உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதி நிறமிகள் கொண்ட உணவுப் பொருட்களுக்கு கருநாடகாவில் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதி நிறமிகள் கொண்ட உணவுப் பொருட்களுக்கு கருநாடகாவில் தடை

பெங்களூரு, மார்ச் 12 அண்மையில் புதுச்சேரியிலும், தொடர்ந்து தமிழ் நாட்டிலும் ரோடமைன் பி நிறமூட்டிகள் பயன்படுத்தி பஞ்சுமிட்டாய் தயாரிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கருநாடகாவிலும் இந்த செயற்கை நிறமூட்டிக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. கர்நாடகா சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இதற்கான அறிவிப்பை நேற்று (11.3.2024) வெளியிட்டார்.

பலரும் விரும்பி உண்ணும் கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்களில் நிறமூட்டியான ரோடமைன் பி செயற்கை நிறமூட் டியைப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்த அமைச்சர், மீறினால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது தொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “ரோடமைன் பி போன்ற செயற்கை நிறமூட்டிகளால் தென் மாநிலங் களில் பரவலாக பொதுமக்கள் உடல்நல பாதிப்புக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை யொட்டி கருநாடகா முழுவதும் 171 கோபி மஞ்சூரியன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் 64 மாதிரிகள் பாதுகாப்பானவையாக இருந்தன. எஞ்சிய 106 மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன் படுத்தப்பட்டிருந்தன. அதேபோல் சேகரிக்கப் பட்ட 25 பஞ்சுமிட்டாய் மாதிரிகளில் 15 பாதுகாப்பற்ற வையாக இருந்தன. இந்த பாது காப்பற்ற மாதிரிகளில் டார்ட் ராசைன் (Tartrazine), கார் மோஸைன் (Carmoisine), சன்செட் யெல்லோ (Sunset Yellow ), ரோட மைன்- (Rhodamine-1B) போன்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட் டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரோடமைன் உபயோகிக்கும் உணவுகள் அடர் சிவப்பில் காட்சி யளிக்கும். இதற்காகவே இந்த நிற மூட்டிகள் பயன்படுத்தப்படு கின்றன. ஆனால் உடலுக்கு கடும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதனால் ரோடமைன் பி செயற்கை நிறமூட்டி பயன்பாடு தடை செய்யப்படுகிறது. மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர், ரோடமைன் பி பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய்களில் செயற்கை நிறமூட்டிகள் பயன் படுத்த தடை அமலுக்கு வருகிறது” என்றார்.

ஏன் ஆபத்து? – இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளி யேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும். இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment