விடுதலை சந்தா - ஓர் அரிமா நோக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 9, 2023

விடுதலை சந்தா - ஓர் அரிமா நோக்கு!

featured image

அருமைத் தோழர்களே!
உலக வரலாற்றில் நமது இயக்கத்தைப் போன்ற சமூகப் புரட்சி இயக்கத்தை எந்த ஆவணக் காப்பகத்தில் தேடினாலும் கிடைக்காது.
தந்தை பெரியார் நினைத்திருந்தால் அரசியல் பதவிகளின் எந்த உச்சத்திற்கும் போயிருக்கலாம்.
பதவி – அவர் வீட்டின் கதவைத் தட்டி தாள் பணிந்து நின்ற போதும், ‘நீ தேடி வந்த பேர்வழி நானல்லவே!’ என்று துரத்தி அடித்தவர் நமது சகாப்தத் தலைவர் தந்தை பெரியார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்குமேலாக அழுத்தப் பட்ட சமூகத்தைத் தூக்கி நிறுத்தி, சுயமரியாதைப் பிராண வாயுவை ஊட்டி, பகுத்தறிவுக் குருதியைப் பாய்ச்சி, ‘நீ மனிதன் – உனக்குப் பகுத்தறிவு உண்டு – நீ ஏன் பக்திப் பைத்தியம் பிடித்து அலைகிறாய்? மத மதம் பிடித்துப் பிதற்றித் திரிகிறாய்?’ எனக் கேள்வித் தீயை மூட்டி மரத்துப் போய்க் கிடந்த மூளை நரம்புகளை மீட்டி, இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டமே நம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் திராவிடப் பூமியாக மாற்றியதோடு, தனது மறைவிற்குப் பிறகும் இந்தத் திராவிடப் புரட்சி இயக்கம் பட்டுப் போய்விடாமல், பூத்துக் குலுங்கு வதற்கான அனைத்துப் பலமான ஏற்பாடுகளையும் தொலைநோக்கோடு கட்டமைத்துதான் தன் சுவாசத்தைத் துறந்தார் – காலந்தந்த கருஞ்சூரியனாம் தந்தை பெரியார்.
அவரின் போராட்டக் களமானது – நம் இன மக்களின் மூளையாக இருந்தது; அதன்மீது படிந்த களைகளைக் கலையாவிட்டால், அறிவுப் புலன் இயங்காது என்பதைத் துல்லியமாக உணர்ந்து பிரச்சாரம் – போராட்டம் என்ற இரு அணுகு முறைகளைக் கையாண்டார்.
பிரச்சாரம் என்பது வெறும் மேடைப் பேச்சு மட்டுமல்ல; ஏடுகளாகவும், இதழ்களாகவும் பரிண மித்தது.

அதுகுறித்து இன்றைக்கு 75 ஆண்டுகளுக்குமுன் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் (13.11.1938, ”பெரியார்” என்ற வரலாற்றுப் பட்டம் அளிக்கப்பட்ட மாநாட்டில் அது) நிறைவேற்றப்பட்ட 19 ஆம் தீர்மானம் என்ன கூறுகிறது?
”வியாபாரப் பத்திரிகைகளைப் போலல் லாமல், தமிழர் முன்னேற்றம் ஒன்றையே கருத்தில் கொண்டு, பெரிய கஷ்ட நஷ்டங்களுக் கிடையே ஓயாது, உண்மையாய் உழைத்து வரும் ‘விடுதலை’, ‘குடிஅரசு’, ‘நகர தூதன்’, ‘பகுத்தறிவு’, ‘ஜஸ்டிஸ்’, ‘சண்டே அப்சர்வர்’ முதலிய பத்திரிகைகளைத் தமிழ்ப் பெண் மணிகள் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது” என்பதுதான் அந்தத் தீர்மானம்.
பெண்களை முன்வைத்து இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது என்பது கருத்தூன்றிக் கவனிக்கத் தக்கதாகும்.
‘விடுதலை’ சந்தாக்களை ஆண்களிடம்தான் திரட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை – அதிலும் முக்கியமாகப் பெண்களிடம்தான் ‘விடுதலை’ போய்ச் சேரவேண்டும்.

பெண்களை ‘விடுதலை’பற்றிக் கொள்ளு மானால், விடுதலை அவர்களுக்கு மட்டுமல்ல, பழைமையைப் புரட்டித் தள்ளி புத்துலகப் பூங்காவை உருவாக்கியே தீரும்.
பெண்களிடம் நம் கொள்கை போய்ச் சேரு மானால், அவர்களைவிட உறுதியாக ஆண்கள் கூட இருக்க முடியாது.
கழகத் தோழர்களே, இதைக் கவனத்தில் கொண்டு களமாற்றுங்கள்!
‘விடுதலை’பற்றி இன்னொரு இனிய செய்தி உண்டு.
அதனை நம் திராவிட இயக்கப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உரையின் வாயிலாகக் கேட்கலாமே!

இதோ புரட்சிக்கவிஞர்….
‘‘முக்கியமாகத் தமிழ்ப் பெருமக்களுக்கு நான் சில வேண்டுகோள்விட ஆசைப்படு கிறேன். முதலாவதாக, பெரியார் கொள்கை ஒன்றுதான் நாட்டிற்கு ஏற்றது. உண்மையாக மக்களின் நன்மைக்குப் பாடுபடுவது, காரணம் இக்கட்சி தேர்தல் கட்சியல்ல, ஓட்டுக் கேட்கும் கட்சியல்ல. எனவே ஆங்காங்கு கழகம் இல்லாத ஊர்களில் கழகம் அமைக்க வேண்டும். எல்லாத் தமிழர்களும், தமிழர் களுக்குப் பிறந்த தமிழர்களும் தி.க.வில் உறுப்பினராக வேண்டும்.

இரண்டாவதாக ‘விடுதலை’ பத்திரி கையை ஒவ்வொருவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். மற்றப் பார்ப்பன ஏடுகளை மறந்து கூட எவரும் வாங்கக்கூடாது. அவை நமக்கு துரோகம் இழைப்பவையாகும். தமிழர் களுக்காக, தமிழர்களின் கல்வி உத்தியோக நியமனத்துக்காகப் பாடுபடும் ஏடு ‘விடுதலை’ ஒன்றுதான். எனவே விடுதலையை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
மூன்றாவதாக ‘குடியரசு’, ‘விடுதலை’ மற்றும் பகுத்தறிவு வெளியீடுகளான பார்ப் பனப் பித்தலாட்டங்களை விளக்கும் நூல் களும் மற்றும் பல நூல்களும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. அதனை வாங்கி யாவரும் படிப்பதோடு மற்றவர்களை யும் படிக்கச் செய்ய வேண்டும்.”

– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

(10.5.1958 இல் இலால்குடியில் நடைபெற்ற வட்ட ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து) ‘விடுதலை’, 18.5.1958

இதற்கு மேலும் ‘விடுதலை’யைப்பற்றி எழுதவும் வேண்டுமோ!
அதுவும் ‘விடுதலை’ ஏட்டின் 61 ஆண்டுகால ஆசிரியரின் பிறந்த நாள் விழாவில் ‘விடுதலை’ சந்தாக்களைக் குவிக்கிறோம் என்கிறபோது, நம்மையும் அறியாமல் ஓர் உணர்ச்சி உந்தித் தள்ளுகிறதல்லவா!
அதைக் காரியத்தில் காட்டுவோம்!
கடமையாற்றுவீர் கருஞ்சட்டை இருபால் தோழர்களே!

– கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
பொறுப்பாசிரியர்,
‘விடுதலை’

சென்னை
9.12.2023

No comments:

Post a Comment