கங்கை - பசுமைத் தீர்ப்பாயம் அபாய அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

கங்கை - பசுமைத் தீர்ப்பாயம் அபாய அறிவிப்பு

featured image

பக்திப் போதையில் சிக்கிய ஹிந்துக்கள் புனிதமாக நினைக்கும் விடயங்களில் ஒன்று கங்கை. இமயமலையில் உருவாகும் இந்த கங்கை நதியில் நீராடினால் அனைத்துப் பாவங்களும் கழியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்

ஆனால், கங்கை நதி மிக மோசமாக மாசுபட்டு இருப்பதால் அங்கே யாரும் நீராட வேண்டாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தி இருக்கிறது. ‘கோலிஃபார்ம்’ என்ற பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருப்பதால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் முழுப் பகுதியும் குளிப்பதற்குத் தகுதியற்றதாக இருப்பதாகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்பகுதியில் உள்ள கங்கை நதியில் ஒவ்வொரு நாளும் 258.67 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாகப் பாய்வதாகப் பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. இது மிகப் பெரிய சுகாதார அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த அபாய அறிவிப்பு வெளி வந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை நதியில் மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியங்கள் அதிக அளவு நீரில் கலந்துள்ளது. கோலிஃபார்ம் என்ற ஆபத்து மிகுந்த உயிர்க்கொல்லி பாக்டீரியங்கள் இருப்பதால், அந்த நீர் குளிக்கக் கூட தகுதியற்றதாக உள்ளதாகத் தெரிவித்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அங்கே நீராட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தான் அணிந்திருந்த – தனது பெயர் கொண்ட உடை 10 லட்சம் ரூபாய் என்ற உண்மையை வெளிப்படுத்தினார். அது எனக்கு பரிசாக வந்தது – அப்படி பரிசாக வந்தவற்றை ஏலம் விட்டு கங்கையை அவரே தூய்மையாக்க நிதி திரட்டுவேன் என்று கூறி அந்த நிதிக்காக கொண்டு வந்த திட்டம் தான் “நமாமி கங்கே” (கங்கையே வணக்கம்) பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகளிட மிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை “நமாமி கங்கே” திட்டத்திற்கு ‘தண்டல்காரன்’ போல் வசூல் செய்தார்கள். 2015 ஆம் ஆண்டே “நமாமி கங்கே” திட்டத்தில் 20,000 கோடி ரூபாய் சேர்ந்தது. வட இந்தியாவில் கங்கை ஓடும் மாநிலங்களில் அரசுப் பேருந்து கட்டணத்தில்கூட “நமாமி கங்கே”விற்கு என்று ஒரு தொகை மக்களிடமிருந்து வாங்கப்படுகிறது.

தற்போது எத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் “நமாமி கங்கே” திட்டத்தின்கீழ் சேர்ந்து உள்ளது என்று யாருக்கும் தெரியாது, இதுவும் பி.எம். கேர் நிதி போல் தான்! காரணம் லட்சம் கோடியைத் தாண்டிய “நமாமி கங்கே” திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

ஆனால், மோடியின் ஆட்சியில் கங்கை மேலும் சீரழிந்தது தான் மிச்சம் – குடிக்கத் தகுதியில்லை என்ற நிலை மாறி, குளிக்கவே தகுதியில்லை என்றாகிவிட்டது கங்கை. நதி மலையை கடந்து தரையைத் தொடும் அரித்துவாரில் கங்கை நீர் மனிதக்கழிவுகளால் மாசு அடைந்து வருகிறது என்று அறிக்கை வெளிவந்து உள்ளது. கான்பூரில் தோல் தொழிற்சாலை மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் கங்கை நீரில் நேரடியாகவே கலக்கப்படுவதால் உயிரினங்கள் வாழ்வது இயலாத ஒன்றாகிவிட்டது, வாரணாசியில் மத நம்பிக்கை என்ற பெயரில் பிணங்கள் மிதக்கின்றன. அப்படியே பக்ஸர் மற்றும் ராஜேந்திர நகர் (பீகார்) சென்றால் மணல் கொள்ளைக்காரர்கள் மற்றும் கனிமவள கொள்ளையர்களால் நீர் மேலும் மாசடைந்து மீன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழத் தகுதியில்லாத ஆறாக மாறி விடுகிறது, கடைசியாக மேற்கு வங்கத்தில் கங்கை நீரில் கால்கூட நனைக்க முடியாத நிலை, சாக்கடையை விட மோசமாகிவிட்டது என்று பசுமைத்தீர்ப்பாயம் அறிக்கை விட்டு விட்டதே – எங்கே பேச்சு மூச்சைக் காணோமே! அந்த “நமாமி கங்கே” திட்டத்திற்கு செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்று யாரும் கேட்கமட்டார்கள். காரணம் அவர்களுக்கு எல்லாம் அயோத்தியில் ராமனைக் காட்டி மதபோதை ஏற்றிவிட்டார்கள்.

சில நாட்களுக்குமுன் வந்த ஒரு செய்தி – ரத்தப் புற்றுநோய் வந்த தனது மகனை – கங்கையில் மூழ்கச் செய்தால், நோய் பறந்து போய் விடும் என்ற நம்பிக்கையில் மகனின் தலையை சில நிமிடங்கள் கங்கையில் அழுத்திக் கொண்டு இருந்ததால், மகன் மரணம் அடைந்ததுதான் மிச்சம்.

மூடத்தனம் என்பது மனித வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கூட மிகக் கேடானது. சிவனின் தலையில் கங்கை என்பதெல்லாம் எத்தகைய விபரீதம்!
ஒரு பிரதமர், மூடநம்பிக்கை பிரச்சாரவாதியாகி விட்டால், அது எவ்வளவு பெரிய ஒழுக்கக் கேடு! – ஆபத்து!! இப்பொழுது பசுமைத் தீர்ப்பாயமே அபாயச் சங்கு ஊதி விட்டதே – என்ன செய்யப் போகிறார்கள்?

No comments:

Post a Comment