மக்களைச் சந்திக்கும் மக்கள் தலைவராக ராகுல் மணிப்பூர் மற்றும் அசாமில் மக்களிடம் குறைகேட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

மக்களைச் சந்திக்கும் மக்கள் தலைவராக ராகுல் மணிப்பூர் மற்றும் அசாமில் மக்களிடம் குறைகேட்பு

featured image

இம்பால், ஜூலை 10- மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அசாம் மாநில மழை வெள்ள பாதிப்பையும் அவர் பார்வையிட்டார்.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மைதி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை கடந்த ஆண்டு கலவரமாக மாறியது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் சிறு சிறு வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.

ராகுல்காந்தி ஆறுதல்

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களை காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி ஏற்கெனவே 2 முறை சந்தித்து பேசியுள்ளார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவ ரான பிறகு, மீண்டும் ராகுல்காந்தி 8.7.2024 அன்று மணிப்பூர் சென்றார்.

அவர் அங்குள்ள ஜிரிபாம் நிவாரண முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ள, பாதிக்கப்பட்ட மக்களை 8.7.2024 அன்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அவருடன் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களும் சென்றிருந்தனர்.

இதுகுறித்து மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா கூறுகையில், ராகுல் காந்தியின் பயணம் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந் துள்ளது என்றார்.

அசாம் வெள்ளப் பாதிப்பு

முன்னதாக அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ராகுல்காந்தி 8.7.2024 அன்று, சில்சாருக்கு சென்றார். அங்கு மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட அவர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் ராகுல்காந்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
உடனடியாக உதவ வேண்டும்

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவு மனவேதனை அளிக்கிறது. வெள்ளத்தில் அவி னாஷ் என்ற 8 வயது குழந்தை தந்தையுடன் சென்றபோது திறந் திருந்த சாக்கடையில் விழுந்து பலியாகியுள்ளது. அந்த குழந்தையை இழந்து வாடும் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதவிர வெள்ளம் காரணமாக 60 பேர் பலியாகியுள்ளனர். 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரம் பேர் தங்கும் இடங்களை இழந்துள்ளதாக தெரிவித்தனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ஒன்றிய அரசு உதவ வேண்டும்.

– இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி வர வேண்டும்
பின்னர், மணிப்பூரில் ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அவர் கூறியதாவது:-
இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட மணிப்பூர் மக்களின் துயரங் களை கேட்கவும், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும்தான் வந் தேன். மணிப்பூரில் ஏற்பட்டுள்ள துயரம், மிகவும் பெரியது.

பிரதமர் மோடி மணிப்பூருக்கு வர வேண்டும். இங்குள்ள மக்களின் துயரக்கதைகளை கேட்க வேண்டும். அது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

மணிப்பூரில் அமைதியை கொண்டு வர காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். எதிர்க்கட்சி என்ற முறையில், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

– இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment