மஹத் போராட்டம்: உரிமையை அள்ளிப் பருகுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

மஹத் போராட்டம்: உரிமையை அள்ளிப் பருகுங்கள்!

featured image

இந்திய வரலாற்றில் தோன்றிய மகத்தான சிந்தனையாளர், அறிவுஜீவி பாபாசாகேப் அம்பேத்கர். அவரது வாழ்வே ஒரு போராட்டம்தான். வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் அவர் எதிர்கொண்ட தீண்டாமையை, சதிகளை, கசப்புகளை, காழ்ப்புகளை எத்தகைய நிதானத்துடன் அவர் கையாண்டார் என்பது இன்றும் நம்மை வியக்கவைக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில், இந்தியத் தலைவர்கள் அனைவருக்கும் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடுவது ஒன்றுதான் லட்சியமாக இருந்தது. அம்பேத்கருக்கோ தேச விடுதலையோடு, தம் மக்களுக்கு ஹிந்து ஜாதியப் படிநிலையிலிருந்தும் விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்கிற இரட்டை லட்சியங்கள் இருந்தன!
இந்தியத் துணைக்கண்டத்தில் ஜாதி அமைப்பு, அதன் தோற்றம், இருப்பு என மானிடவியல் கோணத்தில் அவர் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். மஹர் மக்கள் பவுத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பவுத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமங்களைவிட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள்  (Out Caste) போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும், இதனாலேயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்றும் கருதினார். `யார் சூத்திரர்கள்?’ (Who were the Shudras?) என்ற புத்தகத்தில் இது குறித்து அவர் விரிவாக எழுதினார். ஊர்-சேரி என்கிற இந்த இரண்டாயிரம் ஆண்டு இடைவெளியைத் தகர்க்கவே வாழ்நாளெல்லாம் போராடினார்.

இந்தியாவில் நான்கு வர்ணங்களின் அடிப்படையிலான சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களில் வகுக்கப்பட்ட விதி முறைகளின்படி, தீண்டத்தகாதோர் எனும் தாழ்த்தப்பட்டவர்கள் ஜாதியக் கட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிராமங்களின் குளங்கள், கிணறுகள், கோயில்கள் தொடங்கி பொதுக் கட்டமைப்புகள் எதையும் பயன்படுத்த அனுமதியில்லை. இவற்றைக் கண்டித்து, ஹிந்து ஜாதிய அமைப்புக்கு எதிராகச் சுதந்திரப் போராட்ட காலத்தில் அம்பேத்கர் மேற்கொண்ட இந்தப் போராட்டம் இந்திய வரலாற்றின் மகத்தான போராட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பம்பாய மாகாணம், ராய்காட் மாவடடததின் ‘மஹத்’ எனும் நகரில் அமைந்துள்ள சவுதார் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டார்கள். அரசால் நிறுவப் பட்டுள்ள அடிப்படைக் கட்டமைப்புகள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த வழிவகை செய்யும் சட்டம். 1924இல் பம்பாய் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உடனே அந்தத் தீர்மானத்தை மஹத் நகரசபையும் நிறை வேற்றி அந்த உரிமையைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கியது. இருப்பினும், ஜாதிய அழுத்தங்களின் காரணமாக, இதை அவர்கள் அந்த ஊரில் நடைமுறைப்படுத்தவில்லை.
1924இல் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, ஆங்காங்கே சில முயற்சிகள் நடக்கவே செய்தன. கோரேகானில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு கிராமத்திலுள்ள குளத்தினுள் குதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க ஜாதியினர் அவர்கள் அனைவரையும் தாக்கினார்கள்.

1927, மார்ச் மாதத்தின் 19-20 தேதிகளில், அம்பேத்கர் மஹத் நகரில் ‘தீண்டத்தகாதோர்’ மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்தார். முதல்நாள் அமபேதகர் மாநாட்டு அரங்கில் நுழைந்தபோது, 3,000 பேர் அரங்கத்தில் அமர்ந்திருந்தனர். சவுதார் குளத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் உரிமை குறித்து இந்த மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை மிகவும் முக்கியமானது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி வருவதற்கு முன்னர், தீண்டத்தகாதவர் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக கழுத்தில் மண் கலயத்தைக் கட்டிக் கொண்டும், மணிக்கட்டில் கறுப்புக் கயிறுகளைக் கட்டிக் கொண்டும் மஹர்கள் திரிந்த அவலத்தை அவர் விவரித்தார். பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னர் எப்படி அவர்களின் வாழ்வில் முன்னேற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும் சுட்டிக்காட்டினார். ராணுவம் உள்ளிட்ட பணிகளில் மஹர்கள் இணைந்ததால் ஏற்பட்ட மாற்றங்களையும் அவர் பட்டியலிட்டார். ‘கோயில்களில் நுழையவும், பொது நீர்நிலையில் தண்ணீர் எடுக்கவும், செத்த விலங்குகளை அப்புறப் படுத்துவதில்லை என்றும் நாம் முடிவு செய்து விட்டால், மறுநாளே நமக்கு உணவு தருவதை நிறுத்திவிடுவார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் முடிவில், மஹத் நகரத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஓர் ஊர்வலத்துக்கும் திட்டமிடப்பட்டது. ‘இந்தக் குளம் தனியார் நிலத்தில் அமைந்துள்ளது. இங்கே மறியல் போராட்டம் நடத்தி, அத்துமீறி நுழைவது சட்ட விரோதமானது’ என்று நீதிமன்றத்தில் ஜாதி ஹிந்துக்கள் வழக்கு தொடர்ந்தார்கள். ஊர்வலம் நிச்சயமாக நடைபெறும் என்பதை அறிந்த ஜாதிய இந்துக்கள், பல வதந்திகளை அந்த ஊரிலும், அருகிலுள்ள ஊர்களிலும் பரப்பினார்கள். ‘அம்பேத்கர் குளத்தில் இறங்கிவிட்டு நேரடியாக அங்கே இருக்கும் கோயிலுக்குள் நுழையப் போகிறார். கோயில் தீட்டுப்பட்டுவிடும்’ எனக் காவல் துறையினரிடம் புகார் செய்தார்கள்.

அம்பேத்கர் தலைமையில் இந்தப் பேரணி சவுதார் குளம் நோக்கிச் சென்றது. மஹத் நகரே பதற்றத்தில் உறைந்தது. அம்பேத்கர் இந்தப் போராட்டத்தை அறவழியில் நடத்துவது என்பதில் கறாராக இருந்தார். மூவாயிரம் மஹர்களின் கைகளிலும் அவர்களின் அடையாளச் சின்னமான மூங்கில் லத்திகள் இருந்தன. ஆனால், அனைவரும் அம்பேத்கரின் வார்த்தைக்குக் கட்டப்பட்டு ராணுவத்தின் மிடுக்குடன் முன்னேறிச் சென்றனர். அவர்கள் சவுதார் குளத்தை அடைந்தார்கள். அம்பேத்கர் குளத்திலிருந்து நீரை அள்ளிப் பருகிய செயல், இந்திய வரலாற்றின் புரட்சிகரமான கணங்களில் ஒன்று. அவரைத் தொடர்ந்து மூவாயிரம் பேர் குளத்தில் இறங்கி நீரை அள்ளிப் பருகினார்கள். “நாங்கள் இங்கே இந்த நீரைப் பருக மட்டுமே வரவில்லை. இந்திய நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்டவே வந்திருக்கிறோம். பிரெஞ்சுப் புரட்சிக்கு சற்றும் குறைவில்லாதது இங்கே நாம் மேற்கொண்ட போராட்டம்” என்று கூறிய அம்பேத்கர், சவுதார் குளத்தின் படிகளில் நின்று தீண்டாமையின் மூல காரணமாகத் திகழும் மனுஸ்மிருதியின் பிரதியைத் தீயிட்டு எரித்தார்.

குளத்தில் நீர் பருகிவிட்டு மாநாட்டு அரங்கு நோக்கி வந்தவர்கள் மீது ஜாதி ஹிந்துக்கள் கல்வீசித் தாக்கினார்கள். அவர்களின் மாட்டு வண்டிகளை உடைத் தெறிந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரையும் மூர்க்கமாகத் தாக்கினார்கள். அனைவரும் கோயிலுக்குள் நுழையப்போகிறார்கள் என்கிற வதந்திதான் இந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்தது. ஸநாதனவாதிகளுக்கு வரலாறு நெடுகிலும் வதந்திதான் மூலதனம். சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்களைச் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக்கினார்கள். அவர்களுக்கு இனி வேலை இல்லை என்றார்கள். அவர்கள் வேளாண்மை செய்துவந்த நிலத்தைவிட்டு விரட்டி யடித்தார்கள்.

சவுதார் குளம் தீட்டுப்பட்டு விட்டதாக ஜாதிய ஹிந்துக்கள் கூச்சலிட்டார்கள். ‘எல்லாம் போச்சே…’ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார்கள். உடனடியாகப் பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். குளத்தைத் தூய்மைப்படுத்தும் சடங்குகளைச் செய்தார்கள். குளத்திலிருந்து 108 மண்பானைகளில் தண்ணீர் எடுத்து வந்து, அதில் பாலும் தயிரும் பசு மூத்திரமும் சாணமும் கலந்து, மந்திரங்கள் சொல்லி மீண்டும் குளத்தில் ஊற்றி அதைச் சுத்தப்படுத்துகிறோம் என்று வித்தைகள் பல காட்டினார்கள். ஆனாலும், மஹத் போராட்டத்தின் செய்தி. இந்தியா முழுவது முள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடம் பெரும் எழுச்சியைக் கொண்டுவந்தது.

“நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம். குடிதண்ணீர் பெறக்கூட எங்களுக்கு உரிமை இல்லை யென்றால், சுயமரியாதையுள்ள எந்தத் தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்… இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி என்ன தெரியுமா… இன்னல்களையும் அநீதி களையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதுதான் யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களின் உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளால், இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது” என்று கொதித்துப் பேசினார் அம்பேத்கர்.

1937ஆம் ஆண்டு, பம்பாய் உயர் நீதிமன்றம் மஹத்தின் சவுதார் குளத்தைத் தீண்டத்தகாதோர் பயன்படுத்த உரிமை வழங்கி ஆணையிட்டது. இருப்பினும் காந்தியாரின் மறியல் போராட்டத்தைக் கொண்டாடிய யாரும் அம்பேத்கரின் மஹத் மறியல் போராட்டம் குறித்து மறந்தும் வாய் திறப்பதில்லை. இதுதான் ஹிந்து மதத்தின் ஜாதிய மனநிலை வழிவகுக்கும் ‘அமைதியின் சதி’ (Conspiracy of Silence) என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வரலாற்றை வாசிக்கும் போதும், அதை மீள்வாசிக்கும்போதும் நமக்குக் காலம் கற்றுக்கொடுத்த அறிவு ஆயுதங் களைக்கொண்டு அதைப் பகுப்பாய வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் வழங்கியுள்ள கருத்தாயுதங்களைக் கொண்டுதான் சமத்துவச் சமூகம் நோக்கி பயணிப்பது சாத்தியம்!

(திரு.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள “போராட்டங்களின் கதை” என்ற நூலிலிருந்து… )

No comments:

Post a Comment