ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்களை எல்லாம் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு தேர்தலை பா.ஜ.க. சந்திக்கவிருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் கூறியிருப்பதுபற்றி உங்கள் கருத்து?

- இல.திருப்பதி, இராஜபாளையம்

பதில் 1: மேற்கு வங்க முதலமைச்சர் கருத்து மட்டுமல்ல, டில்லி முதலமைச்சர் உள்பட பலரும் இதே கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்!

தோல்வி பயமும், அதன் காரணமான எரிச்சலும் இப்படி தவறான அணுகுமுறையை - அவசரக்காரர்களுக்குரிய புத்தியின் வெளிப்பாடு.

இதற்கு மக்கள் தக்க பதிலடியை வாக்குச் சீட்டு மூலம் நிச்சயம் தருவார்கள் என்பது உறுதி!

---

கேள்வி 2: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்காததைக் கண்டித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவினைப் புறக்கணிப்பது சரிதானா?

- பா.கிருஷ்ணா, சென்னை-14

பதில் 2: தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் 'தகைசால்' தமிழரும் முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும் - கம்யூனிஸ்ட் தலைவருமான பெரியவர் தோழர் சங்கரய்யாவுக்கு 'முதுமுனைவர்' - டாக்டர் பட்டம் தர மறுத்து ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகச் செயல்படும் ஆளுநர் ரவிக்கு பதிலடி நடவடிக்கை - சட்டபூர்வமாகச் சரிதான்.

பல டாக்டர் பட்டம் பெற வேண்டியவர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும்கூட பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்ததும் சரியான பதிலடியாகும்.

---

கேள்வி 3: இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றது போன்றே பாலஸ்தீன மக்களுக்கும் நடைபெறுமா?

- ப.ரமேஷ், வேலூர்

பதில் 3: அப்படி நடக்க முடியாது - பல உலக நாடுகளில் சகோதரத்துவ உணர்வு பொங்கி எழவே செய்யும். நியாய உணர்வாளர்களும் நிச்சயம் பாலஸ்தீன மக்களின் உயிர், உரிமை காப்பாற்றப்பட ஒருங்கே இணைந்து ஒன்றுபட்டு அவர்களுக்கு ஆதரவாக நிற்பார்கள்.

---

கேள்வி 4: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பது குறித்து....?

- பே.கண்ணன், திருக்கடையூர்

பதில் 4: பாராட்டி வரவேற்க வேண்டிய அரசமைப்புச் சட்டப்படியான நியாயமான நல்ல தீர்ப்பு!

---

கேள்வி 5: இன்றைய கணினி யுகத்திலும் நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்வது தொடர்கிறதே நல்லதா?

- க.பாண்டு, செங்கல்பட்டு

பதில் 5: நவீன மூடத்தனம் என்பதைவிட தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய தரங்கெட்ட செயல். பக்தர்களுக்குப் புத்தி போய் பக்தி; இதே நிலைதான் இவர்களுக்குமா? மகா வெட்கக்கேடு, கண்டிக்கத்தக்கது. ரசிப்பது வேறு; இப்படி வெறிப்பது விரும்பத்தக்கதா?

---

கேள்வி 6: ஒன்றிய அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை எதிர்த்து தாங்கள் மேற்கொண்டுள்ள தொடர் பரப்புரையால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா?

- மு.கவுதமன், திருவண்ணாமலை

பதில் 6: நல்ல வரவேற்பு - ஊராட்சி முதல் மாநகராட்சி வரை பல ஊர்களிலும் சிறப்பான தெளிவடையும் நிலை - கொட்டும் மழை, இடி எல்லாவற்றையும் தாண்டி 8 நாள்கள் 16 கூட்டங்கள் மிகச் சிறப்பான விழிப்புணர்வு ஏற்பட்டு தோழமைக் கட்சியினரே வியந்து மகிழ்ச்சி, உற்சாகப்படுத்திப் பேசுகிறார்கள்!

---

கேள்வி 7:  எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைப்பேசிகளை ஒன்றிய அரசு ஒட்டுக்கேட்பது என்பது அவர்களின் தோல்வி பயத்தைத்தானே காட்டுகிறது?

- இரா.ஆனந்தன், மயிலாடுதுறை

பதில் 7: நிச்சயமாக - அதிலென்ன அய்யம்?

---

கேள்வி 8: தேர்தல் பத்திரம் என்பது லஞ்சம் கொடுப்பதற்கு வழிவகுக்காதா? என்று உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளாரே?

- கி.சுரேஷ், திருச்சி

பதில் 8: மண்டையில் அடித்த பல கேள்விகள் இடையறாமல் கேட்டு ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞரைத் துளைத்துவிட்டார்கள் நீதிபதிகள். உலகமே இதுபற்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு வெளிநாடுகளிலும் செய்திகள் பரவியுள்ளது.

---

கேள்வி 9: முன்பு ஆண்டிற்கொருமுறை குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடந்தது; இப்பொழுது ஆண்டு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவது இளைஞர்களிடம் இயக்கக் கொள்கைகள் பரவுவதற்கான வழிமுறைதானே?

- ஆ.இளங்கோ, வந்தவாசி

பதில் 9: பிரச்சாரப் பெருமழை - அடைமழையால் நல்ல இளைஞர்கள் - வார்ப்புகள் - திராவிட நாற்றுகளாக - பயிர்களாக ஆயத்தமாகின்றனர்.

---

கேள்வி 10: தமிழ்நாட்டிற்கு வருகை தந்த குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டிய மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதே, அது நிறைவேறுமா?

- மு.மணி, மாமல்லபுரம்

பதில் 10: அவருக்கு அதிகாரம், உண்மையில் இல்லை - ஒன்றிய அரசுதான் 'கட்டை' போடுகிறது. 2024 பொதுத்தேர்தல் நல்ல தீர்ப்பு தரும்.


No comments:

Post a Comment