சம உரிமைப் போர் துவக்கிய இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

சம உரிமைப் போர் துவக்கிய இயக்கம்

சென்ற 25.4.1936 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தங்க சாலைத் தெரு, 327ஆவது நெம்பர் கட்டட மேல் மாடியில் சென்னை சுயரியாதை இளைஞர் மன்றத்தின் ஆதரவில் தோழர் டி.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைவர் முன்னுரை கூறிய பின் தோழர்கள் கே.எஸ்.நாதன், எஸ். பிரகாசம் ஆகியவர்கள் “ஜஸ்டிஸ் இயக்கம்” என்பது பற்றிப் பேசினார்கள்.

திரு.கே.எஸ்.நாதன்
சென்ற சிறிது நாட்களாக பொதுவாக சென்னை மாகாணத்தின் பல பாகங்களில் ஜஸ்டிஸ் இயக்கத்தைக் குறித்து மிகவும் தூஷணையாக பிரச்சாரத்தைச் செய்து வரு கின்றார்கள். இந்தப் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கமளிக்கக் கூடிய மாதிரி நமது நண்பர்களில் பலரும் அவர்களுக்கு மனப்பூர்வமாக பேருதவி செய்யாவிடினும், நண்பர்களது போக்கை அவர்கள் தங்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக ஆக்கிக் கொள்ளுகின்றனர்.

ஜஸ்டிஸ் கட்சி பிறப்பு
சென்ற 19 ஆண்டுகளாக தென்னாட்டு பிராமணரல்லாதார் மக்கள் தமது சுதந்திரத்தை அளித்த வலிமை பொருந்தின தோர் உத்வேகம் ஜஸ்டிஸ் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியாலும் அளிக்க இயலவில்லை.
பல நூற்றாண்டாக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பிராமணர்களின் அடிமைகளென்றும், அவர்கள் சொல்படி ஆடும் கருவிகளென்றும் கருதி வந்ததை அறவே ஒழித்தது. சமூகக் கொடுமைகளிலும், அரசியல் கொள்கை, உத்தி யோகம் முதலியவைகளிலும் கடந்த அரை நூற்றாண்டுகளாக பிராமணர் ஆதிக்கம் பெற்றிருந்ததைக் கண்டு நம் மக்களும் சம உரிமை பெறவேண்டும் என்ற சுயமரியாதை சுதந்திர உணர்ச்சியைக் கொண்டே இக் கட்சியை காலஞ் சென்ற டாக்டர் நாயர் பெருமானும், சர். தியாகராயரும் கண்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அடிமைத் தனத்தில் ஆழ்ந்து கிடந்த பிராமணரல்லாதார் மக்களுக்கு இவ்வறிஞர்கள் கண்ட அறிவுச் சுடராகிய ‘ஜஸ்டிஸ் இயக்கம்’ பெரும் ஆதரவாக இருந்தது என்பதை கூறவும் வேண்டுமா?
வாலிப இளைஞர்கள் தங்கள் சுயமரியாதையைக் காப் பாற்ற முன் வந்து நியாயக் (ஜஸ்டிஸ்) கட்சியின் கொள்கை களை தீவிரமாக பிரச்சாரஞ் செய்ய ஆரம்பித்தார்கள்.
அக் கூட்டத்தில் நமது நண்பர்களான தோழர்கள் ஜே.என். இராமநாதன், ஒ.சி. ஸ்ரீனிவாசன், திண்டுக்கல் சுப்பிர மணியம் போன்றவர்களின் பெயர்கள் குறிப்பிடத்தகுந்த தாகும்.

தலைவர்கள் என்பவர்கள் எப்பொழுதும் சாசுவதமாக ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அது குறிப்பாக பெரும் பான்மையான ஒரு பெருங்குடி மக்களின் சுயமரியாதையை தங்கள் மேற்போட்டுக் கொண்டு டாக்டர் நாயரும், சர். தியாகராயரும் அதிக நாள் வாழ இயலவில்லை. அவர்கள் அகால மரண மடைந்தனர். அதன்பின் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர் காலஞ் சென்ற பானகல் பெயர் குறிப்பிடத்தகுந்தது. அஞ்சா நெஞ்சம் படைத்த இவ்வீர சிங்கம் கட்டு திட்டங்களுடன் கட்சியைப் பலப்படுத்தி செய்து வைத்த சீர்திருத்தக் கோட்டையின் மதிற் சுவர்களில் தான் இன்று ஜஸ்டிஸ் கட்சி நிற்கின்றது எனக் கூறல் மிகையாகாது.
தென்னிந்திய சரித்திரத்தில் பானகல் ராஜா செய்து முடித்த அரிய செய்கைகள் என்றும் தங்க லிபிகளில் எழுதக் கூடியவைகளாக பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், இந்து மத சீர்திருத்த பரிபாலன போர்டு போன்ற குறிப்பிடக் கூடிய பல முக்கிய செய்கைகளுக்கு கர்த்தா இவர் என்றால் தென்னாடு இவருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது.
இவ்வீர சிங்கம் மறைந்த பின்னர் பிராமணரல்லாதார் இயக்கத்தின் கதி சிறிது மங்கிவிட்டது எனக் கூறித்தான் தீர வேண்டும். சரியான தலைவர் இன்றி கட்சிக்குள் சிறிது கட்டுப்பாடின்றி சிறிது காலம் ஊக்கத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. இக்குறை மிகவும் குறிப்பிடக் கூடியதோர் வெற்றியை கட்சிக்கு அளிக்க முடியாமல் சிறிது காலம் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கையில், தற்போது கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனம். பொப்பிலி ராஜா அவர்களை இயக்க அபிமானிகள் தங்கள் தலைவராக அமைத்துக் கொண்டார்கள். வீரமும் – இளமையும் நிறைந்த இவர் கட்சிக்காக அல்லும் பகலும் உழைக்கும் உத்தமர்.

பொது மக்களைக் குறித்த வரையில் இக்கட்சியின் பிரதானக் கொள்கைகள் பிராமணரல்லாதார் சமூகத்திற்கே குறிப்பாக உரியதென நாம் முன்னமேயே குறிப்பிட்டு விட்டோம். ஏழரைக் கோடி நசுக்கப்பட்ட ஆதித்திராவிட மக்களின் உரிமைக்காகப் பாடுபட்டு, அவர்களை முதன் மைப்படுத்தி இன்று இந்திய சட்ட சபைகளிலும், மாகாண சட்டசபைகளிலும் தங்களது உரிமைகளை எடுத்துரைக் நாவன்மை படைத்த தலைவர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்களை உற்பத்தி செய்த பெருமை ஜஸ்டிஸ் கட்சிக்கு என்றும் உரித்தாகும். கல்வியிலும் பொது மக்களுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் செய்ததைப் போல் வேறு எக்கட்சியின் நிருவாகத்திலும் செய்ய இயலவில்லை எனக் குறிப்பிடுவது பெருமையாகாது. நேற்று முன் தினம் கிளம்பின ஹரிஜன இயக்கத்திற்கு பின் ஏற்படுத்தப்பட்ட சில கல்வி பயிற்றுவிக்கும் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுவதற்கு முன்னமேயே ஜஸ்டிஸ் கட்சியார் கட்டாயப் படிப்பு திட் டத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும், அதற்காக மிகவும் உழைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். மற்ற மாகாணங் களுடன் சென்னை மாகாணத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் மற்ற மாகாண பொது மக்கள் கல்வியில் எவ்வளவு பிற்போக்காளர்களாக இருக்கின்றார்கள் என்பது கண்டறிந்த உண்மையாகும்.
சென்னை மாகாணத்திற்குட்பட்ட சுதேச சமஸ்தானங் களை எடுத்துப் பார்த்த போதிலும் கொச்சி, திருவாங்கூர், மைசூர் போன்ற சமஸ்தானங்களில் கல்வி பெற்றவர்கள் நிறைந்திருப்பதுபோல் வேறு எந்த சமஸ்தானத்திலும் இல்லை என்பது தெரிந்த விஷயம். குறிப்பாக பெண் கல்வி யில் இந்தியாவிற்கே இச்சமஸ்தானங்கள் திலகங்களென விளங்குகின்றன.
குறிப்பிட்டவரை அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு பொது மக்களுக்கு கல்வியை எவ்வளவு தூரம் பரப்பலாமோ அத்தனை தூரமும் ஜஸ்டிஸ் கட்சியார் பிரயாசைப்பட்டு வருகின்றனர்.
ஜஸ்டிஸிற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் எப்படிப் பட்ட தாரதம்மிய மான வித்யாசங்களை எதிரிகள் அல்லது நண்பர்கள் கற்பித்த போதிலும் இரண்டும் சகோதர இயக் கங்கள் என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது.

திரு.எஸ்.பிரகாசம்
ஜஸ்டிஸ் கட்சி தோன்றி இன்று 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அது செய்த பல தொண்டுகளை மக்கள் வெகு சீக்கிரத்தில் மறந்து விடுவதற்குக் காரணம் பார்ப்பனர்களின் விஷமப் பிரச்சாரமேயாகும். இக்கட்சி வகுப்புத் தீர்ப்பின்படி எல்லா வகுப்பாருக்கும் விகிதாச்சாரப்படி உத்தியோகம் வழங்கியதால் 100க்கு 10 பேர் இருந்து கொண்டு, 80 வீதம் பெரிய உத்தியோகங்களில் கலந்து கொண்டிருந்த பார்ப் பனர்கள் ஆத்திரம் கொண்டு இக்கட்சியை வகுப்புவாதக் கட்சி என்றும் – இன்னும் பலவாறாகத் தூற்றுகின்றார்கள். வகுப்புத் தீர்ப்பு இல்லாவிடில் தாழ்த்தப்பட்ட மக்கள் உத்தியோகம் செய்ய முடியாது. ஜஸ்டிஸ் கட்சி ஜனங்களுக்கு நன்மை செய்திருக்கின்றது என்பதற்கு வகுப்புத் தீர்ப்பு ஒன்றே போதுமான அத்தாட்சியாகும். வகுப்புத் தீர்ப்புப்படி பார்ப்பனர்களுக்கு
100க்கு 3 அல்லது 4 உத்தியோகங்கள்தான் கிடைக்கும் என்ற காரணத்தால் பார்ப்பனர்கள் இக்கட்சியைத் தூற்று வதைக் கண்டு, நம்மவர்களும் அவர்களைத் தொடர்ந்து கொண்டு வகுப்பு கிளப்புகின்றார்கள் என்பது நம்மவர்களின் அறியாமையைக் காட்டுகின்றது.
ஜஸ்டிஸ் கட்சி ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்து இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகும். தாழ்த்தப்பட்டவர்களை வீதியில் சமமாக அனுமதித்தது; பள்ளிக்கூடங்கள், பொதுக் கிணறுகள் முதலிய வசதிகள் ஏற்படுத்தியது காங்கிரஸ் தீண்டாமை விலக்கு ஆரம்பிப் பதற்கு முன்னமே தாழ்த்தப்பட்டவர்களை தாலுகா போர்டு, ஜில்லா போர்டு, சட்ட சபைகளிலும் மேல் ஜாதிக்காரருக்கு சமமாக உட்கார வைத்ததென்றால் ஜஸ்டிஸ், காங்கிரசை விட பெரிய கட்சிதான்.
இன்னும் ஏழை விவசாயிகளுக்குச் சாதகமாக இனாம் மசோதாவும் கொண்டுவந்து நிறைவேற்றியது. அது உள் நாட்டுக் கிளர்ச்சி இன்மையாலும், பலருடைய சூழ்ச்சியாலும் வைசிராயால் அங்கீகரிக்கப்படாமல் போயிற்று. மீண்டும் ஜஸ்டிஸ் கட்சியாரால் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு கனம் வைசிராயின் அங்கீகாரம் பெறப்பட்டது என்று பேசி முடித்தார்.

– ‘விடுதலை’ – 29.4.1936

No comments:

Post a Comment