ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை

featured image

ஒரு வார காலத்திற்குள் ‘ஈவிஎம்’மிற்கு எதிராக
நம்முடைய போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்!
பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,
சமூகநீதி அரசியலை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்!

சென்னை, மார்ச் 7 ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் – ஒரு வார காலத்திலாவது ‘ஈவிஎம்’மிற்கு எதிராக நம்முடைய போராட்டம் தீவிரப்படவேண்டிய தேவை இருக்கிறது. பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் பெரும்பாடு பட்டு, அரும்பாடுபட்டு உருவாக்கிய சமூகநீதி அரசிய லுக்குக் குழிதோண்டி – சவக்குழி தோண்டி புதைத்து விடுவார்கள். எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

‘‘தேர்தல் பத்திரமும் –
உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!’’
கடந்த 4.3.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற் றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

எந்த முதலாளியும் பிரதிபலன் பார்க்காமல், யாருக்கும் எந்த நன்கொடையையும்
தர வாய்ப்பே கிடையாது
ஒரு தொழிலாளிக்குச் சம்பளம் உயர்த்தத் தயங்குகிறவன்; போனஸ் கொடுக்கத் தயங்கு கிறவன்; அவனுடைய ஈட்டிய விடுப்பைக் கூட பயன்படுத்த முடியாமல் தடுக்கின்றவன்; அப்படி ஒரு தொழிலாளியின் உழைப்பைக் கடுமையாகச் சுரண்டக் கூடியவன்; இப்படியெல்லாம் கணக்குப் போட்டு லாபம் சம்பாதிக்கக் கூடிய ஒருவன், எப்படி சாதாரணமாக நூறு கோடி ரூபாயை அல்லது 200 கோடி ரூபாயை அல்லது 300 கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுக்க முடியும்.
அவனால் நூறு கோடி ரூபாயை நன்கொடை யாகத் தர முடிகிறது என்றால், இந்த நபர்களைப் பயன்படுத்தி, அதன்மூலம் 500 கோடி ரூபாயை ஈட்ட முடியும்; அல்லது ஆயிரம் கோடி ரூபாயைச் சுருட்ட முடியும் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டும்தான் அதனைச் செய்வான்.
அதற்கான அர்ப்பணிப்பு என்பது ஒரு ஒப் பந்தம் – எந்த முதலாளியும் பிரதிபலன் பார்க்காமல், யாருக்கும் எந்த நன்கொடையையும் தர வாய்ப்பே கிடையாது.

லாபம் என்பதே, உழைப்பின் சுரண்டல்தானே!
ஒன்றை நூறாக்குகின்றவன்தான் முதலாளி. ஒன்றை நூறாக்குகின்றான் என்றால், உழைப்பாளிகளின் உழைப் பைச் சுரண்டுகிறான் என்றுதான் பொருள். லாபம் என்பதே, உழைப்பின் சுரண்டல்தானே!
எளிய மக்களின் உழைப்பைச் சுரண்டுவதிலிருந்து தானே ஒருவனால் லாபத்தை ஈட்ட முடியும். அந்த லாபத்திலிருந்துதானே கட்சிகளுக்கு அவன் நன்கொடை தருகிறான். அந்த லாபத்தை அப்படியே அவன் கொடுப்பதற்காகவா, இவ்வளவு தூரம் உழைப்பாளி களைச் சுரண்டுகிறான், என்றால் கிடையாது.
அதானி இவ்வளவு தூரம் ஒரு கட்சிக்கு செலவு செய்கிறார் என்று சொன்னால், அதுபோல நான்கு மடங்கு, அய்ந்து மடங்கு அவருக்குத் திருப்பி வரும் – அதற்குரிய ஏற்பாடுகளை இவர்கள்மூலம் செய்து கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையின்மூலம்தான் செய்கிறார்.

ஊழலுக்கு மிக முக்கியமான காரணமே
இங்கே இருக்கின்ற தேர்தல் முறைதான்!
எனவே, அவர்களும், இப்படி கட்சி நடத்துகின்றவர் களும் சேர்ந்து நடத்துகின்ற ஒரு மாய்மால அரசியல்தான் தேர்தல் அரசியல். இதைத்தான் நாம் பேசித் தீர்த்திருக் கின்றோம்.
மக்களை ஏய்க்கிற அரசியல்தான், இந்தத் தேர்தல் முறையில் நடக்கும்.
ஊழலுக்கு மிக முக்கியமான காரணமே இங்கே இருக்கின்ற தேர்தல் முறைதான். ஏன் அரசாங்கமே தேர்தல் செலவை செய்யக்கூடாது? எதற்காக வேட்பாளர் செலவு செய்யவேண்டும்? ஏன் அரசாங்கமே தேர்தல் செலவு செய்யக்கூடாது.
யாரும் போய் மக்களை நேரிலே சந்திக்கக் கூடாது; வாக்குக் கேட்கக்கூடாது; உன்னுடைய கோரிக்கைகளை, தொலைக்காட்சியின் மூலமாக, சமூக ஊடகங்களின் மூலமாக வேண்டுகோளை மக்களுக்குச் சொல்லுங்கள்.

தெருத் தெருவாகச் செல்லாதீர்கள். மக்களைக் கரப்ஸ் செய்யாதீர்கள்; மக்களை கிரிமினலைசேசன் செய்யாதீர் கள். ஊழல்மயப்படுத்தாதீர்கள்.
ஒரு ஓட்டிற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால், எந்த அடிப்படையில் கொடுக்க முடியும்? யார் கொடுப்பது?
ஒவ்வொரு கட்சியும், உறுப்பினர் சந்தாக்கள் மூலமாகவா தேர்தலை சந்திக்கிறார்கள். அது எந்தக் கட்சியாக இருந்தாலும்.
உறுப்பினர் சந்தாக்கள் மூலமாகவா தேர்தல் செலவை சந்திக்க முடியும். முடியாது?
ஆகவே ஒரு கட்சி தேர்தல் செலவை சந்திக்கின்றது என்று சொன்னால், அதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று பார்க்கிறபொழுது, ஊழலுக்கு இதுதான் வித்திடு கிறது. தேர்தல் முறையும், தேர்தல் ஆணையமும்தான் ஊழலுக்கு வித்திடுகின்றன.

ஊழலை ஒழிக்கவேண்டும் என்றால், இந்தியத் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்!
ஊழலை ஒழிக்கவேண்டும் என்றால், இந்தியத் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். இன்றைக்கு நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தேர்தல் முறைதான், எல்லா வகையான ஊழல் முறைகேடுகளுக்கும் காரண மாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.
அதிலே ஒரு சான்றுதான் தேர்தல் பத்திரம். அந்தத் தேர்தல் பத்திரங்களைத் தருகின்ற நிறுவனங்கள், பிரதிபலன் இல்லாமல், ஆதாயம் இல்லாமல், எந்தக் கட்சிக்கும் நன்கொடை வழங்க வாய்ப்பு கிடையாது.
இப்போதாவது இப்படி நல்ல ஒரு தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கிறது என்பது ஆறுதல் அளிக்கிறது.
தேர்தல் பத்திரத் திட்டத்தில், வெளிப்படைத் தன்மை இல்லை, இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையமும்கூட, இதில் வெளிப்படைத் தன்மையில்லை என்று தன்னுடைய அபிடவிட்டில் சொல்லியிருக்கிறது.
வங்கிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்து கிறார்கள்; ரிசர்வ் வங்கியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள்; தேர்தல் ஆணையத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்; ஊடகங்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இது எங்கே போய் முடியும்?
இப்படிப்பட்ட ஒரு நிலையில்தான், ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், அரசமைப்புச் சட்டத்தை மதிக்காத வர்கள், அரசியல் நியாயங்களை மதிக்காதவர்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கே பெரும் தீங்கை விளைவிக்கும்.
ஆகவே, அவர்களைத் தூக்கி எறியவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

மக்கள் பிரதமர் அல்ல; ஈவிஎம் பிரைம் மினிஸ்டர்!
ஈவிஎம் மூலமாக ஆட்சியைத் திருடுகிறார்கள். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல- திருடப்பட்ட அரசு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. நாம்தான் இன்னும் அந்த விழிப்புணர்வைப் பெறாமல் இருக்கிறோம். வட இந்திய மாநிலங்களில் ஜனநாயகச் சக்திகள் ‘‘ஈவிஎம் பிரைம் மினிஸ்டர்” என்றுதான் அவ ருக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். மக்கள் பிரதமர் அல்ல; ஈவிஎம் பிரைம் மினிஸ்டர்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் – அனைத்துக் கட்சியினரும் பேசி முடிக்கின் றோம். அதற்குப் பின்னர் பிரதமர் அதற்குப் பதில் அளிக்க வருகிறார்.
குடியரசுத் தலைவர் உரையில் என்ன சொல்லப் பட்டது என்பதுகுறித்து அவர் பேசுவதைவிட, காங்கிரஸ் காரர்களைப் பார்த்து நக்கலடிப்பது; எதிர்க்கட்சிக்காரர் களைப் பார்த்து கிண்டல் அடிப்பது.

தேர்தல் அரசியல் மேடையில் பேசுகின்ற பேச்சை மக்களவையில் பேசுகிறார்!
நீங்கள் அதே இடத்தில் உட்கார்ந்திருப்பது என்று தீர்மானகரமாக முடிவெடுத்துவிட்டீர்கள் என்று கேலி செய்வது; இதைவிட உயரமான இடத்தில் அமரப் போகிறீர்கள்; கேலரியிலே அமரப் போகிறீர்கள் என்று கிண்டலடிப்பது. இரண்டு மணிநேரம் ஒரு பிரதமர் பேசுகிறார் – தேர்தல் அரசியல் மேடையில் பேசுகின்ற பேச்சை மக்களவையில் பேசுகிறார்.
தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அடிக்கடி வந்து போகி றார். தி.மு.க. அரசுக்கு எதிராகப் பேசுகிறார். எம்.ஜி.ஆரைப் புகழுகிறார்; ஜெயலலிதாவைப் புகழுகிறார்.

‘‘மோடியா? லேடியா? மோதிப் பார்ப்போம்’’ என்று ஜெயலலிதா அம்மையார் சொன்னது அ.தி.மு.க.வினருக்கு மறந்து போய்விட்டதா?
ஜெயலலிதா அம்மையார், தேர்தல் பிரச்சாரத்திலேயே சொன்னார், ‘‘மோடியா? லேடியா? மோதிப் பார்ப்போம்” என்றார். இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மறந்து போய்விட்டது. அ.தி.மு.க. தலைவர்களுக்கு மறந்து போய்விட்டது.
அ.தி.மு.க.வோ, ஜெயலலிதா அம்மையாரோடு எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும்கூட, அந்த அ.தி.மு.க. பலகீனப்பட்டுவிடக் கூடாது என்று நாம் கவலைப்படுவதற்குக் காரணம், அந்த இடத்தில் பி.ஜே.பி. வந்து அமர்ந்துவிடக் கூடாது என்கிற கவலைதான்.
அ.தி.மு.க.வும் – பி.ஜே.பி.யும் சேர்ந்து சந்தித்த தேர் தல்களிலேயே அவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். அது அவர்களுக்கான பாடம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருவரும் சேர்ந்து தானே தேர்தலை சந்தித்தார்கள்.

அவர்கள் என்ன விவரம் இல்லாதவர்களா? அரசியல் உத்தி தெரியாதவர்களா?
அப்படி இருக்கின்றபொழுது, இப்பொழுது எப்படி இரண்டு பேரும் பிரிந்து தேர்தலை சந்திக்கிறார்கள். அவர்கள் என்ன விவரம் இல்லாதவர்களா? அரசியல் உத்தி தெரியாதவர்களா? என்ன முடிவு வரும் என்பதை அவர்களால் யூகிக்க முடியாதா?
ஆனாலும், ஏன் அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள்?
இதுதான் அவர்களின் அஜெண்டா!
இதுதான் அவர்களின் யுக்தி அடங்கியிருக்கிறது.
நாம் பிரிந்து நின்றால்தான், உனக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று காட்டினால்தான், முஸ்லிம் ஓட்டுகளைக் கொஞ்சம் பிரிக்க முடியும்; கிறித்தவர்களின் ஓட்டுகளைக் கொஞ்சம் பிரிக்க முடியும். தி.மு.க. கூட் டணியில் ஏதேனும் சலசலப்பு வந்தால், அதைப் பயன் படுத்தி, அக்கூட்டணியை உடைக்க முடியும்; வாருங்கள் என்று வலைவீசலாம். இவையெல்லாம் அவர்களின் திட்டமிட்ட சதி.
கூட இருக்கின்ற பா.ம.க.வோடு பேசி, தொகுதிப் பங்கீட்டை முடிக்காமல், காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்; வி.சி.க.வுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். உங்களோடு பயணித்தவர்களை முதலில் ஒருங்கிணை யுங்கள். நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கூட் டணியாக உருவாகவேண்டியதுதானே! பிரிந்தவர்கள் கூடக்கூடாதா? ஓரணியாக மாறக்கூடாதா?

தி.மு.க. கூட்டணி என்பது 2019 ஆம் ஆண்டிற்கு முன்பே உருவான கூட்டணி!
பி.ஜே.பி.யில் எத்தனைக் கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன என்று தெரியவில்லை.
அ.தி.மு.க.வில் எத்தனைக் கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன என்று தெரியவில்லை.
தி.மு.க. கூட்டணி என்பது 2019 ஆம் ஆண்டிற்கு முன்பே உருவான கூட்டணியாகும். காவிரி நீர்ப் பிரச்சினைக்காக உருவான ஒரு கூட்டணி அது. தொடர்ந்து நீடிக்கிறது. கட்டுக்கோப்பாக இருக்கிறது. இந்தக் கூட்டணியில் எத்தனைக் கட்சிகள் இருக்கின்றன என்று சொல்ல முடியம். கூட்டணிக் கட்சிகளின் பெயர்களைப் படிக்க முடியும்.
பா.ஜ.க. ஒரு கூட்டணியாக இன்னும் உருவாக வில்லை. அ.தி.மு.க. ஒரு கூட்டணியாக இன்னும் உருவாகவில்லை.
ஆனால், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறது. இதையெல்லாம் தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் செய்கிறார்களா?
அ.தி.மு.க., பி.ஜேபி.யால்தான் பலகீனப்படப் போகிறது என்று உணர்ந்திருக்கிறார்களா? அல்லது உணரவில்லையா?

2024 தேர்தல்தான் அ.தி.மு.க.விற்குக்
கடைசித் தேர்தலாக இருக்குமா?
2026 ஆம் ஆண்டு நடைபெற போகின்ற சட்டமன்றத் தேர்தலை அவர்கள் சந்திக்கப் போகிறார்களா, இல் லையா? 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தல்தான் கடைசித் தேர்தலாக இருக்குமா?
இதையெல்லாம் நான் ஏதோ மேடைக்காகப் பேச வேண்டும் என்று பேசவில்லை தோழர்களே, பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும், எல்லா மாநிலங்களிலும் இப்படிப்பட்ட யுக்தியைத்தான் கையாளுகின்றன.
தனித்தனியாக நிற்க வைத்து, எல்லோரையும் ஊக்கப்படுத்தி, வாக்குகளை சிதறடிக்கிறது. நீ தனியாகப் போட்டியிடுகிறாயா? போட்டியிடு – உனக்கு நாங்கள் மறைமுகமாக ஆதரவு அளிக்கிறோம். பிரிந்து நிற்கிறாயா, பிரிந்து நில் என்று சொல்லி, பி.ஜே.பி. எதிர்ப்பு வாக்குகளை சிதறடிப்பது.
ஓரணியாக நின்றால், பி.ஜே.பி.,க்கு எதிரானவர்கள் அந்த அணிக்கு வாக்களிப்பார்கள்.
பி.ஜே.பி. எதிர்ப்பு என்பது இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகம். வேறு எங்கும் இந்த அளவிற்குக் கிடையாது.

பெரியார் விதைத்த சமூகநீதி அரசியல்தான்!
பி.ஜே.பி., அலர்ஜி என்பது வேறு எந்த மாநிலத் திலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் இருக் கிறது.
பெரியார் விதைத்த சமூகநீதி அரசியல்தான் அதற்குக் காரணம். தொடர்ந்து ஆர்.எஸ்.எசை அம்பலப்படுத்திய பிரச்சாரத்தின் விளைச்சல்தான் அதற்குக் காரணம். இதை யாரும் மறுக்க முடியாது.
இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் அப்படி ஊன்றி நிற்கிறது. உறுதியாக நிற்கிறது. அவர்களை அம்பலப்படுத்திக் கொண்டே நிற்கிறது.
பி.ஜே.பி.,க்கு ஓர் எதிரான உளவியல் தமிழ்நாட்டில் இருக்கிறது. பி.ஜே.பி. எதிராக இருக்கக்கூடிய ஓட்டுகள் எல்லாம் தி.மு.க. கூட்டணிக்குப் போய்விடக் கூடாது. தி.மு.க. கூட்டணிக்குப் போகாமல் தடுக்கவேண்டும் என்றால், தி.மு.க. பேசுகின்ற அரசியலைத்தான், சில கட்சிகள் பேசவேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் ஓட்டுகள் கிடைக்கும். அல்லது தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை விமர்சித்துப் பேசவேண்டும். அப்பொழுதுதான் அங்கே விழுகின்ற வாக்குகளைப் பிரிக்க முடியும்.
முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று கணிசமாக இன்றைக்குத் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கின்றார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நூறு விழுக்காடு என்கிற அளவிற்கு.
இதை எப்படி சிதறடிக்க முடியும்?

வாக்கு வங்கியைத் துண்டு துண்டாகப் பிரிப்பதுதான் பா.ஜ.க.வின் யுக்தி!
நாங்கள் பி.ஜே.பி.யோடு இல்லை. ஒரு 10 சதவிகித வாக்குகள் பிரிந்து வெளியே வரட்டுமே? ஒரு 5 சதவிகித வாக்குகள் பிரிந்து வெளியே வரட்டுமே? இதுதான் வாக்கு வங்கியைத் துண்டு துண்டாகப் பிரிப்பது. கூட்ட ணிக் கட்சிகளை மெல்ல மெல்ல பலகீனப்படுத்துவது.
அந்த இடத்தில் போய் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்வது. அவர்களுக்கு 2024 தேர்தல் இலக்கு அல்ல; 2026 ஆம் ஆண்டு நடைபெறப் போகின்ற சட்டமன்றத் தேர்தல்தான் அவர்களுடைய இலக்கு.
2024 இல் நடைபெறும் தேர்தலில் அவர்களுடைய இலக்கு என்னவென்றால், வாக்கு வங்கியை சிதறடிப்பது தான்.
இதையெல்லாம் உணர்ந்துதான் இன்றைக்கு நாம் ஓரணியில் உறுதியாக நிற்கிறோம்.

எப்படிப்பட்ட தில்லுமுல்லு அரசியலையும் பா.ஜ.க.வால் செய்ய முடியும்!
அருமைத் தோழர்களே, இந்தத் தேர்தல் பத்திரத்தின் மூலமாக அவர்கள் திரட்டிய நிதிகள் மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. 6,200 கோடி ரூபாய். ஆனால், பெருமுதலாளிகளை, தரகு முதலாளிகளை வைத்துக் கொண்டு, பொதுத் துறைகளையெல்லாம் இன்றைக்குத் தனியார் மயமாக்குவதன்மூலமாகவும், அவர்களைப் பயன்படுத்தி, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது போன்ற ஒப்பந்தங்களின்மூலமாகவும், அவர்கள் செய் கிற ஊழல், விவரிக்க முடியாத சக்தி கொண்டதாக இருக்கிறது.
அதை வைத்துக்கொண்டு அவர்கள் எதையும் செய்வார்கள். எப்படிப்பட்ட தில்லுமுல்லு அரசியலையும் அவர்களால் செய்ய முடியும்.
எனவே, இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவிலே மிகக் கவனமாக எதிர்கொள்ள வேண்டிய ஒரு தேர்தல்.
அதற்கு மிக முக்கியமாக நாம் செய்யவேண்டிய ஒன்று – இந்த ஈவிஎம் என்பதைக் கடுமையாக எதிர்க்க வேண்டி இருக்கிறது.

தமிழ்நாட்டில் வி.சி.க. நடத்திய
இரண்டு கட்டப் போராட்டம்!
தமிழ்நாட்டில், இரண்டு கட்டப் போராட்டத்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறது.

ஈவிஎம்மிற்கு எதிராக நம்முடைய போராட்டம் தீவிரப்படுத்தப்படவேண்டும்!
என்னுடைய வேண்டுகோள் – ராகுல் காந்தி உள்பட, இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் – இந்த ஒரு வார காலத்திலாவது ஈவிஎம்மிற்கு எதிராக நம்முடைய போராட்டம் தீவிரப்படவேண்டிய தேவை இருக்கிறது.
தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள், ஈவிஎம்மை எதிர்த்து ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் போடவேண்டாமா? அதனைப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு தடை ஆணையைப் பெறவேண்டாமா? என்கிற கேள்வியை என்னிடத்தில் எழுப்பினார்.
மிகக் கவனமாக நாம் இதில் காய் நகர்த்தவேண்டிய தேவை இருக்கிறது. பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நான் தொடக்கத்தில் சொன்னதைப்போல, அவர்களிடத்தில் எந்த நெறிமுறையும் கிடையாது.
நாம் இந்த முறையைப் பின்பற்றவேண்டும்; ஜனநாய கத்தை நாம் மதிக்கவேண்டும்; அரசமைப்புச் சட்டத்தை மதிக்கவேண்டும்; நல்லவர்கள் என்ன நினைப்பார்கள்? ஜனநாயக சக்திகள் என்ன சொல்லுவார்கள்? அவர்கள் எல்லாம் நம்மை விமர்சிப்பார்களே என்றெல்லாம் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கெனவே வடிவமைத்து வைத்திருக்கின்ற செயல் திட்டங்கள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்துவார்கள்.

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தத் தேசத்தை எவராலும் பாதுகாக்க முடியாது!
அதில் அல்டிமேட் டார்கெட் என்பது, இந்திய அர சமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிவதுதான். அதனை அவர்கள் கட்டாயம் செய்வார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், இந்தத் தேசத்தை எவராலும் பாதுகாக்க முடியாது.
ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் இருந்த சமூக ஒழுங்கை நோக்கி நாம் நகரவேண்டி இருக்கும்.

சமூகநீதி அரசியலை சவக்குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்!
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகி யோர் பெரும்பாடுபட்டு, அரும்பாடுபட்டு உருவாக்கிய சமூகநீதி அரசியலுக்குக் குழிதோண்டி – சவக்குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.
எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தமிழர் தலைவர் நமக்கு எப்பொழுதும்போல் வழிகாட்டவேண்டும்!
இந்த ஸநாதன சக்திகளை எதிர்த்து நாம் நடத்துகின்ற இந்தப் போராட்டம் மென்மேலும் தீவிரப்படுத்த வேண் டும். தமிழர் தலைவர் நமக்கு எப்பொழுதும்போல் வழி காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment