ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 10, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1 : தற்போது குடும்ப வன்முறைகளும், குழு வன்முறைகளும் அதிகமாகி விட்டதே – இதற்கு என்னதான் தீர்வு?
– குமணன், கோவை
பதில் 1 : பொது ஒழுக்கச் சிதைவின் அப்பட்டமான வெளிப்பாடு இது.
பொது ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் சமூக நலனா? தனிமனித சுய நலமா? என்பனவற்றின் அவசியத்தை மக்களிடம் பரப்பி, குறிப்பாக மாணவர், இளைஞர்கள் மத்தியில் பரப்பும் அறம் சார்ந்த பொது நல அமைப்புகள் மறைந்து, வெறும் திரைப்படம், தொலைக்காட்சி, மலிவான கொச்சை அரசியல் பெருமைகள் – இவைகளே இதற்கு முக்கிய வித்தூன்றும் அவலம்!
எண்ணிக்கையை எண்ணாது, சிலராவது இப்படி பொது அறத்தை வலியுறுத்திட முன்வருதல் அவசரத் தேவை!

—-

கேள்வி 2 : பா.ஜ.க. தோற்றுப் போனாலும் – தான் ஜெயித்து, எதிர்க்கட்சிகள் தோற்றுவிட்டதாக அறிவிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி கொடுக்குமோ? (சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தலில் குளறுபடி நடந்ததல்லவா?)
– ஜீவா, வடமதுரை
பதில் 2 : அதுதான் காவியின் – பா.ஜ.க.வின் மோடி – அமித்ஷா அரசியலில் முக்கியமானது.
தேர்தலில் தோற்று மக்களால் புறக்கணிக்கப் பட்டால் உடனடியாக ஒன்றிய அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ ஆக்கும். (உத்தராகண்ட் உள்பட பல மாநில நிகழ்வுகளில் நடைபெறுவது கண்கூடு.) புதிய அர்த்தம் – ஜனநாயகத் தேர்தல் முடிவுகளுக்கு – அந்தோ பொது ஒழுக்கம்!

—-

கேள்வி 3 : கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்தென்ன?
– வசந்தகோபால், விழுப்புரம்
பதில் 3 : சிறப்பான பெருமைமிகு திட்டம்தான். ஆனால், முழு ஏற்பாடுகளையும் செம்மையாக செய்து – போதிய ஒத்திகை பார்த்து – பலரையும் ஒருங்கிணைத்து – முழு ஏற்பாடுகளும் முடிந்த பிறகு திறந்திருந்தால் விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
சில ஊடகங்களுக்குத் “தீனி” கிடைத்ததையும் தவிர்த்திருக்கலாம். என்றாலும் தமிழ்நாட்டு தலைநகரை விரிவாக்க புதுத் திட்டமே.

—-

கேள்வி 4 : ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில்கள் பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன என்கின்ற விஞ்ஞான வளர்ச்சி – மாற்றம் குறித்து தங்கள் கருத்து என்ன?
– ச.ஜெயக்குமார், திண்டுக்கல்
பதில் 4 : தமிழ்நாட்டிற்கு பெருமைதான். பிறகு இத்திட்டத்தை வேறு வடமாநிலங்களுக்கு எடுத்துச் செல்லாமல் இருக்க வேண்டுமே! சில முந்தைய கசப்பான நிகழ்வுகளும், நினைவுகளும் நிழலாடுகின்றன!

—-

கேள்வி 5 : அலைபேசி மோகத்தை எவ்விதம் குறைப்பது?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில் 5 : இளந்தளிர்களுக்கு இடையறாது அறிவுறுத்தி, கவனத்தைத் திருப்பி – புதிய அறிவு நூல்களைப் படிக்க, விளையாட்டுகளுக்கு மேலும் முக்கியத்துவம் – ஈடுபாடு உருவாக்கி – மாணவர், இளைஞர்களை மாற்ற, முயற்சிக்க வேண்டும்.

—-

கேள்வி 6 : ‘இந்தியா’ கூட்டணியில் இன்னமும் தலைவர்கள் தன்முனைப்புக் காட்டிக் கொண்டு இருப்பது பா.ஜ.க.வுக்கு சாதகமாக ஆகிவிடாதா?
– யாழின்பன், மதுரை
பதில் 6 : “எறும்புகள் எவ்வளவு ஊர்ந்து, தேய்ந்து முயன்றாலும் கால் தேயாது!” முடிவு தலைவர்களால் அல்ல; மக்களால். அவதிகளால் நிர்ப்பந்தப்படுத்தப்படும் மக்கள் முன்னே மோடி ஆட்சியின் அவலம் – கைப்புண்ணாக இருக்கிறதே!

—-

கேள்வி 7 : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கு ஆளுநரும் துணை போவது போல் தெரிகிறதே?
– மனோ, மடிப்பாக்கம்
பதில் 7 : அதிலென்ன சந்தேகமே! இல்லையெனில் வழக்கில் சிக்கியுள்ள துணை வேந்தரை சந்தித்துப் பேசுவாரா ஆளுநர்? இவர்கள் ஊழலை ஒழிக்கும் இலட்சணம் இதுதானோ?

—-

கேள்வி 8 : வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு வந்துள்ளதே?
– குணா, கூடுவாஞ்சேரி
பதில் 8 : கருத்துக் கணிப்புகளைக் கண்டு தோழர்கள் ஏமாறாமல் – உழைப்புக் கணிப்பே – முக்கியம் (இறுதிவரை).

—-

கேள்வி 9 : மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் அலங்கோலங்களை ஒரு இராமன் கோவிலை மட்டும் காட்டி மறைத்துவிட முடியுமா?
– ம.கோவிந்தசாமி, காஞ்சி
பதில் 9 : இராமன் (சேலம் நிகழ்வு) 1971இல் தேர்தலில் கைகொடுத்தாரா? இந்தியா முழுவதிலும் கூட இப்போது கை கொடுக்க மாட்டார். மயக்க மருந்தால் பலன் ஏற்படாது மோடி ஆட்சிக்கு!

—-

கேள்வி 10 : பாரத ரத்னாவின் மதிப்பு – மோடி செல்லும் பாதையில் வீசப்பட்டு சாலையில் கிடக்கும் சாமந்திப்பூக்களின் நிலை போல் ஆகிவிட்டதே?
– சரவணா, அசோக் நகர்
பதில் 10 : இது மில்லியன் டாலர் கேள்வி – பதிலோடு இணைந்த கேள்விக்கு நன்றி!

No comments:

Post a Comment