சென்னை புதுவண்ணையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டட திறப்பு விழா - தமிழர் தலைவர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

சென்னை புதுவண்ணையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டட திறப்பு விழா - தமிழர் தலைவர் கி.வீரமணி

featured image

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது, தமிழ்நாட்டில் நடைபெறுவதுபோன்ற
ஓர் ஆட்சி – அற்புதமான சாதனைகளை நிகழ்த்தக் கூடிய ஆட்சி இருக்கிறதா?
‘‘செய்வதைச் சொல்வோம்; சொல்வதை செய்வோம் – சொல்லாததையும் செய்வோம்’’ என்பதுதான்
இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி
சென்னை புதுவண்ணையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டட திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

சென்¬ன், மார்ச் 21 இந்தியாவில் வேறு எந்த மாநிலத் திலாவது, தமிழ்நாட்டில் நடைபெறுவதுபோன்ற ஓர் ஆட்சி – அற்புதமான சாதனைகளை நிகழ்த்தக் கூடிய ஆட்சி இருக்கிறதா? என்பதை எண்ணிப் பாருங்கள். ‘‘செய்வதைச் சொல்வோம்; சொல்வதை செய்வோம் – சொல்லாததையும் செய்வோம்’’ என்பதுதான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தி.மு.க. அலுவலகம்- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம் திறப்பு விழா

கடந்த 15-3-2024 அன்று மாலை சென்னை பழைய வண்ணையில் சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி தி.மு.க. 42-அ வட்ட தி.மு.க. அலுவலகம்- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம் திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தொண்டு செய்வதில் போட்டி; கொள்கைக்காகப் போட்டி!

போட்டி போடலாம்; தகுதி உள்ளவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்று காட்டுவது இந்த இயக்கத்திற்குப் பெருமை. தொண்டு செய்வதில் போட்டி; கொள்கைக் காகப் போட்டி. வெறும் பதவிக்குப் போட்டி என்பது கிடையாது.
ஏன் இந்தப் படிப்பகம்? ஏன் இந்த நூலகம்? ஏன் இந்த கட்டடம்? இதுபோன்ற படிப்பகங்கள்தான் இந்த இயக்கத்திற்கான பாசறைக்கூடம். அந்தப் படிப்பகத்தில் தான், துண்டறிக்கை போன்று தயாரித்ததுதான் ‘முரசொலி’ ஏடு.

இந்த இயக்கம் படிப்படியாக வளர்ந்திருக்கிறது கடந்த நூறாண்டு காலத்தில். அதற்கு முன்பு, நீதிக்கட்சி யினுடைய சாதனைகள் ஏராளம். அவர்கள் செய்யாத நற்பணிகளே கிடையாது.

பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமையைக் கொடுத்த இயக்கம் திராவிடர் இயக்கமாகும்!

இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமையைக் கொடுத்த இயக்கம் திராவிடர் இயக்க மாகும்; 1921 ஆம் ஆண்டு அந்த உரிமையைப் பெற்றுத் தந்தது.

திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.
மேற்சொன்னதைத்தான் செய்தது.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறார்கள்.
திராவிடத்தால் ஒருவரும் விழமாட்டார்கள்; வேண்டு மென்றால், டாஸ்மாக்கால் விழுந்திருப்பானே தவிர, திராவிடத்தால் ஒருபோதும் விழமாட்டார்கள்.

கொள்கையா, பதவியா? என்று சொன்னால், கொள்கைதான் மிக முக்கியம்!

அதனால்தான் அண்ணா அவர்கள், தோழர்களுக்கு அறிவுறுத்துவது போன்று சொன்னார்,
‘‘கொள்கை என்பது வேட்டி போன்றது;

பதவி என்பது துண்டு போன்றது!” என்று எல்லோ ருக்கும் விளங்கும்படி சொன்னார்.
துண்டு இல்லாமல் வரலாம்; ஆனால், வேட்டி இல்லாமல் வர முடியுமா?

ஆகவே, கொள்கையா, பதவியா? என்று சொன்னால், கொள்கைதான் மிக முக்கியம். அடிப்படையானது என்று சொன்னார்.
நெருக்கடி காலத்தில் நாங்கள் எல்லாம் மிசா காலத்தில் சிறைச்சாலையில் இருந்தோம். இங்கே இருந்த மத்திய சிறைச்சாலையில் இருந்தோம்.
யார், எந்த சிறையில் இருக்கிறார்கள் என்பதும் தெரியாது

பிப்ரவரி, மார்ச் மாதங்களை மறக்கவே முடியாது எங்களால். அடித்து, உதைத்து ஒவ்வொருவரையும் காயப் படுத்தி சிறைச்சாலைக்குள் தள்ளினார்கள். ‘‘இனிமேல் இந்த இயக்கமே இருக்காது; நீங்கள் வெளி உலகிற்கே போக முடியாது” என்று சிறை அதிகாரி ஒருவர் எங் களிடம் சொன்னார். அதை நாங்கள் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
திராவிடர் கழகத்தவர்களையும், திராவிட முன்னேற் றக் கழகத்தவர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சிலரையும் கைது செய்து சிறைச் சாலைக்குள் வைத்தார்கள். யார், எந்த சிறையில் இருக்கிறார்கள் என்பதும் தெரியாது.

அவரவர்களுடைய குடும்பத்தாருக்கே தெரியாது. அரசமைப்புச் சட்டத்தின் உரிமை என்னவென்றால், கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் எந்த சிறை யில், எங்கே இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவேண் டும். அந்த உரிமைகளையெல்லாம் காலில் போட்டு மிதித்தார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞருடைய தனித்தன்மை!

கலைஞருடைய சாமர்த்தியத்தைப் பாருங்கள் – அதுதான் கலைஞருடைய தனித்தன்மையாகும். சிறிய விஷயத்திலிருந்து பெரிய செய்தி உள்பட நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள் எவ்வளவு சாமர்த்தியமாக செய்வார் என்பதற்கு அடையாளம் – அவர் ஈரோட்டுக் குருகுலத்தில் படித்தவர் ஆகையால், மிக அழகான ஒரு காரியத்தை செய்தார் – சென்னை கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் இப்பொழுதுதான் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது; கலைஞ ருடைய நினைவிடமும் அருகில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.

‘‘தந்தை பெரியார்’ என்று எழுதக்கூடாது என்று தணிக்கை அதிகாரிகள் சொன்னார்கள்!

அன்றைய காலகட்டத்தில், அண்ணாவினுடைய நினைவிடம் அமைந்த சூழ்நிலையில், ‘விடுதலை’ நாளேடானாலும், ‘முரசொலி’ நாளேடானாலும் ஒவ் வொரு நாளும் அந்த ஏடுகளை அச்சுக்குப் போவதற்கு முன் தணிக்கை அதிகாரிகளிடம் கொண்டு போய் காட்டவேண்டும். ‘‘தந்தை பெரியார்’ என்று எழுதக் கூடாது என்று சொன்னார்கள். கலைஞர் எழுதுகின்ற செய்திகளையெல்லாம், இரண்டு பார்ப்பன அதிகாரிகள் பார்த்துவிட்டுத்தான் கொடுப்பார்கள். அதுவரையில் காத்திருக்கவேண்டும். அவர்கள், ‘‘இந்தச் செய்தியெல் லாம் வரலாம்; இவையெல்லாம் வரக்கூடாது” என்று கோடு போடுவார்கள்.

பத்திரிகை எங்களுடையது, கருத்து எங்களுடையது. தணிக்கை இருக்கும்பொழுது, செய்திகளை எப்படி பத்திரிகைகளில் அச்சு ஏற்றுவது? ‘மிசா’ சட்டத்தில் யார் யார் கைதானார்கள் என்ற விவரமும் மக்களுக்குத் தெரியவேண்டும். கைதானவர்கள் என்ற பட்டியல் போட்டால், அந்தச் செய்தியை அடித்துவிடுவார்கள் தணிக்கை அதிகாரிகள். கலைஞருடைய சாதுர்யம், சாமர்த்தியம் எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்.
‘‘அண்ணா நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்த வாய்ப்பில்லாதவர்கள்” என்று ஒரு பட்டியலைப் போட்டார்.
அதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்கள் எல்லாம் ‘மிசா’ சட்டத்தில் கைதாகி சிறைச்சாலையில் இருக் கிறார்கள் என்பதுதான்.
இந்த சாமர்த்தியம் கலைஞருக்குத்தான் உண்டு. அதனால்தான் அவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
கலைஞருடைய நூற்றாண்டு விழாவினை நாம் கொண்டாடுகிறோம் என்றால், அவருக்கு அது பெருமை யல்ல – அவருடைய தொண்டின் பெருமையை நாம் உணரவேண்டும் என்பதற்காகத்தான். அதற்கெல்லாம் அடித்தளம் தந்தை பெரியார் அவர்கள்தான்.

அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்து, முப்பெரும் சாதனைகளைச் செய்தார்!

அண்ணா அவர்கள் மறைந்தபொழுது, தந்தை பெரியார் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. திராவிட முன்னேற்றக் கழகம் என்னாகும்? இவ்வளவு அருமை யான ஓர் இயக்கத்தைக் கட்டிக் காத்து, திராவிட இயக்கத் தினுடைய பெருமையை நிலைநாட்டி, அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்து, முப்பெரும் சாதனைகளைச் செய்தார்.
தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்.
சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்றாக்கினார்.

ஹிந்திக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. இருமொழி கொள்கை மட்டும்தான் – ஆங்கிலம் – தமிழ் மட்டும்தான் என்றாக்கினார்.
மேற்சொன்ன முப்பெரும் சாதனைகளை ஓராண்டில் செய்த பெருமை அண்ணா அவர்களையே சாரும். இன்றைக்கும் அதில் கை வைக்க முடியாது; இந்தியா முழுவதும் இன்றைக்கு அதனைப் பின்பற்றவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

இது புரியாமல் இங்கே வந்து பிரதமர் மோடி, ‘‘தி.மு.க.வை அழிப்போம், ஒழிப்போம்; தூக்கி எறிவோம்” என்றெல்லாம் சொல்கிறார்.
முதலில், தூக்குவதற்கு உங்களுக்குப் பலம் இருக் கிறதா? ஏனென்றால், நீங்களே ‘‘மிஸ்டு கால்” கட்சி யாயிற்றே!

ஏன் இங்கே தந்தை பெரியார் பெயரில் படிப்பகம்?
ஏன் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம்?
இனமானப் பேராசிரியர் பெயரில் கட்டடம்?

இவர்கள் எல்லாம் அடிக்கட்டுமானத்தை உருவாக் கியவர்கள். அந்த அடிக்கட்டுமானத்தினால்தான் இன் றைக்கு நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சராக, அவர் தலைமையில் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான ஆட்சி யாக தமிழ்நாடு ஆட்சி இருக்கிறது.

இன்றைக்குத் தாய்மார்கள் இங்கே நிம்மதியாக வந்திருக்கிறார்கள். நாளைக்குக் காலையில் நம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டுமே! காலையில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக்கு சாப்பாடு என்ன செய்வது? அப்படியே சாப்பாட்டை செய்து வைத்தாலும், சாப்பிடாமல் பட்டினியாகப் போகிறதே! வாசற்படியில் வரைக்கும் துரத்திச் சென்று, ‘‘சாப்பிடு, சாப்பிடு” என்று வற்புறுத்துகிறோமே என்கிற கவலையை எல்லாம் விட்டுவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறீர்கள்.
அதற்குக் காரணம் என்னவென்றால், அதை நம்முடைய முதலமைச்சர் பார்த்துக்கொண்டார்.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து இருக்கிறது!

பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி அளிக்கப்படுகிறது. அதனை மகிழ்வோடு பிள்ளைகளும் சாப்பிடுகின்றனர். தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டி திட்டத்தினால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து இருக்கிறது. காலைச் சிற்றுண்டி சாப்பிடாமல் வந்து, வகுப்பறையில் அரை மயக்கத்தோடு, ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை சரிவர கவனிக்க முடியாமல் இருந்த நிலை, இப்பொழுது இல்லை.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு பாட்டில் குறிப்பிடுகின்றார்.

‘‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? – நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!
படியாத பெண்ணாய் இருந்தால், – கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! – என்
கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு!
கடிதாய் இருக்கும் இப்போது – கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ்நாடு – பெண்
கல்வி பெண்கல்வி என்கின்றது அன்போடு!”
இன்றைக்குப் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடத் திற்குப் போவதற்குத் தயங்குவதில்லை. ஏனென்றால், வீட்டில் சாப்பாடு தயாராவதற்கு முன்பே காலைச்சிற் றுண்டி பள்ளிக்கூடத்தில் தயாராக இருக்கிறது. சாப்பிட்டு விட்டு, உடனே வகுப்பறைக்குப் போய்விடுகிறார்கள்.
‘திராவிட மாடல்’ அரசின்
‘‘மகளிர் உரிமைத் தொகை’’

அதேபோன்று, இங்கே தாய்மார்கள் இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள். குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ‘‘மகளிர் உரிமைத் தொகை” என்ற திட்டத்தின்மூலம் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு கொடுக்கிறது.

இன்றைக்குச் சிலர் அதைப் பிச்சைக்காசு என்று சொல்லி, அவர்களுடைய தன்மையைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
மாதாமாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிக்கு வருகிறது என்றால், உங்கள் தாய் வீட்டிலிருந்துகூட இதுபோன்ற சீதனம் மாதாமாதம் வந்ததாக வரலாறு கிடையாது. பொங்கல் விழா, தீபாவளி போன்ற நேரங் களில் தாய்வீட்டிலிருந்து கொடுப்பார்கள். அதுவும் திரு மணமாகி ஒரு அய்ந்து ஆண்டுகளுக்குக் கொடுப்பார் கள். அதற்குப் பிறகு தலையும் கிடையாது, தீபாவளியும் கிடையாது. ஆனால், இன்றைக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உங்களுடைய வங்கிக் கணக்கில் வந்து விழுகிறது.
இந்தத் திட்டத்திற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ‘‘மகளிர் உரிமைத் தொகை” என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.
உங்களுக்கு இருக்கின்ற உரிமை அது. மானம், மரியாதை, கவுரவம் அத்தனையும் இதில் பாதுகாக் கப்பட்டு இருக்கிறது. அதுதான் சுயமரியாதை. அப்படிப் பட்ட உரிமைத் தொகை உங்களுக்கெல்லாம் மாதந் தோறும் வருகிறது.

அதேபோன்று ஆட்சிப் பொறுப்பேற்கும்பொழுது முதலில் நம்முடைய முதலமைச்சர் கையெழுத்துப் போட்டது எதில் தெரியுமா?

பேருந்தில் கட்டணமில்லா பயணம் பெண்களுக்கு!

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக் குக் கட்டணம் இல்லை என்கிற அரசு ஆணையில்தான். கிராமப் பகுதியில் வேலை செய்யும் பெண்கள், ஒரு நாள் கூலி 40 ரூபாய் என்றால், பேருந்து கட்டணமாக 20 ரூபாய் செலவாகிவிடும். அந்த நிலை இன்றைக்குக் கிடையாது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது, இப்படிப்பட்ட ஓர் அற்புதமான சாதனைகளை நிகழ்த்தக் கூடிய ஆட்சி இருக்கிறதா? என்பதை எண்ணிப் பாருங்கள்.

எனவேதான், ‘‘செய்வதைச் சொல்வோம்; சொல் வதை செய்வோம் – சொல்லாததையும் செய்வோம்‘’ என்பதுதான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி.
அப்படிப்பட்ட ஓர் ஆட்சியின்மீது எதிரிகளால் குறை சொல்வதற்குரிய சரக்கு எதுவும் இல்லை என் பதால்தான், ‘‘அழிப்போம், ஒழிப்போம்” என்கிறார்கள்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்”, ‘‘சமூகநீதி” – இங்கே ஆண் – பெண் பேதமே கிடையாது. இதுதான் தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்பு.

(தொடரும்)

No comments:

Post a Comment