முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நினைவலைகள் அய்யா பெரியார் அவர்களை முதன்முதலில் நான் கண்ட நாள் முதலாய்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நினைவலைகள் அய்யா பெரியார் அவர்களை முதன்முதலில் நான் கண்ட நாள் முதலாய்...

featured image

சுயமரியாதைச் சுடரொளி
சிதம்பரம் ரிஜிஸ்ட்ரார் சு.பூவராகன்

‘குடிஅரசு’ மாத இதழ்களையும் ‘குடிஅரசு’ பதிப்பக வெளியீடுகளையும், படிக்கத் தொடங்கிய நாள் முதலே பெரியாரின் கொள்கைகளும் அவர்களின் கருத்துகளும் என உள்ளத்தைக் கலக்கி, கடைசியில் அவர்கள் பால் என்னை ஈர்த்துச்சென்றன.
1928இன் பிற்பகுதியில் விழுப்புரத்தில், சங்கராச்சாரியார் முகாம் செய்து ஊரை கலங்கடித்துக் கொண்டிருந்த காலை, பெரியார் அவர்களும் அங்கு வந்து இரண்டு மூன்று பொதுக்கூட்டங்களில் பேசிய பொழுதுதான், யான் அவர்களை முதன் முதலாகக் கேட்டு மகிழ்ந்தேன்.
பிறகு, 1929இல் யான் அலுவலகத்தில் பணியாற்றும் காலை, 11:00 மணிக்குக் கேள்வியுற்றேன் – பெரியார் மனம் – பூண்டி குமாரசாமியார் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரியார் அவர்கள் வருவதாக! உடனே என் நண்பர்களுக்குச் செய்தி அனுப்பினேன்.

மாலை பொதுக்கூட்டம் போடவேண்டுமென்று!
அதன்படி மாலையில் பெண்ணையாற்று மணலில் மாபெரும் கூட்டம் கூடிவிட்டது. அவ்வூர் வழக்குரைஞர் செய்த சூழ்ச்சியையும் மீறி, இரவு 10.00 மணிவரை அமைதியாக, தன் கருத்துகளை அள்ளி வீசினார்கள் ஆற்றங்கரையில் உட்கார்ந்து சூழ்ச்சி செய்த வழக்குரைஞர்களும், கேட்டுவிட்டுச் சென்றனர்.
இதுதான் என்னுடைய முதல் நேரடித் தொடர்பு. பிறகு, 1937இல் சிதம்பரத்தில் ஹிந்தி எதிர்ப்புப் படை வரவேற்பு – எதிர்ப்புக் கூட்டம் முதலியன என் முயற்சியில், நண்பர்களுடைய துணையால் நடந்தேறின.
இவ்வாறிருந்த பொழுதுதான், பெரியார் அவர்களுக்கு எழுதி, முன் பணமின்றி, என் பொறுப்பில் ஒரு மாறுதலின் பேரில், ‘விடுதலை’ ஏஜென்ட் எடுத்து 92 இதழ் வரையில் விற்பனையை உயர்த்தியதற்கு திரு. கல்யாணசுந்தர முதலியார் அவர்களது வசம் ஒப்படைக்கப்பெற்றது.

1943இல் யான் தலைமையேற்று, மாமேதை அண்ணாதுரை, ‘சந்திரோதயம்’ நாடகம் நடத்திய பிறகு, கையில் எஞ்சியத் தொகையைக் கொண்டு, புவனகிரியில் மாநாட்டுக்குச் சமமான ஒரு மாபெரும் விழா நடத்தினோம்.
பெரியார் அவர்களை வெள்ளாற்றுப் பாலத்தில் இருந்து பெருமாத்தூர் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். வழியில் எல்லாம் மலர் மாலைகளும் பயனாடைகளும் வழங்கப்பெற்றன. மாலையில் பொதுக்கூட்டம். 1944 மே மாதத்தில் யான் பண்ருட்டிக்கு மாற்றம் பெற்றேன். பண்ருட்டியில் இரண்டொரு திங்களே இருந்தேன். அப்பொழுது அங்குள்ள சிற்பியைக் கொண்டு பெரியார் உருவச் சிலைகளைச் செய்து, சேலம் மாநகரத்திலும், மற்ற இடங்களிலும் விற்பனை செய்ய தோழர்களை அழைத்தேன். இதையெல்லாம் கேள்வியுற்ற பெரியார் அவர்கள் வெகுவாகப் பாராட்டிச் செய்தி அனுப்பினார்கள்.
பிறகு சின்னசேலத்தில் இருக்கும் பொழுது ‘விடுதலை’, ‘குடிஅரசு’ இதழ்களுக்கு விற்பனையாளர்களை ஏற்படுத்தி, அங்கிருந்து கல்லூரிகளுக்கும் இதழ்களை அனுப்பி, பரப்பச்செய்தேன்.

‘குடிஅரசு’ பதிப்பக வெளியீடுகளை, ரூ.1500/-
ரூ.2000/-க்கு விற்பனையாகும்படி செய்யுங்காலை, பிராமணச் சங்கத் தலைவர் வழக்குரைஞர் தாத்தாச்சாரியார் அவர்களே, பூராவற்றையும் வாங்கச் சொன்னார்.
கள்ளக்குறிச்சி மாநாட்டிற்குப் போக, சின்னசேலம் புகைவண்டி நிலையத்தில் இறங்கியதும், பெரியார் அவர்களை ஊர்வலமாக, சின்னசேலம் சந்திப்பிற்கு அழைத்துச் சென்று, மதிய உணவுக்குப் பிறகு, மாலை கள்ளக்குறிச்சிக்குச் சென்றார்.
1947இல் இரண்டாம் மகன், திரு.சோலையப்பன் திருமணம், திரு. ஜி.றி.வேதாச்சலம் அவர்கள் தலைமையில் நடப்பதாக அழைப்பிதழ் பெரியார் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். கண்ணுற்ற அவர்கள், புதுச்சேரி போகும் வழியில் சின்னசேலம் வீட்டிற்கு, தானும் திருமணத்திற்கு வருவதாக சொல்லிப் போயிருந்தார்கள்.
பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த திருமணத்திற்கு, பெரியார் அவர்களும் வந்திருந்து நடத்தி, அங்கேயே இரண்டு நாட்களும் தங்கி, புதுச்சேரிக்கு தம்பம் பகுதிக்குச் சென்றார்கள்.

இங்கோ ஒரு சுவையான சம்பவம். திருமணத்தன்று மறுநாள் மாலை மணப்பந்தலில், யாங்கள் இருந்த பொழுது, பெரியார் அவர்கள் நுழைந்தார்கள். என் தந்தையாரும் எப்போதையும் விட கொஞ்சம் அதிகமாகவே திருநீறு பூசிக்கொண்டு அமர்ந்திருந்த சமயம், பெரியார் அவர்களைக் கண்டு, “நீறில்லா நெற்றிப் பாழ்” என்று சொன்னார்கள், எனக்கு சுருக்கென்றது.
பெரியார் அவர்கள் உடனே, “நெய்யில்லா பண்டம் பாழ்” என்று அடுத்த அடியைச் சொல்லிவிட்டு, தந்தையாருடன் உரையாடிக் கொண்டிருந்ததும், தந்தையார் சொன்னார்கள், “கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். இதைக் கேட்டு, என்னோட சின்ன பேரன் (ஞிக்ஷீ.பழனியப்பன்) யான் கட்டிய கோயிலிலேயே கல்லிலும், செங்கல்லிலும் உச்சிக்குடுமி ஒழிக என்றும் எழுதி வைக்கிறான். கொஞ்சம் சொல்லுங்கள்” என்றார்.
பெரியார் அவர்களும், “அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். பகுத்தறிவுப் பாதையில் செல்லும் குழந்தைகளைப் பெற்றுத்தந்தீர்களே, அதற்கு நன்றி” என்று சொல்லி முடித்தார்கள். இச்சொற்களை இன்றும் மறக்க முடியவில்லை.

சின்னசேலத்தில் ஒருநாள் எங்கோ போகும் வழியில் வீட்டிற்கு வந்தார்கள். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பேசிக்கொண்டு இருந்த பொழுது, “குடி இருக்கிற வீடு, எதை செய்யணும்? எப்படி செலவு செய்யணும்? என்று சிந்தித்துப் பாருங்கள்… சொந்த வீடுகளையே பழுது பார்க்க முடியாமல் இருந்து வருகிறது. போகும் ஊரில் எல்லாம் வீடு கட்டுவதென்றால், உடனே நம் பிள்ளைகள் எல்லாம் யோகக்காரர்களாக இருந்துவிட்டுப் போகிறார்கள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
பிறகு, ஆத்தூர் திரு.தங்கவேலு அவர்களின் திருமணத்தில் கண்டு அளவளாவினோம். பிறகு, 1949-1950 திரு.கணேசன் ‘விடுதலை’யில் இருந்து வெளியேறிய பிறகு, திரு.சம்பத் – பெரியார் அவர்களின் பெயரில் மானநட்ட வழக்கு தொடர்ந்து, பெரியார் அவர்கள் நீதிமன்றத்தில் போய் நிற்கும் அவல நிலையை காணச்சகியாது, கண்ணீர் விட்டு எப்படியும் வழக்கை சமரசம் செய்ய வேண்டும் என்று கேட்டு திரு.சம்பத் ஒப்புதல் பெற்று, யானும், டி.எம். முருகேசன் அவர்களும் சென்னையில் உள்ள பெரியார் வீட்டிற்குச் சென்றோம்.

பெரியார் ஆர்வத்துடன் வரவேற்று யான் திரு.கணேசன் ‘விடுதலை’க்கு மீண்டும் அனுப்புவதற்கு உள்ளதாக நினைத்து, வரும்படிச் சொன்னதற்கு, யான் அதை மறுத்து, வந்த வேலையைச் சொன்னேன். பிறகு நீண்ட உரையாடலுக்குப் பிறகு ஒரு வழியாக வழக்கு சமாதானமாகவும் ஆகியது. இதுகுறித்து ‘விடுதலை’யில் ஒரு தலையங்கம் வெளியானது.
1954இல் திருச்சி மாளிகையில் கண்டு கட்டிப்பிடித்து மகிழ்ந்து, குடும்பத்தில் உள்ளவர்களை நலம் விசாரித்ததாக சொல்லியிருக்கிறேன்.

டாக்டர். பழனியப்பன் இடைப்பாடியில் இருந்த காலை, ஊர் வந்த பெரியார் அவர்களுக்கு உடல்நலக்குறைவானதால், டாக்டரை அழைத்து மருத்துவம் செய்து வந்த பிறகு, இன்னார் என்று தெரிந்து மகிழ்ச்சியுடன், “முதலிலேயே தெரியவில்லையே” என்று வருந்தி, பிறகு என்னைக் கண்ட பொழுது சொன்னார்கள்.
1958இல் யான் ஓய்வு பெற்ற பிறகு சிதம்பரத்தில், ஒரு தடவை தான் கண்டு களித்தேன். ஒரு தரம் வல்லம்படுகைக்கு ஒரு அரிசி ஆலைத்திறப்பு விழாவுக்கு வந்திருந்தார். கூட்டத்தில் அமர்ந்திருந்த என்னை திரு.வீரமணி அவர்கள் கட்டாயப்படுத்தி பெரியாரிடம் அழைத்துச் சென்றதும், “அய்யா.. வா” என்று கட்டிப்பிடித்து, தலையோடு தலை மோதி, அன்பைத் தெரிவித்து, கூட்டத்தில் உள்ளவர்களை வியக்கச் செய்தார்கள். என்றும் யான் மறக்க முடியாது!
பிறகு 1972இல் என் பேத்தி திரு.தேன்மொழிக்கு கடலூரில் நடைபெற்ற திருமணத்திற்குத் தலைமை வகித்தார்கள். குடும்பத்திலுள்ள அனைவருடனும், என்னுடனும், அன்புடன் அளவளாவினார்கள்.
“அப்புறம் எங்கே காணப்போகிறோம்?” என்ற நினைப்போ! என்று இப்பொழுது நெஞ்சு அலமலருகிறது. ஏனென்றால், பிறகு 1973 டிசம்பர் 24ஆம் நாள், அவர் உடல் மீது விழுந்து அழுதபொழுது தான் தெரிந்தது. ஆனால் அவர்கள் என்னைக் காணாத நிலை துயரத்தைத் தந்தது.

(கட்டுரை: திராவிடச் செம்மல் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு அகவை சிறப்பு மலரிலிருந்து. பக்கம் 111-114)

No comments:

Post a Comment