இப்பொழுது நடைபெறுவது திராவிட இந்தியாவிற்கும் ('இந்தியா' கூட்டணிக்கும்) - ஹிந்துத்துவா மதவெறி இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

இப்பொழுது நடைபெறுவது திராவிட இந்தியாவிற்கும் ('இந்தியா' கூட்டணிக்கும்) - ஹிந்துத்துவா மதவெறி இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்டம்!

பெரியாருடைய கண்ணோட்டத்தில் இது  ஒரு கொள்கைப் போராட்டமே!

அப்போராட்டம் வெற்றிபெறுவதற்கு - சிறப்பாக உழைப்பதற்கு 

எல்லோரும் தயாராக வேண்டும்: இதுவே என் பிறந்த நாள் செய்தி!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்  ஆசிரியர் 

சென்னை,டிச.2இப்பொழுது நடைபெறுவதுதேர்த லாக இருந்தாலும்கூட, அந்தத் தேர்தலிலே, திராவிட இந்தியாவிற்கும் (இந்தியா கூட்டணிக்கும்) - ஹிந்துத் துவா மதவெறி இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்டமாக அமைந்துள்ளது. பெரியாருடைய கண் ணோட்டத்தில் இது  ஒரு கொள்கைப் போராட்டமே! எனவே, அந்த வகையிலும் சிறப்பாக உழைப்பதற்கு எல்லோரும் தயாராக வேண்டும் என்பதே என்னுடைய பிறந்த நாள் விழா செய்தியாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (2.12.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது இல்லத்திற்கு வருகை தந்து, பொன்னாடை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன் பிறகு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

புதிய இந்தியாவின் பாதுகாவலர்!

அனைவருக்கும் வணக்கம்!

எனக்கு  91 ஆம் ஆண்டு பிறக்கின்ற இந்த நேரத்தில், வழமைபோல் இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய, இந்தியா கூட்டணியை உருவாக்கக்கூடிய, புதிய இந்தியாவிற்குப் பாதுகாவலராக இருக்கக்கூடிய நம்முடைய 'திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியவர்களுடன் வந்து பிறந்த நாள் வாழ்த்துகளை நேரில் தெரிவித்தது எனக்கு மேலும் உற்சாகத்தைத் தரக்கூடியதாக அமைந்தி ருக்கிறது.

 ''பெரியார் என்பது தனி மனிதரல்ல - தத்துவம்!''

பொதுவாக திராவிட இயக்கம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய வழியில், அந்தக் கொள்கையை செயல்படுத்துகின்ற இயக்கம்.நம்மு டைய  இலக்கு என்பது- ''பெரியாரை உலக மயமாக்க வேண்டும் - உலகம் பெரியார் மயமாக்கப்படவேண்டும்'' என்பதே! ''பெரியார் என்பது தனி மனிதரல்ல - தத்துவம்!''

எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமை மறுக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்களோ, அந்த மக்களுக்கெல்லாம் உரிமைகளைப் பெற்றுத் தருவது தான் இந்த இயக்கம்!

எனவே, திராவிட இயக்கம் என்பதற்கு ஒரு குறுகிய பார்வையோடு விளக்கம் சொல்லவேண்டிய அவசிய மில்லை. 

திராவிடம் என்பது, ''மனித குலம் எங்கெல்லாம் அவதியில் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவர் களுக்காகப் போராடி, ஒரு புதிய சமத்துவத்தை உருவாக்கவேண்டும்'' என்பதுதான்.

திராவிட இந்தியாவிற்கும் - ஹிந்துத்துவா மதவெறி இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்டம்!

அந்தவகையில்தான், இப்பொழுது நடை பெறுவது தேர்தலாக இருந்தாலும்கூட, அந்தத் தேர்தலிலே, திராவிட இந்தியாவிற்கும் (இந்தியா கூட்டணிக்கும்) - ஹிந்துத்துவா மதவெறி இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்ட மாக அமைந்துள்ளது. பெரியாருடைய கண் ணோட்டத்தில் இது  ஒரு கொள்கைப் போராட்டம்!

எனவே, அந்த வகையிலும் சிறப்பாக உழைப்பதற்கு எல்லோரும் தயாராக வேண்டும் என்பதே என்னுடைய பிறந்த நாள் விழா செய்தியாகும்!

இந்தப் பிறந்த நாள் விழாவில், முதலமைச்சர் அவர்கள் வந்து வாழ்த்து சொன்னபொழுது, நான் அவரிடம் கூறியபடி இரண்டு செய்திகள் மிக முக்கிய மானவையாகும்.

தமிழ்நாடு ஆளுநருக்கு 

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஒன்று, இங்கே இருக்கின்ற ஆளுநர்  இந்திய அரச மைப்புச் சட்டத்தையே புரிந்துகொள்ளாமல், முழுக்க முழுக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 200-க்கு முற்றிலும் மாறாக, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்படுகின்றமசோதாக்களையெல்லாம் ஆண் டுக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவுடன், அந்த வழக்கின் தீர்ப்பில், ஆளுநர் உடனடியாக அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் மறுபடியும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டியதில்லை; ஆளுநரே ஒப்புதல் அளிக்கலாம் என்று நேற்று (1.12.2023) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.

அரசமைப்புச் சட்டம், தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியவில்லை என்றும்கூட மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டம் அறியாமல், தெரியாமல் ஆளுநர் இப்படி  செயல்படுகிறாரா?

அரசமைப்புச் சட்டப் பிரிவு 168-இன்படி, ஆளுநர் என்பவர், தமிழ்நாடு அரசினுடைய ஓர் அங்கம். அரசுக்கு எதிராக நடப்பதற்கு அவருக்கு அரசமைப்புச் சட்டப்படி உரிமையில்லை. அரசமைப்புச் சட்ட 200 ஆம் பிரிவின்படி, நிறைவேற்றப்படுகின்ற மசோதாக்களை இரண்டாம் முறை அரசு அனுப்பி வைத்தால், அதை அவர் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல் படுகிறாரா? அல்லது அரசமைப்புச் சட்டத்தை அறியாமல், தெரியாமல் இப்படி செய்கிறாரா?

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு புதிய தீர்வு

இதை ஆளுநர் சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால், அந்த மசோதாக்கள்பற்றி நாங்களே அறிவிக்கவேண்டிய அவசியம் வரும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி யிருப்பது அரசமைப்புச் சட்டப்படி ஒரு புதிய ஒளியைக் காட்டுவது மட்டுமல்ல - 'திராவிட மாடல்' ஆட்சி ஓர் ஏற்பாடு செய்ததினுடைய விளைவாக, இந்தியாவிற்கே  ஒரு புதிய தீர்வு - பல மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு புதிய தீர்வினை அரசமைப்புச் சட்டப்படி நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் உருவாக்கியிருக்கிறார் என்பது ஒரு செய்தி!

மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை - அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்திருக்கிறது!

இரண்டாவது செய்தி, அமலாக்கத் துறை என்பது -அது ஏதோ அமலாக்கத் துறையினர் 'பரிசுத்த யோவான்களாக'இருக்கிறார்கள்என்பது போல்காட்டிக் கொண்டு, அதேநேரத்தில், தங்களுக்கு வானாள விய அதிகாரம் இருக்கிறது என்ற எண் ணத்தில் மிதந்துகொண்டிருக்கக் கூடியவர்கள் - எப் படிப்பட்டவர்கள் என்பதற்கு அடையாளம் மதுரையில் பல கோடி ரூபாய் லஞ்சமாகப் பேசி, பிறகு அது 51 லட்சம் ரூபாயாக பேரம் குறைக்கப்பட்டு, அதன் பிறகு 20 லட்சம் ரூபாயை அந்த அதிகாரி வாங்கும்பொழுது பிடிபட்ட நிலையில், மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை அவரைக் கைது செய்திருக்கிறது.

இருபுறமும் கூர்மையுள்ள கத்தி!

எனவே, அமலாக்கத் துறையினர் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்கள் - நேர்மையானவர்கள் என்று சிலர் புரியாமல் சொல்கிறார்கள். பழிவாங்குவதற்காக அமலாக்கத் துறையைப் பயன்படுத்தும் நிலை என்பது இருக்கிறதே, அது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி!

மாநில சுயாட்சி அங்கத்தில் இது மிக முக்கியமானது; மாநில அரசு அதிகாரிகளுக்கு, அமலாக்கத் துறையின் சார்பில் தாக்கீது கொடுத்தார்கள். அதை உச்சநீதிமன்றம் தடை செய்திருப்பது என்பதும் இன்னொரு மிக முக்கியமான அம்சமாகும்.

திராவிட ஆட்சிக்குக் கிடைத்திருக்கின்ற 

மிகப்பெரிய வெற்றி!

ஆகவே, இந்த மூன்றும், திராவிட இயக்கம், திராவிட ஆட்சிக்குக் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்புகள்.

திராவிட ஆட்சி, சட்டப்படி நடக்கின்ற ஆட்சி.

திராவிட ஆட்சி, நேர்மையாக நடக்கின்ற ஓர் ஆட்சி!

திராவிட ஆட்சியில், நாங்கள் சட்டப்படிதான் எதையும் செய்வோமே தவிர, சட்டத்திற்குப் புறம்பாக நடக்கமாட்டோம்.

மக்கள் போராட்டமாக இதை ஆக்குவதைவிட, சட்டப் போராட்டமாக ஆக்குவோம் என்ற சொன்ன முதலமைச்சருக்கும், 'திராவிட மாடல்' ஆட்சிக்கும் கிடைத்திருக்கின்ற வெற்றி இவையாகும்!

அதையே நான் பிறந்த நாள் பரிசாகக் கருதுகிறேன்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment