‘‘உருவத்தால் வேறுபட்டாலும், உள்ளத்தால் நாம் அனைவரும் ஒருவரே'' என்று ஒன்றுபட்டு இருக்கக்கூடிய ஒரு சமுதாயம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 13, 2024

‘‘உருவத்தால் வேறுபட்டாலும், உள்ளத்தால் நாம் அனைவரும் ஒருவரே'' என்று ஒன்றுபட்டு இருக்கக்கூடிய ஒரு சமுதாயம்!

featured image

அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம்!

உடையார்பாளையம், மார்ச் 13 ‘‘உருவத்தால் வேறுபட் டாலும், உள்ளத்தால் நாம் அனைவரும் ஒருவரே என்று நினைக்கக் கூடிய அளவிற்கு ஒன்றுபட்டு இருக்கக்கூடிய ஒரு சமுதாயமே நம்முடையது” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உடையார்பாளையத்தில் முப்பெரும் விழா!
கடந்த 10-3-2024 அன்று மாலை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அன்னை மணியம் மையார் அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார் பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில், படங்களைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:

அறிவாசான் தந்தை பெரியார் வழிகாட்டித் தலைவராவார்!
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னால், உடை யார்பாளையம் என்ற ஒரு சிறப்பான கொள்கை தியாக மண் என்ற இந்த மண்ணில் உங்களையெல்லாம் இன்றைக்குச் சந்திக்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு – உடையார்பாளையம் வேலாயுதம் அவர்களுடைய நினைவை – தொண்டறத்தைப் போற்றவும், அது போலவே, மூத்த முதியவர் தமிழை எப்படி ஒரு போர்க் கருவியாகப் பயன்படுத்தவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்களோ, அந்தக் கரு வியை, போர்க் கருவியாக தமிழை செயல்படுத்திய, ஒப்பற்ற புலவருக்கெல்லாம் புலவர், தமிழ் மானம், தன்மானம் காத்த தமிழ் மறவர் வை.பொன்னம்பலனார் அவர்களுடைய சிறப்பையும், நினைவூட்டுதலையும் இங்கு செய்யவேண்டும் – இந்த இரண்டு பேரும் இந்த மண்ணுக்குரியவர்கள் – எல்லா மண்ணுக்கும் உரியவர் களாக, எல்லோருக்கும் அடிப்படையாக அமைந்து மதிக்கப்பட்டவர்களும், பெருமைப்படுத்தப்பட்டவர் களும் ஆவர். அறிவாசான் தந்தை பெரியார் அவர் களால் இவர்கள் உருவானவர்கள். இவர்களுடைய கொள்கை அந்த சுயமரியாதை உணர்வோடு இருந்தது என்ற பெருமைக்குரிய இவர்களுக்கு – அறிவாசான் தந்தை பெரியார் வழிகாட்டித் தலைவராவார்.

வரலாற்றில் மிக முக்கியமான நாள்!
அந்தத் தலைவரை 95 ஆண்டுகாலம் வாழ வைத்த அன்னை மணியம்மையார் அவர்களுடைய பிறந்த நாள் என்பது இன்றைக்கு வரலாற்றில் மிக முக்கியமான நாள். 105 ஆம் ஆண்டு பிறந்த நாள்.
எனவே, அன்னையார் அவர்களின் பிறந்த நாள் விழாவை இதுவரையில் வழக்கமாக சென்னையில் நடக்கும் விழாவில் நான் பங்கேற்கவேண்டும் என்பதை முறையாக வைத்திருந்தார்கள்.
இந்த ஆண்டு சிறப்பாக சென்னையிலும் நடைபெறுகிறது. அன்னையார் அவர்களின் நினைவு நாள் 16 ஆம் தேதி வருகிறது. நினைவு நாளில் நடைபெறும் நிகழ்வில் நான் கலந்துகொள்கிறேன்.

தங்கள் வாழ்வையே இந்த இயக்கத்திற்கும், கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும், லட்சியத்திற்கும் அர்ப்பணித்திருக்கிறார்கள்!
ஆனால், இன்றைக்கு இந்த நாளில், மிக முக்கியமாக அன்னை மணியம்மையார் அவர்கள் எப்படி தன் வாழ்நாளைத் தியாகம் செய்தார்களோ, கொள்கைப்பூர்வமாக வாழ்ந்தார்களோ – அதுபோலவே, இருபெரும் பெரியார் பெருந் தொண்டர்கள் அதனைச் சிறப்பாகச் செய்திருக் கிறார்கள். தங்கள் வாழ்வையே இந்த இயக்கத் திற்கும், கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும், லட்சி யத்திற்கும் அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்கள் தான் தமிழ்மறவர் பொன்னம்பலனார் அவர்களும், ஆசிரியர் உடையார்பாளையம் வேலாயுதம் அவர்களும் ஆவர்.
எனவே, இந்த முப்பெரும் விழாவினை சிறப் பாக உடையார்பாளையத்திலேயே நடத்த வேண் டும் என்று நான் தோழர்களைக் கேட்டுக் கொண்டேன்.
இங்கே கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் சொன்னதைப்போல, எதைச் சொன்னாலும், கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல், சொல்வதற்கு முன் செய்து முடிக்கிறோம் என்கின்ற மனப்பான்மையையும், ஒத்துழைப்பையும் பெற்றுள்ள நம்முடைய அரியலூர் மாவட்ட திராவிடர் கழகமும், அதன் தலைவரும், பொறுப்பாளர்களும் என்றைக்கும் நிறைவேற்றிக் காட்டுவார்கள். அதுபோலவே, பகுத்தறி வாளர் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் சிவமூர்த்தி அவர்கள்.
எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தனர். ‘‘அய்யா, நீங்கள் சொன்னீர்களே, அதற்கு நீங்கள் தேதி கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.
உங்களிடம் நீண்ட நேரம் பேசவேண்டும்; நிறைய பேசவேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஏனென்றால், நீண்ட நாள்களுக்குப் பிறகு இங்கே நான் வந்திருக்கிறேன்.
நம்முடைய ஜமீன்தார் அவர்களுடைய குடும்பத் தைச் சார்ந்த நண்பர்களை அறிமுகப்படுத்தி, சில செய்திகளைச் சொன்னார்கள். அவரிடம் அப்பொழுது நான் சொன்னேன், ‘‘நானும் வந்திருக்கின்றேன், அய்யா அவர்களோடு – அய்யாவிற்கு வரவேற்பு கொடுத்திருக் கிறார்கள்” என்று.
இந்த ஊரைப் பொறுத்தவரையில், உடையார்பாளை யம் வேலாயுதம் என்றால், இந்த இயக்கத்தில் ரத்த வரிகளால் எழுதப்பட்டிருக்கின்ற பெயர்.

‘‘வெறும் எழுத்துப் பிழையே தவிர,
கருத்துப் பிழையல்ல!’’
இந்நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள பதாகை யில் நான் பார்த்தேன். அதில் ‘முப்பெறும் விழா’ என்று போட்டிருக்கிறார்கள். ‘முப்பெறும்’ என்று சொல்லும்பொழுது ‘று’னா இருக்கிறதே, அது சாதாரண விஷயமல்ல – எங்களுடைய கண் எல்லா இடங்களிலும் பார்வையைச் சுழற்றும். ‘முப்பெறும்’ என்று இருப்பது ‘‘வெறும் எழுத்துப் பிழையே தவிர, கருத்துப் பிழையல்ல” என்பதுதான் மிகவும் முக்கியமானது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்த விழாவை ‘பெறுகிறோம்‘ இந்த மண்ணிலே – இதனை
நடத்தப் ‘பெறுகிறோம்‘ – வாய்ப்புப் ‘பெறுகிறோம்!’
தோற்றத்திற்கு வேண்டுமானால் எழுத்துப் பிழையாக இருக்கலாம், ‘பெறும்’ என்பதில். ஆனால், கருத்துப் பிழையல்ல – ‘முப்பெறும்’ என்பது நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்த விழாவை ‘பெறுகிறோம்’ இந்த மண்ணிலே – இதனை நடத்தப் ‘பெறுகிறோம்’ – வாய்ப்புப் ‘பெறுகி றோம்’ என்று சொல்லக்கூடிய அளவிற்குச் சிறப்பாக இருக்கிறது. ஒருவேளை அப்படி எண்ணித்தான் ‘முப்பெறும்’ என்று போட்டிருக்கிறார்கள் என்று நினைக் கிறேன். தமிழ் தெரியாமல் எழுதியிருக்கமாட்டார்கள் நம்முடைய தோழர்கள் – ஏனென்றால், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடியவர்கள் அவர்கள்.
இப்படிப்பட்ட அருமையான நிகழ்ச்சிக்கு சிறப்பான வகையில் தலைமை ஏற்று இருக்கக்கூடிய மாவட்டத் தலைவர் ‘விடுதலை’ நீலமேகம் அவர்களே, வரவேற் புரையாற்றிய இணை செயலாளர் என்.இராமச்சந்திரன் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கொள்கையாளர் வழக்குரைஞர் அய்யா சின்னப்பா அவர்களே,
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் – கொள்கை வீரர் -அவருடைய தந்தையார் எப்படி சுயமரியாதை வீரராக இருந்தாரோ, அதில் இம்மியளவும் குறையாமல் இருக்கக்கூடிய கா.சொ.கண்ணன் அவர்களே,
அதேபோல, அவர்களோடு போட்டி போட்டு, என் றைக்கும் சீரிய பகுத்தறிவாளர், சிறந்த கொள்கையாளர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இளைஞர்களுக்கு இருக் கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டதிட்டக் குழு உறுப்பினர் அருமைச் சகோதரர் சுபா.சந்திரசேகர் அவர்களே,
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் அருமைத் தோழர் இரா.ஜெயக்குமார் அவர்களே, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தோழர் தங்க.சிவமூர்த்தி அவர்களே,
தலைமைக் கழக அமைப்பாளர்கள் தோழர் சிந்தனைச்செல்வன், இளந்திரையன் அவர்களே,
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் இராமநாதன் அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கதிர் வளவன் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன் அவர் களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் இராமநாதன் அவர்களே,
திராவிடர் கழக அரியலூர் மாவட்டச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே, பேரூராட்சித் தலைவர் அன்புத் தோழர் மலர்விழி அம்மையார் அவர்களே, பேரூராட்சி துணைத் தலைவர் அக்பர் அலி அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக ஜெயங் கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் அவர் களே, திராவிட முன்னேற்றக் கழக செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் தோழர் எழில்மாறன் அவர்களே,
தி.மு.க.வினுடைய தா.பழூர் மேற்கு ஒன்றிய செய லாளர் தோழர் சவுந்தரராசன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களே, கழகப் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் அவர்களே, கழகக் காப்பாளர் தோழர் மணிவண்ணன் அவர்களே,
இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மாநில இளைஞரணி துணை செயலாளர் அறிவன் அவர்களே, மாவட்டத் துணைத் தலைவர் திலீபன் அவர்களே, மாவட்டத் துணை செயலாளர் செந்தில்குமார் அவர்களே, மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் ராசா அவர்களே, மாவட்ட விவசாய அணி தலைவர் சங்கர் அவர்களே, ஒன்றிய செயலாளர் தோழர் பிரபாகரன் அவர்களே, மீன்சுருட்டி நகர தலைவர் தோழர் அசோகன் அவர்களே, மீன்சுருட்டி சேக்கிழார் அவர்களே, செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ்ச் செல்வன் அவர்களே, செந்துறை ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் அவர்களே, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் மதியழகன் அவர்களே, பெரியார் பெருந்தொண்டர் செந்துறை ராஜேந்திரன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக இரு கொள்கை வீரர்களது குடும்பத்தைச் சார்ந்த, நம் குடும்பத்தைச் சார்ந்த அருமை சகோதரிகளே, சகோதரர்களே!

எல்லையற்ற மகிழ்ச்சியைப்
பெறுகிறோம்!
அய்யா தமிழ்மறவர் அவர்களுடைய குடும்பம்; அதேபோல, தியாகி உடையார்பாளையம் வேலாயுதம் அவர்களுடைய குடும்பம்; அவர்களுடைய வழிவழித் தோன்றல்கள் – இவர்களையெல்லாம் இன்றைக்கு இங்கே சந்திக்கின்றபொழுது எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறோம். நீங்கள் எப்படி மகிழ்ச்சியடைகிறீர்களோ, அதேபோல, இன்றைக்கு உங்களைச் சந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கின்றேன்.
காரணம் என்னவென்றால், ஒன்றை நான் அடிக்கடி எடுத்துச் சொல்வேன்.
பெரியார் பெருந்தொண்டர்கள் நாம். பெரியாரின் பெருங்குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதேபோல, அண் ணாவின் குடும்பம்; அதேபோல, கலைஞருடைய குடும்பம்; இன்றைய முதலமைச்சருடைய தொடர்ச்சி – இப்படி நாமெல்லாம் இரட்டைக் குழல்களாக இருந் தாலும், மூன்று குழல்களாக இருந்தாலும் – உருவத்தால் வேறுபட்டாலும், உள்ளத்தால் நாம் அனைவரும் ஒருவரே என்று நினைக்கக் கூடிய அளவிற்கு ஒன்று பட்டு இருக்கக்கூடிய ஒரு சமுதாயம்.

ரத்தத்தை விட கொள்கை உறவு கெட்டியானது!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது தண்ணீரைவிட ரத்தம் கெட்டியானது என்று. ஆனால், திராவிடர் கழகம்தான் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது. ஏனென்றால், இது பகுத்தறிவு இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
தண்ணீரைவிட ரத்தம் கெட்டியானது; ரத்தத்தை விட கொள்கை உறவு கெட்டியானது.
எங்களுக்கிடையே இருப்பது கொள்கை உறவு. நாங்கள் வேறு யாரோ அல்ல! வந்தார்கள், பாராட்டி னார்கள் என்று சொல்வதற்கு.
எங்கள் குடும்பத்து முதியவர்களை, எங்கள் வழி காட்டிகளை, எங்களை உருவாக்கியவர்களை, இன் றைக்கு இளைஞர்களை உருவாக்கவிருக்கிறவர்களை நினைவூட்டிக் கொண்டு – எங்களுடைய பேட்டரியின் சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்கின்றோம். இந்த விழாவினுடைய நோக்கம் அதுதான்!

பதவிக்கும் – கொள்கைக்கும்
என்ன வேறுபாடு!
நம்முடைய கண்ணன் அவர்களிடம் சொன்னேன்; அப்பாவைபற்றி பேசவேண்டும். ஏனென்றால், கொள்கை என்பது இருக்கிறதே – அண்ணா சொன்னதை இங்கே நினைவூட்டவேண்டியது அவசியமாகும்.
பதவிக்கும் – கொள்கைக்கும் என்ன வேறுபாடு என்று பாடம் எடுப்பதுபோன்று ஒரே வரியில் சொன்னார்.
அண்ணா அவர்கள், தந்தை பெரியாரின் தலைமகன். பெரியாரிடம் பாடம் பெற்றவர். கலைஞர், எங்களைப் போன்றவர்கள் ஈரோட்டு குருகுலத்தில் பயின்றவர்கள். நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம் என்று வரக்கூடிய சூழ்நிலையில், அண்ணா அவர்கள் ஒரே வார்த்தையில் சொன்னார்.
ஏன் தமிழ்மறவர் பொன்னம்பலனாரைப் பாராட்ட வேண்டும்; உடையார்பாளையம் வேலாயுதம் அவர் களைப் பாராட்டவேண்டும்; அவர்களைப்பற்றி ஏன் நினைவூட்டவேண்டும்; இந்தக் குடும்பங்களுடைய தியாகத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்கிற அவசியம் ஏன்?
அன்னை மணியம்மையார் அவர்களுடைய தொண்டு, தியாகம் இவற்றை ஏன் நினைவூட்டவேண்டும்?
நிறைய பேர் மிகத் தவறாகப் புரிந்துகொண்டிருக் கிறார்கள். ஒரு தாய், ஒரு பெண்ணினம், பொது வாழ்க்கைக்கு வருகிறபொழுது, பாதுகாக்கவேண்டிய தலைவரைப் பாதுகாக்க, மற்றவற்றையெல்லாம் இழக்க லாம் – ஆனால், அன்னை மணியம்மையார் அவர்கள் தன்னுடைய இளமையையே இழந்து, அதற்காக தன்னு டைய வாழ்நாள் முழுவதும் – வசவுகளிலேயே மூழ்கி மூழ்கி எழுந்தவர்.
அவர் அந்த வசவுகளைப்பற்றி கவலைப்படவில்லை. அவ்வளவு வசவுகளையும் உரமாக்கிக் கொண்டு வளர்ந்தார் என்பதுதான் மிகவும் முக்கியம்.

அன்னை மணியம்மையார்
வெற்றி பெற்றார் என்பதற்கு அடையாளம்!
அவர் ஒருவருக்கும் பதில் சொன்னதே கிடையாது. யார் யாரெல்லாம் அன்றைக்கு பழி சுமத்தினார்களோ, பிறகு அவர்களெல்லாம் அன்னை மணியம்மையாரைப் பாராட்டியதை – அவர் காது குளிரக் கேட்டாரே, அது ஒன்றிலேயே அவர் வெற்றி பெற்றார் என்று சொல்லலாம்.
(தொடரும்)

No comments:

Post a Comment