நிறைவேற்றும் மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

நிறைவேற்றும் மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, நவ.11 தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அர சாணைகள், கோப்புகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப் பட்டிருப்பது கவலைக்குரியது என்று உச்சநீதிமன்றம் தெரி வித்துள்ளது. 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அண்மையில் வழக்குத் தொடரப்பட்டது. ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தமிழ்நாடு அரசாணைகளுக்கும் ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று அதில் கோரப்பட்டது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி கள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று (10.11.2023) விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹ்தகி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். 

வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி

வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மசோதாக்களுக்கு ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்க மறுக்கும் நிலை அதி கரித்து வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இது ஒரு தொற்று நோய்போல பரவியுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை சுமார் 3 ஆண்டுகளாக ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார்’’ என்றார். 

வழக்குரைஞர் வில்சன்

வழக்குரைஞர் வில்சன் கூறும்போது, “சுகாதாரம், உயர் கல்வி தொடர்பான மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இந்த மசோதாக்கள் குறித்து அவர் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் உள்ளிட்ட 10 பதவிகள் காலியாக உள்ளன. பலமுறை கோரி யும் அந்தக் கோப்பை ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார்’’ என்று தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து, தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது: 

அரசமைப்புச் சட்டப்பிரிவு 200 இன்படி சட்டப்பேர வையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் விரைந்து முடிவு எடுக்கவேண்டும். ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம். அந்த மசோதா நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால், முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்குத் திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் மசோதாக்களை கிடப்பில் போட முடி யாது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலைக்குரியது. தமிழ்நாடு அரசின் மனு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை நவ.20 இல் நடைபெறும். அன்றுமத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக வேண்டும். 

இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment