ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1 : சமீப காலமாக பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள தொடர்ந்து தடைவிதிக்கப் படுகிறதே?
– ந.ராஜகோபால், உத்திரமேரூர்
பதில் 1 : முன்பு தமிழ்நாடு அரசாங்க ஊர்திகளுக்கும் தடை விதித்தது. திரும்பவும் இப்போது அந்நிலையை விரிவுபடுத்தி, மற்ற கலாச்சாரப் பண்பாடுகளும் பரவாமல்
ஆர்.எஸ்.எஸ். ஆட்சி தனது பொல்லாச் சிறகை விரிக்கிறது என்பதன் அடையாளம்!

—-

கேள்வி 2 : பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது, ரஷ்யாவில் இருந்து அடிமாட்டு விலைக்கு கச்சா எண்ணெய் கப்பல் கப்பலாக வருகிறது, இருப்பினும் விலையைக் குறைக்காமலேயே மக்களை வாட்டி வருகிறதே ஒன்றிய அரசு?
– ம.சாந்தகுமார், வந்தவாசி
பதில் 2 : ஒன்றிய அரசின் மக்கள் நல விரோதப் போக்கிற்கு கைமேலான எடுத்துக்காட்டு இது! பிரச்சார மேடைகளில் இவற்றை எதிர்க்கட்சிகள் நன்கு மக்களுக்குப் பரப்ப வேண்டும்.

கேள்வி 3 : ஒன்றிய அரசு மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறைக்கு கடந்த 6 ஆண்டுகளாக நிதியை குறைத்துக்கொண்டே வந்துள்ளதே? நாட்டில் அனைவரும் ஆரோக்கியமாகவும் கல்வியில் சிறந்தும் விளங்குகிறார்களா?
– கா.ஆறுமுகம், சேலம்
பதில் 3 : நியாயமாகப் பார்த்தால் இந்த இரண்டு துறைகள்தான், மனித வளத்தின் – சமூக வளர்ச்சியின் முக்கிய அடையாளங்கள்!
இதனை குறைத்தால், மக்கள் முன்னேற்றம் பற்றிய அறிவு வழிகளை நாம் அடையவே முடியாது. மோடி ஆட்சி எப்படி நடந்தது கடந்த 10 ஆண்டுகாலமாக என்பதற்கு கைமேல் உள்ள அனுபவங்கள் இவை

—-

கேள்வி 4 : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியைப் பெற இரண்டு மாநில ஆளுநர் வேலையை விட்டு விட்டு அரசியலில் வேகம் காட்டி வருவதாக பா.ஜ.க.வினரே கூறுகின்றனரே?
– மா.தியாகராஜ், மாமல்லபுரம்
பதில் 4 : ஆசைக்கோர் அளவில்லை. ஆனால், அதற்குரிய வழிமுறையோ சரியில்லை; சரிவுதான் இறுதியில் ஏற்படும்!

கேள்வி 5 : நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து?
– வா.வெற்றி, மதுரை
பதில் 5 : எதிர்பார்த்ததை விட கூடுதலான பெரு வெற்றி; அமைதிப் பூங்காவை நோக்கி தொழிற் தேனீக்கள் மொய்க்கின்றன! ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சீரிய சிறப்பிற்கான ஆதாரமானது இது!
முதலமைச்சருக்கும், தொழில்துறை அமைச்சருக்கும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி கூறுகிறோம்!

கேள்வி 6 : தமிழ்நாட்டில் ராமன் கோவில் பந்தல்கள் அமைத்தால் மக்கள் ஆதரவு குறைவாக உள்ளது என்று ஹிந்து அமைப்புகள் கூறி உள்ளனவே?
– தி.தருமன், புதுக்கோட்டை
பதில் 6 : தமிழ்நாட்டில் ‘தேர்தல் இராமன்’ ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை 1971 தேர்தலே பாடம் புகட்டியுள்ளதை அவர்கள் மறக்கவில்லை என்பதற்கு உதாரணம் இது!

கேள்வி 7 : வடக்கே எந்த நாளிதழை எடுத்தாலும் ராமன் கோவில் காவிமயம் தான். ஆனால், தெற்கே அந்த நிலை இல்லையே ஏன்? என்ன காரணம்?
– ரா.சந்திரசேகர், திருமங்கலம்
பதில் 7 : மேலே காட்டிய பதிலே இதற்கும். தேர்தல் இராமன் – இந்த இராவண காவியம் – இராவண வீர பூமியில் வெறும் செல்லாக் காசுதான். இராமன் எத்தனை இராமனடா!

கேள்வி 8 : ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நபரோடு தனியாக அரைமணி நேரம் உரையாடிய ஆளுநரின் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் மவுனம் சாதிக்கிறாரே?
– பா.காவேரி, திருவரங்கம்
பதில் 8 : ‘HARBOURING THE ACCUSED’ “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பது” என்றே இந்திய குற்றச் சட்டத்தில் ஒரு பிரிவு உண்டு. அதன்படி இந்த ஆளுநர் மீதும் சட்டப்படி நடவடிக்கை பாய வேண்டியதே நியாயம்! நீதி! நேர்மை!

கேள்வி 9 : 25.02.2017ஆம் ஆண்டு மோடி, “அழகிய மணிப்பூர் என் உள்ளத்தை கவர்ந்துள்ளது” என்றார், இன்று 4.01.2024 “லட்சத்தீவின் அமைதி என்னை ஆனந்தப்படுத்தியுள்ளது” என்கிறார்? என்ன ஆகுமோ?
– கா.முல்லைவேந்தன், தஞ்சை
பதில் 9 : உடை மாற்றமும் – உரு மாற்றமும் – உரை மாற்றமும் அவருக்குக் கை வந்த கலை – வித்தையில் கைதேர்ந்தவர் என்ற பரிசு பெற முழுத் தகுதி வாய்ந்தவர் அவர்.

கேள்வி 10 : உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையே 24 கோடிதான். ஆனால், 6 மாதங்களில் 32 கோடி மக்கள் சுற்றுலா வந்துள்ளனர் என்று எந்த ஒரு புள்ளிவிவரமும் இல்லாமல் உத்தரப்பிரதேச அரசு கதை கட்டி உள்ளதே? எப்படி இவர்களால் உண்மைக்குப் புறம்பாக செய்தி வெளியிட முடிகிறது?
– தி.ரங்கன், நாகை
பதில் 10 : பொய்ப் புள்ளி விவரங்களே ஆர்.எஸ்.எஸ்; பி.ஜே.பி.களின் நடைமுறை. Trolls முதல், ஹிந்து மக்கள் தொகையை முஸ்லீம்கள் தாண்டி விடுவார்கள் என்ற ‘கப்சா’ – கற்பனை வரை எத்தனையோ இதுபோல் உண்டு!

No comments:

Post a Comment