போட்டித் தேர்வுக்கான அறிவியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 13, 2024

போட்டித் தேர்வுக்கான அறிவியல்

வெற்றியாளர்கள் எதையும் புதிதாக செய்துவிடுவது இல்லை. பிறர் செய்வதையே சற்று வித்தியாசமாக செய்கின்றனர். போட்டித் தேர்வுகளிலும் அப்படித்தான். வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி கண்டவர்களுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசமே அவர்களது தயாரிப்பு முறைதான். தயாரிக்கும் உத்தியில்தான் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளில் மிக முக்கியமானது, நாம் தயாராகிற தேர்வின் பாடத் திட்டத்தை (Syllabus) முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். முழுமையான பாடத் திட்டத்தின் ஒவ்வொரு உட்பிரிவையும் தெளிவாக தெரிந்துகொள்வது தயாரிப்பின் முதல்படி. பொது அறிவு கேள்விகள் தொடர்பாக இருக்கும் பாடத் திட்டங்களை முதலில் முழுமையாக புரிந்துகொள்வது அவசியம்.

இந்திய அரசமைப்பு, இந்திய வரலாறு, இந்திய புவியியல், இந்திய பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் என 5 வகைகளில் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே, இத்தலைப்புகளை ஒட்டிய முழுமையான பாடத் திட்டம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு, இந்த பாடத் திட்டங்களில் இருந்து எப்படி கேள்விகள் கேட்கப்படும் என்பதை ஆராய வேண்டும்.
பொதுவாகவே, போட்டித் தேர்வுகளை பொறுத்தவரை எந்த கேள்விக்கு எந்த பதில் என்று தேடுவதில்தான் ஆர்வம் இருக்கும். ஆனால், படிக்கும்போதே, இந்த பதிலுக்கு எப்படி கேள்வி வரும் என்ற தேடல் இருக்க வேண்டும். இது ஒரு Reverse Engineering. அதாவது எதையும் பின்னிருந்து யோசிப்பது. இதுதான் கேள்விகள் பற்றிய கண்ணோட்டம். இது மிகவும் முக்கியம்,

எல்லா தலைப்புகளில் இருந்தும் கேள்விகள் கேட்டுவிட முடியாது. சில தலைப்புகள் முதல்நிலை தேர்வுக்கானவை. சில தலைப்புகள் முதன்மைத் தேர்வுக்கானவை. இதை புரிந்து கொண்டால், தயாரிப்பு எளிதாக இருக்கும்.

மேற்கூறிய 5 பாடங்களும் நமது கைகளில் இருக்கும் 5 விரல்கள்போல என வைத்துக்கொள்வோம். முதல்நிலை, முதன்மை, ஆளுமை ஆகிய 3 தேர்வுகளுக்குமே இந்த அய்ந்தும் முக்கியம்.
யுபிஎஸ்சி தேர்வாக இருந்தால் இந்திய அளவிலான பொது அறிவு கேள்விகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். டிஎன்பிஎஸ்சி தேர்வாக இருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு, புவியியல், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டுப் பண்பாடு, மரபு, கலை, தமிழின் தொன்மை, சிறப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

வரலாறு என்றால் பண்டைய வரலாறு, இடைக்கால வரலாறு, தற்கால வரலாறு என மூன்றாகப் பிரித்து அதில் இந்தியப் பின்புலம், தமிழ்நாட்டுப் பின்புலம் என்று வகைப்படுத்திக்கொண்டால் ஒரே தயாரிப்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி ஆகிய இரண்டுக்கான தேடலுக்கும் உதவும்.

போட்டித் தேர்வுகளில் பெரும்பாலானோர் நடப்பு நிகழ்வு களுக்கு (Current Affairs) அதிக முக்கியத்துவம் தந்து, யார், எங்கே, எப்போது, எது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவதிலும், நடப்பு நிகழ்வுகளைப் படித்து மனப்பாடம் செய்வதிலும் நேரம் கழிக்கிறார்கள். அது தவறு. 100 சதவீத நேரத்தில் 80 சதவீதம் பொது அறிவுக்கான பாடங்களில் அடிப்படைத் தயாரிப்புக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

முதலில் பாடங்களின் கருத்துகளை (Concept) புரிந்துகொள்ள வேண்டும். அதில் இருந்து அறிவைப் (Knowledge) பெற வேண்டும். அதில் இருந்து தேர்வுக்கான தகவல் (Information) பெற வேண்டும். இந்த மூன்று நிலைகளில் வரிசைப்படி தேர்வுகளின் தயாரிப்பு முறை அமைய வேண்டும்.

அடுத்து வர இருக்கிற தேர்வில் எந்த கேள்வி கேட்பார்கள் என்ற தேடல் இருப்பதுபோல, முன்பு நடந்த தேர்வில் எப்படி கேள்விகள் கேட்கப்பட்டன என்ற தெளிவும் இருக்க வேண்டும். முன்பு நடந்த தேர்வுகளின் வினாத்தாள்களை (Previous Year Questions) பலர் மீள்பார்வை செய்வதே இல்லை. பாடத் திட்டத்தில் தெளிவான புரிதல் இருப்பதுபோல, முன்னர் நடந்த தேர்வுகள், கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய புரிதல் மிக முக்கியம். கேள்விகளைத் தயாரிக்கும் துறை வல்லுநர்கள் யாரும் அவர்களது கற்பனையில் தோன்றும் கேள்விகளை கேட்க முடியாது. தேர்வாணையங்களால் அங்கீகரிக்கப்பட்ட, தரமான நூல்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. தேர்வுக்கு பிறகு விடைக் குறிப்பில் ஏதேனும் முரண்பாடுகள் வந்தால், அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களே சான்று ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன.

No comments:

Post a Comment