பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்! வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணிதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 29, 2024

பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்! வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணிதான்!

featured image

பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்!
வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில்
வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணிதான்!
பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடந்த
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, பிப்.29 பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்; எவ்வளவு காலத் திற்கு ஏமாறுவார்கள்? சிலரை சில காலத்திற்கு ஏமாற்ற லாம்; பலரை பல காலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோ ரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பது பொது உண்மை. ஆகவே, வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்றால், இந்தியா கூட்டணிதான். ஒன்றியத்தில் மீண்டும் மோடி ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி கிடையாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!


கடந்த 24-2-2024 அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:

கண்டன ஆர்ப்பாட்டம்
எதை மய்யப்படுத்தியது?

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெறு கின்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எதைப் பற்றியது, எதை மய்யப்படுத்தியது? என்பதை எனக்கு முன் இங்கே தெளிவாக தொடக்கத்திலிருந்து உரை யாற்றிய கழகப் பொறுப்பாளர்கள் முதற்கொண்டு கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் வரை அத்துணைப் பொறுப்பாளர்களும் சிறப்பாக எடுத்து வைத்தார்கள். அதனுடைய மய்யக் கருத்து இன்றைய தலைப்பு ‘‘பா.ஜ.க. அரசு ஒரு மக்கள் விரோத அரசு” – இந்த மக்கள் விரோத அரசை தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ இரண்டு முறை நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஏமாந்ததினால் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ – அல்லது வித்தைகளால் வந்தார்களோ என்பது தெரியாது.
நம்முடைய மக்கள் ஏமாந்தாலோ அல்லது ஏமாற்றப்பட்டாலோ என்னாகும்?

ஆனாலும், மிக முக்கியமாக இப்பொழுது வரக்கூடிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மீண்டும் அப்படி யொரு நிலை ஏற்பட்டால், அதாவது மூன்றாவது முறை ஒன்றியத்தில் மோடி தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சி – ஆர்.எஸ்.எஸ்.சினுடைய ஆட்சி – பா.ஜ.க. என்ற அதனுடைய அரசியல் கட்சியின்மூலமாக நடத்தப்படுகின்ற ஓர் எதேச்சதிகார ஆட்சி இருக்கிறதே – அது மீண்டும் வரக்கூடிய அளவில் நம்முடைய மக்கள் ஏமாந்தாலோ அல்லது ஏமாற்றப்பட்டாலோ என்னாகும்? என்பதைத்தான் இங்கே நம்முடைய தோழர்கள் ஒரு போராட்டத்தின் மூலமாக, ஓர் அறப்போராட்டத்தின் மூலமாக, கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.
அறப்போராட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்ற அருமை சகோதர, சகோதரிகளே, தோழர்களே, நண்பர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட பெரியோர்களே, ஊடகவியலாளர்களான நண்பர்களே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிர்ப் பிரச்சினை என்று சொல்லக்கூடிய வாழ்வா? சாவா? என்ற ஒரு பிரச்சினை!

தோழர்கள் இங்கே ஏராளமான தகவல்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்; வருகின்ற தேர்தல் என்பது இருக்கின்றதே அது சாதாரண தேர்தல் அல்ல. அது ஒரு ஜீவ மரண போராட்டம் என்று சொல்லலாம்; அதாவது உயிர்ப் பிரச்சினை என்று சொல்லக்கூடிய வாழ்வா? சாவா? என்ற ஒரு பிரச்சினை என்று முக்கிய மாக சொல்லலாம்.
வாழ்வா? சாவா? என்று சொல்லுகின்ற நேரத்தில், தனி நபர்களுடைய வாழ்வா? சாவா? என்று அதற்குப் பொருள் அல்ல என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நமக்கெல்லாம் சுதந்திரமாகக் கருத்துகளைச் சொல்ல, இப்படியெல்லாம் நம்முடைய கருத்துகளை வெளியிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால், அது ஜனநாயகம் என்ற மக்கள் நாயகத்தின்மூலமாகத்தான் இருக்கிறது.

நமக்கு நாமே வழங்கிக் கொண்ட உரிமை!

இந்த வாய்ப்பு யாரோ நமக்குக் கொடுத்த சலுகை யல்ல; அல்லது எவரோ போட்ட பிச்சையல்ல. மாறாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்களுடைய தலைமையில், பல சிக்கல்கள் இருந்தாலும், அதையும் தாண்டி, அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தினுடைய முகப்புரை தொடங்கப்படும்பொழுதே, ‘‘கீமீ tலீமீ றிமீஷீஜீறீமீ” என்று ஆரம்பிக்கும். ‘‘மக்களாகிய நாம்” நமக்கு நாமே வழங்கிக் கொண்ட உரிமை அது.
அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். நாம் இன்றைய ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கவேண் டும் என்று சொல்லுகின்றோம் என்றால், இந்த ஜன நாயகம் பாதுகாக்கப்படவில்லையானால், அது பண நாயகத்தாலோ, ஜாதி நாயகத்தாலோ, பார்ப்பன நாயகத் தாலோ அல்லது பதவி வெறியர்களுடைய நாயகத்தி னாலோ அல்லது மதவெறியர்களுடைய ஆட்சியி னாலோ அது பறிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், நாம் மனிதர்களாக இருக்க முடியாது.
இதில் கட்சி, ஜாதி, மதம் எல்லாம் பின்னால்தான். முதலில் நாம் மனிதர்களாக இருக்க முடியாது.

மனிதர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது – மாடுகளுக்குப் பாதுகாப்பு!

கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி எப்படி என்று கேட்டால், ‘‘மனிதர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது – மாடுகளுக்குப் பாதுகாப்பு.”
பசு மாட்டுக்குக் கொடுக்கின்ற பாதுகாப்பை, கால மெல்லாம் உழைக்கின்றானே என்னுடைய சகோதரன் வயல்வெளியில் இறங்கி, அந்த உழைக்கின்றவனுக்குப் பாதுகாப்பு கிடையாது.
நமக்கு சோறு கொடுப்பதற்காக சேற்றில் இறங்கியிருக் கின்றானே விவசாயி, அவனுக்குப் பாதுகாப்பு இந்த ஒன்றிய ஆட்சியில் கிடையாது.
நேற்றுகூட ஆறு பேர் இறந்திருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திடுவது நமது கடமையாகும்.
டில்லி தலைநகரில் விவசாயிகள் உள்ளே வரக்கூடாது என்று தடைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது காவல்துறை.
எந்த நாட்டிலாவது, சொந்த நாட்டிற்குள்ளே ஓரிடத் திற்குப் போகக்கூடாது என்ற நிலை உண்டா? காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையில் எல்லோரும், எப்போதும் எங்கும் நடமாடலாம் என்பது நமது உரிமை.

நடமாடுவதற்குத் தடை போட்டதை எதிர்த்ததுதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வைக்கம் போராட்டம்.
ஆனால், ஒன்றியத்தில் நடைபெறக்கூடிய மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி, டில்லிக்கு வராதீர்கள் விவசாயிகளே என்று – அவர்களைத் தடுத்து நிறுத்து வதற்கு சாலையில் இரும்புக் கம்பிகளைப் போட்டு தடை ஏற்படுத்துங்கள் என்று காவல்துறையினருக்கு உத்தரவுப் போட்டிருக்கிறது.
ஜனநாயக உரிமைகளை எப்படி பறித்திருக்கிறார்கள் என்றால், அரியானா மாநிலம், டில்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட 15 நாள்களாக இணைய தள வசதியே கிடையாது. யாரும் செல்பேசி யைப் பயன்படுத்த முடியவில்லை. இன்றைய நிலையில், எல்லோரும் செல்பேசியை வைத்திருக்கிறீர்கள். ஆனால், அங்கே அதைப் பயன்படுத்த முடியாமல் தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட பழங்குடியின சகோதரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள்!

அதேபோன்றுதான், மணிப்பூர். இதுவரையில் இல் லாத அளவிற்கு அங்கே மிகப்பெரிய அளவில் கல வரங்கள் நடைபெற்று இருக்கின்றன. அங்கே ஒடுக் கப்பட்ட பழங்குடியின சகோதரிகள் நிர்வாணப்படுத்தப் பட்டார்கள்.
ஆனால், மோடி கொடுக்கும் விளம்பரத்தில் கொடுக் கப்படும் உத்தரவாதம் இருக்கிறதே, வாதத்திலே இது புதுவாதம் – தாய்மார்கள் எல்லாம் சீரியல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதன் நடுவில், மோடிதான் பெரிய ஆக்டர் போன்று, உத்தரவாதம், உத்தரவாதம் என்று சொல்லி வருவார். அப்படி அவர் வரும்பொழுது, ‘‘பெண்களுக்காக அதைச் செய்திருக்கிறோம், இதைச் செய்திருக்கிறோம்” என்று சொல்வார்.
‘‘சப்கா சாத், சப்கா விகாஸ்” என்று சொல்வார் பிரதமர் மோடி. அதைக் கேட்டவுடன் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதற்கு என்ன அர்த்தம் என்றால், ‘‘வளர்ச்சி, வளர்ச்சி” என்பதாம்.
குடுகுடுப்பைக்காரன் விடியற்காலையில் வந்து, ‘‘நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது” என்று சொல்லிக் கொண்டு வருவதுபோன்று, ‘‘அட்சே தீப்” என்று மோடி சொல்லுகிறார். இப்படி எல்லாமே ஹிந்தி மயம் – அதுமட்டுமல்ல, உண்மைக்கு மாறானது அது.

மனிதர்களுக்கு இல்லாத உரிமை
மாட்டுக்கு உண்டு!

அப்படிப்பட்ட ஆட்சி ஒன்றியத்தில் நடைபெறுகிறது. மனிதர்களுக்கு இல்லாத உரிமை மாட்டுக்கு உண்டு.
உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள மாநிலத்தில், பல பிரதமர்களை உருவாக்கிய மாநிலத்தில் நடைபெறக் கூடிய சாமியார் ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் ஓர் இஸ்லாமியர் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று சொல்லி பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். அவர் சாப்பிட்டது மாட்டுக்கறி அல்ல.
இங்கே தென்னாட்டைப் பார்த்தீர்கள் என்றால், ‘‘பீப்” கிடைக்கும் என்று எழுதி வைத்திருப்பார்கள். மாட்டி றைச்சி என்று கூட எழுதி வைத்திருக்கமாட்டார்கள்; இங்கிலீசில் ‘‘பீப்” என்று எழுதி வைத்தால் கவுரவமாம். அந்த உரிமை இந்தியாவிலேயே தாராளமாக எங்கே இருக்கிறது என்றால், தென்னாட்டில்தான்.

நடத்துநர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்!

தருமபுரி மாவட்டத்தில் ஒரு பாட்டி, மாட்டிறைச்சியை விற்பதற்காக அதனை எடுத்துக்கொண்டு பேருந்தில் சென்றிருக்கிறார்.
பேருந்து நடத்துநர், ‘‘மாட்டிறைச்சியா? பேருந்தை விட்டு கீழே இறங்கு” என்று சொல்லியிருக்கிறார்.
அவர் எதற்காக அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஒருவேளை காவியா? அல்லது வேறா? என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் நடைபெறுவது ‘திராவிட மாடல்’ ஆட்சியல்லவா – அடுத்த நிமிடமே, அந்த நடத்துநர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.
இது நடந்தது தமிழ்நாட்டில்! காரணம் என்ன? பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் என்பதுதான்.

இந்த நாட்டில் உண்ணுவதற்குச் சுதந்திரம் கிடையாது; உடுப்பதற்குச் சுதந்திரம் இல்லை!

நான் என்ன சாப்பிடவேண்டும் என்று நீ நிர்ணயம் செய்வதா? இங்கே அமர்ந்திருக்கும் தோழர்களிடம் நான் கேட்கிறேன், ‘‘உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங் களிடம் வந்து, இன்றைக்கு இந்தக் குழம்புதான் வைக்க வேண்டும்” என்று சொன்னால், விட்டுவிடுவீர்களா?
‘‘எங்கள் வீட்டில் என்ன குழம்பு வைக்கவேண்டும் என்று முடிவு செய்யவேண்டியது நான்தான்; நீ என்ன முடிவு செய்வது?” என்று கேட்போம் அல்லவா!
நம்முடைய நோய் தீர்ப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும்பொழுது, அங்கே மருத்து வர் மருத்துவமனையில் கொடுக்கப்படும் பத்திய சாப் பாட்டைத்தான் சாப்பிடவேண்டும் என்று அவர் சொல் வார்.
இரண்டு நாள் சென்ற பிறகு, ‘‘டாக்டர், இரண்டு நாள்களாக மருத்துவமனை கொடுக்கின்ற சாப்பாட்டை சாப்பிடுகிறேன்; இன்றைக்கு வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரச் சொல்லலாமா?” என்று கேட்பார். அந்த அளவிற்குச் சுதந்திரம்!
ஆனால், இந்த நாட்டில் உண்ணுவதற்குச் சுதந்திரம் கிடையாது; உடுப்பதற்குச் சுதந்திரம் இல்லை.
ஜனநாயகம் என்பது கொச்சைப்படுத்தப்படுகிறது. மக்கள் நாயகத்தில், மக்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பு இல்லை.
இந்த நாட்டில் எத்தனையோ கட்சிகள் வந்திருக் கின்றன; இருந்திருக்கின்றன; நாளைக்கும் வரலாம். திடீர் திடீரென்று கட்சிகள் வரும். இரண்டு சினிமாவில் நடித்தவுடன், உடனே வேறு ஒரு கட்சி வரும்.

பொய் சொல்வதற்கே சம்பளம் கொடுத்து ஆட்களை வைத்திருக்கிறார்கள்
இப்படி கட்சிக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், பி.ஜே.பி. கட்சி, ஆர்.எஸ்.எஸ். கட்சியினர், பொய் சொல் வதற்கே சம்பளம் கொடுத்து ஆட்களை வைத்திருக் கிறார்கள்.
அதற்கு ஆங்கிலத்தில்  ‘‘Troll” என்ற வார்த்தை இருக்கிறது. பொய்யைப் பரப்புவது.
சமூக வலைதளத்தில் இந்தச் செய்தி வந்திருக்கிறது, அந்தச் செய்தி வந்திருக்கிறது என்று சொல்வார்கள். உயிரோடு இருப்பவரை இறந்துபோய்விட்டார் என்ற செய்தியைப் பரப்புவது; இறந்து போனவரை, உயிரோடு இருக்கிறார் என்று செய்தி பரப்புவது.
இப்படியெல்லாம் பொய்யை மக்களிடம் பரப்பி, தேர் தலில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை.
ஓராண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை எங்கே?
15 லட்சம் ரூபாயை ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் போட்டீர்களா?

போராட்டத்தினால் வடநாடு
குமுறிக் கொண்டிருக்கிறது!

இன்றைக்கு தங்களது உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்களே விவசாயிகள் டில்லியில். அவர்களின் போராட்டத்தினால் வடநாடு குமுறிக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி யார்மீது உட்கார்ந்து கொண் டிருக்கிறது? மக்களுடைய கோபம் என்ற எரிமலை யின்மீது உட்கார்ந்தகொண்டு மோடி, மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு என்ன சூழ்நிலை என்று சொன்னால் நண்பர்களே, மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மக்கள் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு இல்லை. அதுதான் நமக்கு நாமே அளித்த சட்டம்.

வித்தையிலேயே மிகச் சிறப்பான வித்தை
மோடி வித்தைதான்!

வித்தை காட்டுவதில் மிகச் சிறந்தவர் பிரதமர் மோடி. வித்தையிலேயே மிகச் சிறப்பான வித்தை எது தெரி யுமா? மோடி வித்தைதான்.
ஜனநாயகத்திற்கே ஒரு புது தத்துவம்; எல்லாவற் றிற்கும் புது அர்த்தம், புது தத்துவம், புது வழி.
எல்லோருக்கும் ஒரு சந்தேகம் – அது எப்படி வருகின்ற தேர்தலில் 370 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று சரியாக சொல்கிறார்?

அது என்ன கணக்கு?

மக்கள் ஓட்டுப் போடவில்லை என்றால், எங்களுக்கு என்ன கவலை? ஓட்டுப் பெட்டியே ஓட்டுப் போடும் என்கிறார் போலும்!
ஒருவேளை ஓட்டுப் போடும் ஓட்டுப் பெட்டியைக் கண்டுபிடித்திருக்கிறார்களோ, இதுவரையில் இல்லாமல்.
சிறுவயதில், மயில் இறகை நோட்டுப் புத்தகத்தில் வைத்தால், குட்டிப் போடும் என்று சொல்லி வைப்போம். நான்கூட அதுபோன்று வைத்திருக்கிறேன். கட்டிப் போட்டால் குட்டிப் போடும் என்று சொல்வார்கள்.
ஒரு பக்கம் மிரட்டல், ஒரு பக்கம் ஆசை காட்டுவது என்ற முறையை வைத்திருக்கிறார்கள்.
தேடப்படுகின்ற குற்றவாளிகள் எல்லாம் பாதுகாப்பாக எங்கே இருக்கிறார்கள்?
தமிழ்நாட்டில் கட்சி வளருகிறதாம் – எப்படி? அடுத்த வன் சொத்தைத் திருடி. தேடப்படுகின்ற குற்றவாளிகள் எல்லாம் பாதுகாப்பாக எங்கே இருக்கிறார்கள் என்றால், பி.ஜே.பி.யில்தான்.
சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வை சொல்லுகிறேன் – கூடுவாஞ்சேரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்வில் பா.ஜ.க.வில் சேருவதற்காக சிலர் வருகிறார்கள். அந்தக் கூட்டத்திற்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள். காவல் துறை அதிகாரிகளைப் பார்த்தவுடன், அந்தக் கட்சியில் சேர வந்த பிரதிநிதி, பயந்து ஓடுகிறார்.
ஏனென்றால், அவர் தேடப்படும் குற்றவாளியாம்! இதுதான் அந்தக் கட்சியினுடைய லட்சணம்!
ஏற்கெனவே சொந்தக் கால் இல்லாமல், மிஸ்டு கால் கொடுக்கின்ற கட்சி.

அவர்களின் பார்மூலா என்ன தெரியுமா?

அவர்கள் ஒரு பார்மூலா வைத்திருக்கிறார்கள்; ‘‘எதிர்க்கட்சிகள் கஷ்டப்பட்டு பிரச்சாரம் செய்து, வெற்றி பெற்று வாருங்கள்; நாங்கள் நோகாமல் அவர்களைப் பணம் கொடுத்தோ அல்லது பயமுறுத்தியோ வாங்கிக் கொள்கிறோம்” என்பதுதான் அது.
பாண்டிச்சேரியில் எப்படி என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்தது?
திரிசூலத்தில், மூன்று முனைகள் உண்டு. அதுபோல, பா.ஜ.க. திரிசூலம் வைத்திருக்கிறது. ஒன்று, வருமான வரித் துறை, இரண்டாவது, சி.பி.அய். மூன்றாவது, அமலாக்கத் துறை.
அந்த அமலாக்கத் துறை ‘மிக நாணயமான துறை(?)’ என்பதற்கு அடையாளம்தான், மதுரை அதிகாரி ஒருவர் சிறைச்சாலையில் இருக்கிறார்.
‘‘ஊழலை ஒழிப்போம்‘’ என்பவர்கள் ஊழல் செய்த அதிகாரிக்காக வாதாடலாமா?
‘‘ஊழலை ஒழிப்போம்” என்று சொல்லிக் கொண்டு ஒன்றிய ஆட்சிக்கு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, அந்த அதிகாரிக்காக வாதாடலாமா?
உண்மையாகவே ஊழலை ஒழிப்பதுதான் பிரதமர் மோடியின் நோக்கம் என்றால், அவர் வைத்திருக்கும் துறையில் இருக்கும் அதிகாரி லஞ்சம் வாங்கியபொழுது, பிடிபட்டார். அவர்மீது நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறேன் என்று அல்லவா சொல்லி யிருக்கவேண்டும்.
ஆனால், அப்படியில்லாமல், லஞ்சம் வாங்கிய அதி காரிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்களே!
எனவே, எல்லாத் துறைகளிலும் ஜனநாயகம் பாழ்பட்டு இருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் முகப்புரையில் அழ காகச் சொல்லியிருக்கிறார் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
இந்தியா எல்லையான அருணாச்சலப் பிரதேசத்தில், சீன நாட்டுக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் கள். இதுபோன்று எத்தனையோ செய்தியை எடுத்துச் சொல்லலாம்.

விவசாயிகள் கேட்கும் ஒரே ஒரு கேள்வி!

பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் டில்லிக்குப் போராட வந்தால், அவர்களைத் தடுத்துவிட்டால் போதுமா?
‘‘மனதின் குரல்” அதற்கு ஹிந்தியில் என்ன பெயர்? ‘‘மங்கி பாத்” என்பதுதான்.
உங்களுக்கு மனதின் குரல் இருந்தால், விவசாயிகள் ஒரே ஒரு கேள்வி கேட்கிறார்கள், ‘‘பிரதமர் மோடி அவர் களே, நீங்கள் கொண்டு வந்த கொடுமையான மூன்று விவசாயச் சட்டங்களை நீக்கவேண்டும் என்பதை வலி யுறுத்தி ஓராண்டிற்கு மேல் அறப்போராட்டங்களை நடத்தி கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையி லும், தாக்கும் பனியிலும் நாங்கள் அவதிப்பட்டோமே, அந்த அவதிக்குப் பிறகு, ‘‘உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி, சில உறுதி மொழிகளைக் கொடுத்தீர்கள். நாங்களும் அதை நம்பி னோம். அந்த உறுதிமொழிகள் என்னாயிற்று? பதில் சொல்லுங்கள்” என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் விவசாயிகளுடைய நிலை என்ன? இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில்?
வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் போட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சி!
தனியாக வேளாண்மைத் துறைக்கு – விவசாயி களுக்குப் பட்ஜெட் போட்ட ஆட்சி ஸ்டாலின் ஆட்சி- தி.மு.க. ஆட்சி.

இந்தியாவில் விவசாயிகளுடைய நிலை என்ன?

விவசாயிகள் எல்லாம் கண்ணீர்ப் புகையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில், மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகள் என்ன கேட்கிறார்கள், ‘‘எங்களுக்குக் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள்” என்று தானே!
குறைந்தபட்ச ஆதார விலை கேட்பது தவறா?
விவசாயிகளின்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள் என்று கேட்பது தவறா?
ஒன்றிய ஆட்சி மக்களுக்கு விரோதமானது என்று ஏன் சொல்கிறோம்?
அப்படி கேட்டதற்குப் பரிசாக, கண்ணீர்ப் புகை, தடியடி – அதில் 6 விவசாயிகள் உயிரிழந்தார்கள் என்று சொன்னால், இது எவ்வளவு பெரிய கொடுமை?
‘‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.”
ஒன்றிய ஆட்சி மக்களுக்கு விரோதமானது என்று ஏன் சொல்கிறோம்? எங்களுக்கு அவர்கள்மீது தனிப் பட்ட முறையில் கோபதாபமா? அல்லது நாளைக்குத் திராவிடர் கழகத்துக்காரர்கள் அமைச்சர்களாகப் போகி றேமா?
‘‘திராவிடர் கழகம் தேர்தலில் நிற்குமா?’’
நேற்றுகூட ஒரு செய்தியாளர் என்னிடம் கேட்டார், ‘‘திராவிடர் கழகம் தேர்தலில் நிற்குமா?” என்று.
‘‘கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காது. தேர்தலில் நின்றால், அது திராவிடர் கழகமாக இருக்காது” என்றேன்.
தமிழ்நாடு மற்றும் புதுவையும் சேர்த்து 40 தொகுதிகளும், இந்தியா முழுவதும் உள்ள 534 தொகுதிகளும் எங்களுடையதுதான்.
முதலாவது இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் வந்தது தந்தை பெரியார் அவர்களால்தான். அப்பொழுது சொன்னார்கள், ‘‘ஒரே ஒரு எம்.பி.,கூட இல்லாதவர்தான், அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தத்தைக் கொண்டு வந்தார்” என்று.
69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம், 9 ஆவது அட்ட வணை பாதுகாப்பில் வைக்கவேண்டும் என்ற சட்டத் திற்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுக் காக வந்தபொழுது, எதிர்ப்பே இல்லாமல் அந்தச் சட்டம் நிறைவேறியது. பி.ஜே.பி.யினர் உள்பட வாக்களித்தார்கள் என்றால், அது திராவிடர் கழகத்தினுடைய முயற்சியி னால்தான். இதை நாங்கள் ஆதாரத்தோடு சொல்கிறோம்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலையில்தான், இன்றைக்கு இந்தக் கொடுமைகள் போகவேண்டும் என்று நினைக்கின்றோம்.
பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஆசை!
எங்களுக்கொன்றும் தனிப்பட்ட முறையில் மோடி என்கிற தனி மனிதர்மீது கோபம் இல்லை.
இங்கே கூட சொன்னார்கள், பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடை அணிகிறார் என்று. ஒரு காலத்தில் அவருக்கு அந்த ஆசையெல்லாம் இருந்திருக்கலாம்; அதை இப்பொழுது அவர் நிறைவேற்றிக் கொள்கிறார்.
ஆகவே, அவருடைய ஆசைகள் எது வேண்டு மானாலும் இருக்கட்டும்; 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய உடையல்ல; 20 லட்சம் ரூபாய் மதிப்பில்கூட உடையை அணிந்துகொள்ளட்டும்.
ஆனால், ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுகிறோம் என்று சொன்னதை மட்டும் ஞாபகப்படுத்தவேண்டாம் என்று சொல்வார்.

மே மாதத்தில் பதவியேற்கப் போவது
இந்தியா கூட்டணிதான்!

எனவே, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஒன்றி யத்தில் வருகின்ற மே மாதத்தில் பதவியேற்கப் போவது இந்தியா கூட்டணிதான் என்பதில் சந்தேகமேயில்லை.
பி.ஜே.பி. மீண்டும் பதவிக்கு வரப் போவதில்லை. கருத்துக் கணிப்புகள் எல்லாம் தவிடு பொடியாகிவிடும். ஓட்டுப் பெட்டியில் ஏதாவது செய்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள்; அவர்களுடைய அந்த ஆசை நிறைவேறாது.
ஏனென்றால், மக்களுடைய கோபம் மிகப்பெரிய அளவிற்கு இருக்கிறது. ஜனநாயகத்தில் தேர்தல் முறை களில் இருக்கின்ற மிகப்பெரிய லாபம் என்னவென்றால், கிளர்ச்சி. பிரெஞ்சு புரட்சியைப்பற்றியெல்லாம் சொன் னார்கள். அதுபோன்ற வன்முறை இல்லாமல் இருப்பதற் காகத்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னார்,
‘‘ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!” என்று.
அதை தந்தை பெரியார் இயக்கத்துக்காரர்கள் மாற்றிக் காட்டியிருக்கின்றோம்.
உதையப்பர் ஆகவேண்டாம்;

அதற்குப் பதில் ஓட்டப்பர் ஆகவேண்டும்!
எப்படியென்றால்,
‘‘ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகவேண்டாம்; அதற்குப் பதில் ஓட் டப்பர் ஆகவேண்டும்.” (நம்முடைய ஓட்டை சரியாகப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான்). அதைச் சொல் வதற்காகத்தான் இந்த இயக்கம்.
பத்திரிகைக்காரர் நண்பர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள்.
‘‘ஓ, வீரமணி அவர்கள் ஆதரிக்கின்ற கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது” என்று நினைக்கலாம்.
ஆசையல்ல நண்பர்களே! எதைப் பேசினாலும், தர்க்க ரீதியாக, அரசியல் ரீதியாக, காரண காரியத்தோடு பகுத்தறிவாளர்களாகப் பேசக்கூடியவர்கள் நாங்கள்.
காஷ்மீரில் தேர்தல் நடக்கவில்லை. இப்பொழுது அங்கே தேர்தல் நடைபெறவிருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு அங்கே எவ்வளவு ஆதரவு இருக்கிறது?
வடகிழக்கு மாநிலத்தில், குறிப்பாக மணிப்பூர் மாநிலத்திற்குள் காலை வைப்பதற்குத் தயாராக இல்லை பிரதமர் மோடி. தேர்தல் வரும்பொழுது மட்டும் அங்கே சென்றார் என்றால், என்னாகும் என்று தெரியும் உங்களுக்கு.
இந்த முறை வாய்ப்பு கிடையாது உங்களுக்கு!
கடந்த தேர்தலில் அங்கே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்; வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கினீர்கள் நீங்கள். அந்தப் பகுதியில் இந்த முறை வாய்ப்பு கிடை யாது உங்களுக்கு.
குஜராத்தில் டபுள் என்ஜின் – இப்பொழுது ரிப்பேரா கிக் கிடக்கிறது. இங்கேயெல்லாம் ஒரு என்ஜின் – திராவிட என்ஜின், தி.மு.க. என்கிற ஓர் என்ஜின் இழுக் கின்ற இழுப்பிற்கு ஈடுகொடுப்பதற்கு ஆட்கள் இல்லை. அவ்வளவு பெரிய அளவிற்கு, இன்றைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள் அதனை சிறப்பாகச் செய்து வருகிறார்.

டபுள் என்ஜின் வேலையெல்லாம்
இங்கே எடுபடாது!

ஆனால், குஜராத்தில் ஒரு என்ஜின், இன்னொரு என்ஜினோடு முட்டிக்கொண்டிருக்கிறது.
ஆகவே, டபுள் என்ஜின் வேலையெல்லாம் இங்கே எடுபடாது.
மகாராட்டிரா போன்ற பகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளை உடைத்து, குதிரை பேரம் நடத்தி அந்த வேட் பாளர்களை விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். இதெல் லாம் முடியவில்லை என்றால், வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளின் சின்னத்தை மாற்றுகின்ற சின்னத்தனமான முயற்சிகள்.
ஆனால், இன்றைக்கு இங்கே அந்த சூழ்நிலை இல்லை.
அதனால்தான், தென்மாநிலங்களில் அவர்களால் மூச்சே விடமுடியவில்லை. இங்கே நோ என்ட்ரி போட்டு நீண்ட நாள்களாயிற்று.
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் எத்தனை நாள்கள் வந்தாலும் அதனால் பயனில்லை!
இந்த மாதத்தில்கூட பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்; இரண்டு நாள்கள் அல்ல ஒரு வாரம் அல்ல, 10 நாள்கள் வந்தாலும் சரி – அதனால் ஒரு பயனும் ஏற்படாது.
கருநாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது என்ன நடந்தது – மோடி பிரச்சாரத்திற்காக வருகிறார் – பூக்களை வாரி வாரிக் கொட்டினார்கள். ஆனால், தேர்தலின்போது ஓட்டு விழுந்ததா? என்றால், இல்லை என்பதுதான் பதில்.
அதேபோன்று தெலங்கானா மாநிலத்தில் என்னா யிற்று? அங்கேயும் பா.ஜ.க.விற்குத் தோல்விதான்.
வாயால் வடை சுட்டாரே தவிர, உண்மையான வடையைத் தரவில்லை, பிரதமர் மோடி.
பீகாரில், நிதிஷ்குமார் என்ற ஒருவரை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அவர் அய்ந்தாண்டுகளில், ஏழு முறை முதலமைச்சராகி இருக்கிறார் என்பதுதான் வேடிக்கை.

204 வியாதிக்கும் ஒரே மருந்து!

‘‘கீரியும் – பாம்பும் சண்டை போடப் போகின்றன” என்று நம்மூரில் வித்தை காட்டுகின்றவர் சொல்லிக் கொண்டே இருப்பார். பாம்பு இருக்கும் கூடையின் மூடியைத் திறந்து திறந்து காட்டுவார்; கீரியை அதன் அருகில் கட்டியிருப்பார்.
கடைசியில், அந்த வித்தைக்காரர் என்ன சொல்லு வார் என்றால், ‘‘இந்த லேகியத்தை வாங்குங்கள்; 204 வியாதிக்கும் ஒரே மருந்து; 200 ரூபாய்தான், இதை வாங்கிக் கொள்ளுங்கள்- கடைசியாக கீரியும் – பாம்பும் சண்டைப் போடப் போகின்றன’’ என்று சொல்வார். கடைசி வரையில் கீரிக்கும் – பாம்புக்கும் சண்டையை விடமாட்டார். இதுபோன்ற நிலைதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றது.
தென்மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடை யாது. வடக்கே கிடையாது; கிழக்கே கிடையாது. நடுவில் டில்லி, அங்கேயும் அவர்களுக்கான வாய்ப்புப் போயிற்றே. அதனால்தான், டில்லி முதலமைச்சருக்கு ஏழாவது முறையாக சம்மன் அனுப்பி, அவரை கைது செய்யலாமா? என்று நினைக்கிறார்கள்.
அரியானாவில் அவர்களுடைய ஆட்சி அல்ல; மற்ற கட்சிகளுடன் ஒட்டுப் போட்ட ஆட்சிதானே!

‘‘மீண்டும் மோடியல்ல’’ –
மீண்டு வருவாரா, மோடி!

ஆகவே, பெரிய அளவில் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்களே, ‘‘மீண்டும் மோடி”, ‘‘மீண்டும் மோடி” என்று – அது மீண்டும் மோடியல்ல – ‘‘மீண்டு மோடி” வரமாட்டார் என்று நாங்கள் சொல்கிறோம். ஏனென்றால், மக்களுடைய கோபம் அந்த அளவிற்கு இருக்கிறது.

பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை
மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்!

பிரதமர் மோடிக்கு யார் எதிரி என்றால், தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சித் தலைவரோ, தனிப்பட்ட நபரோ கிடையாது. மக்கள்தான். காரணம், உங்களுடைய நாக்கு, உங்களைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. உங்களுடைய பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.
ஏனென்றால், எவ்வளவு காலத்திற்கு ஏமாறுவார்கள்? சிலரை சில காலத்திற்கு ஏமாற்றலாம்; பலரை பல காலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் எல்லா காலத் திலும் ஏமாற்ற முடியாது என்பது பொது உண்மை.
ஆகவேதான், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது எங்களுக்காக அல்ல. உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டாமா? சமூகநீதி வரவேண்டாமா? உங்கள் பிள்ளைகள் டாக்டர்களாக வேண்டாமா?
ஒன்றிய அரசின் ‘‘விஸ்வகர்மா யோஜனா’’ திட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
18 வயதாகும் பிள்ளைகள், அவரவர் ஜாதித் தொழிலை செய்யவேண்டும்; செருப்புத் தைக்கின்றவரின் பிள்ளை செருப்புத் தைக்கவேண்டும்; சிரைக்கின்றவரின் பிள்ளை சிரைக்கவேண்டும்; மலம் அள்ளுகிறவரின் பிள்ளை மலம் அள்ளவேண்டும் என்கிற ஒன்றிய அரசின் ‘‘விஸ்வகர்மா யோஜனா” திட்டத்தை, இந்த இடத்தில் கூட்டம் போட்டுத்தானே கண்டித்தோம்! தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் பலியானார்களே!
ஆகவேதான் நண்பர்களே, இந்த நாட்டில் கல்வி அறிவு, மருத்துவத் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு வழிகாட்டுகிறது.
இந்தியாவிற்கே தமிழ்நாட்டில் நடைபெறும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி வழிகாட்டுகிறது.
இந்தியா கூட்டணியிலிருந்து அவர் வெளியேறி விட்டாரே, இவர் வெளியேறிவிட்டாரே என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.

அங்கே பதவிக் கூட்டணி!
இங்கே கொள்கைக் கூட்டணி

வடநாட்டு கூட்டணியில் உள்ளவர்கள் அணி மாறு வதும்; இங்கே மாறாமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்றால், அங்கே பதவிக் கூட்டணி! இங்கே கொள்கைக் கூட்டணி என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும். இரண்டு சீட்டுக்காகவோ, நான்கு சீட்டுக்காகவோ அணி மாறுவார்கள். ஆனால், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் கொள்கை ரீதியாக உள்ள கட்சிகளாகும்.
அதேநேரத்தில், ஒரு சில கட்சிகளிடம், ‘‘என்னங்க, நீங்கள் எந்தக் கூட்டணியில் சேரப் போகிறீர்கள்?” என்றால்,
‘‘எங்களுக்கு யார் அதிக இடம் கொடுப்பார்களோ, அந்தக் கூட்டணியில்தான் சேருவோம்” என்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணிக்கு 40-க்கு 40 இடங்கள் வெற்றி என்பது உறுதி!
ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தி.மு.க. கூட்டணிக்கு 40-க்கு 40 இடங்கள் வெற்றி என்பது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது இப்பொழுது முக்கியமல்ல.
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் – காங்கிரஸ் இரண்டும் சேர்ந்த கூட்டணி அமையாது என்று நினைத் தார்கள். ஆனால், அக்கூட்டணி உறுதியாகிவிட்டது.
அதேபோன்று ஆம் ஆத்மி – காங்கிரஸ் இரண்டும் எலியும், பூனையுமாக இருப்பார்கள் என்று நினைத்தார்கள். அவர்கள் இரண்டு பேரும் கூட்டணி அமைத்துவிட்டார்கள்.

ஒன்றியத்தில் மீண்டும் மோடி ஆட்சி,
பா.ஜ.க. ஆட்சி கிடையாது

அதேபோன்று மற்ற மற்ற மாநிலங்களிலும். ஆகவே தான், வெற்றி பெறப் போவது யார் என்றால், இந்தியா கூட்டணிதான். ஒன்றியத்தில் மீண்டும் மோடி ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி கிடையாது.
ஏதாவது அதிசயம் நடந்தால்தான் – ஓட்டுப் பெட்டிக் குள் சென்று ஏதாவது செய்தால்தான் அந்த வாய்ப்பே தவிர – ஆனால், அப்படி நடந்தால், மக்கள் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
இவ்வளவு அற்புதமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த திராவிடர் கழக இளைஞர்களைப் பாராட்டுகிறோம்.
தென்சென்னை மாவட்ட கழகத் தோழர்கள், வட சென்னை மாவட்ட கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், ஒத்துழைப்புக் கொடுத்த காவல்துறை உள்பட, ஊடகத் துறை நண்பர்கள் உள்பட அத்துணை பேருக்கும் நன்றியைத் தெரிவித்து, விடைபெறுகிறேன்.

ஜனநாயகம் காப்பாற்றப்படும்!!
ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிதான்!
அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும்!!

ஒரே தேர்தல், ஒரே தேர்தல் என்று சொல்கிறார்களே, அதனுடைய அடிப்படை என்னவென்றால், ‘‘எங்களுக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்றால், இதுதான் கடைசித் தேர்தல், ஒரே தேர்தல் – இனிமேல் தேர்தல் என்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியாது” என்பதுதான்.
இதனை நன்றாக நீங்கள் நினைவில் நிறுத்திக் கொண்டு, ஒவ்வொருவரும் தெரு முழக்கமாக செய்யுங்கள்.
எங்களுடைய தெருமுழக்கம் –
இந்தியாவின் பெருமுழக்கம்!
இன்றைக்குத் தொடங்குகின்ற எங்களுடைய தெரு முழக்கம் – இந்தியாவின் பெருமுழக்கம்.
வெற்றி என்பதுதான் பெருமுழக்கம்!
வெற்றிதான் பெருமுழக்கம்!

ஒன்றியத்தில் புதிய ஆட்சி – சரியான ஜனநாயகக் காப்பு ஆட்சி – சமூகநீதி காப்பு ஆட்சி வரப் போகிறது. அதற்கு ஆயத்தமாகுங்கள்!
அவர்கள் ஏமாற்றுவார்கள்,
நீங்கள் ஏமாறாதீர்கள்!

ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிச் சொல்லுங்கள் – நமக்காக அல்ல – உங்கள் பேரப் பிள்ளைகளுக்காக – உங்களுடைய எதிர்காலத்திற்காக என்று தாய்மார் களுக்குச் சொல்லுங்கள்; பெற்றோருக்குச் சொல்லுங்கள் – கல்வியாளர்களுக்குச் சொல்லுங்கள்!
ஏமாறாதீர்கள் என்று சொல்லுங்கள்!

அவர்கள் ஏமாற்றுவார்கள், நீங்கள் ஏமாறாதீர்கள் என்று எடுத்துச் சொல்லுங்கள்!
வாழ்க பெரியார்! நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

No comments:

Post a Comment