‘தினமணி' தலையங்கத்திற்கு மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 24, 2024

‘தினமணி' தலையங்கத்திற்கு மறுப்பு

featured image

‘தினமணி’ தலையங்கத்திற்கு மறுப்பு: தவமிருந்தான் சூத்திரன் சம்பூகன் என்று வெட்டிக் கொன்றவன்தானே ராமன் – கதைப்படி?
மீண்டும் அந்த ‘‘வருணாசிரம ராமராஜ்ஜியம்” வரவேண்டுமா?
வரும் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு நின்று பி.ஜேபி.யின் மனு-ராமராஜ்ஜியத்தை வீழ்த்தட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

அயோத்தியில் ராமன் கோவில் திறப்பு விழாவை வரவேற்றுப் பாராட்டி தலையங்கம் தீட்டும் ‘தினமணி’ வருணாசிரம தர்மத்துக்கு மாறாக தவமிருந்த சம்பூகன் என்ற சூத்திரனின் தலையை வெட்டி னானே ராமன்; அந்த ராமராஜ்ஜியம், வருணாசிரம தர்மம் மீண்டும் மலரவேண்டும் என்று விரும்புகிறதா தினமணிகள்? வரும் மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு நின்று, ராமராஜ்ஜியம் அமைக்கவிருக்கும் பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்த வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

‘மலர வேண்டும் ராமராஜ்ஜியம்’ என்ற தலைப்பில் நேற்று (23-1-2024) ‘தினமணி’ நாளேடு தலையங்கம் தீட்டி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது!

‘தினமணி’ ஏட்டின் முரண்பாடான தலையங்கம்!

‘‘கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது; அயோத்தி ஸ்ரீராமர் கோவில் பிராண பிரதிஷ்டை ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூண்டது என்றுதான் சொல்லவேண்டும். இதைக் கருப்புத் தினமாக அனு சரிக்கிறோம் என்கின்ற சிலரின் செயல்பாடு, பூனைக் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கருதும் அசட்டுத்தனம் என்பதல்லாமல் வேறென்ன என்று ‘குசலேயாசனி’ பாடி மகிழ்கிறது ‘தினமணியும்’ அதன் வழியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காவிகளும்.
முதல் வாக்கியத்திலேயே முரண்பாடு முட்டி நிற்பதைக்கூட அதை எழுதியவர் ஏனோ அறியவில்லை!
ஒட்டுமொத்த இந்தியாவை விழாக்கோலம் பூண்டது என்று கூறிவிட்டு, இதைக் கருப்புத் தினமாக அனுசரிக் கிறோம் என்பதாக சிலரின் செயல்பாடு உள்ளது என்பதையும் கூறி, ஒளிந்திருந்த பூனைக்குட்டி அவரையும் மீறி வெளியே தலைகாட்டியுள்ளது!

பி.ஜே.பி. கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் ‘ஜூம்லா’தானா?

அதை ஏற்காத மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் – அது பக்திக்கான இராமன் அல்ல; தேர்தலில் ஜெயிப்ப தற்கு வேறு முக்கிய சாதனைகள் – மக்களுக்கு 10 ஆண்டுகளில் கொடுத்த முந்தைய தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாததாலும், அவர்கள் தரப்பு ஒப்புதல் வாக்குமூலமே அவை வெறும் ‘ஜூம்லா’ (புரூடா) என்று கூறப்பட்டுவிட்டதாலும், வேலையின்மை, விலைவாசி உயர்வு, கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்புத் திட்டம் அம்பேல், விவசாயிகளின் வாழ்வை இரட்டிப்பு மடங்கு உயர்த்துவது, மீனவர்கள் பாதுகாப்புக்கு வாயால் வடை சுட்டது எல்லாம் நீர்மேல் எழுத்துக்களாகிவிட்டதாலும், அதை இளையர்கள்முதல் மகளிர், முதியவர்வரை புரிந்துகொண்டுள்ளதாலும், அவர்களை ஏமாற்றி, அவர்களது வாக்குகளைப் பறிக்கவே இராம பக்தி என்ற ‘மயக்க பிஸ்கெட்டு’ விநியோகம் பலத்த வெளிச்சத்துடன் என்பதை ஹிந்து மத பார்ப்பனர்களின் நான்கு சங்கராச் சாரிகள்முதல் பிராமணர் சங்கத்தினர் உள்பட புறக்கணித் துள்ளனர்; பகிரங்கப் பேட்டிகள், அறிக்கைகள் முதல் பலவற்றை செய்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் ‘தினமணி’யாரின் பார்வையில் ‘அசட்டுப் பூனைகள்’தானா?

ஸநாதனம் படும்பாடு சந்திக்கு வந்து நிற்கிறதே!
ஆர்.எஸ்.எஸ். குரலை அப்படியே எதிரொலிக்கும் ‘தினமணி!’
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குரலை அப்படியே ‘ஹஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ என்பதாக இத்தலையங்கம் கூறுகிறது.
‘‘இந்தியாவில் உள்ள அனைவரும் பிறப்பால் ஹிந் துக்கள்; நம்பிக்கையால் அவரவர் விரும்பும், ஏற்றுக் கொள்ளும் மதத்தைச் சேர்ந்தவர்கள் – இது ஏற்புடையதா, சட்டப்படி?
ஹிந்து லா என்ற ஹிந்து சட்டத்தின் ஹிந்து என்பதற்கு இந்த வரைமுறை ஏற்கப்பட்டிருக்கிறதா?
அனைவரும் ஹிந்து என்று சொல்லிவிட்டால், பிறகு ஏன் ஆர்.எஸ்.எஸ். 80:20 மெஜாரிட்டி, மைனாரிட்டி என்று ஹிந்து – முஸ்லீம் என்று பிரித்து பகிரங்கமாக உ.பி. போன்ற மாநிலங்களில் வாக்குக் கேட்டு வெளிப்படையாகப் பேசி வீண் வம்பை விதைக்கின்றனர்.
இந்தியாவில் பிறந்தவர் அனைவரும் ஹிந்துக்களா?
ஹிந்து லா என்ற சட்டப்படி இந்தியாவில் பிறந்த அனைவரும் ஹிந்து என்றால், பிறகு அரசமைப்புச் சட்டம் கூறும் சிறுபான்மை கல்வி, கலாச்சார உரிமையை ஏன் மறுக்க வேண்டும்? 80:20 சதவிகிதம் வெறுப்புக் கூச்சல் உண்டானது தவறல்லவா?
அத்தலையங்கத்தின் மற்றொரு சுயமுரண் – வித்தை காட்டும் வேடிக்கை விளையாட்டு (வார்த்தை விளை யாட்டு) ‘‘அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது இராமனல்ல.” பின் என்னவாம்?
இராம ராஜ்ஜியத்தின் அடையாளமாம்! ஆரியப் பூனைக்குட்டிகள் அதன் சாக்குமூட்டையிலிருந்து குதிக்கின்றன!
இராமர் அல்ல, ஓட்டு வங்கிக்கான பக்தி விஷ உருண்டை – தேர்தல் மந்திரக்கோல் என்பதைத்தான் சொல்லாமற் சொல்கிறதோ!
இராமராஜ்ஜியத்தின் அடையாளம்!

தவம் செய்த சம்பூகனை சூத்திரன் என்று கூறி வெட்டிக் கொன்றவன்தானே ராமன்?

காட்டில், தனியே கடவுள்களை நோக்கி தலைகீழாக நின்று ‘சூத்திர சம்பூகன்’ என்பவன் தவம் செய்தான். இது மனுதர்ம வருணதர்மம் – விரோதம் (காரணம் ஞானியானாலும், முனிவர்களானாலும், பிராமணனையே கடவுளாக சூத்திரன் வணங்கவேண்டுமே தவிர, நேரிடையாகக் கடவுளைப் பூஜிக்கும் உரிமை கீழ்ஜாதி, நாலாஞ்ஜாதி சூத்திரனுக்கு இல்லை என்பதால்) அதனால் ‘‘தர்மம்” அழிந்தது; அழிந்ததால், பார்ப்பனச் சிறுவன் உனது ஆட்சியில் இறந்தான் என்று ராம சபையில் முறையிட, உடனே எவ்வித விசாரணையும் இன்றி, நேரே வாளெடுத்துச் சென்று தவஞ்செய்த சூத்திர சம்பூகனை ராமன் வெட்டிக் கொன்றான்; உடனே இறந்து போன பார்ப்பனச் சிறுவன் உயிர்ப் பிழைத் தெழுந்தான் என்று கூறும் வால்மீகி இராமாயணத்தின் உத்தரகாண்டத்தின் ஆட்சியின் அடையாளமே இதுதானே!
எனவே, இராமராஜ்ஜியம் என்பது அசல் மனுதர்ம ஆரிய தர்ம வருணாசிரம தர்மமே!

பார்ப்பன ஆதிக்க அதிகாரத்தை நிலை நிறுத்தி, அனைவருக்கும் சமநீதி என்ற சமூகநீதிக்கு விடை கொடுப்பது என்பதுதானே அந்த அடையாளத்தின் வெளிப்பாடு.
இது வேண்டுமா?

ஜனநாயகம் பிழைக்க ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு நிற்கட்டும், வெல்லட்டும்!

தேர்தலில் பிரச்சாரம் வெடிக்கும் – மயக்கம் தெளிந்தால் மட்டுமே ஜனநாயகம் பிழைக்கும்!

புதிய இந்தியா கூட்டணி இணைந்து பணியாற்றி நாட்டுக்கு நல்வாழ்வு மலரட்டும்! ஜனநாயகத்தைக் காப்பாற்றட்டும்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
24.1.2024 

No comments:

Post a Comment