மோடி அரசின் கருத்துச் சுதந்திரம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

மோடி அரசின் கருத்துச் சுதந்திரம்?

இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி பேராசிரியர் “மக்களாட்சியின் மாண்புகள்” குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்ள இந்தியா வந்தபோது விமான நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டு மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்பட்டார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிதாஷா கவுல் லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் துறை பேராசிரியராக உள்ளார். கருநாடக மாநிலம் பெங்களூருவில் அம்மாநில அரசு நடத்திய, அரசியல் அமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு -2024′ நிகழ்வில் “மக்களாட் சியின் மாண்புகள்” குறித்து பேச சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
இவர் 25.2.2024 அன்று நிகழ்வில் உரையாற்ற லண்டனில் இருந்து பெங்களூருவுக்கு வருகை புரிந்தார். விமான நிலையத்தில் இருந்த குடியுரிமை அதிகாரிகள், அவரை விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கவில்லை.

இங்கிலாந்து குடியுரிமை பெற்ற அவர் மீது எந்த ஒரு சட்டவிரோத புகாரோ, அல்லது வேறு எந்த குற்றவியல் புகார்களோ கிடையாது, அப்படி இருக்க அவரை விமானத்தில் இருந்து இறங்க அனுமதி மறுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை அதிகாரிகளிடம் “நான் கருநாடக மாநில அரசின் சிறப்பு விருந்தினர்” என்ற ஆவணத்தையும் வழங்கி உள்ளார். இருந்த போதும் அவரை இந்திய மண்ணில் கால்பதிக்கவிடவில்லை.
இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாக இருக்கும் நிதாஷா கவுலை விமான நிலையத்திலிருந்து வெளியேற தடைவிதித்த விமானப் போக்குவரத்து நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகின் முக்கிய அரசியல் துறை நிபுணர்களில் ஒருவ ரான நிதாஷ கவுலை அனைத்து நாடுகளும் கருத்தரங்கு களுக்காக அழைத்து அவரது வருகையை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரை – நமது நாட்டிற்குப் பெருமை சேர்ப்பவரை – இங்கி லாந்திற்கு திருப்பி அனுப்பியது கண்டனத்திற்குரியதாகும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த பஞ்சாபியரான பேராசிரியர் நிதாஷா கவுல் இந்திய மக்களாட்சியின் மாண்பிற்கு மதவாதம் விளைவிக்கும் ஆபத்துகள் குறித்த தலைப்பில் சில கட்டுரைகள் எழுதி உள்ளார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சமூகவலைதளம் ஒன்றின் மூலம் இங்கிலாந்தில் இருந்து பேசிய பேராசிரியர் நிதாஷா கவுல் “ஒரு மாநில அரசின் அழைப்பைக்கூட மதிக்காமல் விமான நிலையத்தில் வைத்தே என்னை மீண்டும் லண்டனுக்கு திருப்பி அனுப்பியது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். நான் கருநாடக அரசின் அழைப்பிதழ் தொடர்பான அனைத்தையும் அவர்களிடம் காட்டினேன், இருப்பினும் அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. என்னுடைய உரையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி விட்டேன் – அது வாசிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு – பாசிச அரசு என்று நாம் சொல்வது எல்லாம் மிக மிகச் சரியானது – துல்லியமானது என்பதை மோடி அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தனக்குத்தானே நிரூபணம் செய்து வருகிறது.
உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளுள் 161ஆம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்றால், இதைவிட இந்தியாவிற்குத் தலைக்குனிவு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?
சுய விளம்பரம் என்று எடுத்துக் கொண்டால் பிரதமர் மோடியை வெல்ல வேறு யாராலும் முடியாது – முடியவே முடியாது. ஒவ்வொரு ரயில்வே நிலையத்திலும் பிரதமர் மோடியின் படம் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு ரயில் நிலையத்தில் வைக்கப்படும் பிரதமர் மோடியின் படத்துக்கான செலவு ரூ.25 லட்சம் என்றால் இந்தியா முழுமைக்கும் எவ்வளவு கோடி ரூபாய் செலவு!

20 கோடி மக்கள் இரவு உணவின்றிப் படுக்கப் போகும் ஒரு நாட்டில் ஒருபிரதமரின் சுய விளம்பரத்திற்காக இப்படியொரு செலவு! தான் அணியும் உடையின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என்று அறிவித்தவர் தானே!
ஹிட்லர்கூட தேர்தல் வாயிலாக ஆட்சியைப் பிடித்தவர் தான். அவரின் முடிவு என்னாயிற்று? இவற்றிற்கெல்லாம் மக்கள் கற்பிக்கும் பாடம் வரும் மக்களவைத் தேர்தல் தான்!

 

No comments:

Post a Comment