ஓபிஎஸ்க்கு பின்னடைவு அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 8, 2023

ஓபிஎஸ்க்கு பின்னடைவு அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை, நவ.8- அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று (7.11.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

பழனிசாமி தரப்பு மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயண்

 வழக்கு 3ஆவது முறையாக விசாரணைக்கு வருகிறது. எதிர்மனுதாரர்கள் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஓபிஎஸ் தரப்பு வழக்குரைஞர் பி.ராஜலட்சுமி: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நம்பர் ஆகிவிட்டது. பதில் மனு தாக்கல் செய்ய குறுகிய அவகாசம் வேண்டும். 

நீதிபதி கேள்வி

இருதரப்பும் இப்படி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி, மாறி வழக்கு தொடர்ந்து எத்தனை முறைதான் அவகாசம் கேட்பீர்கள்? அங்கும், இங்கும் ஒரே வாதத்தை திரும்ப திரும்ப எத்தனை முறை வைக்கப்போகிறீர்கள்?

விஜய் நாராயண்

ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கி ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது. ஆனாலும் தன்னை ஒருங் கிணைப்பாளர் என அடையாளப்படுத்திக் கொண்டு, அதிமுகவில் உள்ளவர்களை கட்சியில் இருந்து நீக்கி அறிவிக்கிறார். இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம். இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து நீதிபதி, ‘‘பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது’’ என்று இடைக்கால தடை விதித்து, வழக்கை நவ.30-க்கு தள்ளிவைத்தார்.


No comments:

Post a Comment