது கடவுள் மீதான நம்பிக்கை அற்ற நிலையினை வெளிப்படுத்தினார்.


கழகப் பொருளாளர் சிறப்புரை


நினைவுநாள் கூட்டத்திற்கு சிறப்பு வருகை தந்த  தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:


தமிழகம் தாண்டி, தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் நிலையில் சுயமரியாதை பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்று அமைப்பு ரீதியில் செயல்பட்டு வரும் ஒரே நாடு மலேசியா. 1946ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மலேசிய திராவிடர் கழகம் தமிழர் தம் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட வழி வகுத்தது. பெரியார் பற்றாளர்கள் பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டு வந்த நிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக மலேசிய திராவிடர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் முதல் நிகழ்ச்சியாக தந்தை பெரியாரின் 46ஆம்  நினைவு நாள் நடைபெறுவது தமிழர் தம் ஒற்றுமை கலந்த செயல்பாட்டு உணர்வினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


தந்தை பெரியாரது சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகள்  தமிழகத்தில் மட்டுமல்லாது உலக மனிதர்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற வகையில், மனித குல மேம்பாட்டை வலியுறுத்துகின்ற வகையில் 'பெரியார் உலகமயம்' என்பதாகப் கொள்கைப் பரவல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. புரட்சிக் கவிஞரின் தந்தை பெரியாரின் 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்'  காலம் உருவாகி வருகிறது. 1925இல் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பொழுதே தந்தை பெரியார் தமதுஉலகம் தழுவிய பார்வையினை உறுதிப்படுத்தினார். பெரியார்தம் கொள்கைகளை ஏற்று வாழ்பவர்கள், சமுதாயப் பணி ஆற்றுபவர்கள் மேம்பட்ட நிலையில்தான் உள்ளனர்; எந்தவிதமாற்றுக் கொள்கையினர்களைவிட செம்மாந்து வாழ்ந்து வருகின்றனர்.


தந்தை பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி மனிதரின் முழு ஆற்றலை மனித மேம்பாட்டுக்குப் பயன்படுத்திட வழி அமைத்துள்ளது. 'இனிவரும் உலகம்' என அறிவியல் வளர்ச்சியினை தொலைநோக்கி மக்களிடையே அறிவியல் மனப்பான்மை பெருகிட வித்திட்டவர் தந்தைபெரியார். மக்களில் பாதியினரான பெண்களின் சமூகநிலை அனைத்து நாடுகளிலும் உரிய உரிமைகளுடன் இல்லை. பெண்கள் விடுதலை பெற்ற சமுதாயந்தான் முழு வெற்றி பெற்ற சமுதாயமாக வாழ்ந்திட முடியும் என உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற வகையில் தந்தை பெரியார் தமது மனிதநேயக் கருத்துகளை விதைத்து, அவரது வாழ் நாளிலேயே   அதன் விளைச்சலை பார்த்துள்ளார். அவர் விட்டுச் சென்ற பணிகள், கொள்கைப் பரப்பை மேற்கொண்டு அடுத்த தலைமுறைக்கும் அவற்றை எடுத்துச் செல்கின்ற வகையில் மலேசிய திராவிடர் கூட்டமைப்பின் பணி அமைந்திட வேண்டும்.  பெரியார் தம் கொள்கைகளை உலகமயப்படுத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முயற்சிப் பணிகளுக்கு ஆக்கம்  ஊட்டிட நினைவு நாளில் உறுதியேற்போம், செயல்படுவோம்.


இவ்வாறு வீ. குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.


நிகழ்ச்சியில் நன்றியுரையினை மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் சா.இரா. பாரதி வழங்கினார். நிகழ்ச்சியினை  ஒருங்கிணைத்து, மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் தலைவர் பஞ்சு சிறப்பாக தொகுத்து வழங்கினார்.


கூட்டத்தில் மலேசியாவின் பெரியார் இயக்க முன்னோடிகள், இன்றைய பொறுப்பாளர்கள் பலர் திரளாகக்  கலந்து கொண்டனர். பெரியார் நூலகத்தினை மலேசிய பள்ளிகளில் அமைத்து வரும் பணியினை தொடர்ந்து ஆற்றி வரும் மு.கோவிந்தசாமி மற்றும் கே.ஆர்.ஆர்.  அன்பழகன் உள்பட  மகளிர் பலர் வருகை தந்திருந்தனர். தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு கூட்டத்தின் வாயிலாக மலேசியத் தமிழர் வாழ்வில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு ஏதுவாக மலேசிய திராவிடர் கூட்டமைப்பு உறுதி கொண்டுள்ளது.  அனைவரின் பாரட்டுதலுக்கும், பெருமைக்கும் உரியதாக இருந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஒரு குடும்ப விழாவாக தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இனிதே நடந்தது.


No comments:

Post a Comment