தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 8, 2024

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் ஒன்றிய அரசு

featured image

ஒன்றிய பி.ஜே.பி. அரசு எதில்தான் அரசியல் செய்வது என்ற வரைமுறையில்லாமல் நடந்து வருகிறது.
கடந்தாண்டு டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை மிக்ஜம் புயல் வீறு கொண்டு தாக்கியது. 77 செ.மீ., அளவுக்குப் பெய்த மழையால் இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.6000 வழங்கியது தமிழ்நாடு அரசு. பட்ட காலே படும் என்பதுபோல, பழைய வெள்ளம் உலருவதற்கு முன்பே டிசம்பர் 17,18ஆம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது.
உரிய முறையில் ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விவரங்களைத் தெரிவித்தார். ஒன்றிய குழு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சரும் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்; ஒன்றிய நிதி அமைச்சரும் வந்தார்.

நிவாரண நிதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். வார்த்தைகள் வந்தனவே தவிர நிதி வரவில்லை. முதலமைச்சரும் பிரதமரை டில்லி சென்று நேரில் சந்தித்து நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வற்புறுத்தினார்.
தி.மு.க. நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களும், தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தனர் (13.1.2024) – அமைச்சர் உதயநிதியும் பிரதமரைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது.

முதலமைச்சர் கோரிய தொகை ரூ.37,907 கோடியாகும். ஜனவரி 27ஆம் தேதிக்குள் உள்துறை அமைச்சர் நிவாரணத் தொகை அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
எல்லாம் வார்த்தை அளவில் இருந்தனவே தவிர காரியம் கைகூடவில்லை.
மக்களவையில் இதுகுறித்து கடந்த 6ஆம் தேதி தி.மு.க. உறுப்பினர் ஆ. இராசா – ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து வருவது சரியல்ல. பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களுக் குத்தான் முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப் படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன – என்று பேசினார்.

உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதி தொகுப்பிலிருந்து ரூ.2013 கோடியை தமிழ்நாடு அரசு பயன்படுத்தியுள்ளது என்று பதில் அளித்தார்.
உடனே டி.ஆர். பாலு எம்.பி., அவர்கள் குறுக்கிட்டு தேசிய பேரிடர் நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏன் என்று நியாயமான வினாவை எழுப்பினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் குறுக்கிட்டுப் பதில் அளிக்க முயன்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டின் நலன்மீது அக்கறை செலுத்தாததை மனதிற் கொண்டு – மேலும் சம்பந்தப்பட்ட துறைக்குச் சம்பந்தமே இல்லாதவர் பதில் அளித்த நிலையில் கார சாரமான வாக்கு வாதம் நடந்தது.
தமிழ்நாடு பெரும் இயற்கைப் பாதிப்புக்கு ஆளான நிலையில் ஒன்றிய அமைச்சர்கள் பார்வையிட்ட பிறகும் – தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று பிரதமரைச் சந்தித்த பிறகும் – திமுக எம்.பி.க்கள் உள்துறை அமைச்சரை சந்தித்துக் கோரிக்கை வைத்த பிறகும் ஜனவரி 27ஆம் தேதிக்குள் நிவாரண நிதி அனுப்பப்படும் என்று உள்துறை அமைச்சர் சொன்ன பிறகும் – இதுதான் நிலை என்றால், இதனை எந்தக் கருத்தில் எடுத்துக் கொள்வது? இந்த நிலையில் தான் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் வெளி நடப்புச் செய்தனர்.
அமைச்சர் எல். முருகனை எதிர்த்துப் பேசினால், அதற்கு ஜாதி வண்ணம் பூசுவது அநாகரிகம் – அப்படி என்றால் இந்தப் பிரச்சினையை முதலில் எழுப்பிய ஆ. இராசா யார் என்று நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இந்த அணுகுமுறை ஆபத்தான ஒன்று – எந்த அமைச்சரோ உறுப்பினரோ பேசும்போது – எதிர்க் கேள்வி கேட்டாலோ, விமர்சித் தாலோ உடனே அந்த அமைச்சரின் ஜாதியை சம்பந்தப்படுத்தி திசை திருப்ப ஆரம்பித்தால், அது எங்கே கொண்டு போய் விடும்? இதுதான் பி.ஜே.பி. கடைப்பிடிக்கும் காவி ஜனநாயக மாடலா?
இன்றைய தினம் கறுப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு முன் தி.மு.க. எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் – ஆண்டுதோறும் ஒதுக்கப் படும் நிவாரண நிதியையும், தேசியப் பேரிடர் நிதியையும் – ஒன்றோடு ஒன்று போட்டுக் குழப்புவது -ஏதோ புத்தி சாலித்தனமான செயல் என்று ஒன்றிய அமைச்சர்கள் நினைக்கிறார்களா?
மாநிலங்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, நிதிக் குழு பரிந்துரைத்ததைவிட தமிழ்நாட்டுக்கு குறைவாகவே நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது – என்று குறிப்பிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒன்றிய பிஜேபி அரசின் பக்கம் ‘சாய்கால்’ கொண்டு செய்திகளை வெளியிடும் ‘இந்து தமிழ் திசை’ நாளேடுகூட நேற்றைய தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
“அரசு என்பது ஆளும் கட்சி மட்டுமல்ல; எதிர்க் கட்சிகளையும் – ஒழுங்கிணைந்த இயந்திரம் – அந்த இயந்திரத்தை இயக்கும் எரிபொருளாக பொருளாதாரம் உள்ளது. 140 கோடி இந்தியர்களின் எதிர்காலம் என்பது அரசாங்கம் என்னும் இயந்திரத்தை நிர்வகிக்கும் சில ஆயிரம் பேரின் கைகளில் தான் உள்ளது. அரசு இயந்திரம் பழுதின்றி இயங்க, கொள்கை, வகுப்பு தாண்டி எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுக்கும் திறந்த மனத்துடன் காது கொடுக்க வேண்டியது ஆட்சியில் இருப்பவர்களின் கடமையாகும்” என்ற தலையங்கக் கருத்தை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்றிய பிஜேபி அரசின் மாற்றாந் தாய் மனப்போக்குக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பது உறுதி!

No comments:

Post a Comment