உலக மகளிர் நாளில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 8, 2024

உலக மகளிர் நாளில்...!

1975 மார்ச்சு 8ஆம் நாள் உலக மகளிர் நாளாக அய்.நா.வால் அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் உலகம் முழுவதும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதி பெண்கள் என்றாலும், ஆண் ஆதிக்கம் என்ற நுகத்தடியின் கீழ்தான் பெண்கள் இருந்து வந்துள்ளனர்.
இந்த அடிமைத்தனத்தில் மதங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இந்தியா என்ற துணைக் கண்டத்தைப் பொறுத்த வரையில் ஹிந்துமதம் பெண்களை உயிருள்ள ஒரு ஜீவனாகவே கருதவில்லை – ஒரு ஜடப் பொருளாகவே கருதியது.
வளர்ச்சி பல திசைகளில் ஏற்பட்டிருந்தாலும் – இன்றைக்கும்கூட பெண்களை தங்களுக்கு இணையாகக் கருதும் மனப்பக்குவம் முதிர்ச்சியுற்றதாகக் கருத முடியாது.
“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?”, “ஜாண் பிள்ளை யானாலும் ஆண் பிள்ளை ஆண் பிள்ளைதான்” என்று பெண் களையே சொல்ல வைத்த மதவாத நோய்ப் பீடித்த சமூக அமைப்பு இது.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் – அதன் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் ஓய்வு ஒழிச்சல் இல்லாத ஒப்பற்ற சமூகப் புரட்சியால், இந்திய அளவில் தமிழ்நாடு முன் வரிசையில் நிற்கிறது. கல்வியிலும் பெண்கள் ஆண்களை விஞ்சும் நிலைக்கு உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பெண்கள் கல்வி முதல் பொருளாதாரத்தில், பேருந்துகளில் இலவசப் பயணம், ஊக்கத் தொகை என்றெல்லாம் வரிசை கட்டி நிற்கின்றன.

பால்ய திருமணம் என்ற கேடு கெட்ட நடப்பு இருந்து வந்தது. ஒரு கால கட்டத்தில் “‘ருது’ ஆவதற்கு முன்பு ஒரு பெண்ணானவள் கல்யாணம் முடித்து வைக்கப்பட வேண்டும் என்று பராசரசஸ்மிருதி கூறுகிறது” என்று தேசிய பார்ப்பனர்கள் சாரதா சட்டத்தை எதிர்த்து சல்லடம் கட்டி நின்றதுண்டு.
இன்றைக்கும்கூட சிதம்பரத்தில் தீட்சிதர் குடும்பங்களில் குழந்தைத் திருமணம் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.
தந்தை பெரியார் நடத்திய மாநாடுகளில் எல்லாம் பெண்களைக் குறித்து புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெண்களுக்கு வாக்குரிமையை முதன் முதலாக சட்ட ரீதியாகக் கொண்டு வந்தது நீதிக்கட்சி ஆட்சியே (1921).

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களைப் பொட்டுக் கட்டி கோயிலுக்குத் தாரை வார்த்த ஆபாசத்தை என்ன சொல்ல!

‘டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் தாம் பிறந்த குலத்திற்குப் பெரிய உபகாரத்தைச் செய்து விட்டார்” என்றும், அது என்ன குலம் என்று தெரிவதற்காக அடுத்த வார்த்தையாகவே ‘தேவதாசி’ என்று சொல்லப்படுகிறது என்றும் எழுதியது ‘சுதேசமித்திரன்’ ஏடு (2.2.1929).
‘சுதேசமித்திரன்’ ஏட்டின் இந்தக் கருத்தைக் கண்டித்து ‘குடிஅரசு’ இதழில் (10.2.1929) தந்தை பெரியார் எழுதினாரே!
இப்படி எல்லாம் அங்குலம் அங்குலமாக பெண் உரிமை வளர்த்து எடுக்கப்பட்டது.

இப்பொழுதுகூட வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் – விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு ஒப்பான வர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் எல்லாம் ஜெகத் குருக்கள்.

பெண்களில் 30 சதம் பேர் மட்டுமே பெண்மைத் தன்மை உடையவர்கள் என்று கூறும் ஜெகத் குருக்களின் செல்லரித்த சீடர்களும் உலா வருகிறார்களே!
பெண்கள் விபசார தோஷம் உள்ளவர்கள் என்று கூறும் மனு தர்மத்தை எதிர்த்தால் – எரித்தால், வரிந்து கட்டிக் கொண்டு வக் காலத்து வாங்கும் பதர்களும், ஏடுகளும் இருக்கத்தானே செய்கின்றன.

விதவைகள் எண்ணிக்கையில் உலகில் இந்தியாவிற்கே முதலிடம் என்பது வெட்கப்படத்தக்கதல்லவா!
உலகிலேயே அதிக விதவைகள் வாழும் நாடாக இந்தியா மாறி யுள்ளது. 2023 மார்ச் 7 தகவலின்படி இந்தியாவில் 55 மில்லியனுக்கும் (சுமார் 5 கோடியே 50 லட்சம்) அதிகமான விதவைகள் வாழ்கின்றனர் என தெரியவந்துள்ளது. கணவனை இழந்த பிறகு, பாகுபாடு, களங்கம், பொரு ளாதாரப் பிரச்சினைகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாரம்பரிய நடை முறைகள் போன்ற பிரச்சினைகளை வாழ்நாள் முழுவதும் விதவைகள் எதிர்கொள்கின்றனர்.

“உலகளவில் மூன்று விதவைகளில் ஒருவர், இந்தியா அல்லது சீனாவில் வாழ்கின்றனர். 46 மில்லியன் விதவைகளைக் கொண்ட இந்தியா, சீனாவை (44.6 மில்லியன்) பின்னுக்கு தள்ளி, அதிக எண்ணிக்கையிலான விதவைகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது” என்று 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று, ‘உலகப் பொருளாதார மன்றம்’ (World Economic Forum) தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

“இந்தியாவில் 46 மில்லியன் விதவைகள் இருப்பதாக மதிப் பிடப் பட்டுள்ளது. நாட்டின் பெண் மக்கள் தொகை யில் இது 10 சதவிகிதம்” என்று ‘மாடர்ன் விண்டோஸ் கிளப்’ (Modern Windows clup) இணைய தளமும் கூறியிருந்தது.
இந்நிலையில்தான், கடைசியாக 2023 மார்ச் 7 அன்று புள்ளி விவரம் வெளியிட்ட ‘தி ஹூமானிட்டி’ (The Humanity) இணைய தளமும் “இந்தியாவில் 55 மில்லியனுக்கும் அதிகமான விதவைகள் வாழ்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இருந்து விலக்கப் பட்டு, ஒரு ஆண்டு அல்லது அதற்கும் மேலாக வீடுகளில் முடக்கி வைக்கப்படுகிறார்கள் இந்து விதவைகள்! இந்த கட்டுப்பாடுகள் களங்கம் கொண்டவையாக உள்ளன. சில தொலை தூர கிராமங்களில், விதவைகள் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தங்குமிடங்களுக்கு (உ.பி. மாநிலத்திலுள்ள பிருந்தாவனம் போன்ற இடங்களுக்கு) அனுப்பப்படுகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளது. அய்க்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 258 மில்லியன் விதவைப் பெண்கள் உள்ளனர்.
இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஒருபெண்ணி ருந்தும், அவர் எந்த அளவுக்கு ஹிந்துத்துவ அரசால் மதிக்கப்படுகிறார் என்பதைக் கண்ணெதிரே கண்டு கொண்டுதானே இருக்கிறோம்.
சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற பிரச்சினை எத்தனைப் பிரதமர்களைக் கடந்து வந்திருக்கிறது?
கடுமையான அழுத்தம் காரணமாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டாலும் அது நடைமுறைக்கு வருவது இப்பொழுது இல்லையாம்.
வார்த்தையில்தான் பாரத மாதா – தாய் மொழி ஆனால் நடைமுறையில் மாதாக்கள் தாய்கள் உரிய மதிப்போடு அங்கீகரிக்கப்படும் நிலை உண்டா?
பெண்கள் வீதிக்கு வந்து போராடாத வரை உரிமைகள் என்பவையெல்லாம் வீட்டுக்குள் உறங்க வேண்டியதுதான்.

“பெண்களே! வீரத்தாய் மார்களாக ஆக விருப்பப் படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிக மிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்படியொரு சொல்லுக்கு ஆளாகாதீர்கள். “இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படாமல்,” “இவன் இன்னா ருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும். (‘குடிஅரசு’ 5.6.1948) என்ற தந்தை பெரியாரின் வீர உரையை – அதன் அடக்கத்தை சுவாசியுங்கள் – சூளுரைத்துக் கிளம்புங்கள்.”
2024 உலக மகளிர் நாளில் பெண்கள் எடுக்கும் சூளுரை இதுவாகவே இருக்கட்டும்! இருக்கட்டும்!!

No comments:

Post a Comment