கலைவாணர் பிறந்தநாள் (29.11.1908) பஞ்சாங்கத்தைக் கிழித்த பகுத்தறிவு கலைவாணர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

கலைவாணர் பிறந்தநாள் (29.11.1908) பஞ்சாங்கத்தைக் கிழித்த பகுத்தறிவு கலைவாணர்

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக் கம் தோன்றிய பத்தாண்டுகளுக்குப் பிறகு தான் தமிழில் பேசும் படங்கள் வெளிவந்தன. 

அந்த கால கட்டங்களில் திரைப்படங்கள் என்றாலே புராண இதிகாசங்களும், சமூக அக்கறை அற்ற பிற்போக்குத்தனம் நிறைந்த கதைகளும்தான் இடம் பெற்றிருக்கும். சுய மரியாதை இயக்கம் சமூகக் களத்தில் வேக மாக வளர வளர, அதன் தாக்கம் திரைப்படங் களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. இந்த காலகட்டத்திற்கு சற்று முன்பே மேலை நாடுகளில் சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி போன்ற நகைச்சுவைக் கலைஞர்களின் திரைப் படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.

ஆனால் தமிழில் கலைவாணரின் வரு கைதான் முதன்முதலில் திரைப்படங்களில் நகைச்சுவைக்கு என்று தனி அடையா ளத்தை பெற்றது. கலைவாணரின் நகைச் சுவை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருந்தது. திராவிட இயக்கத் தின் கொள்கைகளையும், பொதுவுடைமை தத்துவங்களையும் நகைச்சுவை வழியாக மக்களிடையே எளிமையாக கடத்தினார். நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக கதை அமைப்பது, பாடல்கள் எழுதுவது, உரை யாடல்கள் எழுதுவது என திரைத் துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தார்.

1936இல் வெளிவந்த ‘சதிலீலாவதி' என்ற படம்தான் கலைவாணர் நடித்த முதல் திரைப்படம். எம்.ஜி.ஆர்.,  டி.எஸ்.பாலையா போன்றோருக்கும் இதுதான் முதல் திரைப் படம். ஆனால் “மேனகா” என்ற திரைப்படம் தான் கலைவாணர் நடித்து முதலில் வெளி வந்த திரைப்படம். இரண்டு படங்களுமே சமூக கருத்தாக்கங்களை கொண்ட படங் களாகவே இருந்தன.

சதிலீலாவதி படத்தில் கலைவாணர் முட்டை உணவை சாப்பிட்டுக் கொண்டே, சாராயம் குடிப்பது போல ஒரு காட்சி வரும். படத்தில் பார்ப்பனர் தோற்றத்தில் வரும் கலைவாணர் சாராயத்தை கந்தர்வ பானம் எனக் கூறிக்கொண்டே  ருசித்துக் குடிப்பார். ஆதி பார்ப்பனர்கள் யார் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக இப்படி ஒரு காட்சியை நுணுக்கமாக வைத்திருப்பார். திராவிடர் கழகப் பிரச்சார மேடைகளுக்கு இணையாக தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் பகுத்தறிவு சிந்தனையை தூண்டும் வசனங் களை, பாடல்களை துணிச்சலாக கலை வாணர் பேசினார்,  பாடினார்.

அதற்கு சில உதாரணங்களை சொல்ல வேண்டும். ‘இன்பவல்லி' என்ற திரைப்படத் தில் கலைவாணர் பஞ்சாங்கத்தை கிழிக்கும் ஒரு காட்சி.

“மந்திரத்தின் பெயரைச்சொல்லி 

மாயக்காரர் தான் 

தந்திரமாய் செய்த ஏட்டை- கிளியே 

தாட்சண்யம் பார்க்காமல் கிளி(ழி)யே” 

- இந்தப் பாடலைப் பாடிக் கொண்டே பஞ்சாங்கத்தைக் கிழித்தார் கலைவாணர்.

அதிக அளவில் வறுமையும் பஞ்சமும் நிலவிய அந்த காலகட்டத்தில் கூட சிலை களுக்கு பாலும் பழமும் கொண்டு அபி ஷேகம் செய்வதில் பஞ்சம் இருக்கவில்லை. “மங்கையர்கரசி” என்ற படத்தில் இதையும் தனது பாடல் மூலம் கேள்விக்கு உட்படுத் தினார்.

“பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவ தைப் பார்

 பால் இல்லை என்று சிசு பதறுவதைப் பார்”

என, பச்சிளம் குழந்தைகள் பால் இல்லாமல் இருக்கும்போது கல்லுக்குப்  பால் அபிஷேகம் தேவையா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் வைத்தார்.

அதேபோல 1939ஆம் ஆண்டில் “திரு நீலகண்டர்” என்றொரு படம் வந்தது. இந்த படத்தில் கலைவாணரும் நடிகர் டி.எஸ். துரைராஜும்  காமன் கதை சொல்லும்  காட்சி.  டி.எஸ். துரைராஜ் கதை சொல்லத் தொடங்கும் போது, சரஸ்வதி பிரம்மாவின் நாவில் இருப்பதாகவும், கதை சொல்ல அவள் துணை நிற்க வேண்டுமாயும் பாடுவார். உடனே கலைவாணர் அதற்கு ஒரு எதிர்ப்பாட்டு பாடுவார்.

“மறையவன் நாவில் அவள் உறைவது நிஜமெனில் மலஜலம் கழிப்பது எங்கே? எங்கே?"

இப்படி பகுத்தறிவுக் கேள்விகள் கலை வாணரின் நகைச்சுவை காட்சிகளில் வெடித் துக் கிளம்பின.

பெரியார்- வள்ளுவப் பெரியார்” எனத் தொடங்கும் பாடல் மிகவும் பிரபலமானது. இவ்வாறு கலைவாணர் நடித்த படங்களை யும், அந்த படங்கள் ஏற்படுத்திய தாக்கங்க ளையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

“பக்த துளசிதாஸ்” என்ற படத்தின் படப் பிடிப்புக்காக கலைவாணர் புனே சென்ற போது, உடன் நடித்த டி.ஏ.மதுரம் அம்மை யாரை விரும்பி அங்கேயே மணம் முடித்துக் கொண்டார். மதுரம் அம்மையாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தொடக் கத்தில் கலைவாணரை அறவே பிடிக்காமல் இருந்த நிலையில், அவரின் உதவும் குணம் மிகவும் ஈர்க்கச் செய்தது. அதுவே இருவரும் மணம் முடித்துக் கொள்ளும் அளவிற்கு அன்பை வளர்க்க செய்தது. அதன்பிறகு இருவரும் இணைந்து படங்களில் நடித்தனர். அனைத் துப் படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஒருமுறை கலைவாணரைப் பார்த்து ஒருவர்,  மேடைப் பேச்சிலும் நடிப்பிலும் சமதர்மம் பேசி விட்டு காரில் போகலாமா? இது எப்படி நியாயமாகும் என்றார். இதற்கு மிகப் பொறுமையாக கலைவாணர் பதில் அளித்தார். “நான் காரில் போக ஆசைப் படவில்லை. நடந்து செல்ல எவ்வளவு ஆசைபடுகிறேன் தெரியுமா? ஆனால் என்னுடைய இந்த ஆசையை நீங்கள் தான் கொன்று விடுகிறீர்கள். என் மீது கொண்ட அன்பால் என்னை தரையில் கூட நடக்க விடமாட்டேன் என்கிறீர்கள். அப்படித் தப்பித் தவறி நடந்து வந்துவிட்டால் என்னைப் பிய்த்து பிடுங்கி தின்று விடுகிறீர்கள். இதனால் நான் செல்லும் காரியங்கள் தடை பட்டு விடுகின்றன. எனவேதான் நானும் மதுரமும் காரில் போகிறோமே தவிர உடல் நோகாமல் இருப்பதற்கு அல்ல. நீங்கள் மட்டும் எங்களை ஒன்றும் செய்யாமல் இருந்து பாருங்கள். நாங்கள் இருவரும் வேர்க்கடலை, பட்டாணி ஆகியவைகளை வாங்கித் தின்று கொண்டே ஜாலியாக நடந்து வருவோம்” என்றார்.

ஆக அந்த காலகட்ட தமிழ்த் திரைத் துறையில், கலைவாணர் எந்த அளவுக்கு, மக்கள் ஆதரவு பெற்ற உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  தனது திரைப்பயணம் முழுவதையும் திராவிட இயக்கத்தின் கொள்கை பிரச்சாரக் களமாகவே வைத் திருந்தார் கலைவாணர், இறுதிவரை மக்க ளும் அவரை திராவிட இயக்க திரைக் கலைஞராகவே பார்த்து அங்கீகரித்தனர்.

புராண இதிகாச குப்பைகள் படமாகி கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ்த் திரைப்படத்தின் போக்கை மடைமாற்றிய திராவிட இயக்கக் கலைஞர்களில் கலை வாணருக்கு பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது!

வாழ்க கலைவாணர்!

No comments:

Post a Comment