ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1 : 2014இல் அன்னா ஹசாரே போராட்டம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது. 2024இல் விவசாயிகள் போராட்டம் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருமா?
– மா.கோவிந்தன், தென்காசி
பதில் 1 : 2014இல் நடந்த அன்னா ஹசாரே போராட்டத்தினால் அன்றைய ஆட்சி மாற்றம் வந்தது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனினும் இன்றைக்குப் போராடுகின்ற விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்துப் பிரிவு மக்களும் ஒவ்வொரு வகையில் இந்த எதேச்சதிகார ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகிழ்ச்சி அடைபவர்கள், அதற்காக செலவழிக்கக் காத்திருந்து சிவப்புக் கம்பளம் விரிப்பவர்கள் பெரிதும் கார்ப்பரேட் முதலாளிகளும், பார்ப்பனர்களும், பதவிக் கூலிகளும், சில “விபீடண, அனுமார்களும்” மட்டும்தான்.
அதன் பிரதிபலிப்பு நிச்சயம் மோடி அரசை வீட்டுக்கனுப்பும்.

—-

கேள்வி 2 : முதலில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் ஆளுநருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதா?
– ஆ.மணிமேகலை, திருவள்ளூர்
பதில் 2 : அவருக்கு மட்டுமா? அவரையொத்த அத்தனை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன காவிகளுக்கும் கூடத்தான்.

—-

கேள்வி 3: வட இந்திய தொலைக்காட்சிகள் குறிப்பாக தமிழ்நாட்டு தி.மு.க. அரசு குறித்து மக்களிடையே எதிர்மறை எண்ணங்களை நாள்தோறும் விதைத்துக்கொண்டே இருக்கின்றனவே?
– கோ.முல்லைவேந்தன், வேலூர்
பதில் 3 : சட்ட நடிவடிக்கைகள் அரசாலும், தனித்த வழக்குரைஞர்களாலும், மேலும் கூர்மையாக்கப்பட்டு ஏவுகணை போல் செயல்பட்டாக வேண்டிய தருணம் இது!

—-

கேள்வி 4 : அரசமைப்புச் சட்டத்தையே மதிக்காதவர்கள் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை மதிப்பார்களா?
– தே.வெற்றிவேல், மதுரை
பதில் 4 : தீர்மானத்தை எவர் மதிக்கிறார் என்பதை காலம் மதிப்பிடும்; வரலாறு போற்றும்; விதைத்தது விரைவில் முளைக்கும்!

—-

கேள்வி 5 : “தேர்தலில் ஆ.இராசாவை மண்ணைக் கவ்வ வைப்பேன்” என்று பேசியவர் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டாரே – ஏன்?
– கா.கிருஷ்ணசாமி, திண்டிவனம்
பதில் 5 : பதவியைக் கவ்விய படலம் முடியாது – பிறகு மக்களுக்குத் தானே இடையூறு. பழைய “தாராபுரம்” தேர்தல் முடிவு மறந்து விடுமா எளிதில்! கயல்விழிகள் அவரது கனவிலும் மிரட்டுவார்களே!

—-

கேள்வி 6 : காவிகளால் கூட தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘கருப்பின்’ கொள்கையை எதிர்த்துப் பேசமுடியவில்லையே?
– வா.தமிழ்ச்செல்வன், கோவை
பதில் 6 : காவிகள் என்ன? இல்லாத ஆவிகளை இருப்பதாகச் சொல்லும் அளவுக்கு “கருப்புப் பாவிகள்!” அவர்களை சபிக்கச் சொல்லுகிறார்கள் என்பதே எதார்த்தம்!

—-

கேள்வி 7 : அசோக் சவானை அடுத்து மத்தியப் பிரதேச மேனாள் முதலமைச்சர் கமல்நாத்தும் பாஜகவிற்குத் தாவப்போவதாக செய்திகள் வருகின்றனவே – என்ன ஆயிற்று காங்கிரசுக்கு?
– தா.கன்னியப்பன், உத்திரமேரூர்
பதில் 7 : காங்கிரசு இப்போது இப்படிப்பட்ட வெளியேற்றங்களால் ஓர் அரசியல் தூய்மைத் தொழிற்சாலையாக (Political Refinery) ஆகி வருவது பாராட்டத்தகுந்ததே!
காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் காலத்தில் – அதில் இருந்த பழைய விஷ ரத்தம் வெளியேறி, புதிய ரத்தம் பாய்ச்சப்படுவது நன்று!
பழைய விஷ ரத்தம் வெளியேற புதுப்புது ரத்தம் பாய – செலுத்திய புது ரத்தம் பாழாகுமோ! எனவே, அது காங்கிரசுக்கு பலவீனம் அல்ல – அது புறத்தோற்றம். உண்மையில் புதிய பலமே அதற்கு! இன்னும் வெளியேற வேண்டிய வர்ணாசிரம வாரிசுகள் – சந்தர்ப்பக்காரர்களும், சங்கடப் பேர்வழிகளும் வெளியேறி புதிய இளைஞர்கள் – கொள்கை நியாயப்படி ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்கள் இருப்பது போதும். வலிமை உண்மையில் அதுவே!

—-

கேள்வி 8 : “குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறிக்கொண்டு இருக்கும் அமித்ஷாவிற்கு அதன் பின்னால் இருக்கும் பேராபத்தை எடுத்துச் சொல்வது யாரோ?
– சீ.வேல்முருகன், வந்தவாசி
பதில் 8 : பொதுவானவர்களும், புரிந்த சிறுபான்மையினரும், அறிந்து துணை நிற்கும் ஏனையோருமே!

—-

கேள்வி 9 : 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6இல் அயோத்தியில் பாபர் மசூதியின் வலது புற கோபுரத்தை முதல் ஆளாக ஏறி இடித்த அஜித் கோபசடேவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதே? மதச்சார்பின்மைக்கு வேட்டுவைத்தவர் நாடாளுமன்றம் சென்று என்ன பேசுவார்?
– மா.மாணிக்கம், மதுராந்தகம்
பதில் 9 : சாமியாரிணி அம்மையார் கோட்சேவைப் புகழ்ந்தது மாதிரி பேசுவார்.

—-

கேள்வி 10 : தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து தலைமை நீதிபதி முதல் – பழங்குடியின சமூகத்திலிருந்து முதல் பெண் நீதிபதி வரை அனைத்தையும் “திராவிட மாடல்” ஆட்சியின் நீட்டிப்பாகப் பார்க்கலாமா?
– கே.குமரன், வியாசர்பாடி
கேள்வி 10 : அதில் என்ன அட்டி? “திராவிட மாடல்” ஆட்சியில் ஏராள பலன் கிடைப்பது உறுதி!

No comments:

Post a Comment