ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 30, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1 : 303 இந்தியர்களுடன் (இதில் 208 பேர் குஜராத்திகளாம்) மனிதக்கடத்தல் விமானம் ஒன்று பிரான்ஸில் இறங்கி உள்ளது. ஆனால், இந்தியாவின் பெருமையைப் பறைசாற்ற பிரான்ஸ் அதிபரை குடியரசு நாள் விழாவிற்கு அழைக்கிறோம் என்கிறார்களே?
– வா.முகிலன், தாம்பரம்
பதில் 1 : நீங்கள் கூறும் மர்மங்களின் முடிச்சுகள் பற்றி யானறியேன் – என்ன செய்வது?

—-

கேள்வி 2 : தென் மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த நிர்மலா சீதாராமன் சிறீவைகுண்டம் பெருமாள் கோவில் தேர்வரும் பாதையை செப்பனிட்டு முடியும் வரை இருந்துவிட்டுத்தான் செல்வேன் என்கிறாரே?
– கி.வேங்கைமாறன், மல்லை
பதில் 2 : ‘அவாள்’ யார்? மனித உறவுகளின் நல்வாழ்வைவிட அவாளுக்கு முக்கியம் – அவாள் கூட்டத்தின் புரோகித, அர்ச்சகத் தொழில் மிக விமரிசையாகத் தொடர வேண்டும் என்பதற்கு ஆதாரமான சான்றாகும்.
வைகுண்டபெருமாள் சக்தியை நம்பாமல் தி.மு.க. அரசிடம் அல்லவா மனு போட்டிருக்கிறார் நிதியமைச்சர். கடவுள் சக்தி இவ்வளவுதான் என்பதை இவரே – அதை நம்பாமல் இப்படி கூறுகிறார் போலும்!

—-

கேள்வி 3 : ராணுவம் மக்களை தொல்லை செய்யக்கூடாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளாரே?
– க.ஏகலைவன், காஞ்சி
பதில் 3 : நல்ல அறிவுரைதான். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இதன் தாக்கம் ஏற்பட்டால் நலனே!

—-

கேள்வி 4 : ஒன்றிய அரசு வெள்ளப் பாதிப்பு நிவாரணத்தை கொடுப்பார்களா? கொடுக்க மாட்டார்களா?
– ம.காளியப்பன், ஓசூர்
பதில் 4 : அள்ளித் தரவேண்டிய நேரம் இது! கிள்ளியாவது கொடுப்பார்கள் என்று நம்புவோமாக!

—-

கேள்வி 5 : விலைவாசி உயர்கிறது, குறைக்க வழி எங்கே என்றால் மாதம் 5 கிலோ இலவச அரிசி தருகிறேன் என்கிறதே ஒன்றிய அரசு
– தே.இளங்கோ, மதுரை
பதில் 5 : வித்தைகளால் தொடருவதே இந்த ஒன்றிய ஆட்சியின் நடைமுறை!

கேள்வி 6 : இந்த ஆண்டு மிகப் பெரிய ரயில் விபத்து நடந்தும் அதை ஏதோ இரண்டு சைக்கிள்கள் மோதிக்கொண்டது போல் ஒன்றிய அரசு கடந்துசென்றுவிட்டதே??
– ப.சாக்கியன், திண்டிவனம்
பதில் 6 : என்ன செய்வது? ‘ஊடகங்கள் வாயில் பிளாஸ்திரி’; எஞ்சியவர்களுக்கும் அச்சுறுத்தல், நாடாளுமன்றத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவமும் அப்படியே செய்யப்பட்டு விட்டது.

—-

கேள்வி 7 : ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆண்டு இப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுவதை சில நாளிதழ்கள் 6 பக்கத்தில் வெளியிடுகின்றனவே? ஆண்டு இறுதியில் அதை ஒப்பிட்டுப் பார்ப்பது யாரோ?
– தி.ஆறுமுகம், சேலம்
பதில் 7 : நல்ல யோசனை – சென்ற சில ஆண்டுகளின் கணிப்பு – பிறகு நடைமுறையில் அதற்கு நேர் எதிரான நடப்புகளை நாமே ‘விடுதலை’யில் தொகுத்து வெளியிடலாம். யோசனைக்கு நன்றி!

—-

கேள்வி 8 : ராமர் காப்பாற்றினாரா? ராமரைக் காப்பாற்றினார்களா?
– செ.விவேகா, நெல்லை
பதில் 8 : ராமர் எப்போது யாரைக் காப்பாற்றினார்? பிராமணர்களைத் தவிர? – இராமாயணக் கதைப்படி, அவரது சீதையையே கூட காப்பாற்றத் தவறி விட்டவர்தானே அவர்.

—-

கேள்வி 9 : அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு நேரடியாகவும், உமாபாரதிக்கு மறைமுகமாகவும் ராமர்கோவில் பக்கம் எல்லாம் வரக்கூடாது என்று உத்தரவு சென்றுள்ளது குறித்து?
– வே.சக்தி, புதுக்கோட்டை
பதில் 9 : அவர்களுக்கே வெளிச்சம்!

—-

கேள்வி 10 : மாற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டம் பெரும் ஆபத்தை கொண்டுவரும் என்று மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளது குறித்து?
– கி.மாசிலான், உத்திரமேரூர்
பதில் 10 : நூற்றுக்கு நூறு உண்மை. இது பற்றி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் கருத்தரங்குகளை நடத்தி மக்களுக்கு ‘அறிவு கொளுத்த வேண்டியது’ அவசர அவசியமாகும்.

No comments:

Post a Comment