கர்ப்பூரி தாக்கூர் எங்கே - அத்வானி எங்கே? ஒப்பிட முடியாத இரு துருவங்கள்! - கவிஞர் கலி.பூங்குன்றன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

கர்ப்பூரி தாக்கூர் எங்கே - அத்வானி எங்கே? ஒப்பிட முடியாத இரு துருவங்கள்! - கவிஞர் கலி.பூங்குன்றன்

featured image

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

பாரத் ரத்னா பட்டம் இப்பொழுது காற்றில் பறக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க அது மலிவுப் பொருளாகி விட்டது!
ஆயிரக்கணக்கான சிறுபான்மையின மக்கள் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் குஜராத்தில் முதல் அமைச்சராக இருந்தவர் – பிரதமரானால், பாரத் ரத்னாக்களைக் கையூட்டாக மாற்றுவதில் ஆச்சரியப் படுவதற்கு என்ன இருக்கிறது?
கர்ப்பூரி தாக்கூர் சமூக நீதியின் சின்னம் என்றால், அத்வானி சமூக அநீதியின் சிம்மாசனம்!

இதோ ஓர் ஒப்பீடு!
கர்ப்பூரி தாக்கூர் நினைவு நாள் பிப். 17

பீகார் மாநில உரிமைகளுக்காகவும், பிற்படுத்தப் பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் குரல் கொடுத்த ஒரு மாபெரும் தலைவராக அறியப்படும் இவரின் அரசியல் வரலாறு பீகார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.
கர்ப்பூரி தாக்கூர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவராக பார்க்கப்பட்டார். முடிதிருத்தும் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர்.
2005ஆம் ஆண்டு நிதிஷ் குமாரை முதலமைச்ச ராக்கியதில் இந்தப் பிரிவினருக்கு முக்கிய பங்குள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில், பீகாரில் அரசியல் ரீதியாக இந்தப் பிரிவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், ஒவ்வொரு கட்சியும் இந்த வாக்கு வங்கியை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள விரும்புகின்றன.
கர்ப்பூரி தாக்கூர் பீகாரில் ஒரு சமூக இயக்கத்தின் அடையாளமாக இருந்து வருகிறார்.

மண்டல் கமிஷன் அமலுக்கு வருவதற்கு முன்பா கவே, பீகார் அரசியலில் தன்னைப் போன்ற பின்னணி யில் இருந்து வரும் வேறு ஒருவர் அடைய முடியாத இடத்தை அடைந்திருந்தார் கர்ப்பூரி தாக்கூர். பீகார் அரசியலில் ஏழைகளின் குரலாகக் கருதப்பட்டார்.

24.1.1924 அன்று சமஸ்திபூரின் பிடவுஞ்சியாவில் (தற்போதைய கர்ப்பூரிகிராம்) பிறந்தவர் கர்ப்பூரி தாக்கூர். இவர் பீகார் மாநிலத்தில் ஒரு முறை துணை முதலமைச்சராகவும், இரண்டு முறை முதலமைச் சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952இல் நடந்த முதல் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் ஒருமுறை கூட தோல்வியே அடையவில்லை.
முதலமைச்சராக இருந்த காலத்தில் பீகார் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு வேறு உதாரணமே தேவையில்லை. அதிலும் இவர் பீகாரின் முதல் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர் என்பதுதான் சிறப்பு.

1967ஆம் ஆண்டு அவர் முதன்முதலில் துணை முதலமைச்சராக பதவியேற்ற போது, எளிய மக்களிட மும் கல்வியை எடுத்துச் சென்றார்
கல்வித்துறை அமைச்சர் பதவியையும் இவர் பெற்றார். இவரது முயற்சியின் மூலம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்குப் பள்ளிக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக மாநிலத்தில் மெட்ரிகுலேஷன் கல்வி வரை இலவச கல்வியாக அறிவித்த முதலமைச்சராவார். மேலும் மாநிலத்தில் உருது மொழிக்கு இரண்டாவது அலுவல் மொழி தகுதி வழங்க பல்வேறு முயற்சிகளையும் எடுத்தார்.
1971ஆம் ஆண்டு முதலமைச்சரான பின், விவசாயி களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் லாபம் இல்லாத நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வருவாய் வரியை நிறுத்தினார்.

பீகார் மாநிலத்தின் அப்போதைய தலைமை செயலகக் கட்டடத்தில் இருந்த மின்தூக்கி வசதி நான்காம் வகுப்பு ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தது; தான் முதலமைச்சராக பதவியேற்றவுட னேயே, அவர்களும் மின்தூக்கியைப் பயன்படுத்து வதை உறுதி செய்தார்.
1977ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முதலமைச்சரான பிறகு, முங்கேரிலால் ஆணையம் மற்றும் மாநிலத்தில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றை அமல்படுத்தியதால் எப்போதும் உயர் ஜாதியினரின் எதிரியாக மாறினார் கர்ப்பூரி தாக்கூர். ஆனாலும் அவர் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றினார்.
முதலமைச்சராக இருந்த போது, மாநிலத்தின் அனைத்துத் துறை மாநில அரசு ஊழியர்களுக்கும் ஒரே ஊதியக் குழுவை மாநிலத்தில் அமல்படுத்திய முதல் முதலமைச்சரும் இவர்தான்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு அளப்பரியது; வேலைவாய்ப்பு முகாம் நடத்தி 9000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஒரே நேரத்தில் வேலை கொடுத்தார். இன்றுவரை, இவ்வளவு பெரிய அளவில் மாநிலத்தில் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படவில்லை.

அரசியலில் ஒடுக்கப்பட்டோரின் குரலாக அறியப் பட்ட கர்ப்பூரி தாக்கூர் இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
அரசியலில் தனது நீண்ட நெடிய பயணத்திற்குப் பிறகு அவர் இறந்தபோது, அவர் பெயரில் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. பாட்னாவிலோ அல்லது அவரது பூர்வீக ஊரிலோ அவரால் ஓர் அங்குல நிலம் கூட சேர்க்க முடியவில்லை.

இவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில், இவரது கிராமத்தைச் சேர்ந்த சில நிலவுடைமைதாரர்கள் இவரின் தந்தையை அவமானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இந்தத் தகவல் பரவியதையடுத்து, மாவட்ட நீதிபதி அந்த இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், கர்ப்பூரி தாக்கூர் அவரை தடுத்து ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லா கிராமங்களிலும்தான் அவமானப்படுத்தப் படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மற்றுமொரு உதாரணமாக, கர்ப்பூரி தாக்கூர் முதல் முறையாக துணை முதலமைச்சராக பதவியேற்ற போது தனது மகன் ராம்நாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் குறித்து ராம்நாத் கூறுகை யில், “அதில் மூன்று விஷயங்கள் மட்டுமே எழுதப் பட்டிருந்தன, இதன் மூலம் நீ பலனடையக் கூடாது. அப்படி யாராவது தூண்டினால் அதற்கு நீ ஆளாகி விடாதே. என் மீது அவதூறு சுமத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் எளிமை குறித்து ராம்நாத் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார், “ஜன்நாயக் (கர்ப்பூரி தாக்கூர்) 1952இல் சட்டமன்ற உறுப்பினராக பதவி யேற்றார். ஒரு தூதுக்குழுவின் நிமித்தமாக ஆஸ்திரியா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அவரிடம் ஒரு கோட் இல்லை. அதற்காக நண்பர் ஒருவரிடம் அவர் உதவி கேட்க வேண்டியிருந்தது. அங்கிருந்து அவர் யூகோஸ்லாவியாவுக்குச் சென்றார். அப்போது அவரது கோட் கிழிந்திருப்பதைக் கண்டு மார்ஷல் டிட்டோ அவருக்கு ஒரு கோட்டை அன்பளிப்பாக வழங்கினார்.”

பிப்ரவரி 17, 1988 அன்று தனது 64ஆவது வயதில் மாரடைப்பால் இறந்தார் கர்ப்பூரி தாக்கூர்.
சமூகநீதியின் சின்னம் திராவிடர் கழகம் நடத்திய மண்டல் குழுப் பரிந்துரைகளை வலியுறுத்தும் மாநாடு களில் பங்கேற்றவர். பீகார் பாட்னாவில் கொட்டும் மழையில் நடைபெற்ற மாநாட்டில், நமது தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, அவரைக் கட்டிப்பிடித்து, “மக்கள் நாயகர் ஜெயப்பிரகாஷ் நாராய ணனுக்குப் பிறகு இவ்வளவுப் பெரிய கூட்டத்தை கொட்டும் மழையிலும் கட்டிப்போட்ட தலைவர் நீங்கள்தான்” என்று உச்சி மோந்து பாராட்டியதெல்லாம் வரலாறு.
அத்தகைய பெருமகனாருக்குப் “பாரத் ரத்னா” பட்டம் வழங்கப்படுவது “பாரத் ரத்னா” பட்டத்துக்குத் தான் பெருமை – ஆனால் அது அரசியல் ஆதாயத்திற் காக அமைவதுதான் கேள்விக்குறியாக நிற்கிறது.

பீகாரில் நிலவும் அரசியல் சூழலைக் கணக்கில் கொண்டு, பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை மன தில் வைத்து, காய் நகர்த்தும் பிஜேபியின் வித்தைகளில் ஏமாந்து விடக் கூடாது என்றும் எச்சரிக்கிறோம்!

அத்வானியின் ரத யாத்திரையால் நாடு அடைந்தது என்ன?

செப்டம்பர் 25, 1990 அன்று, எல்.கே அத்வானி குஜ ராத்தின் சோம்நாத்தில் இருந்து தனது ரத யாத்திரை யைத் தொடங்கினார்.
ஆயிரக்கணக்கான – மதவெறி ஏற்றப்பட்ட ஹிந் துத்துவ அமைப்பாளர்கள் திரண்டிருந்த அத்வானியின் ஊர்வலம் துவக்கத்திலேயே சிறுபான்மையினருக்கு எதிரான காட்டுக்கூச்சலோடு துவங்கியது.
வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா குறிப்பிட்டது போல், “யாத்திரையின் நோக்கம் சிறுபான்மையினருக்கு எதிரானதாகவும், ஹிந்துத்துவ அரசியலுக்கு அடித் தளம் போடுவதாகவும் இருந்தது.” (காந்திக்குப் பிறகு இந்தியா, 2007).
​​அத்வானியின் யாத்திரை சென்ற பகுதிகளில் எல்லாம் வன்முறைச் சுவடுகளை விட்டுச் சென்றது.பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உத்தர வின் பேரில் பீகாரில் அத்வானி கைது செய்யப்பட்ட பிறகு வகுப்புவாத வன்முறை தீவிரமடைந்தது.
ஹிந்துத்துவ வெறியர்கள் இஸ்லாமியர்களை தாக்கத் துவங்கினர் இது1947 ஆம் ஆண்டு பிரிவினை யின் போது ஏற்பட்ட படுகொலைகளை நினைவூட்டும் வகையில் இருந்தது. முஸ்லீம்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்” என்று ராமச் சந்திர குஹா எழுதினார்.
யாத்திரை நடந்த செப்டம்பர் 1 முதல் நவம்பர் 20 வரை, மொத்தம் 166 “வன்முறை கொடுமைகள்” நடந்த தாகவும், இதில் இஸ்லாமியர்கள் 564 பேர் கொல்லப் பட்டதாகவும் வரலாற்றாசிரியர் கே.என்.பணிக்கர் எழுதினார்.
குறிப்பாக சிறுபான்மையினர் என்று அடையாளம் தெரிந்தாலே வன்முறைக் கும்பல் கொலைகளை நடத்தத் துவங்கி விடும். இதனை “புனித” நடவடிக்கை என்றே அவர்கள் கூறினார்கள்.

1993ஆம் ஆண்டில் மட்டும். 224 பேர் பலியாகிய உத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான வன்முறைகள் நடந்தன.
இருந்த போதிலும், ரத யாத்திரை அத்வானிக்கும், பா.ஜ.க.,வுக்கும் பெரும் வெற்றியை அளித்தது. 1991 தேர்தலில், காங்கிரசுக்கு (244 இடங்கள்). பிறகு, பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உதயமானது, அதன் எண்ணிக்கையை 120 ஆக உயர்த் தியது. உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சி அமைத்தது.
பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதற்குப் பிறகு டிசம்பர் 6, 1992 அன்று, சுமார் 100,000 கரசேவகர்கள் பாபர் மசூதியின் மீது ஏறி அதைத் தரைமட்டமாக்கினர். அத்வானியும் அன்று அயோத்தியில் இருந்தார் – வழிகாட்டினார்.

ராம ஜென்மபூமி நடவடிக்கை யின் பின்னணியில் பாஜக தனது தேசிய இருப்பை வலுப்படுத்தியது,
அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி யேற்றார்.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனால் அத்வானியின் பிரதமர் ஆசையை அவரால் ஒருபோதும் பூர்த்தி செய்ய முடியவில்லை. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அத்வானி கிட்டத்தட்ட செல்லாக்காசாகிப் போனார். அவரது ஆதரவாளர்கள் அனைவருமே மரணித்துவிட அத்வானியோ தன்னு டையை முதுமையின் பின்னால் அரசியல் ஆசைகளை உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு ஒதுங்கிக் கொண்டார்.
குஜராத் கலவரத்துக்குப் பிறகு நரேந்திர மோடி ஒரு நிமிடம் கூட முதலமைச்சராகத் தொடரக்கூடாது என்று கூறியவர் அத்வானி. கோவாவில் நடைபெற்ற பிஜேபி தேசிய கவுன்சிலில் நரேந்திர மோடி குற்றவாளி யாக நடுங்கினார். ஆனால் அவரோ இந்தியாவின் பிரதமராக இருமுறை ஆகிவிட்டார்; மூன்றாம் முறை யாகவும் பிரதமராகத் துடியாய்த் துடிக்கிறார்.

மண்டல் குழுப் பரிந்துரை
எல்.கே.அத்வானியின் நிலைப்பாடு என்ன?

1950 ஜனவரில் இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை (தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் உண்டு – இதிலும் பிரித்தாளும் சூழ்ச்சி).
வாராது வந்த மாமணியாம் – சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக வரும் வரை காத்திருக்க வேண்டி யிருந்தது. 7.8.1990 அன்று ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு அளிக்கப்படும் என்று அறிவித்தார். பிரதமர் வி.பி.சிங் – வேலை வாய்ப்பில் மட்டும் 27 விழுக்காடு என்ற அறிவித்தார். அந்த அறி விப்பில் மறக்காமல் தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் கனவு நனவாயிற்று என்றும் பதிவு செய்தார்.
பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் – தகுதி பேசும் பார்ப்பனர்கள் வாளா இருப்பார்களா? வட மாநிலங்களில் கலவரங்களைக் கிளப்பி விட்டனர். கோஸ்வாமி என்ற உயர் ஜாதி மாணவர் உடலுக்குத் தீ வைத்துக் கொண்டார் (வைத்துக் கொண்டாரா? வைத்துக் கொல்லப்பட்டாரா என்பது ஒரு புதிர்!).
பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். இதன் பின்னணியில் இருந்தன.

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.சைச் சேர்ந்தவர்கள், ர(த்)த யாத்திரைப் புகழ் அத்வானியைச் சந்தித்தார்கள் – மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்குப் பிஜேபி ஆதரவு கொடுக்கலாமா என்று கூக்குரல் போட்டனர்.
அது தொடர்பாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ (21.9.1990) ஏட்டுக்கு அத்வானி தந்த பேட்டி, அவர்களின் முகத்திரையைத் தனக்குத்தானே கிழித்துக் கொண்ட அவலம் பளிச்சிட்டது.

“New Delhi, where the self-immolation had taken place, parents used to come to my place daily. “Why are you supporting the government? Withdraw your support”. I felt that withdrawing our support on the issue of Mandal would be of an enormous benefit to the government. I said ‘I agree with you that the government is behaving very badly but we will take action at the appropriate time. – Advani Hindustan Times, 21 Sep. 1990″

“டில்லியில் மாணவர்கள் நாள்தோறும் என்னை சந்தித்துக் கோரிக்கை வைக்கிறார்கள். இன்னும் வி.பி.சிங் ஆட்சியை பிஜேபி தாங்கிப் பிடிக்கலாமா என்று கேட்கின்றனர்.

இந்த நேரத்தில் மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்படுத்தியதற்காக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த் தால் ஆளும் வி.பி.சிங் தரப்புக்கு அனுகூலமாகப் போய்விடும். உரிய நேரத்தில் வி.பி.சிங் அரசுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்போம்” என்று கூறினாரே!
வி.பி.சிங் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்த்தது இந்த அடிப்படையில் தான். இந்த சமூக அநீதி நாயகருக்குத்தான் சமூக நீதிக்காகப் பாடுபட்ட கர்ப்பூரி தாக்கூருடன் இணைந்த “பாரத் ரத்னா” பட்டமாம்! எப்படி இருக்கிறது?

No comments:

Post a Comment