வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிப் பேருரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிப் பேருரை

👉 தந்தை பெரியாரை உயிரினும் மேலாக மதித்தவர் வி.பி.சிங் 

👉 வி.பி.சிங் குடும்பம் என்று தனியே இல்லை-நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தவர்தான்

👉 சமூகநீதியின் இன்றைய நிலைப்பாடு என்ன?

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 604 பேரில் பிற்படுத்தப்பட்டோர் வெறும் 72 பேர் மட்டுமே!  மீதி அத்தனை பேரும் உயர் ஜாதியினரே!

சென்னை, நவ. 28- சமூக நீதியின் காவலர் வி.பி.சிங் அவர்கள், அவர் பிரதமராக இருந்தபோதுதான் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பு, 27 விழுக்காடு இடஒதுக்கீடு வந்தது. இன்றைய நிலையில் நீதித்துறையில் 604 உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர் என்றால் பிற்படுத்தப்பட்டோர் வெறும் 72 பேர்களே - மற்ற அனைவரும் உயர்ஜாதியினரே என்று குறிப்பிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (27.11.2023) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச்சிலையை திறந்து வைத்து, சென்னை, கலை வாணர் அரங்கில் நடைபெற்ற மேனாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் சிலை திறப்பு விழாவில் ஆற்றிய விழாப் பேருரை வருமாறு,.

‘இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிதா மகர்’ - இந்திய நாட்டின் பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர் களுடைய உருவச் சிலையை, மாநிலக் கல்லூரியில் திறந்து வைத்துவிட்டு நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். 

மகிழ்ச்சி-மனநிறைவு

வி.பி.சிங் அவர்களுக்குச் சிலை அமைக்கின்ற மகத்தான வாய்ப்பு கிடைத்ததை எண்ணி இன்றைக்கு நான் மகிழ்ச்சி யோடும், மனநிறைவோடும் இருக்கிறேன்! 150 ஆண்டு பழைமை வாய்ந்த மாநிலக் கல்லூரி வளாகத்தில், வி.பி.சிங் அவர்களின் அருமை நண்பர், தலைவர் கலைஞர் அவர்கள் நீடுதுயில் கொண்டிருக்கின்ற கடற்கரை சாலையில் சமூகநீதி யின் சின்னமாம் வி.பி.சிங் அவர்களுக்கு சிலை அமைக்கப் பட்டுள்ளது. எண்ணிப் பார்க்கிறேன்...  மண்டல் ஆணையத் தின் பரிந் துரைகளை பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத் தியபோது,  சில ஆதிக்க சக்திகள் அதை எதிர்த்தார்கள். வன் முறை போராட்டங்களையும் நடத்தினார்கள்.

கலைஞர் தலைமையில் கவியரங்கம்

அதேநேரத்தில், தலைவர் கலைஞர் தலைமையில் இதே கலைவாணர் அரங்கத்தில் ஒரு கவிய ரங்கம் நடந்தது. மிகுந்த கோபத்துடன் அன்றைய நாள் கவிதை கர்ஜனை செய்தார் தலைவர் கலைஞர் அவர்கள்... அந்தக் கவிதையின் சில வரிகளை மட்டும் இங்கே நினை வூட்ட விரும்புகிறேன்...

”மண்டல் குழு பரிந்துரையை மய்ய அரசு ஏற்றமைக்கு மகத்தான வெற்றி விழா! மனிதாபிமானி வி.பி.சிங்கிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் திருவிழா!” என்று தொடங்கி, சமூகநீதிக்கான குரலாக தலைவர் கலைஞருடைய கவிதை வரிகள் அனல் தெறித்தது!

“ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் அவன் உயர்ஜாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக் குள்ளே வைத்தானா? மற்ற ஜாதிக்கெல்லாம் மண்டைக் குள் இருப்பதென்ன? களிமண்ணா? சுண்ணாம்பா? கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக - இந்நாளில் எவரும் கேட்டால் பட்டை உரியும், சுடுகாட்டில் அவர் கட்டை வேகும்" என்று தலைவர் கலைஞருடைய பேச்சில், உணர்ச்சி கொந்தளித்தது! இப்போதுகூட இந்தக் கலைவாணர் அரங் கத்தில் அந்தக் கவிதை வரிகளின் வெப்பத்தை என்னால் உணர முடிகிறது!

வி.பி.சிங் அவர்கள் பிறந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் Former Chief Minister - Present Leader of Opposition - My dear brother Future Chief Minister  அகிலேஷ் அவர்கள், இங்கு வருகை தந்துள்ளார். வி.பி.சிங் அவர்களுக்கு பிடித்த தலைவரான, ராம் மனோகர் லோகியா அவர்களால் உருவாக்கப்பட்ட முலாயம் சிங் அவர்களின் மகனான அகிலேஷ் அவர்கள், வி.பி.சிங் அவர்களுடைய சிலை திறப்பு விழாவுக்கு வந்திருக்கிறார். வி.பி. சிங் அவர்களுக்கு தாய் வீடு, உத்தரப்பிரதேசம் என்றால், தமிழ்நாடுதான், தந்தை வீடு! தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் அவருடைய பேச்சு இருக்காது. அதனால்தான் அப்படிப்பட்ட தந்தை பெரியாரு டைய சமூகநீதி மண்ணில் வி.பி.சிங் அவர்களுக்கு முதன்முத லாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. நானும், மரியாதைக்குரிய வி.பி.சிங் அவர்களும் ரெண்டு முறை சந்தித்து இருக்கிறோம்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு, 1988-ஆம் ஆண்டு தேசிய முன்னணியின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது! அப்போது இளைஞர் அணி சார்பில், மாபெரும் ஊர்வலத்தை நான் தான் தலைமை தாங்கி நடத்தி வந்தேன். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இளை ஞர்கள் பங்கெடுத்த அந்த ஊர்வலத்தை,  இதே அண்ணா சாலையில், காயிதே மில்லத் கல்லூரி, அன்றைக்கு Arts College என்று பெயர். அந்த கல்லூரிக்கு அருகில் மேடை அமைத்து மாலை தொடங்கி இரவு வரை மேடையில் இருந்தபடி, வியந்தபடி பார்த்து வாழ்த்தினார் வி.பி.சிங் அவர்கள். அப்போது நான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்க வில்லை. அடுத்த சந்திப்பு, அவர் பிரதமராக ஆனபோது, டில்லிக்கு சென்ற எம்.எல்.ஏ. குழுவில் நான் இருந்தேன். சட்டமன்றத்தில் எல்லாக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் பல குழுக்கள் அமைத்தார்கள். அதில் ஒரு குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். அப்போது டில்லிக்கு சென்றபோது, ஒவ்வொ ருவராக அவருக்கு அறிமுகம் செய்தார்கள். என்னிடம் வந்தபோது, என்னை அறிமுகம் செய்து வைத்தபோது, அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். “இவரை எப்படி மறக்க முடியும். இவர் தான் சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து நடத்தினார்!" என்று மறக்காமல் பாராட்டினார் பிரதமர் வி.பி.சிங்.

அந்த பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு! இன்றைக்கு நான் முதலமைச்சராக பொறுப்பேற்று அவருக்கு சிலை திறந்திருக்கிறேன் என்றால், இதைவிட என்ன பெருமை எனக்கு வேண்டும்? எங்களுடைய அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்துள்ள வி.பி.சிங் அவர்களின் மனைவி சீதா குமாரி அவர்களுக்கும், அவருடைய மகன் அஜயா சிங் அவர்களுக்கும் உங்களுடைய அனைவரின் சார்பில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக நீதி குடும்பம்

வி.பி.சிங் குடும்பத்தினர் என்று உங்களை நான் அழைக்க விரும்பவில்லை. நீங்கள் வி.பி.சிங் குடும்பத்தினர் என்றால் நாங்கள் யார்? நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தினர்தான்!

இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கின்ற சமூகநீதிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்! வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைப்பது மூலமாக அவருடைய புகழ் உயருகிறது என்று பொருள் இல்லை; நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி இருக்கிறோம்!

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங் அவர்கள். தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று அதில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங். அவருக்கு சிலை அமைப்பதை இந்த திராவிட மாடல் அரசு தன்னுடைய கடமையாக கருதுகிறது.

சமூகநீதியை காக்கின்ற கடமையில் இருந்து இம்மியளவும் வழுவாமல் இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

வி.பி.சிங் அவர்களைப் பற்றியும், அவரது தியாக வாழ்க் கைப் பற்றியும் இந்திய மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்கு அவருடைய வாழ்வு திரும்ப திரும்ப சொல்லப்படவேண்டும். அதனால்தான் மாநில கல்லூரியில் அவருடைய சிலையை அமைத்திருக்கிறோம்.

வி.பி.சிங் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிகப் பெரிய ஜமீன்தாருக்கு மகனாக பிறந்து, ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனது ஒட்டாமல் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். சர்வோதய சமாஜில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார். வினோபா அவர்களிடம் தன்னுடைய நிலங்களையே தானமாக வழங்கினார்.

1969-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்த லில் நின்று வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர், இந்திய ஒன்றியத்தில் வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார்.

வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தது பதினோரு மாதம்தான் என்றாலும், அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை! இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்டப்போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ப, இடஒதுக்கீடு தரப்படவில்லை. அதை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி.மண்டல் தலை மையிலான ஆணையம்!

சமூகரீதியாவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுகின்ற சமூகத்துக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் பரிந்துரையின் உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங் அவர்கள்.

11 மாத கால சாதனைகள்

வி.பி.சிங் அவர்கள் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்தவர் அல்ல! ஏன், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல! ஆனாலும் ஏழை - எளிய, பிற்படுத்தப் பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்திக் காட்டியவர்! அப்போது நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் -  புரட்சியாளர் அம்பேத்கர் - ராம் மனோகர் லோகியா ஆகிய மூவருடைய பெயரைத்தான் வி.பி.சிங் அவர்கள் குறிப்பிட்டார். தந்தை பெரியாருக்குத் தனிப்பட்ட நன்றியை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். பதவியில் இருந்த பதினோரு மாத காலத்தில், 

· பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு

· தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு தொடக்கப்புள்ளி

· தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு தொடக்கப்புள்ளி

· வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை உருவாக்கியது

· லோக்பால் சட்டத்துக்கு தொடக்க முயற்சிகள்

· தேர்தல் சீர்திருத்தங்கள்

· அண்ணல்  அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது

· நாடாளுமன்றத்தின் நடுவே அண்ணல் அம்பேத்கர் படம்

· மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்

· உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள்

· டில்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்

· அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (விஸிறி) அச்சிட உத்திரவு

· நுகர்வோர் பாதுகாப்பு

- இன்னும் பட்டியல் நிறைய இருக்கிறது!

இப்படி பல சாதனைகளை செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான் நம்முடைய வி.பி.சிங் அவர்கள். 

பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றம்

மதிப்பிற்குரிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் முயற்சியால்தான் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அடியாவது முன்னேறியிருக்கிறார்கள். நாம் இன்னும் பல உயரங்களுக்குச் செல்லவேண்டும்.

நமக்கான உரிமைகள் இன்றைக்கும்கூட முழுமையாக கிடைக்காத - கிடைக்க முடியாத சூழல்தானே நிலவுகிறது! குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு 2006-க்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.

பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே கிடையாது. எல்லாமே பொதுப்பிரிவு! ஒன்றிய அரசின் துறைச் செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர்ஜாதியினர். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் ஒரே ஒருவர், பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் மட்டும் தான்! பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது! ஒன்றிய அரசு துறைகளின் கூடுதல் செயலா ளர்கள் 93 பேரில்,  82 பேர் உயர்ஜாதியினர். பிற்படுத்தப்பட்டவர் கிடையாது! ஒன்றிய அரசு துறைகளின் இணைச் செயலா ளர்கள் 275 பேரில், 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்! அசாம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருக்கின்ற மத்திய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு வரை இடஒதுக்கீடே இல்லாத நிலைதான் நீடிக்கிறது.

45 மத்தியப் பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டும்தான்! இப்படித்தான் பல்வேறு துறைகளில் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது. 

நீதிமன்றங்களில் சமூக நீதியின் நிலை

சரி, நீதிமன்றங்களில் சமூகநீதியின் நிலை என்ன? 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், 458 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. ஏன், அரசுத் துறைகளின் பதவி உயர்வுகளின் போது இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்குதான் நாம் தொடர்ந்து உழைக்கவேண்டும். அதுதான் வி.பி.சிங் போன்றோருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான புகழ் வணக்கம்!

அந்தப் பணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் சோர்ந்து போகாது. அதற்கு எடுத்துக்காட்டுதான், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அன்றிலிருந்து  இன்றைக்கு வரை நாம் முன்னெடுக்கின்ற சட்ட முயற்சிகள்!

இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இல்லாமல் இருந்த ஓபிசி இடஒதுக்கீட்டை 29.7.2021 அன்று உச்சநீதிமன்றம் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகம்தான் இந்தியாவிற்கே பெற்றுத் தந்தது! அதுமட்டுமா! தமிழ்நாட்டில் சமூகநீதியைக் கண்காணிக்க குழு அமைத்திருக்கிறோம்.

வி.பி.சிங்-கலைஞர் நட்பு

வி.பி.சிங் அவர்களுக்கும், கலைஞருக்கும் இருந்த நட்பு எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். சென்னை கடற்கரையை நோக்கி பிரதமர் வி.பி.சிங் அவர்களுடைய கார் செல்கிறது. முதலமைச்சர் கலைஞரும் கூட இருந்தார். வி.பி.சிங் அவர்கள், “உங்களுடைய வீட்டுக் குப் போகவேண்டும், காரை அங்கே போகச் சொல்லுங்கள்' என்று சொல்கிறார். ஆனால் அவருடன் இருந்த பிரதமரு டைய செயலாளர் அவர்கள், புரோட்டகால்-படி கடற்கரையில் பொதுகூட்டம், ஆளுநர் மாளிகையில் தங்குவது, இது இரண்டைத் தவிர வேறு இடத்திற்கு செல்லக்கூடாது” என்று தடுத்திருக்கிறார். ஆனால், பிரதமர் வி.பி.சிங் அவர்கள், அதை கோபமாக மறுத்து, “நிச்சயமாக முதலமைச்சர் இல்லத்திற்கு சென்றுதான் ஆகவேண்டும்” என்று சொல்லி, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுவிட்டுதான் கடற்கரை பொதுக்கூட்டத்திற்குப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் சென்றார்.

தலைவர் கலைஞர் மேல் எத்தகைய மதிப்பையும், அன் பையும் பிரதமர் வி.பி.சிங் வைத்திருந்தார் என்பதற்கு இது ஒரு பெரிய எடுத்துக்காட்டு!

அந்தக் கடற்கரை கூட்டத்தில்தான், சென்னையில் இருக் கின்ற இரண்டு விமான முனையங்களுக்கு அறிஞர் அண்ணா பெயரையும், பெருந்தலைவர் காமராசர் பெயரையும் வைக்கவேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோரிக்கை வைத்தார். அப்போதெல்லாம் செல்ஃபோன் கிடையாது. அவருக்கென்று ஒரு பிரைவேட் ரூம் இருக்கும், அதில் லைட்டினிங் கால் இருந்தது, அதிலிருந்துதான் ஃபோன் பேச முடியும். பிரதமர் வி.பி.சிங் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, டெல்லிக்கு Lightning call செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி, இப்படி ஒரு கோரிக்கை இருக்கிறது, இதை நிறைவேற்றவேண்டும் என்று கலந்துபேசி அதை அந்த மேடையில் அறிவித்தார்.  அதே மேடையில் கலைஞர் அவர்கள் கேட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தார். இன்றைக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது

இங்கே அண்ணன் துரைமுருகன் அவர்கள் இருக்கிறார், காவிரி பிரச்சினை பற்றி அவருக்கு முழுமையாக தெரியும், முழுமையாக அறிந்தவர். அவர் அதில் பிண்ணிப் பிணைந்தவர்.  தமிழ்நாட்டு மக்களுடைய உயிர் பிரச்சினையான காவிரி நீருக்காக பல ஆண்டுக்கு பிறகு, பல போராட்டத்திற்கு பிறகு, தலைவர் கலைஞருடைய கோரிக்கை ஏற்று, வி.பி.சிங் அவர்கள் ஆட்சியில் தான் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்துத் தந்தார்.

கலைஞர்-தமிழினத்தின்மீது பாசம்

அதேபோல், இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பிரதமர் வி.பி.சிங் அவர்கள் எவ்வளவு அக்கறையோடு நடந்துகொண்டார் என்றால், தன்னுடைய வீட்டிலேயே அகில இந்தியத் தலைவர்களையும் - மாநில முதலமைச்சர்களையும் 1990-ஆம் ஆண்டு கூட்டினார்.

9 மாநில முதலமைச்சர்கள் - 7 ஒன்றிய அமைச்சர்கள் - 5 அகில இந்தியக் கட்சித் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். எல்லோரையும் வரவழைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரைத்தான் பேசச் சொன்னார் பிரதமர் வி.பி.சிங். பேசச் சொன்னதற்கு பிறகு சொல்கிறார், ‘இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என்னுடைய கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

கலைஞர் அவர்கள் மீதும், தமிழினத்தின் மீதும் வி.பி.சிங் அவர்கள் எந்தளவுக்கு பாசம் வைத்திருந்தார் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு தேவையில்லை!

இன்னொரு சம்பவத்தை சொல்கிறேன்.

“தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் டெல்லியில்தான் கூட்டணுமா? மாநிலங்களில் கூட்டலாமே?” என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோரிக்கை வைத்தார். 'அப்படியென்றால், தமிழ்நாட்டில் நடத்துவீர்களா?' என்று பிரதமர் வி.பி.சிங் கேட்டார். உடனே, சரி என்று சொன்னார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

முதன்முதலாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது என்பது வரலாறு! நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் அடிக்கடி பிரதமர் வி.பி.சிங் சொல்வது, “நீங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு வரக்கூடாது, சென்னையில் இருந்து சொன்னால் போதும்” என்று சொன்னவர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். எத்தகைய வசந்த காலங்களை நாம் பார்த்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது.

அதேபோன்ற காலம் இனியும் வரவேண்டும். அது நாம் ஒன்றிணைந்து உழைத்தால் முடியும்! வி.பி.சிங் அவர்கள் உடல்நலிந்த நிலையில்கூட டெல்லி மக்களுடைய குடியிருப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்! ‘அரசியல் நாட்காட்டியில் கடைசி நாள் என்பதே இல்ல’ என்று கம்பீரமாக சொன்னவர். ஏற்றுக்கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்த வி.பி.சிங் அவர்கள், உடல்நலக்குறைவால் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் நாள் மறைந்தார்.

வி.பி.சிங் அவர்களுடைய மறைவு இந்தியாவுக்கே ஏற்பட்ட பெரும் இழப்பு! சமூகநீதியின் காவலரான வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைத்ததன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்றைக்கு பெருமை அடைகிறது. சமூகநீதிப் பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்!

சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை இல்லை; எல்லா மாநிலங்களின் பிரச்சினை! ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி - வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்சினை ஒன்றுதான்! அதுதான், புறக்கணிப்பு! எங்கெல்லாம் புறக்கணிப்பு - ஒதுக்குதல் - தீண்டாமை -அடிமைத்தனம் - அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி! அந்த சமூகநீதி தழைக்க வேண்டுமானால், நாம் முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய பணிகளை சொல்லி, நிறைவு செய்ய விரும்புகிறேன்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அந்தக் கணக்கெடுப்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோர்  இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்படவேண்டும். பட்டியலின - பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும். சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும். இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து, உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இதனையெல்லாம் அகில இந்திய அளவில் சமூகநீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நலனுக்காகச் செயல்படவேண்டும்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய உறுதிமொழி; “இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியின - சிறுபான்மை - விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக்கான “அரசியல் செயல்திட்டங்கள்” “அரசின் செயல்திட்டங்களாக” மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!” என்று கூறி,

“வி.பி.சிங் அவர்கள் மறையலாம். அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. அவரை யார் மறந்தாலும், தமிழ்நாடு மறக்காது. திராவிட மாடல் அரசு மறக்காது! மறக்காது!” என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில்குறிப்பிட்டார்.


தன் உயிரினும் மேலாக தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்டவர் வி.பி.சிங்

தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும் - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும் கொண்டாடி வருகிறோம். சமூகநீதிக்குத் தடையாக அமைந் துள்ள நீட் தேர்வை அகற்றும் சட்டப்போராட்டத்திலும், அறப் போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கி றோம். இப்படிப்பட்ட நம் முடைய தமிழ்நாட்டைதான் தன்னுடைய ரத்த சொந்தங்கள் வாழுகிற மாநிலமாக நினைத்தார் வி.பி.சிங் அவர்கள். தந்தை பெரியாரை தன்னுடைய உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் அவர்கள் ஏற்றுக்கொண்டார். 

“ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கின்ற மருந்து தான் பெரியாரின் “சுயமரியாதை” என்று சொன்னவர் வி.பி. சிங் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களைச் சொந்த சகோதரனைப் போல மதித்தார்.

“காலம் மாறினாலும் தான் மட்டும் மாறாமல் இருக்கிற ஒரு தலைவர் உண்டென்றால் அது கலைஞர் அவர்கள்தான். பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்னுடைய கட்சி முதல மைச்சர்களே என்னை விட்டு ஓடிய நேரத்தில் என்னுடன் இருந்தவர் கலைஞர் அவர்கள்" என்று பாராட்டியவர் வி.பி. சிங் அவர்கள்.


No comments:

Post a Comment