வாழ்வியல் சிந்தனைகள் . கி.வீரமணி - "கடிகாரம் ஓடு முன் ஓடு!" (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

வாழ்வியல் சிந்தனைகள் . கி.வீரமணி - "கடிகாரம் ஓடு முன் ஓடு!" (2)

featured image

காலந் தாழ்த்தாது, எதையும் குறித்தபடி குறித்த நேரத்தில் செய்வது என்பது காலத்தை வெகுவாக மதிப்பது மட்டுமல்ல; நமக்கும் ஒரு வகை ஒழுங்கு கட்டுப்பாட்டினை அன்றாட வாழ்க்கைக்கு பெற்றுக் கொடுப்பதாகும்!
அதன்படியான சீரிய அறிவுரையே “கடிகாரம் ஓடுமுன் ஓடு” என்பதாகும்!
நான் பார்த்துக் கற்றுக் கொண்ட அப் பாடத்தை பல அரும் தலைவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறையாகவே அதனை ஆக்கிக் கொண்டவர்கள்.
எடுத்துக்காட்டாக, முதலில் தந்தை பெரியார் அவர்கள் – அடுத்து நூற்றாண்டு நாயகர் கலைஞர் அவர்கள்!
தந்தை பெரியார் அவர்கள், வேறு பணிகள் – கூட்டங்கள், நிகழ்ச்சிகளென எதுவுமே இல்லாத போதும்கூட “நாளை காலை 7 மணிக்குத் திருச்சிக்குப் புறப்படுவோம்” என்று அம்மாவிடமோ அல்லது அருகில் இருக்கும் எங்களிடமோ முதல் நாள் கூறி விட்டால், அடுத்த நாள் அதன்படியே சரியாக காலை 7 மணிக்கு உடன் கிளம்பி விடுவார்கள்!

அதனால் அன்னை மணியம்மையார் – அவர் உடன் செல்லும் ஓட்டுநர், தோழர்களை அவசர அவசரமாக அழைத்து காலைச் சிற்றுண்டியை பரிமாறிடுவார்கள்; சிறிது நேரம் அதிகமானாலும் தந்தை பெரியார் ஓட்டுநரை அழைத்து, வேனில் ஏற, யார் பிடிப்புமின்றி தானே எழுந்து செல்ல முயலுவார் கோபமாக!
“வேறு நிகழ்ச்சி இல்லையே சற்று தாமதமானால் என்ன?” என்று உரிமையுடன் அன்னை மணியம்மையார் கேட்டால், “அது ஒரு சமாதானமா? புறப்பட நேற்றே நான் சொல்லி விட்டேன் அல்லவா?” என்று கடிந்து கொள்வார்!
அய்யாவைப் பொறுத்தவரை அது ஒரு வகையான “Decipline- ஒழுங்குக் கட்டுப்பாடு” முறையேயாகும்.
(சில நேரங்களில் பொதுக் கூட்டங்களுக்குக்கூட முன்பே சென்று அமைதியாக அமர்ந்திருப்பார்).
வேலூர் சி.எம்.சி. – கிறித்துவ மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அய்யா மயக்க நிலைமையிலிருந்தபோது அன்றைய முதல மைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் அய்யாவை வந்து பார்த்து நலம் விசாரித்து விட்டு வேலூரி லிருந்து சென்னைக்குத் திரும்பி விட்டார். அமைச்சர்கள் மன்னை நாராயணசாமி, மாவட்ட அமைச்சர் ப.உ. சண்முகம் ஆகியோரை அங்கேயே இருக்கும்படிக் கூறி விட்டு, சென்னை திரும்பினார்.

முதலமைச்சர் கலைஞர், அய்யா மறைவுற்ற வுடன் அவரது உடலை ராஜாஜி மண்டபத்தில் வைத்து அய்யா மறைவு கேட்டு தாளா துக்கத்துடன் மரியாதை செலுத்துபவர்கள் வரிசையாக வர, போதிய ஏற்பாடுகளை அன்றைய அய்.ஜி. எஃப்.வி. அருள் தலைமையில் சிறப்பாக செய்து கொண் டிருந்தார்.
வேலூரிலிருந்து மருத்துவமனைக்குரிய விதி முறைகளை முடித்து விட்டு அன்னை மணியம் மையாரும், நானும், புலவர் இமயவரம்பனும் மற்ற தோழர்களுடன் வேனில் அய்யா உடலை வைத்து – வழி நெடுக மக்கள் திரண்டு மரியாதை செலுத்திட, சென்னைக்கு சுமார் 2, 3 மணி அளவில்தான் வந்தடைந்தோம்.
முதலமைச்சர் கலைஞர் அன்னை மணியம்மை யாரிடமும், என்னிடமும் ராஜாஜி ஹாலில் தனியே மாளாத் துயரத்தை வெளிப்படுத்தி ஆறுதலும் தேறுதலும் கூறி “நாளை (25-2-1973) எத்தனை மணிக்கு இறுதி ஊர்வலம் கிளம்ப வேண்டும் என்று அம்மாவைக் கலந்து சொல்லுங்கள்” என்று என்னிடம் கேட்டார்.
அம்மா அவர்கள் “முதலமைச்சர் கருத்துப்படி செய்யலாம்; எல்லாத் தோழர்களும் வெளியூர்களி லிருந்து வந்து அய்யாவுக்கு இறுதி வணக்கம் செலுத்திட வசதியாக சற்று மாலை நேரமாக இருப்பது நலம்” என்று கூறியதை நான் முதல மைச்சர் கலைஞரிடம் கூறிய உடன் – “பிற்பகல்
3 மணிக்கு ஊர்வலம் துவங்குவது வசதியாக இருக்கும்” என்றார் – என்னிடத்தில் முதலமைச்சர் கலைஞர்.
அப்போது அவரது இருகைகளையும் பற்றிக் கொண்டு நான் “ஒரு முக்கிய வேண்டுகோள் – வாழ் நாள் முழுவதும் நேரத்தைத் தவறாது கடைப் பிடித்தவர் நம் அய்யா; ஆகவே குறித்த அந்த நேரத்தில் அவரது இறுதிப் பயணம் தொடங்கச் செய்து விடுங்கள்” என்று கூறி, பொலபொலவென கண்ணீர் விட்டேன். என்னை அறியாது வந்த கண்ணீர் அது! என்னை அணைத்துக் கொண்டு, “அப்படியே செய்வோம்” என்றார் முதலமைச்சர் கலைஞர். அடுத்த நாள் அதன்படியே தவறாது நடத்தியும் காட்டினார். பிற்பகல் 3 மணிக்கு இறுதிப் பயணமும் காலந் தாழ்த்தாது நடந்தது.
(தொடரும்)

No comments:

Post a Comment