அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனியாவது ''அடக்கிவாசிக்க''வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனியாவது ''அடக்கிவாசிக்க''வேண்டும்!

 உச்சநீதிமன்றத்தின் ஆணை - பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதே!

தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனிமேலும் சோதனை வரக்கூடாது!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல் அதைச் செய்யும் ‘வீட்டோ பவர்' (Veto Power) ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணை - கருத்தாக்க விளக்க ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அதிகாரம் உள்ள எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தும் ஆணை என்பதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி அடக்கிவாசிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனியும் சோதனை வரக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஆணி அடிப்பதுபோன்றது!

அடாவடியாக ஆளுநர்கள் சிலர் - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினர், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட வரைவுகளுக்கு (மசோதாக்களுக்கு) ஒப்புதல் தராமல், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டு, ஏதோ தங்களுக்கே தனி அதிகாரம் இருப்பதுபோல, எதேச்சதிகார மனப்பான்மையுடன் நடந்துகொண்டுவரும் போக்கினை எதிர்த்து, பஞ்சாப், கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தன;  ஆளுநர்கள், உரிய சட்டப்பூர்வமான அரசமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் கூறிய கருத்துகளும், தெளிவுரைகளும் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஆணி அடிப்பது போன்று அமைந்துள்ளன.

இதன்படி, பாதிக்கப்பட்ட மாநில அரசுகள் (தமிழ்நாட்டு தி.மு.க. அரசு உள்பட) பலருக்கு உரிய நியாயம் கிடைக்கும்;  அரசமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் அவமதித்து திசை திருப்பும் திருகுதாள முறைக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது தெளிவாகிறது!

அரசியல் அருவருப்பின் உச்சம்!

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவியேற்ற தொடக்கத்திலிருந்தே, அவர் ஏதோ ஆளுநர் ஆட்சி (Governor Rule -Article 356) நடைபெறுவதுபோல, அதீதமாக நடந்து கொள்வது அரசியல் அருவருப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளது.

இதற்கு டில்லி ஒன்றிய ஆட்சியாளரின் ‘‘சமிக்ஞையும், கண் ஜாடையும்'', வெளிப்படையான ஆதரவுமே மூலகாரணம் என்பதை நாட்டில் உள்ள சாதாரண குடிமகனால்கூட புரிந்துகொள்ள முடியும்!

முன் உதாரணமற்ற தரந்தாழ்ந்த செயல்!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றிலேயே ஓர் ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்களைப்போல் வெளிநடப்புச் செய்தது விவஸ்தையற்ற நடவடிக்கையே! அரசு - அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த தனது சட்டமன்ற உரையில், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர் களின் பெயரையே விட்டுவிட்டுப் படிப்பது - அதில் இல்லாததை இணைத்துச் சொல்வது போன்றவை ஜனநாயக மரபுக்கும், மாண்புக்கும் ஊறுவிளைவிக்கும் முன் உதாரணமற்ற தரந்தாழ்ந்த செயல்களாகும்!

10 மசோதாக்களைக் காலவரையின்றிக்  கிடப்பில் போடுவது - அரசு நிர்வாகம் சீர்குலைவு அடையும் வகையில் அன்றாடம் ஓர் அரசின் மூலாதாரக் கொள் கைகளை எதிர்த்து குற்றச்சாட்டுகளைக் கூறுவது, குழந்தைத் திருமணங்களை ஆதரித்து, ஊக்குவிப்பது போல, குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் சில நிகழ்வுகளில் நடந்துகொள்வது போன்ற பலவற்றையும் செய்தார்.

ஆளுநர்களின் அதீதத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி!

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் (கிடப்பில் போட்ட மசோதாக்கள் மற்றும் பல கோப்புகள்பற்றி) என்ன செய்தார்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டகேள்வியும், பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ‘‘அலங்கார பதவிதான் ஆளுநர் பதவியே தவிர, அவர்களுக்கென தனியே, பிரத்தியேக ஆளுமை செய்யும் அதிகாரம் பெற்றுள்ள பதவி அது அல்ல'' என்பதையும், ‘‘சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக் களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல் அதைச் செய்யும் ‘வீட்டோ பவர்' (Veto Power) ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது'' என்று ஓங்கியடித்துக் கூறியுள்ளது அவர்களது அதீதத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி யேயாகும்!

அரசமைப்புச் சட்டம்பற்றிய தெளிவுரையாகக் கொள்ளவேண்டிய ஓர் ஆவணமாகும் - சரியான சட்ட விளக்கமுமாகும்.

உடனடியாக ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியே ஆர்.என்.ரவிக்கு இல்லை!

இதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கடந்த 18 ஆம் தேதி கூட்டி, மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி, இரண்டாம் முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு அனுப்பிவிட்ட நிலையில், அதற்கு உடனடியாக ஒப்புதல் (Assent)  அளிப்பதைத் தவிர வேறு வழியே தமிழ்நாடு ஆளுநருக்கு இல்லை.

மீறி, வீம்புக்குக் காலதாமதம் செய்தாலோ, வேறு குறுக்குச்சால் ஓட்டினாலோ அடுத்தகட்டமாக உச்சநீதி மன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழ்நாடு அரசு மட்டு மல்ல; தமிழ்நாட்டு அரசினைத் தேர்ந்தெடுத்த அத் துணை வாக்காளர்ப் பெருமக்களும், அமைப்புகளும்கூட தாக்கல் செய்யும் வழக்கு சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுப்பதாகவே அது ஆகி விடக் கூடும்.

எனவே, ‘‘குளவிக்கூட்டில் கைவிட்டு கலைத்த கதை''யில் உள்ளவர்களுக்கு இனியாவது தங்கள் உயரம் என்ன? தங்களது அதிகாரம் எந்த அளவுள்ள ஒன்று என்பதைப் புரிந்துகொள்வதும், புரிந்து செயல்படுவதும் அவசரம், அவசியமாகும்!

அனைத்து மாநில ஆளுநர்களும் இனி அடக்கிவாசிக்கவேண்டும்!

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை - கருத்தாக்க விளக்க ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அதிகாரம் உள்ள எல்லாப் பகுதி ஆளுநர் களுக்கும் பொருந்தும் ஆணை என்பதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி அடக்கிவாசிக்கவேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனியும் சோதனை வரக்கூடாது!


ஆசிரியர் கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

24.11.2023


No comments:

Post a Comment