மசோதாக்களை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

மசோதாக்களை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை!

பஞ்சாப் அரசு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம்

புதுடில்லி, நவ.25- சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப் பப்படும் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்று பஞ்சாப் மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

ஆளுநருடன் மோதல் 

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசுக்கும், அம்மாநில ஆளுநர் பன்வாரி லால் புரோகித்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைப்பதாக மாநில அரசு குற்றம் சாட்டி வருகிறது.

ஆளுநரின் அனுமதியின்றி, கடந்த ஜூன் 19 மற்றும் 20ஆம் தேதிகளிலும், அக்டோபர் 20ஆம் தேதியும் மாநில சட்ட சபை கூட்டம் நடந்தது. அந்த கூட்டங்களில் 4 மசோதாக்கள் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அப்போது நடந்த சட்டமன்றக் கூட்டம், அரசியல் சட்டப்படி செல்லாது என்று கூறி, 4 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. 

பஞ்சாப் அரசு வழக்கு 

இதையடுத்து, 4 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரியும், ஜூன் 19, 20 ஆகிய  தேதிகளிலும், அக்டோபர் 20ஆம் தேதியும் நடந்த சட்டமன்றக் கூட்டத்தை செல்லும் என்று அறிவிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனு தாக்கல் செய்தது. 

இந்த வழக்கில், கடந்த 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந் திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. 

தீர்ப்பு விவரம்

முழுமையான தீர்ப்பு, 23.11.2023 அன்று இரவு, உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 27 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எழுதி உள்ளார்.

தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுபவர். அவர் பெயரளவில் மாநிலத்தின் தலைவராக இருக்கிறார். 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில், உண்மையான அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களிடம்தான் இருக்கிறது. ஒன்றியத்திலும், மாநிலத் திலும் உள்ள அரசுகள், நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர் களை கொண்டுள்ளன. அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்றத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் கள்.

முறியடிக்க பயன்படுத்தக்கூடாது

ஆளுநர், ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர். அவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றங்களின் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடிக்க பயன்படுத்தக்கூடாது. அரசியல் சட்டத்தின் 200ஆவது பிரிவு, ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்ப தற்கு ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால், அப்படி ஒப்புதல் அளிக்க மறுக்கும்பட்சத்தில், அடுத்த கட்ட நடவடிக்கையாக, அம் மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு கூடிய விரைவில் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பதை ஆளுநர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. ‘கூடிய விரைவில்' என்ற வார்த்தை முக்கியமானது. அது, விரைவாக செயல்பட வேண் டியதன் அரசியல் சட்ட கட்டாயத்தை உணர்த்துகிறது. எனவே, முடிவு எடுக்காமல் இருப்பதோ, காலவரையின்றி மசோதாவை நிறுத்தி வைப்பதோ அந்த உணர்வுக்கு முரணானது. 

சட்டமன்றத்தை  கட்டுப்படுத்தாது 

மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆலோ சனையை ஏற்பதும், ஏற்காததும் சட்டமன்றத்தின் முடிவை பொறுத்தது. மசோதாவில் திருத்தம் செய்தோ அல்லது திருத்தம் செய்யாமலோ சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்க லாம். 'திருத்தம் செய்தோ, திருத்தம் செய்யாமலோ' என்ற வார்த்தைகள், ஆளுநரின் ஆலோசனை, சட்டமன் றத்தை கட்டுப்படுத்தாது என்பதை உணர்த்துகின்றன. அப்படி மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதா வுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை.

அதிகாரம் இல்லை 

எந்த செயல்பாடும் இன்றி, மசோதாவை காலவரை யின்றி நிறுத்திவைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை. அப்படி செய்வது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் களின் கட்டுப்பாடற்ற விருப்ப உரிமை, 'மசோதா நிறுத்திவைக்கப்படுகிறது' என்று ஒரே வார்த்தையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் சட்ட மியற்றும் செயல்பாட்டை தடுப்பது போல் ஆகிவிடும். அத்தகைய நடவடிக்கை, நாடாளுமன்ற ஆட்சிமுறை அடிப்படையிலான அரசியல் சட்ட ஜனநாயகத்தின் தத்துவங்களுக்கு முரணானது.

சட்டமன்றக் கூட்டம் செல்லும்

கூட்டாட்சியும், ஜனநாயகமும் ஒரு கரண்டியின் இரு முனைகள், மக்களின் விருப்பங்களையும், அடிப்படை சுதந்திரத்தையும் நிறைவேற்ற இவை சேர்ந்து இருக்கவேண்டும். இரு முனைகளில் ஒன்று பழுதானால், அரசியல் சட்ட ஆட்சிமுறைக்கு பாதிப்பு ஏற்படும். கடந்த ஜூன் 19, 20ஆம் தேதிகளிலும், அக்டோபர் 20ஆம் தேதியும் நடந்த பஞ்சாப் சட்டமன்றக் கூட்டம், அரசியல் சட்டப்படி செல்லும். அது செல்லுமா என்று சந்தேகப்படுவது ஆளுநரின் வேலை அல்ல. சட்டப் பேரவைத் தலைவர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட்டுள்ளார்.  எனவே, ஆளுநர், மேற்கண்ட தேதிகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும். 

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசும், கேரள மாநில அரசும் தங்கள் மாநில ஆளுநர்களுக்கு எதிராக இதேபோன்ற வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. எனவே, இந்த தீர்ப்பு, தமிழ்நாடு, கேரள அரசுகளின் வழக்கு களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


"பஞ்சாப் வழக்கின் தீர்ப்பைப் படியுங்கள்!''

கேரள ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, நவ.25- கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் கேரள மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது. 

நிலுவையில் உள்ள இம்மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று (24.11.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், ஆளுநரிடம் 8 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக கூறினார். 

அதைக்கேட்ட தலைமை நீதிபதி, "பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். அதை ஆளுநரின் செயலாளர் படித்து பார்க்க வேண்டும்" என்று கூறினார். அடுத்தகட்ட விசாரணை, 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில், ஒன்றிய அரசுக்கும், கேரள ஆளுநரின் செயலாளருக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தாக்கீது அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment