கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது - வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில் ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 6, 2024

கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது - வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில் ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டம்!

featured image

கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது – வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில் ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டம்!
பலன் இல்லாமலா ஒன்றிய ஆளுங்கட்சிக்கு ரூ.100 கோடி, ரூ.200 கோடி என்று நன்கொடை கொடுப்பார்கள்?
சிறப்புப் பொதுக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் விளக்கவுரை

சென்னை, மார்ச் 6 கருப்புப் பணத்தை எப்படி வெள்ளை யாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது – வெளிப் படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில், பா.ஜ.க. சிந்தித்து உருவாக்கிய, ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் ஒன்றிய பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டமாகும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

‘‘தேர்தல் பத்திரமும் –
உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!’’

கடந்த 4.3.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற் றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” என்ற தலைப்பில் நடைபெறுகின்ற இந்த சிறப்புப் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து சிறப்பித்துக் கொண் டிருக்கின்ற – நிறைவாக நம்மிடையே சிறப்புரையாற்ற விருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே,
அனைவரையும் வரவேற்று, இந்த சிறப்புப் பொதுக் கூட்டத்திற்கான நோக்கத்தை விளக்கி உரையாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அண்ணன் இரா.விடுதலை அவர்களே,
எனக்கு முன்னர் இங்கே உரையாற்றி அமர்ந்திருக் கின்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அண்ணன் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,

மற்றும் இங்கே திரளாகக் கூடியிருக்கின்ற ஜனநாயக சக்திகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் தலைவர் அவர்கள் இந்த சிறப்புப் பொதுக் கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான காரணத்தை, அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இங்கே சுருக்கமாக எடுத்துரைத்தார்.
கலைஞரின் நினைவிடம் திறக்கின்ற நாளில், இந்த சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அந்தத் திறப்பு விழா அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நிகழ்விற்கான நாள் குறிக்கப்பட்டு விட்டது. பின்னர் அந்த அறிவிப்பு வந்த நிலையில், இந்தச் சிறப்புக் கூட்டம் இன்றைக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
தேர்தல் பத்திரம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தது – ஊடகங்களில் கவனித்தோம், படித்தோம். நாம் அப்படியே கடந்து கடமைகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம். பிரச்சினைகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம்.

மக்களுக்கு எதிராக வந்தாலும், ஆதரவாக வந்தாலும், அதனை இன்னும் விரிவாக மக்களிடத்தில் விளக்கிச் சொல்பவர் தமிழர் தலைவர்!

ஆனால், வழக்கம்போல தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள், இதுபோன்ற தீர்ப்புகள் வருகின்ற நேரத்தில், மக்களுக்கு எதிராக வந்தாலும், ஆதரவாக வந்தாலும், அதனை இன் னும் விரிவாக மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டிய, விளக்கிச் சொல்லவேண்டிய தேவையை உணர்ந்து, இத்தகைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது வாடிக்கையான ஒன்றாகும். அந்த வகையில்தான், இந்த சிறப்புப் பொதுக் கூட்டம்.

ஒரு சிறப்புப் பொதுக்கூட்டம் நிகழ்வாக நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒருங்கிணைத் திருக்கிறார், நம்மிடையே விரிவாகப் பேசவிருக்கிறார்.
தேர்தல் பத்திரம் என்பது யாருடைய நலனுக்காக உருவாக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளில் அவர்கள் எப்படி இதைக் கையாண்டிருக்கிறார்கள். இதனால் பயன்பெற்றவர்கள் யார்? இதனால் ஏற்பட்டு இருக்கின்ற எதிர்விளைவுகள் என்ன? என்பது குறித்து இங்கே தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.
அண்ணன் விடுதலை அவர்களும், பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

மாய்மால அரசியல் செய்வதில், கைதேர்ந்த கட்சி பா.ஜ.க.

பாரதீய ஜனதா கட்சி ஒரு தேர்ந்த அரசியல் – ராஜ தந்திர அரசியல் கட்சி. எல்லா வகையிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
மாய்மால அரசியல் செய்வதில், மக்களை வீழ்த்துகிற மாய்மால அரசியல் செய்வதில், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்ப தில், அதிகார வர்க்கத்தை வளைத்துப் போடுவதில், தேர் தலை தமக்குச் சாதகமாக, தேர்தல் ஆணையம் உள்பட அனைத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கையாள்வது, ஊழலை வெளிப்படையாக, சட்டப்பூர்வ மாக செய்வதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை, அச்சப்படுவதில்லை, கூச்சப்படுவதில்லை, வெட்கப்படு வதில்லை. அப்படி ஒரு தேர்ச்சி பெற்ற ஓர் அரசியல் கட்சியாக இன்றைக்கு இந்தியாவில் விளங்குகின்ற கட்சிதான் பாரதீய ஜனதா கட்சி.

அரசியல் நெறிமுறை (‘பொலிட்டிகல் எத்திக்ஸ்’) என்ற எதுவுமே அவர்களிடத்தில் கிடையாது. கூட்டணி யில் தங்களோடு பயணிப்பவர்களையே பலகீனப்படுத்தி, அவர்களை வீழ்த்துவதில் பாரதீய ஜனதா ஓர் தேர்ந்த அரசியல் கட்சி.

தமிழ்நாட்டில் இப்போது அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் அப்படி சிக்கிக்கொண்டு தவிக்கின்றன. அந்த இரண்டு கட்சிகளையும் அவர்கள் பலகீனப்படுத்தி வருகிறார்கள் என்பதை இன்னமும் அவர்கள் உணராமல் இருக் கிறார்கள்.

அடுத்தத் தேர்தலில் அவர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை போகப் போக நாம் எல்லோரும் பார்க்கத்தான் போகிறோம்.
கூட்டணிக் கட்சிகளைப் பலகீனப்படுத்தி – அவர்களை சங்கி மயமாக்குகின்றனர்!

அவர்கள் எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ, அங்கெல்லாம் அந்தக் கூட்டணிக் கட்சிகளைப் பல கீனப்படுத்தி, அந்தக் கட்சியில் இருக்கின்ற ஆட்களை தங்கள் கட்சிக்கு இழுத்துப் போடுவதும், தொண்டர்களை வளைத்துப் போடுவதும், ஊடுருவி, ஊடுருவி அவர் களை சங்கி மயம் ஆக்குவதும் அவர்களின் கைதேர்ந்த உத்திகளில் சிறந்த உத்திகளாக விளங்குகின்றன.
தேர்தல் பத்திரம்மூலம் ஏறத்தாழ 58% நன்கொடையைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க.!

அப்படித்தான் தேர்தல் பத்திரத்தை அறிமுகப்படுத் தியதும், அதன்மூலம் ஏறத்தாழ 58 சதவிகித நன் கொடையை பாரதீய ஜனதாவிற்கே பெற்றுத் தந்ததும் அம்பலமாகி இருக்கின்றது. இதுபோன்ற ஊழலை சட்டப்பூர்வமாக செய்ய முடியும் என்று எவ்வளவு தந்திரமாக, சாதுரியமாக, சாதனைகளாகப் படைத்து, எங்களைப் போல் எவராலும் செய்ய முடியாது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதைத்தான் புள்ளி விவரங்களை இங்கே தோழர்கள் எடுத்துரைத்தார்கள்.
6 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல், வெள்ளைப் பணமாக தங்கள் கட்சிக் கணக்கில் சேர்த்திருக்கிறார்கள்.
முதலாளிகளை மிரட்டி, பெருமுதலாளிகளை மிரட்டி, தரகு முதலாளிகளை மிரட்டி, தேர்தல் நன் கொடை என்கிற பெயரால், அவர்கள் நிதியைத் திரட்டி, கருப்புப் பணமாக வைத்துக்கொண்டு அவற்றையெல் லாம் கையாளுவதில் அவர்களுக்குச் சிக்கல் இருந்தது. கருப்புப் பணத்தைத் திரட்டிவிட முடியும்; ஆனால், கையாளுவதில் பெரும் போராட்டம் உண்டு. எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும்.

சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் தேர்தல் பத்திரத் திட்டம்!

அதை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது – வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில், அவர்கள் சிந்தித்து உருவாக் கிய, ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் தேர்தல் பத்திரத் திட்டமாகும்.
பிபூல் பட்டாச்சாரியார் சொன்ன ஒரு விவரத்தை அண்ணன் ஜவாஹிருல்லா இங்கே சொன்னார்.

ஊழல் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க.வில்!

பாரதீய ஜனதா கட்சியினரால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரால் ஊழல் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் 700-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன் றைக்கு பி.ஜே.பி. கட்சியில்தான் தஞ்சமடைந்திருக் கிறார்கள்.
நாட்டில் அடையாளம் காணப்பட்ட நொட்டெரியஸ் கிரிமினல்ஸ், ரவுடிஸ், என்கவுன்டர் பட்டியலில் இருக் கக்கூடிய பிரபல கேடிகள் போன்றவர்களையும் அதிகம் கட்சியில் சேர்த்து, அதையும் ‘புனித’ப்படுத்துகின்ற செயலையும், அவர்களைப் ‘புனித’ப்படுத்துகின்ற செய லையும் பி.ஜே.பி.தான் செய்கிறது.
அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய பலர் காவல்துறையினரால் தேடப்படக்கூடிய நொட்டேரியஸ் கிரிமினல்ஸ்.
நாமெல்லாம் அரசியலை ஜனநாயக மயப்படுத்துதல் என்ற முயற்சியில் கொண்டு செல்ல விரும்புகின்றோம்.
பி.ஜே.பி.யினுடைய முயற்சி, அரசியலை கிரிமினலை சேசன் – குற்றவாளிகளைக் கொண்டு, குற்றவயப்படுத் துதல் – அதுதான் அவர்களுடைய செயல்திட்டங்களாக, நடவடிக்கைகளாக இருக்கின்றன.

அரசு அதிகாரிகள் அனைவரையும் சங்கிகளாக மாற்றிவிடுவார்கள்

ஊழல் பேர்வழிகளையும் கட்சியில் சேர்த்துக் கொள் வார்கள்; ரவுடிகளையும் கட்சியில் சேர்த்துக் கொள் வார்கள். வரி ஏய்ப்புக் கும்பலையும் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள். அதிகாரிகள் அனைவரையும் சங்கிகளாக மாற்றிவிடுவார்கள். அவர்கள் சங்கிகளாகவே இருக்கவேண்டும் என்பது இல்லை. அப்படி இல்லாதவர்களையும் சங்கிகளாக மாற்றிவிடுவார்கள்.

வாக்குப் பெட்டிகளைத் தயாரிக்கக்கூடிய ‘பெல்’ நிறுவனத்தில், ஏழு பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்
வாக்குப் பெட்டிகளைத் தயாரிக்கக்கூடிய ‘பெல்’ நிறுவனத்தில், ஏழு பேர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னால், அடிப்படையில் அவர்கள்

ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகத்தான் இருப்பார் கள். பி.ஜே.பி. என்பதைவிட!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உரிய பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் அப் படிப்பட்ட அதிகாரிகளைப் போய் தொடர்ச்சியாக சந்திப்பார். இது அவர்களுடைய வாடிக்கையான செயல் திட்டங்களில் ஒன்று. ஏரியாவில் யார் பிரபலமான ஒரு ஜாதி சங்கத்தின் தலைவராக இருக்கிறார்; அல்லது மத அமைப்பினுடைய தலைவராக இருக்கிறார் – இந்த அடையாளம் கண்டு, அப்படிப்பட்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து, மாதம் ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை என்று திரும்பத் திரும்ப அவர்களைச் சந்திப்பதும், அவர்களின் அரசியலைப் பேசுவதும், அதன்மூலம் அவர்களைத் தன்வயப்படுத்திக் கொள் வதும், அவ்வாறு அவர்களைத் தன்வயப்படுத்த முடிய வில்லை என்றால், ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்துவதும், அப்படி அச்சுறுத்தித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமான பணிகளை நாடு முழுவதும் செய்கின்ற வேலையை ஆர்.எஸ்.எஸ். கையிலெடுத்திருக்கிறது.
நிறைய அய்.பி.எஸ். அதிகாரிகளையும், அய்.ஏ.எஸ். அதிகாரிகளையும் அப்படித்தான் அவர்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது யாராலும் மறுக்கப்பட முடியாத ஓர் உண்மையாகும்.

அருமைத் தோழர்களே, இங்கே நடைபெறுகின்ற தேர்தல் முறையும், அதற்காக நிறுவப்பட்டு இருக்கின்ற தேர்தல் ஆணையமும் – ஜனநாயகத்தைப் பாதுகாப்ப தற்கு உருவாக்கப்பட்டவை என்று நாம் நம்பினாலும்கூட, அப்படியில்லை. தேர்தல் முறையைப் பயன்படுத்தி, ஒரு கும்பல் ஆட்சிதான்!
நம்முடைய வழக்குரைஞர் விடுதலை அவர்கள் பேசுகிறபொழுது, ஒரு சொல்லைக் கையாண்டார் – மாபோகரசி என்று சொன்னார்.
டெமாக்கரசி என்பதைப் போல, மாபோகரசி.

மாபோகரசி என்றால், கும்பல் ஆட்சி. டெமாக்கரசி என்றால், மக்களாட்சி!

இங்கு நடைபெறுவது தேர்தல்மூலம், தேர்ந்தெடுக் கப்படுகின்ற பிரதிநிதிகளைக் கொண்ட மக்களாட்சி என்ற நாம் நம்புகின்றோம்.
ஆனால், தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, தேர்தல் முறையைப் பயன்படுத்தி, ஒரு கும்பல் ஆட்சிதான் இங்கே தேர்ந்தெடுக்கப்படுகிறது.
அதானி, அம்பானி, மோடி, அமித்ஷா ஆகிய கும்பலின் ஆட்சிதான் இங்கே நடக்கிறது. அவர்களால் எதையும் செய்ய முடியும். எதைச் செய்வதற்கும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற எந்த சிஸ்டத்தையும் அவர்கள் பின்பற்றமாட்டார்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திடீரென்று ஒரு நாள் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றிதான் அறி விக்கிறார். அதில் எந்தவிதமான செயல்முறையும் கிடையாது.
அமைச்சரவையைக் கூட்டி அவர் கலந்து பேசினாரா, என்றால் இல்லை. அல்லது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதா என்றால் இல்லை.
எந்த ஜனநாயக நடைமுறையும் கிடையாது. ஒரு பிரதமருக்கு அப்படிச் சொல்வதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது? அதைப்பற்றி கவலைப்படாத ஒரு கும்பலின் ஆட்சிதான் பி.ஜே.பி. ஆட்சி.

ஜனநாயகத்தை ஒரு பொருட்டாக மதிக்கக் கூடியவர்கள் இல்லை!

ஒரு பிரதமர் எடுத்த எடுப்பிலேயே ஒரு முடிவை எடுத்து, தொலைக்காட்சியில் தோன்றி, 500 ரூபாய் செல்லாது, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தார். அதனால் எவ்வளவு பெரிய பதற்றம்? எவ்வளவு பெரிய பாதிப்பு? எவ்வளவு பெரிய பின்னடைவு? எவ்வளவு பெரிய பொருளாதார சரிவு? எவ்வளவு தொழில்கள் பாதிக்கப்பட்டன? எவ்வளவு மக்கள் நடுத்தர மக்கள் சிறு குறு தொழில்கள் செய்யக்கூடிய மக்கள் பாதிக்கப் பட்டார்கள்? சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டார்கள்? எந்தப் பாதிப்பைப்பற்றியும் கவலைப்படாமல், தாம் நினைத்ததை செய்து முடிக்கக்கூடிய ஒரு துணிவை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஜனநாயகத்தை ஒரு பொருட்டாக மதிக்கக் கூடியவர்கள் இல்லை.
ஜனநாயகத்தை மதிக்கவேண்டும்; அரசமைப்புச் சட்டத்தை மதிக்கவேண்டும் என்கிற குறைந்தபட்ச நெறி முறைகள் இல்லாதவர்கள். அவர்களின் கைகளில்தான் ஒன்றிய ஆட்சி சிக்கிக் கிடக்கிறது.

வெள்ளைப் பணமாகவே 6 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் அவர்களால் பெறப்பட்டு இருக்கிறது என்றால்…
குறிப்பிட்ட சில நிறுவனங்களின்மூலம் அவர்கள் எவ்வளவு பெரிய தொகையைப் பெற்றிருக்கின்றார்கள் என்றால், வெள்ளைப் பணமாகவே 6 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் அவர்களால் பெறப்பட்டு இருக்கிறது என்றால், கணக்கில் காட்டப்படாமல் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை அவர்களால் வசூலித்திருக்க முடியும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
பலன் இல்லாமலா ஒன்றிய ஆளுங்கட்சிக்கு ரூ.100 கோடி, ரூ.200 கோடி என்று நன்கொடை கொடுப்பார்கள்?

ஒரு நிறுவனம், ஒரு கட்சிக்கு 100 கோடி ரூபாய் தருகிறது; அல்லது 500 கோடி ரூபாயைத் தருகிறது என்று சொன்னால், நூறு கோடி ரூபாயை அவன் நன்கொடை யாக வழங்குகிறான் என்றால், அந்த நூறு கோடி ரூபாயை அவன் லாபமாக ஈட்டுவதற்கு எத்தனை லட்சக்கணக் கான தொழிலாளர்களின் உழைப்பை அவன் சுரண்டியிருக்கவேண்டும்; எவ்வளவு பெரிய அளவுக்கு அவன் சுரண்டியிருக்கவேண்டும். அப்படி அவன் சுரண்டி சம்பாதித்த லாபத்தை ஒரு கட்சிக்கு நூறு கோடி ரூபாயை இயல்பாக எடுத்து வீசுகிறான் என்று சொன் னால், அதற்குரிய பலன் இல்லாமலா அவன் செய்வான்?

(தொடரும்)

No comments:

Post a Comment