ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1: ஊழல் வழக்கிற்குப் பயந்தோ அல்லது மிரட்டப்பட்டோ பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்களே?

– பா.முகிலன், சென்னை-14

பதில் 1 : ஆம். அதுதான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடத்தும் புதிய அரசியல் சுத்திகரிப்பு. ‘புதிய வாசிங் மெஷின்கள்’ உற்பத்தித் தொழிற்சாலையின் சாதனையோ சாதனை!

கேள்வி 2: கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு மீனவர்களைக் குறித்துக் கவலைப்படாத பிரதமர் மோடி, திடீரென்று கச்சத்தீவு பிரச்சினையை கையிலெடுத்திருப்பது ஏன்?

– ப.இளங்கோ, வந்தவாசி

பதில் 2 : மெகா ஊழல் பனிப்பாறை வெளியே – உச்சநீதிமன்றத்தால் வெளிப்பட்டு – மக்கள் உண்மைகளை பரவலாக அறிய, எதிர்க் கட்சிகள் அதைப் பேசாமல், மக்களை அதுபற்றிச் சிந்திக்க விடாது தடுக்கும் திசைதிருப்பும் முயற்சிதானே தவிர வேறில்லை.

கேள்வி 3: தேர்தல் வரும்போது, அரசியல் கட்சித் தலைவர்கள் வீதிகளில் இறங்கி தேநீர் அருந்துவது, காய்கறி விற்பது, வடை சுடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏன்?

– ஞா.திலீப், திருக்கழுக்குன்றம்

பதில் 3 : விரும்பத்தகாத தேர்தல் வித்தை. தொற்று நோயாகி பல வேட்பாளர்களை பாதித்துள்ள புதுவகை அரசியல் நோய். இவர்களை நாடாளு மன்றத்திற்குள்ளே அனுப்பவே தேர்தல் – மற்ற பல எளிய வேலைகள் செய்ய அல்ல! என்னே அதிசயக் கூத்து!

கேள்வி 4: தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. இருக்காது என்று பா.ஜ.க.வினரும், பா.ஜ.க. காணாமல் போய் விடும் என்று அ.தி.மு.க.வினரும் மாறி மாறி சொல்லிக் கொள்கிறார்களே?

– கி.மணி, பெங்களூரு

பதில் 4 : இரண்டு பேருக்கும் பாஸ் போடலாம், என்றாலும் இந்த இரண்டில் நோட்டாவுடன் போட்டி போடுவது பா.ஜ.க.வே ஆகும்!

கேள்வி 5: அண்மைக்காலமாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளில் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதே?

– மு.செல்வம், திருவண்ணாமலை

பதில் 5 : இது மில்லியன் டாலர் கேள்வி – பதில்! நன்றி!

கேள்வி 6: ‘கடவுளை’ நம்பி சதுரகிரி மலைக்குச் செல்பவர்கள் திடீரென்று மரணத்தைத் தழுவுவது அவ்வப்போது நடக்கின்றதே – ‘பக்தர்கள்’ திருந்தமாட்டார்களா?

– ப.ரமேஷ், மதுரை

பதில் 6 : ‘பக்தி வந்தால் புத்தி போகும்’ என்ற பெரியாரின் அறிவுரை எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

கேள்வி 7 : தேர்தல் பத்திர திட்ட ஊழல் வெட்ட வெளிச்சமானதற்குப் பிறகு, பா.ஜ.க.வின் ஒன்றிய ஆட்சிக் கனவு பலிக்குமா?

– ஏ.முக்தர், திருச்சி

பதில் 7 : மக்கள் பலிக்க விடமாட்டார்கள் என்றே தெரிகிறது.

கேள்வி 8: பிரதமர் மோடி போன்றோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் ‘ரோடு ஷோ’ நடத்துவதற்குப் பயப்படுகிறார் என்று பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சவால் விடுகிறாரே?

– ஆ.ஆனந்த், தேனி

பதில் 8 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் மக்களின் காட்சியிலிருந்து தப்பாதவர்; அவருக்கு ‘ஷோ’ எதுவும் தேவைப்படாது.

கேள்வி 9: தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் அரசு பள்ளிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனரே?

– க.சசி, விழுப்புரம்

பதில் 9 : காலைச் சிற்றுண்டி, ‘நான் முதல்வன்’ போன்ற பல திட்டங்களால் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

கேள்வி 10: தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.க.வினர், உண்மைக்கு மாறான தகவல்களையே கூறுகின்றனர். அப்படி இருந்தும் அவர்களை தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைப்பது ஏன்?

– கே.அசோக், சோழிங்கநல்லூர்

பதில் 10 : “கூரை மேல் ஏறி கொள்ளிக் கட்டையை சுழற்றுபவனே என் பிள்ளைகளில் நல்ல பிள்ளை” என்பது போன்றே அகப்படும் நபர்களைத்தான் அவர்கள் அழைக்க வேண்டி உள்ளதே! என்ன செய்ய!!

No comments:

Post a Comment