செய்திச் சிதறல்கள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

செய்திச் சிதறல்கள்....

முதலமைச்சர் காப்பீட்டு முகாம்:

டிச.2-க்கு தள்ளிவைப்பு

சென்னை, நவ.18- முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழ்நாடு முழுவதும் இன்று (18.11.2023) நடக்கவிருந்த சிறப்பு முகாம் டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். பலர் கடந்த 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டையை வைத்துள்ளனர். அந்த அட்டை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்று ஆராய்ந்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று நடக்கவிருந்த சிறப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் டிச.2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மின்சாரத் திருட்டு: மேனாள் முதலமைச்சர் குமாரசாமி

ரூ.68 ஆயிரம் அபராதம் செலுத்தினார்

பெங்களூரு, நவ.18 வீட்டின் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாக வழக்குப் பதிவான நிலையில், கருநாடக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி ரூ.68 ஆயிரம் அபராதம் செலுத்தினார்.

தீபாவளியையொட்டி பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள மேனாள் முதலமைச்சரும், ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவருமான குமாரசாமியின் வீட்டிற்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு மின்சாரம் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை காட்சிப் பதிவு ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரபூர்வ ‘எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு குற்றச்சாட்டு கூறியிருந்தது. 

இதை ஒப்புக்கொண்ட குமாரசாமி, மின்விளக்கு அலங்காரம் செய்த தொழிலாளி இதை செய்துவிட்டதாகவும், இது தனது கவனத்திற்கு வந்ததும், சட்டவிரோத மின்சாரம் எடுக்கப்பட்டதை அகற்றும்படி கூறியதாகவும் தெரிவித்தார். 

இந்த மின்திருட்டு குறித்து பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் (பெஸ்காம்) கொடுத்த புகாரின்பேரில் குமாரசாமி மீது ஜே.பி.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை குமாரசாமி திருடிவிட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. மேலும் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலக சுவர்களில் ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருட்டுத்தனமாக 71 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியதாக குமாரசாமிக்கு ரூ.68 ஆயிரத்து 526 பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) அபராதம் விதித்தது. அந்த அபராத தொகையை அவர் செலுத்தியுள்ளார். 

இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் செய்யாத தவறுக்காக என்னை மின்சார திருடன் என்று சொல்கிறார்கள். நான் அபராதம் செலுத்தியுள்ளேன். இப்போதாவது என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்த 27 வயது பயிற்சி மருத்துவர்

கோரக்பூர், நவ.18 உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் குமார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ரயில்வே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று (17.11.2023) கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரிக்கு தனது நண்பர்களை சந்திக்க அபிஷேக் சென்றுள்ளார்.

தனது நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனை வாய்வு என நினைத்து அசிடிட்டி மருந்தை சாப்பிட்டுள்ளார். மருந்து சாப்பிட்ட பிறகும் வலி குறையாததால் நண்பரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அபிஷேக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பால் இளம்வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை 

ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment