பேரிடரிலும் வட மாநிலங்களுக்கு ஒரு நீதி - தமிழ்நாட்டுக்கு வேறொரு நீதியா? தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் மோடி பி.ஜே.பி. அரசுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

பேரிடரிலும் வட மாநிலங்களுக்கு ஒரு நீதி - தமிழ்நாட்டுக்கு வேறொரு நீதியா? தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் மோடி பி.ஜே.பி. அரசுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவீர்!

featured image

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை

பேரிடரிலும்கூட, வட மாநிலங்களுக்கு வெண் ணெய்யையும், தமிழ்நாட்டுக்குச் சுண்ணாம்பையும் கண்களுக்கு வைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்குத் தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க சபதம் எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் அதிதீவிர கனமழை பெய்து தமிழ் நாட்டை உண்டு இல்லை என்று பார்த்துவிட்டது. முதலில் சென்னையைச் சுற்றி உள்ள 4 மாவட்டங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. அதனை அடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட4 மாவட்டங்கள் மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்தன.

பிரதமரிடம் உள்ள மூன்று வாய்ப்புகள்!

இந்தச் சர்ச்சையில் அதிகமாக முன்வைக்கப்பட்ட கருத்து என்னவென்றால், பிரதமர் மோடி வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறார் என்பதுதான். “தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடருக்கு உதவுவதற்கான வகையில் 3 வாய்ப்புகள் பிரதமர் மோடிக்கு உள்ளன. முதல் வாய்ப்பு, Prime Minister’s National Relief Fund. இரண்டாவது வாய்ப்பு,PMCARES. மூன்றாவது வாய்ப்பு, National Disaster Response Force.

இந்த மூன்று நிதியிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட பிரதமர் வழங்கவில்லை என்பதேகூட நமக்கு எவ்வளவு பெரிய பேரிடர்!

PMNRF நிதியை எல்லோருக்கும் கொண்டுபோய் மோடி கொடுப்பார். 2022இல் குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்தது. அதில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் கொண்டுபோய் கொடுத்தார்.
தமிழ்நாட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ஒரே ஒரு ரூபாயையாவது பிரதமர் கொடுத்ததுண்டா?

அதேபோல, மோர்பி பாலம் இடிந்து விபத்து ஏற்பட் டது. அதில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் என்று அறிவித்தார். மகாராட்டிராவில் புல்தானா பேருந்து விபத்து நடந்தது. இதில் இறந்தவர்களுக்கு றிவிழிஸிதி நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் அறிவித்தார். 2021 மே மாதம் குஜராத்தை டாக்டே என்ற ஒரு புயல் தாக்கியது. இந்தச் சம்பவம் நடந்த இரண்டாம் நாளே, பாதிப்புக் குள்ளான இடங்களை எல்லாம் சுற்றிப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக அந்த மாநிலத்திற்கு வழங்கினார். அதில் இறந்தவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அறிவித்தார். ஆனால், இந்த நிமிடம் வரை பிரதமர் மோடி றிவிழிஸிதி நிதி யிலிருந்து தமிழ்நாட்டில் உயிரிழந்தவர் களுக்கு ஒரு ரூபாயைக் கூட ஒதுக்கவில்லை. என்னே வஞ்சனை?

காங்கிரஸ் ஆட்சியின் தாராள – நேர்மையான உள்ளம்!

காங்கிரஸ் ஆட்சியிலிருந்த காலகட்டமான 2012-2013 ஆண்டுகளில் 86% நிவாரணத்தைத் தமிழ்நாட்டிற்கு வழங்கியது. அதைப்போல் 2013-2014 இல் 50% நிவாரண நிதி தமிழ்நாட்டிற்குத் தரப்பட்டது.
ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2014 முதல் 2022 வரை 5,661 கோடி வசூல் செய்த பணத்தில், 2,116 கோடி ரூபாய்தான் கொடுத்திருக்கிறார் மோடி. அதாவது ‘‘வெறும் 37% நிதியைத் தான் கொடுத்திருக்கிறார்கள்” 2021-2022 கணக்கின்படி 5556.83 கோடி றிவிழிஸிதி நிதியில் மீதம் இருக்கிறது. அதிலிருந்து ஏன் தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்கவில்லை? ஏனென்றால், தமிழ்நாட்டின் மீது அவருக்கு அக்கறை இல்லை. றிவிசிகிஸிணிஷி நிதி யிலிருந்து எடுத்துக் கொடுக்கலாமே! இதிலிருந்து தமிழ்நாட்டுக்கு எந்தத் தொகையையும் அளிக்கமாட்டார். (இந்நிதிக்குக் கணக்கு வழக்குக் கிடையாது.) ஏனென்றால், தமிழ்நாட்டில் அவருக்கு வாக்கு வங்கி சுத்தமாக இல்லை. (தமிழ்நாட்டுக்கும் சேர்த்துதானே மோடி பிரத மர் – இல்லையா?). தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு எதற்கு தனது பெயரில் உள்ள நிதி என்று நினைத்து விட்டார் 15 ஆவது நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ழிஞிஸிதி-க்கு ரூ.54,776 கோடி நிதி 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியி லிருந்து எடுத்துக் கொடுத்திருக்கலாம், இவை எல்லாம் பேரிடர்களுக்காகவே வழங்கப்படவேண்டிய நிதி என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்நாடு கேட்டது என்ன? ஒன்றிய அரசு கொடுத்தது என்ன?

2015-2016 சென்னை மழை வெள்ளத்தின் போது, ரூ.25,912 கோடி நிவாரணமாக கேட்டதற்கு, 1,738 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.
2016-2017 வறட்சியின் போது 39,565 கோடி ரூபாய் கேட்டதற்கு ரூ.1,748 கோடி மட்டுமே கிடைத்தது.
2016-2017 வர்தா புயலின்போது 22,573 கோடி ரூபாய் கேட்டதற்கு, வெறும் 266 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.
2017-2018 ஒக்கி புயலின் போது 9,302 கோடி ரூபாய் கேட்டதற்கு, வெறும் 133 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.
2018-2019 இல் வந்த கஜா புயலின் போது 17,899 கோடி ரூபாய் கேட்டதற்கு, வெறும் 1,146 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது.

3 விழுக்காடு மட்டுமே நிவாரணத் தொகை தமிழ்நாட்டுக்கு!

2019- 2020 இல் நிவர் புயல் பாதிப்பிற்கு 3,758 கோடி ரூபாய் கேட்டதற்கு, நிவர் மற்றும் புரெவி புயல் என இரண்டுக்கும் சேர்த்து 286.91 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதில் நிவர் புயலுக்கு ரூ.63.14 கோடியும், புரெவி புயலுக்கு 223.77 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2017 இல் வறட்சி நிவராணம் 39,565 கோடி, வார்தா புயல் நிவாரணம் 22,573 கோடி, என மொத்தம் 62,138 கோடி ரூபாய் நிதியைக் கேட்ட தமிழ்நாட்டு அரசுக்கு, பிச்சை போடுவது போல வெறும் 2,014 கோடி ரூபாயை மட்டுமே கொடுத்தது மோடி பி.ஜே.பி. அரசு! ஆனால், அதே ஆண்டு 4,702 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கேட்ட கருநாடகவிற்கு 1,782 கோடி ரூபாய், மற்றும் 1,500 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கேட்ட ஆந்திராவுக்கு 518 கோடி ரூபாயும் அளிக்கப்பட்டு உள்ளபோது, தமிழகம் கேட்டதில் வெறும் 3 % மட்டும் நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் அநீதி!

ஒக்கி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்கும் பணி நடக்கவேயில்லை. குறிப்பாக ஆழ்கடலில் சிக்கிய மீனவர்களை வேண்டுமென்றே சாகவிட்டது மோடி அரசு. தப்பிப் பிழைத்த கொஞ்சம் பேரும் தங்களது சொந்த முயற்சியாலும், மற்ற மீனவர்கள் உதவியாலுமே பிழைத்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர் களாக இருப்பதும், மேலும் குமரி மாவட்ட மீனவர்கள் பெரும்பாலும் கிறித்தவர்களாக இருப்பதுமே மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்துக்கு முக்கியக் காரணம். அதனாலேயே 9,302 கோடி ரூபாய் நிவாரண உதவி கேட்டதற்கு வெறும் 133 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது.

குஜராத்துக்கு ஓடோடிச் சென்று நிதி அளித்தவர்தான் மோடிஜி!

மேலும் குஜராத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட டவ்தே புயல், அதி தீவிர புயலாக மாறி சேதத்தை ஏற் படுத்தியது. அங்கு இரண்டே நாள்களில் உடனடி நிவாரணமாக அதுவும் முதற்கட்டமாக ரூ.1,000 கோடியை வழங்கியது மோடி அரசு.
இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் நேரில் பார்த்தும் – கண்ட பலன் என்ன?
சென்னை பெருவெள்ள பாதிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டுச் சென்றார். அதன் பிறகு ஒன்றிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் வந்த பார்வையிட்டு பாதிப்புகளைக் கணக்கெடுத்தது, அவர்கள் தமிழ்நாட்டு அரசின் நிவாரணப் பணிகளைப் பாராட்டி அறிக்கை விட்டுச் சென்றனர்.
அதே போல் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வை யிட்டுச் சென்றார்.
இரண்டு அமைச்சர்களுமே பார்வையிட்டுச்சென்று 29 நாள்கள் ஆகிவிட்டன. இன்றுவரை அவர்கள் வெள்ளச்சேதம், அது தொடர்பான நிவாரண நிதி மற்றும் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட பேரி ழப்புகள் குறித்து எந்த ஒரு அறிக்கையையும் வெளியிட வில்லை. அல்லது இவர்கள் என்ன அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கும், பேரிடர் மேலான்மை செயலகத்திற்கும் வழங்கினார்கள் என்றும் தெரிய வில்லை. இது இனம் தெரியாத பெரும் புதிரே!

மக்களைக் குழப்பும் ஏமாற்று வேலை!

ஆண்டுதோறும் மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும் நிதியையும், திடீரென்று ஏற்படும் இயற்கைப் பேரிடர் நிதியையும் ஒன்றோடு ஒன்று குழப்பி, மக்கள் மூளையில் மயக்கப் பொடியைத் தூவுவது அசல் மோசடியல்லவா?
இயற்கைப் பேரிடரை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒன்றிய அரசு ரூ.900 கோடியைக் கொடுப்பது வழமையானது; இந்த நிதியும் இரண்டு தவணையாக அளிக்கப்படுகிறது.
இதையும், திடீரென இயற்கைப் பேரிடருக்கு தனித்து அளிக்கவேண்டிய நிதியையும் ஒன்றோடு ஒன்று குழப்புவது அறிவு நாணயமான செயல்தானா?
இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு உடனடியாக கொடுக்கவேண்டிய நிதி மற்றும் வெள்ளச் சேதங்களை அளவிட்டு கொடுக்கப்படவேண்டிய நிதிகள் போன்றவைகள் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய பங்குகள் குறித்து அறிக்கை ஒன்றுமே வெளியிடப்படவில்லை.
இதற்கெல்லாம் பதிலாக மோடி திருச்சியில் நிவாரண நிதியை வெளியிடுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதும் போல் அவர், ‘‘நான் கூடுதலாக கொடுத்துள்ளேன்; காங்கிரஸ் அரசு கொடுத் ததைவிட இரண்டரை மடங்கு அதிகம் கொடுத் தேன்” என்று கூசாமல் பேசுகிறார். நானும் தமிழ்மீது பாசம் கொண்டுள்ளேன் என்று வடநாட்டுக்காரர் பாணியில், தமிழில் கொஞ்சம் கொஞ்சம் பேசி, ஹிந்தியில் அதிகம் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டப் பேரவையில் போட்டு உடைத்தாரே!

தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர் கள் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறி வித்தாரே!
நிதியாண்டு 2014-2015 முதல் 2021-2022 வரை, ஒன்றிய அரசின் நேரடி வரியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், வரி பகிர்வாக இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது வெறும் ரூ.9,603 கோடிதான். நடப்பாண்டில் ரூ.3,533 கோடி ரூபாய் மட்டும்தான். இதே பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நிலைமைகள் வேறாக இருக்கிறது
நேரடி வரி வருவாயைப் பொறுத்தமட்டில், ஒன்றிய அரசின் நேரடி வரி விதிப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பில் தொடர்ந்து நாம் முன்னணியில் இருந்து வருகிறோம். ஆனால், அந்த பங்களிப்புக்கு நிகரான பகிர்வினைப் பெறவில்லை. ஒன்றிய அரசுக்கு வரி வருவாயாக தமிழ்நாட்டில் இருந்து செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஈடாக 29 பைசா மட்டுமே நமக்கு திரும்பக் கிடைக்கிறது. மாறாக, ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், அம்மாநிலம் செலுத் தும் வரி ஒரு ரூபாய்க்கு ஈடாக அவர்களுக்கு 2.73 ரூபாய் கிடைக்கிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அதிகாரப் பூர்வமாக பட்டியலிட்டுள்ளார்.
நிதியாண்டு 2014-2015 முதல் 2021-2022 வரை, ஒன்றிய அரசின் நேரடி வரியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், வரிப் பகிர்வாக இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது வெறும் 2.08 லட்சம் கோடிதான். இதே பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நிலைமைகள் வேறாக இருக்கிறது. உ.பி மாநிலத்தின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி மட்டுமே! ஆனால், அவர்களுக்கு வரி பகிர்வாக கிடைத்திருப்பது ரூ.9.04 லட்சம் கோடி. அவர்கள் செலுத்திய வரியைவிட, வரிப் பகிர்வு 4 மடங்கு அதிகமாக கிடைத்திருக்கிறது. இதுதான் ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணிலே சுண்ணாம்பும் என்பது!
அதுமட்டுமல்ல, ஒன்றிய நிதிக் குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ச்சியாக நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு நிகராக இருக்கக்கூடிய நிதி ஒதுக்கீடு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அதாவது, 12 ஆவது நிதிக்குழுவில், 5.305 சதவீதமாக இருந்த நிதி ஒதுக்கீடு 12 ஆவது நிதிக்குழுவுக்கு வரும்போது 4.079 சதவீதமாக குறைந்து வருகிறது.

மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவதிலும் ‘தோஷம்!’

மோடி ஆரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2022 ஆம் ஆண்டுவரை ஒன்றிய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக் கிய நிதி ரூ.1,488 கோடி, தமிழுக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு இது நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேட்ட கேள்விக்கு எழுத்துமூலமாக கொடுத்த பதில் ஆகும். ஆனால் மோடி திருச்சி மேடையில் உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தமிழின் புகழ் பாடுவேன் என்று பிரமதர் மோடி கூறுகிறார்.
தமிழ் மக்களுக்குத் தமிழ் நாட்டிற்கும் துரோகம் செய்துகொண்டே நான் தமிழ்நாட்டிற்கும், அதிக நிதி கொடுத்தேன் என்று கூறுகிறார்.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டு மக்களே,
உங்கள் கடமை என்ன?

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மோடி தலைமையிலான ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்திட – வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் சபதம் எடுத்துக்கொள்ளவேண்டும்! வேண்டும்!!
கேட்டது உணவு; கிடைத்தது கல். என்னே, ஓரவஞ்சனை!
உரிமையை ஏதோ சலுகையாக மாற்றிடும் கொடூரம் நியாயமா?

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
4.1.2024

No comments:

Post a Comment