இந்து மதத்தில் உள்ள அனைவரும் இராமனை ஏற்கிறார்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 17, 2024

இந்து மதத்தில் உள்ள அனைவரும் இராமனை ஏற்கிறார்களா?

featured image

வைஷ்ணவ தர்ம தலைமையகமான வைஷ்ணவ அகாடா பரிசத் செய்தி தொடர்பாளர் மகந்த் மவுரிசங்கர் தாஸ் வெளியிட்ட அறிக்கை முன்னணி ஹிந்தி நாளிதழான தைனிக் பாஸ்கரில் வெளியாகி உள்ளது. அதில்,

“சங்கராச்சாரியார்கள் வைஷ்ணவ அகாடாவிற்கு தொடர்பு உள்ளதா என்று தெளிவுபடுத்த வேண்டும். இவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் குரலாக பேசுகின்றனர். இவர்களின் முடிவு ஸநாதன தர்மத்திற்கு எதிரானதாகும்.

ஸநாதன தர்மத்தினைக் காப்பாற்ற இவர்கள் அவதாரம் எடுக்கவில்லை. 4 சங்கராச்சாரியார்களும் அவர்களுக்குண்டான மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
வைஷ்ணவ அகாடாவின் (வைணவ) மத தலைமையின்கீழ் 13 வைணவ அகாடாக்கள் உள்ளன. இந்த அகாடாவில் உள்ள அனைவரும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தருவார்கள்.
புனிதமான தருணத்தில் ராமர் கோவில் திறப்பு விழாவை அகாடா விவாதப் பொருளாக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் வைஷ்ணவ அகாடா பரிஷத் செய்தித் தொடர்பாளர் மகந்த் மவுரிசங்கர் தாஸ்.”

இதன்மூலம் என்ன தெரிவிக்கப்படுகிறது? ‘ராமன்’ வைஷ்ணவ சம்பந்தப்பட்ட கடவுள் (மகாவிஷ்ணுவின் அவதாரம்) இந்த நிலையில் ஸ்மார்த்தரான சங்கராச்சாரியார்கள் கருத்துக் கூற உரிமை கிடையாது என்பது தானே.

முன்பு சிறீரங்கம் கோவில் குடமுழுக்கு முடிந்த நிலையில், ஜீயரிடம் ‘கல்கி’ பேட்டி கண்டபோது கேள்வி ஒன்றைக் கேட்டது. அதற்கு ஜீயர் அளித்த பதில் இதோ:
“நான் சிவன் கோயில்களுக்குச் செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா… ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்று கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான். தபஸ் பண்ணி அந்த பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும், அதேபோல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்கு பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபடமாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும்… அதனாலே சிவன்கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தர மாட்டேன்…”             கல்கி, 11.4.1982)

ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று பேசும் பிஜேபி சங்பரிவார் வட்டாரங்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லுமா?
ராமனை ஜீயர்களே ஏற்றுக் கொள்ளாதபோது (அவரும் இந்து மதத்தவர்தானே!) மற்ற எல்லா மதத்த வரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது – வற்புறுத்துவது எந்த வகையில் சரியானதும், நியாயமானதும் ஆகும்?

No comments:

Post a Comment