மணலுக்கு மாற்று கிராபின்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

மணலுக்கு மாற்று கிராபின்!

featured image

இன்றைய நாட்களில், கான்கிரீட் கட்டடங்கள் கட்டுவதற்கு இன்றியமையாத தேவையாக இருப்பது மணல். கான்கிரீட் என்பது தண்ணீர், சிமெண்ட், மணல் ஆகியவை சேர்த்து உருவாக்கப்படுவது. கட்டடங்கள் பெருகப் பெருக மணலின் தேவை அதிகரிக்கிறது.
அதிக அளவில் நீர்நிலைகளின் அருகேயுள்ள மணலை அள்ளுவதால் இயற்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. மணலின் அளவைக் குறைப் பதற்காக பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்று கிராபினைச் சேர்த்தல்.
கான்கிரீட்டின் வலிமை அதிகரிப்பதற்குக் குறிப் பிட்ட அளவு கிராபின் சேர்ப்பது வழக்கம். கிராபின் என்பது கரிமத்தால் ஆனது. கிராபின் தகடுகள் வலிமையானவை.
இதற்கு முன்பு போல் அல்லாமல் தற்போது அமெரிக்காவின் ரைஸ் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மணலை முற்றிலும் தவிர்த்து விட்டு அதற்குப் பதிலாக கிராபினைப் பயன்படுத்தி கான்கிரீட் உருவாக்கி உள்ளனர்.
இந்தப் புதிய கான்கிரீட்டின் எடை மணலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கான்கிரீட் எடையை விட, 25 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால், கடினத்தன்மை 32 சதவீதம் அதிகரித்தது, வலிமை, 21 சதவீதம் அதிகரித்தது.
இந்த ஆய்வில், கரியில் இருந்து கிடைக்கும் ‘கோக்’கை மின்சாரம் பாய்ச்சி அதிக வெப்பத்தில் எரிப்பதன் வாயிலாகக் கிடைத்த கிராபின் துகள்கள் பயன்படுத்தப் பட்டன.
சாதாரணமாக இயற்கையில் கிராபின் கிடைப்பது அரிது. செயற்கையாக இதை உருவாக்குவதும் அதிக செலவு பிடிக்கும். இது மட்டும் தான் தற்போது புதிய கான்கிரீட்டை உருவாக்குவதில் இருக்கும் ஒரே சிக்கலாக உள்ளது. இதற்கும் விரைவில் தீர்வு காணப்படும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment