அடங்காத கொள்ளை வெறி! அழிக்கப்படும் சமூகநீதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

அடங்காத கொள்ளை வெறி! அழிக்கப்படும் சமூகநீதி!

பள்ளியில் உயிரியல் படிக்காதவர்களும் மருத்துவம் படிக்கலாமாம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிப்பு தரும் ஆபத்துகள்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

பன்னிரண்டாம் வகுப்பு படித்து, அதில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு விண்ணப்பித்து மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற அனைவருக்கும் பொதுவான எளிய நடை முறையை மாற்றி, நுழைவுத் தேர்வு எழுதினால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலையை 'நீட்' தேர்வு என்ற பெயரில் திணித்தது இந்திய மருத்துவக் கவுன்சில். அதை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்கள், தனியே தங்கள் மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பைப் பறித்து அனைத்து மாநிலங்களுக்கும் நீட் கட்டாயம் என்று வலுக்கட்டாயமாகத் திணித்தது பா.ஜ.க. அரசு. 

மக்கள் எதிர்ப்புகள், நீதிமன்றப் போராட் டங்கள், சட்டமன்றத்தின் சட்ட முன்னெடுப்புகள் என்று தொடர்ந்து நீட்டுக்கு எதிரான போராட் டங்கள் நடைபெற்று வந்தாலும் கொஞ்சமும் மக்களைக் கருத்தில் கொள்ளாமல், சமூகநீதி மறுப்பு, கல்வி வணிகக் கொள்ளை ஆகிய நோக்கங்களுக்காகவும், கார்ப்பரேட் - பார்ப்பனிய நலன்களுக்காகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு விடாப்பிடியாக இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 22.11.2023 அன்று தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் 'நீட்' என்பது கொள்ளை வணிகத் துக்கும், பள்ளிக் கல்வியை ஒழிப்பதற்குமான ஏற்பாடே தவிர, வேறில்லை என்பது உறுதிப் பட்டுள்ளது.

மருத்துவம் படிக்க வேண்டும் எனில், பதி னொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில் உயி ரியல் படித்திருக்க வேண்டும் என்பது அவசிய மாகும், இதற்கென்றே Pure Science பிரிவுகள் பள்ளிகளில் இயங்கும். மேலும் உயிரியலுடன் இயற்பியல், வேதியியல், ஆகியவற்றுடன் கணித மும் படித்தாலும் அந்த மாணவர்கள் மருத்து வத்திற்கு  விண்ணப்பிக்கத் தகுதியுடையோராவர். உயிரியல் பாடம் என்பது மருத்துவத்திற்கான அடிப்படை என்பதால் தான் இந்த ஏற்பாடு.

ஆனால், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பில், 11, 12-ஆம் வகுப்புகளில் வேறு பாடங்கள் படித்தவர்களும். கூடுதலாக உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களைப் படித்துத் தேர்வெழுதி, அதன் பின்னர் நீட் தேர்வுக்குப் படித்து, பின்னர் மருத்துவம் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவம் படிக்க விருப்பமில்லாத மாணவர் களும், உயிரியல் பாடத்தின் மீதே விருப்பமில்லாத மாணவர்களும் 11, 12-ஆம் வகுப்புகளில் உயிரி யல் அல்லாத அறிவியல் பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, தங்கள் மேற்படிப்பைத் தொடர் வது வழக்கமாகும். இதனால் அவர்கள் மீது பெற்றோரின் அழுத்தங்கள் ஏற்பட வாய்ப்பில் லாமல் தங்கள் விருப்பத்திற்குப் படிக்க முடியும்.

நீட் தேர்வு வந்த பிறகு, மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டு விட்டது. எனவே, எந்த வயதுள்ளோரும் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் இணைய முடியும். இதனால் தான் மூன்று முறை தேர்வெழுதி முயற்சிக்கிறார்கள். இந்த வாய்ப்பு ஏழை, எளிய குழந்தைகளுக்குக் கிடைக்காது. அவர்கள் மூன்று ஆண்டுகள் வரை பணம் கட்டி, கோச்சிங் சென்று படிக்க முடியாது.  

இப்போது வேறு படிப்பு படித்திருந்தாலும், அதன்பிறகு உயிரியல் உள்ளிட்ட பாடங்களை, அதே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் எழுதித் தேர்ச்சிபெற்றால், மருத்துவம் படிக்கலாம் என்ற அறிவிப்பு, பள்ளிக் கல்விக்கு அவசியமில்லை என்ற நிலையை உருவாக்கும். அனைவருக்கும் ஓரளவு சமமான வாய்ப்பை வழங்கும் பள்ளிக் கல்வியையே ஒழித்தால் சமூகநீதி சுத்தமாக அடிபட்டுப் போகும். 

ஏற்கெனவே பள்ளிக் கல்வியை ஒழிப்ப தற்கான வேலையை தேசிய கல்விக் கொள்கை செய்து வைத்திருக்கிறது. பள்ளிகளும், கல்லூரி களும், பல்கலைக்கழகங்களும் இல்லாத நிலை யைத் தோற்றுவிக்கும் அதே நேரத்தில், தனியார் பயிற்சிக் கூடங்கள், இணையக் கல்வி என்று கொள்ளை வணிகத்துக்கு அடித்தளமிட்டுள்ளது. 

கல்லூரிக் கல்விக்கு பள்ளிக் கல்வி அவசியமில்லை, தேர்வு மட்டும் போதும் என்றால், பள்ளிக் கூடங்களே இல்லாமல் செய்யப்படும். ஏற்கெனவே நீட் பயிற்சிக்கு மட்டும் சென்றுவிட்டு, பள்ளிக்குச் செல்லாமலே வருகைப் பதிவேட்டில் தில்லுமுல்லு செய்து தேர்வு எழுதிய கதையெல்லாம் வடஇந்தியாவில் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

மருத்துவத்திற்கு நுழைவுத் தேர்வு என்று அறிவித்துவிட்டு, அங்கு சமமற்ற போட்டியை உருவாக்கி, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள், பெண்கள் ஓரம் கட்டப்பட்டுவிட்டனர். 'நீட்' தேர்வுக்குத் தயாரிக்க ஏராளமான பயிற்சிக் கூடங்கள் உருவாகியிருக்கும் சூழலில், அங்கு மார்க்கெட் - சந்தை விரிவாகியுள்ளது. அதற்கேற்ப நுகர்வோரை அதிகப்படுத்த வேண்டுமல்லவா? தேவைக்கேற்ற அளிப்புக்கு மாறாக, அளிப்புக்கு ஏற்ற தேவையை உருவாக்குவது தானே நவீன கார்ப்பரேட் மய பொருளியலின் அடிப்படை.  

மனிதரின் அடிப்படைத் தேவைகளைவிட, நுகர்வோரியத்தைத் தூண்டி, நுகர்வு வெறியை உருவாக்கி, தாங்கள் தயாரித்துள்ள பண்டங்களை விற்பனை செய்வதைப் போலத் தான் கல்வித் துறையையும் இப்போது ஆக்க முயல்கிறார்கள்.

நாடெங்கும் பெருத்திருக்கும் கோச்சிங் சென்டர்களில் சேர்வதற்கு ஏற்கெனவே இருக்கும் ஆட்களும், அவர்கள் மூலம் திரளும் கோடிகளும் போதவில்லை கார்ப்பரேட்டு களுக்கு! அதனால் கல்விச் சந்தையை விரி வாக்கிட தேசிய மருத்துவ ஆணையம் மூலம் ஆணையிட்டுள்ளது பா.ஜ.க. அரசு! 

ஏற்கெனவே உயிரியல் படிக்காதவர்களும், இனி கட்டாயத்தின் மூலமோ, அல்லது அழுத்தத்தின் மூலமோ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுத வேண்டிவரும். அதற்குப் பயிற்சி கொடுக்க புதிய பயிற்சி மய்யங்கள் திறக்கப்படும். பள்ளிப் படிப்பு படிக்கும் வயதில் இருக்கும் குழந்தைகளுடன், எத்தனை வயதுக்காரரும் போட்டிபோடலாம் என்ற நிலை உருவாகும். பிறகு அங்கிருந்து அப்படியே நீட் பயிற்சி மய்யங்களுக்குக் கடத்தப்படுவர். அழியாத வணிகப் பாதை உருவாகும். வயது வேறுபாடு இல்லை. 

ஒரு சிறிய கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

12-ஆம் வகுப்பில் உயிரியல் பாடம் படித்த வர்கள் மட்டும்,  அந்த ஆண்டில் படித்தவர்கள் மட்டும் 'நீட்' பயிற்சி எடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை ‘x' என்று அள விட்டால், 

'நீட்' தேர்வை 3 ஆண்டுகள் எழுதலாம் என்றால், அது 3x ஆகிறது. 

அதற்கு வயது வேறுபாடில்லை என்னும்போது, முன்பு உயிரியல் படித்தவர்களும் சேரமுடியும். அதாவது 60 வயதுக்காரரும், படிக்க லாம். அதிகம் வேண்டாம் இதற்கு ஒரு இரண்டு மடங்கு என்று கணக்கிட்டால், 6x ஆகும்.

இப்போது பள்ளியில் உயிரியல் படிக்காத எந்த வயதினரும் புதிதாகத் தேர்வெழுதிப் படிக்கலாம் என்றால் அதற்கும் மிகக் குறைந்தபட்சம் இரண்டு மடங்கு என்று வைத்துக் கொண்டாலும், இப்போது 12x.

அதாவது ஒரு மடங்காக ஒரு வணிக வாய்ப்பை உருவாக்கி, படிப்படியாக, அதை மிகக்குறைந்தது 12 மடங்கு ஆக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்குப் பின்னால் இருக்கும் வணிக நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டாமா?

இத்தகைய வணிகத்துக்கு எதிராக, சமத்து வத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாடு அரசு சட்டமியற்றி அனுப்பினால், அதற்கு ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பதற்கும், ஒன்றிய அரசு காலம் கடத்துவதற்கும் பின்னால் வேறு கணக்குகள் இருக்காதா?

இந்த நிலை தொடர்ந்தால் பட்டுப் பாதை, வாசனைப் பாதை என்று வணிகத்திற்காக உருவான பாதைகளைப் போல இனி 'நீட்' வணிகப் பாதை உருவாகும். அதில் சமூகநீதியும், சமத்துவமும் கரியாகும்!

அது நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் திராவிடர் கழகமும், தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும், சமூகநீதிச் சிந்தனை யாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின் அவசியத்தைத் தான் தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment