மீண்டும் மனுதர்ம ஆட்சியா? எச்சரிக்கை! எச்சரிக்கை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

மீண்டும் மனுதர்ம ஆட்சியா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஹாவேரி மாவட்டம் சித்தாபூரில் உள்ள ஹல்கேரி கிராமத்தில் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் பேசிய பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே “வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றி விடுவோம். இந்த முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என மோடி கூறியுள்ளார்.

ஏன் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும்? மக்கள வையில் பாஜகவுக்கு தற்போது இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், மாநிலங்களவையில் அப்படி இல்லை. நமக்கு பெரும்பான்மை குறைவாக உள்ளது. கூடுதலாக, மாநில அரசுகளில் எங்களுக்கு (பாஜக) தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அரசமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையை அடைவது அவசியம். அரச மைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் ஹிந்துக்களை ஒடுக்கும் விதிகளையும் சட்டங்களையும் காங்கிரஸ் திணித்துள்ளது. அதற்கு மாற்றங்களை கொண்டு வர, நமக்கு இந்த பெரும்பான்மை போதாது” என்று கண்மூடித்தனமாகப் பேசியுள்ளார்.

பாஜக உறுப்பினரின் இக்கருத்தை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, “நரேந்திர மோடி மற்றும் சங்பரிவாரின் மறைமுக நோக் கங்களை அவரது கருத்துக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்து கின்றன. அண்ணல் அம்பேத்கரின் அரசமைப்பை அழிப் பதே நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் இறுதி இலக்கு.
நீதி, சமத்துவம், உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். சமூகத்தை பிளவுபடுத்தி, ஊடகங்களை அடிமைப்படுத்தி, கருத்துச் சுதந் திரத்தை முடக்கி, சுதந்திர அமைப்புகளை முடக்கி, எதிர்க்கட்சிகளை ஒழிக்க சதி செய்து இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தை குறுகிய சர்வாதிகாரமாக மாற்ற நினைக்கிறார்கள்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் கனவு களுடன் சேர்ந்து இந்தச் சதியை முறியடிப்போம். மேலும், எங்கள் கடைசி மூச்சு வரை அரசமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்” என்று சரியான முறையில் பதிலடி கொடுத்துள்ளார் இளந் தலைவர் ராகுல்காந்தி.
பிஜேபியைச் சேர்ந்த யாரோ ஒரு நாடாளுமன்ற உறுப் பினர் தானே பேசியிருக்கிறார் என்று இதனைக் கடந்து போக முடியாது.

ஆர்.எஸ்.எஸின் தத்துவத்தைத் தான் அவர் பேசி இருக்கிறார். மாநிலங்களே கூடாது என்பதுதானே ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்கரின் கருத்து. மொழிவாரி மாநிலங்கள் என்ற பிரச்சினை வந்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தது ஆர்.எஸ்.எஸே!

மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால் நாடு சிதறுண்டு போகும். நாடு முழுவதும் ஒரே அரசாக இருக்க வேண்டும் என்றது ஆர்.எஸ்.எஸ்.
மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு – நாடு முழு வதும் சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர்.

1957 தேர்தலில் ஜனசங்கம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் “அரசியல் சட்டத்தைத் திருத்தி, கூட்டாட்சி முறையை ஒழித்தாக வேண்டும். இந்தியா ஒரே நாடு என்று பிரகடனப்படுத்துவோம்” என்கிறார் கோல்வால்கர்.
ஆர்.எஸ்.எஸ். 67 ஆண்டுகளுக்குமுன் சொன் னதைத் தான் இப்பொழுதும் சொல்கிறார்கள். யாரோ ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் கூறினார் என்று அலட்சியப்படுத்தாமல் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று இப்பொழுது குரல் கொடுப்பதும், ராமன்கோயில் கட்டுவதும் எல்லாம் அவர்களின் அடிப்படைக் கொள்கையே – மீண்டும் மனுதர்மம் என்ற இலக்கே!
1981 டிசம்பரில் பூனாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மனுதர்ம சாஸ்திர நூலை அலங்கரித்து எடுத்துச் சென்றதையும் நினைவூட்டுகிறோம்.
மூன்றாவது முறையும் பிஜேபி (ஆர்.எஸ்.எஸ்.) ஆட் சிக்கு வந்தால் கோல்வால்கர் ‘ஞானகங்கை’யில் (Bunch of thoughts) கூறிய அத்தனைப் பார்ப்பனீய ஆதிக்கத்தின் அம்சங்களும் கொடி ஏறும், எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

2024 மக்களவைத் தேர்தல் வாழ்வா, சாவா என்ற போராட்டம் – பிஜேபி ஆர்.எஸ்.எஸின் மாயாஜால வித்தையில் ஏமாற வேண்டாம் – வேண்டவே வேண்டாம்!

No comments:

Post a Comment